இரவு 9 மணியை தாண்டி விட்டது. அது ஜனவரி மாதத்தின் ஓரிரவு. கிட்டத்தட்ட 400 பேர் நிகழ்ச்சி தொடங்கக் காத்துக் கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே நிகழ்ச்சி தொடங்கியிருக்க வேண்டும்.
திடீரென மேடைக்கு முன் சிறு சலசலப்பு. ஒரு மூங்கில் தட்டியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி அதிர்ந்து ஒரு குரல் வெளிவந்தது: “அம்மா போன்பீபிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாடகத்தை விரைவில் தொடங்குவோம். அவர் நம்மை எல்லா தீமைகளிலிருந்தும் காப்பார்!”
கொசாபா ஒன்றியத்தின் ஜவஹர் காலனியை சுற்றிக் கொண்டிருந்தவர்கள் வந்தடையத் தொடங்கினர். 18 அலைகளுக்கான நிலத்தை பேய்களும் பாம்புகளும் முதலைகளும் புலிகளும் தேனீக்களும் தாக்குவதை முறியடிக்கும் அம்மா போன்பீபியை பார்க்க வந்தனர். இங்கு வாய்மொழி வழியாக போன்பீபியின் கதைகள் தலைமுறைகள்தோறும் கடத்தப்படுகிறது.
திரைச்சீலைகள் கொண்டு தெருவிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் அறைக்குள், பல கான இசை நாடகத்துக்காக பார்வையாளர்களும் நடிகர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படவிருந்த பெரிய தேன்கூடுகளும் செம்மண் புலி முகமூடிகளும் தம் வாய்ப்புகளுக்காக தார்ப்பாய் சுவரோரம் அடுக்கி வைக்கப்பட்டு காத்திருந்தன. நாடகத்தின் உள்ளடக்கங்கள் வழக்கமாக சுந்தரவன மக்களின் வாழ்க்கைகள் சார்ந்துதான் இருக்கும். 2020ம் ஆண்டு நிலவரப்படி அங்கு 96 புலிகள் இருந்தன.

வங்காள முதல் மாதமான மக்கின் (ஜனவரி - பிப்ரவரி) முதல்
நாளன்று, சுந்தரவன சதுப்பு நிலங்களை சார்ந்திருக்கும் குடும்பங்கள் புலி, தேனீக்கள்,
கெட்ட சகுனங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும்படி வேண்டுவார்கள்

நடவடிக்கைகளின் சலசலப்பில் அறை. பார்வையாளர்களில் ஒருவர்,
ஒரு நடிகர் உடை அணிய உதவுகிறார்
நடிகர்களாக தயாராகியிருந்த விவசாயிகளும் மீனவர்களும் தேன் சேகரிப்பவர்களும் ஒப்பனையையும் உடைகளையும் சரிபார்த்துக் கொண்டனர். சமூக உணர்வு வெளிப்படையாக இருந்தது. பார்வையாளர்கள் கூட மேடைக்கு பின்னால் சுற்றிக் கொண்டிருந்தனர். நடிகர்களுக்கு வசனங்களை சொல்லிக் கொடுத்தனர். உடைகளை சரி செய்ய உதவிக் கொண்டிருந்தனர்,
விளக்குகளின் முன் வைக்கப்படும் நிறப்பிரிகைகளை ஒரு வல்லுனர் ஒட்டிக் கொண்டிருக்கிறார். இன்னும் சில நிமிடங்களில் ராதா கிருஷ்ணா கீதி நாட்டியா மற்றும் போன்பீபி ஜத்ரபலா குழுவினர் நிகழ்ச்சியைத் தொடங்கி விடுவார்கள். துகே ஜாத்ரா என பிரபலமாக அறியப்படும் போன்பீபி பல கானம், ஜனவரி-பிப்ரவரியில் வரும் வங்காள மாதமான மக் கின் முதல் நாள் நடத்தப்படுகிறது.
வருடாந்திர நிகழ்வான போன்பீபி பல கான நிகழ்வை காண மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கனாஸின் கோசாபா ஒன்றிய கிராமங்களிலிருந்து மக்கள் பயணித்து வந்திருக்கின்றனர்.
நித்யானந்த ஜோத்தார், குழுவுக்கான பிரத்யேக ஒப்பனைக் கலைஞர் ஆவார். அவர் வண்ணமயமாக நுட்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் மகுடத்தை ஒரு நடிகருக்கு அணிவிக்கிறார். அவரது குடும்பம் பல தலைமுறைகளாக பல கான நிகழ்வில் பங்களித்து வருகிறது. எனினும் சமீபகாலமாக இதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்துவது அவருக்கு சிரமமாக இருக்கிறது. “பல கான வருமானத்தில் எவரும் குடும்பம் நடத்த முடியாது. பிகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் உணவு பரிமாறும் வேலை செய்கிறேன்,” என்கிறார் அவர். ஆனால் கோவிட் ஊரடங்குகள் அந்த வருமானத்தை நிறுத்திவிட்டது.

’மக்களை வேறு பாத்திரங்களுக்கு உருமாற்ற எனக்கு பிடிக்கும்,’
என்கிறார் ஒப்பனைக் கலைஞரான நித்யானந்தா ஜோத்தார்

தக்கின் ராய் பாத்திரம் ஏற்றிருக்கும் திலிப் மண்டலுக்கு
மகுடத்தை அணிவிக்கிறார் நித்யானந்தா
குழுவின் பல உறுப்பினர்கள் பல கான நிகழ்வுகளில் வருமானங்களை கொண்டு குடும்பம் நடத்த முடியாத சிரமங்களை பாரியிடம் பகிர்ந்து கொண்டனர். “கடந்த வருடங்களில் பல கான நிகழ்வுகளுக்கான பதிவுகள் கடும் சரிவை கண்டுள்ளது,” என்கிறார் நடிகர் அருண் மண்டல்.
பல பலகான கலைஞர்கள் காலநிலை பேரழிவுகளாலும் சதுப்பு நிலம் குறைவதாலும் நாட்டுப்புற நாடகக் கலையின் புகழ் மங்குவதாலும் வேலை தேடி நகரங்களுக்கு இடம்பெயருகின்றனர். 30 வயதுகளில் இருக்கும் நித்யானந்தா, கொல்கத்தாவின் சுற்றுப்பகுதிகளில் கட்டுமானத் தொழிலாளர் வேலை செய்கிறார். “பல கானம் இன்றி என்னால் வாழ முடியாது,” என்கிறார் அவர். “எனவே இங்கு நான் இந்த இரவில் கலைஞர்களுக்கு ஒப்பனை செய்து கொண்டிருக்கிறேன்.”
இத்தகைய நிகழ்வுகளுக்கான கட்டணம் 7,000லிருந்து 15,000 ரூபாய் வரை இருந்தாலும் அதில் பங்கெடுக்கும் நடிகர்களின் வருமானம் மிகக் குறைவுதான். “இந்த போன்பீபி பல கான நாடகத்தில் 12,000 ரூபாய் கிடைக்கும். அதை 20 கலைஞர்கள் பகிர்ந்து கொள்வார்கள்,” என சுட்டிக் காட்டுகிறார் அருண்.
மேடைக்கு பின்னால் சக நடிகரின் கண்களுக்கு மை பூசுகிறார் உஷாராணி கரானி. “நகரத்திலுள்ள நடிகர்களை போலல்லாமல் எல்லா ஒப்பனை பொருட்களையும் நாங்களேதான் கொண்டு வர வேண்டும்,” என்கிறார் அவர் புன்னகைத்து. ஜவஹர் காலனியில் வசிப்பவரான உஷாராணி பல கானங்களில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பங்கெடுத்து வருகிறார். இன்று இரவு அவர் மூன்று பாத்திரங்கள் நடிக்கவிருக்கிறார். நாயகப் பாத்திரமான அம்மா போன்பீபி அவற்றில் ஒன்று.

உஷாராணி கரானி உதய் மண்டலின் கண்களுக்கு மை பூசுகிறார்.
அம்மா போன்பீபியின் சகோதரர் ஷா ஜங்காலி பாத்திரத்தை அவர் நடிக்கவிருக்கிறார்

சுந்தரவனத்தின் பிரபல பல கான கலைஞரான பனமாலி பயாபரி,
இன்றைய நிகழ்வில் இடம்பெறவிருக்கும் ஒரு தேன்கூட்டின் அருகே நிற்கிறார்
அந்த அறையின் மறுபக்கத்தில் பனாமலி பயாபரி இருக்கிறார். அவர் ஒரு மூத்த நடிகர். கடந்த வருடம் ரஜத் ஜூபில் கிராமத்தில் மா மன்சா பல கான நாடகத்தில் அவர் நடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர் என்னை நினைவில் வைத்திருந்தார். பேசத் தொடங்கிய சில நிமிடங்களில், “என்னை படம் பிடித்த குழுவின் பிற உறுப்பினர்களை ஞாபகம் இருக்கிறதா? அவர்கள் அனைவரும் ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது நெல் வயல்களில் வேலை பார்க்கின்றனர்,” என்றார்.
2021ம் ஆண்டின் யாஸ் மற்றும் 2020ம் ஆண்டின் அம்பன் உள்ளிட்ட கடும் புயல்கள் சுந்தரவனக் கலைஞர்களின் நெருக்கடியை மோசமடைய வைத்தபிறகு, பருவகால இடப்பெயர்வு இப்பகுதியில் அதிகரித்திருக்கிறது. பல கான நாடகத்தில் நிலையான வருமானமின்றி நடிக்க வருவது தினக்கூலித் தொழிலாளர்களுக்கு அசாத்தியம்.
“என் சக நடிகர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று மாதங்களுக்கு இருப்பார்கள். பிப்ரவரி மாதத்தில் திரும்புவார்கள்,” என்கிறார் பனாமலி. “நெல்வயல்களில் பணிபுரிந்து 70,000-80,000 ரூபாய் வரை சேமிக்க முடியும். பெரிய பணம் போல் தெரியலாம். ஆனால் அது முதுகொடிக்கும் வேலை,” என அவர் சுட்டிக் காட்டுகிறார்.
அதனால்தான் இந்த வருடம் பனாமலி ஆந்திராவுக்கு செல்லவில்லை. “பல கான நிகழ்வுகளில் பங்கெடுத்து வரும் குறைவான ஊதியத்திலேயே நான் சந்தோஷமாக இருக்கிறேன்,” என்கிறார் அவர்.


இடது: நடிகர்கள் ஒப்பனை போடுவதை அறைக்குள் கவனித்துக்
கொண்டிருக்கும் பார்வையாளர்கள். வலது: விலங்குகளில் போல உருவாக்கப்பட்ட இந்த முகமூடிகள்
பாத்திரங்களை நடிக்க நடிகர்கள் பயன்படுத்துவார்கள்

தக்கின் ராய் உடையில் திலீப் மண்டல்
ஒரு போன்பீபி நிகழ்வு நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் 20,000 ரூபாய் செலவழிக்கின்றனர். 12,000 ரூபாய் குழுவுக்கு செல்கிறது. மிச்சம் மேடை அமைத்ததற்கும் ஒலிபெருக்கி வாடகைக்கும் செல்கிறது. நிகழ்வுகளின் வருமானம் குறைந்தாலும் போன்பீபி பல கான நிகழ்வுகள், நல்ல ஆதரவும் பங்களிப்பும் உள்ளூர் மக்களின் நன்கொடையும் இருப்பதால் உயிர்ப்புடன் இருக்கின்றன.
மேடை தயாராகிவிட்டது. கூட்டம் நிரம்பியிருக்கிறது. இசை எழும்பிவிட்டது. நிகழ்வுக்கான நேரம் இது!
“அம்மா போன்பீபியின் ஆசிர்வாதங்களுடன் நாங்கள் கவிஞர் ஜசிமுதின் கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தை தொடங்குகிறோம்,” என அறிவிக்கிறார் உஷாராணி. பொறுமையாக பல மணி நேரங்கள் காத்திருந்த கூட்டம் கவனம் கொள்கிறது. அடுத்த ஐந்து மணி நேரங்களுக்கு கவனம் தொடர்ந்தது.
அம்மா போன்பீபி, அம்மா மானசா மற்றும் ஷிப் தாகூர் ஆகியோருக்கான பிரார்த்தனைப் பாடல்கள் மிச்ச மாலை நேரத்துக்கான சூழலை உருவாக்கித் தருகிறது. சுந்தரவனங்களின் பிரபல பல கான நடிகரான திலிப் மண்டல் தக்கின் ராய் பாத்திரத்தை நடிக்கிறார். புலியாக அவ்வப்போது மாறும் உருமாற்ற பாத்திரம் அது.
துக்கே என்கிற சிறுவனை தக்கின் ராயின் பிடியிலிருந்து அம்மா போன்பீபி காக்கும் காட்சி பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கிறது. 1999-2014 வரை, காடுகளை நுழைந்து கடந்தவர்களில் 437 பேர் சுந்தரவன புலிகளால் காயப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு முறை காட்டுக்குள் நுழைவதும் புலி தாக்குதலை சாத்தியமாக்கும் வாய்ப்பு கொண்டிருப்பதை உணர்ந்திருக்கும் உள்ளூர்க்காரர்கள் துக்கேவின் அச்சத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அம்மா போன்பீபியின் ஆசிர்வாதம் பெற ஆர்வம் கொள்கின்றனர்.


இடது: மேடையின் ஒலிவாங்கியை ஒரு வல்லுனர் சரி செய்கிறார்.
வலது: கிட்டத்தட்ட 400 பேர் நாடகம் தொடங்க காத்திருக்கின்றனர்.


இடது: குழுவின் மேலாளரான ஜோகிந்த்ரா மண்டல் தேவைப்படும்போது
வசனங்களை எடுத்துக் கொடுக்கிறார். வலது: பல கான நிகழ்வு பலமுறை தொழில்நுட்பக் காரணங்களால்
தடைப்படுவதால், ஒரு வல்லுனர் இதற்கென தனியாக இருக்கிறார்
திடீரென கூட்டத்திலிருந்து ஒரு குரல் அலறுகிறது, “ஏன் மைக்காரர் முட்டாளாக இருக்கிறார்! கடந்த சில நிமிடங்களாக எங்களுக்கு ஒன்றும் கேட்கவில்லை.” நாடகம் நிறுத்தப்படுகிறது. வல்லுனர்கள் மின் தடங்களை ஓடிச் சென்று சரி செய்கின்றனர். நடிகர்களுக்கு சிறு இடைவெளி கிடைக்கிறது. 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் நாடகம் தொடங்குகிறது.
ஜத்ரபலா குழுவின் மேலாளரான ஜோகிந்திரா மண்டல் மேடைக்கு முன்னால் அமர்ந்திருக்கிறார். வசனங்களை நடிகர்கள் மறந்துவிட்டால் எடுத்துக் கொடுக்கும் வண்ணம் அவர் அமர்ந்திருக்கிறார். சரிவை சந்தித்து வரும் பல கான நிகழ்வுகள் அவருக்கும் சோகத்தை அளித்திருக்கிறது: “பதிவுகள் எங்கே? முன்பெல்லாம் ஒரு நிகழ்வுக்கும் அடுத்த நிகழ்வுக்கும் இடையில் எங்களுக்கு நேரமே கிடைக்காது. அது இப்போது போய்விட்டது.”
இதில் கிடைக்கும் வருமானத்தை நம்பியிருக்க முடியாதென்பதால், ஜோகிந்திரா போன்ற மேலாளர்களால் குழுவுக்கு புது ஆட்களை கொண்டு வர முடியவில்லை. தூரப் பகுதிகளிலிருந்து நடிகர்களை அழைத்து வர வேண்டியிருப்பதாக சொல்கிறார். “இப்போதெல்லாம் நடிகர்கள் எங்கே கிடைக்கிறார்கள்? பல கான நடிகர்கள் இப்போது தொழிலாளர்களாக மாறிவிட்டனர்.”
நேரம் ஓடிவிட்டது. போன்பீபி பல கானம் இறுதிப்பகுதியை எட்டிவிட்டது. உஷாராணியுடன் என்னால் பேச முடிந்தது. பல கானங்களை தாண்டி, அவர் ராமாயணக் கதாகாலட்சேபங்களை கோசாப் ஒன்றிய கிராமங்களில் செய்கிறார். ஆனால் அவருக்கு நிலையான வருமானம் இல்லை. “சில மாதங்களில் நான் 5,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். சில மாதங்களில் ஒன்றுமில்லை.”
“கடந்த மூன்று வருடங்களில் நாங்கள் புயல்களையும் கோவிட் தொற்றையும் ஊரடங்குகளையும் சந்தித்து விட்டோம்,” என்கிறார் உஷாராணி. ஆனாலும், “நாங்கள் பல கான நாடகம் அழிய விடவில்லை,” என்கிறார் அவர் அடுத்த வருடம் மீண்டும் இந்த நாடகத்தை போடுவதற்கு முன் பொருட்களை மூட்டை கட்டியபடி.

ஒப்பனை அறையில் உஷாராணி ஒத்திகை பார்த்துக் கொள்கிறார்

நடிகரான பபன் மண்டல் கையில் துடுப்புடனும் முகத்தில் புன்னகையுடனும் போஸ் கொடுக்கிறார்

இளம் போன்பீபி மற்றும் துக்கே பாத்திரங்களில் நடிக்கும் ராக்கி மண்டல், சக நடிகர்களுடன் பேசுகிறார்

ஒப்பனை அறையில் நடிகர்கள் வசனங்களை சொல்லிப் பார்க்கின்றனர். திலிப் மண்டல் கையில் கத்தியுடன் மேடையில் நுழையும் தன் தருணத்துக்காக நாற்காலியில் அமர்ந்து காத்திருக்கிறார்

உஷாராணி கரானி பல கான நிகழ்வு தொடங்கும் அறிவிப்பை செய்கிறார்

கலைஞர்கள் அம்மா போன்பீபி, அம்மா மனசா மற்றும் ஷிப் தாகூர் ஆகியோரை பிரார்த்தித்து நாடகத்தை தொடங்குகின்றனர்

நடிகர் அருண் மண்டல், மெக்கா ஃபக்கீர் இப்ராகிம் பாத்திரத்தில் நடிக்கிறார்

போன்பீபி பல கான காட்சி ஒன்றை நடிகர்கள் நடிக்கின்றனர். கோலாபீபி (பச்சை உடையில்) போன்பீபி மற்றும் ஷா ஜங்கலி ஆகிய இரு குழந்தைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் போன்பீபியை அநாதரவாக்குவது என முடிவெடுக்கிறார்

ராக்கி மண்டலும் அஞ்சலி மண்டலும் இளம் போன்பீபி மற்றும் ஷா ஜங்கலி பாத்திரங்களை நடிக்கின்றனர்

பபன் மண்டலின் நடிப்பில் ஈர்க்கப்பட்ட ஒரு முதியப் பெண், 10 ரூபாய் நோட்டை அன்பளிப்பாக அவரின் சட்டையில் குத்துகிறார்

உஷாராணி, தக்கின் ராயின் தாய் நாராயணி வசனங்களை பேசுகிறார். பல கானத்தில் அவர் போன்பீபி மற்றும் ஃபுல்பீபி பாத்திரங்களையும் நடிக்கிறார்

இளம் போன்பீபிக்கும் நாராயணிக்கும் இடையேயான சண்டையை நடிகர்கள் நடித்துக் காட்டுகின்றனர்

ஜவஹர் காலனி கிராமக் குழந்தை முழுமையான நாடகத்தில் மூழ்கியிருக்கிறார்

வணிகரான தானாவுடன் தேன் சேகரிக்கும் தொழிலை கற்க காட்டுக்குள் செல்லும் மகன் துக்கேவை வழியனுப்புகிறார் பீபிஜான். பார்வையாளர்களில் பலர் கண்ணீர் வடிக்கின்றனர்

படகோட்டிகள் துக்கேவை ஆபத்துகள் நிறைந்த காட்டுக்குள் அழைத்து செல்கின்றனர்

படகோட்டிகளும் தானாவும் காட்டுக்குள் தேன் எடுக்க உத்தி வகுக்கின்றனர்

தனாவின் கனவின் தக்கின் ராய் தோன்றி தனக்கான வரியாக துக்கேவை தியாகம் செய்யும்படி கேட்கும் காட்சி. அப்படி செய்தால்தான் காட்டுக்குள் தேன் அவர் கண்டுபிடிப்பார்

பரிசுத்தமான தோற்றமளிக்கும் உஷாராணி கரானி அம்மா போன்பீபியாக மேடைக்குள் நுழைகிறார்

காட்டுக்குள் கைவிடப்பட்ட துக்கே, தக்கின் ராயிடமிருந்து காக்கும்படி அம்மா போன்பீபியை வேண்டுகிறார். அம்மா போன்பீபி ஒப்புக் கொண்டு தக்கின் ராயை வீழ்த்தி, பாதுகாப்பாக அவரை தாய் பீபிஜானுக்கு சேர்ப்பிக்கிறார். அபரிமிதமான அளவில் தேனும் துக்கேவுக்கு ஆசிர்வதிக்கப்பட்டு செல்வந்தர் ஆகிறார்

ஒரு பட்டாம்பூச்சி படமும் ‘முடிவு’ என்கிற வார்த்தையும்
திரைக்கதையின் முடிவை குறிப்பிடுகிறது
தமிழில் : ராஜசங்கீதன்