"எங்களால் மூச்சுவிட முடியாது” என்கின்றனர், அந்தப் பணியாளர்கள்.
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் இவர்கள், வேலைசெய்கின்றனர். வியர்வையால் அனைவரின் முகக்கவசமும் நனைந்துபோகின்றன. நெல்குவியலிலிருந்து கிளம்பும் தூசினால் அவர்களின் உடம்பு முழுவதிலும் நமைச்சலை ஏற்படுத்துகிறது; தொடர்ச்சியாக மூக்கு ஒழுகும்படியும் செய்கிறது; இருமலையும் உண்டாக்குகிறது.
பத்து மணி நேரத்தில் 3,200 கோணிப்பைகளை அவர்கள் சுமைவாகனங்களில் ஏற்றவேண்டும்; அதற்கு முன் கோணியில் நெல்லை நிரப்பி, அதை எடைபோட்டு, தைத்து, வண்டிவரை சுமந்துசெல்லவேண்டும். இதற்குள் அவர்கள்தான் எத்தனை முகக்கவசங்களை மாற்றமுடியும்? எத்தனை முறைதான் அவர்களால் கையையும் முகத்தையும் கழுவமுடியும்? எத்தனை தடவைதான் அவர்கள் முகத்தை மூடிக்கொண்டே இருக்கமுடியும்?
ஒரு நிமிடத்துக்கு 213 கி.கி. அதாவது 128 டன் நெல்லை 43-44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 48 தொழிலாளர்கள் சேர்ந்து மூட்டைகட்டி அனுப்பவேண்டும். அதிகாலை 3 மணிக்கு தொடங்கும் இந்தப் பணி, மதியம் 1 மணிக்கு முடிவடையும். குறைந்தது 9 மணி முதல் நான்கு மணி நேரமாவது கடுமையான வெயிலிலும் ஈரப்பதமில்லாத சூழலிலும் அவர்கள் வேலைசெய்தாகவேண்டும்.
முகக்கவசம் அணிவதும் நபர்களுக்கு இடையே இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் உகந்ததே என்றாலும், நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும்போது அது செய்ய இயலாததாகவும் இருக்கிறது. படத்தில் காட்டப்படுவது, கங்கல் மண்டலத்தில் உள்ள கங்கல் கிராமத்தின் கொள்முதல் நிலையம் ஆகும். தெலுங்கானா முழுவதும் இப்படி 7ஆயிரம் கொள்முதல் நிலையங்கள் இருக்கின்றன என்று மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி கடந்த ஏப்ரலில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
இந்த வேலைக்காக அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கும்? குழுவுக்கு 12 பேர் என்கிறபடி நான்கு குழுக்களாக அவர்கள் பணியாற்றுகிறார்கள்; ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு சராசரியாக 900 ரூபாய் கிடைக்கும். ஆனால், ஒருநாள் விட்டு ஒரு நாள்தான் இந்த வேலை கிடைக்கும்! ஒன்றரை மாத கொள்முதல் காலத்தில் ஒவ்வொரு பணியாளருக்கும் 23 நாள் வேலை அதாவது 20,750 ரூபாய் ஊதியம் கிடைக்கும்.
இந்த ஆண்டு குறுவை போக நெல் கொள்முதல் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கியது. கோவிட்-19 பொதுமுடக்கக் காலமான மார்ச் 23 முதல் மே 31வரை இந்தக் கொள்முதலும் தொடர்ந்தது.

பொதுவாக, ஒரு நெல்லடித்த களத்துக்கு 10 முதல் 12 பேரைக் கொண்ட தொழிலாளர்கள் இந்த வேலைக்குத் தேவைப்படுவார்கள். கங்கல் கொள்முதல்நிலையத்தில் இருக்கும் சில குழுவினர் சேர்ந்து 10 மணி நேரத்தில் 128 டன் நெல்லை முழுவதுமாக கோணிகளில் நிரப்பி, எடைபோட்டு, மூட்டைகட்டி ஏற்றி அனுப்பிவிடுவார்கள்

ஒரு கோணியில் 40 கி.கி. நெல்லை இரண்டு பேர் விரைவாக நிரப்புகின்றனர். நெல்குவியலிலிருந்து வெண்ணிறத் தூசியை உண்டாக்குகிறது. இந்தத் தூசியால் ஏற்படும் கடுமையான நமைச்சல், ஒரு குளியல் போட்டால்தான் போகும்

அவர்கள் ஒரேமூச்சில் 40 கி.கி. நெல்லையும் பையில் நிரப்பியாகவேண்டும். கூடுதலாக நிரப்பி கீழே கொட்டிய நெல்லை எடுக்கவோ, குறையாக நிரப்பினால் கூடுதலாக நெல்லை பைக்குள் போடவோ நேருமானால் அவர்களின் வேலை 1 மணிக்கு மேலும் இழுக்கும்

மூட்டையை இழுக்க உலோகக் கொக்கியைப் பயன்படுத்தும் பணியாளர்கள், அவ்வப்போது அதை தங்களுக்குள் மாற்றிக்கொள்ளவும் செய்வார்கள். அப்போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கொக்கியையும் கிருமிநீக்கம் செய்துகொண்டிருக்கமுடியாது.

தளரி இரவி (வலப்பக்கம்) இந்தக் குழுவுக்குத் தலைமைதாங்குகிறார். மதியம் ஒரு மணிக்கு முன்னர், சரியாக நெல்லை மூட்டை கட்டி, வேலைகளை முடித்து அனுப்புவதற்கு அவர்தான் பொறுப்பு

பணியாளர்கள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு குழு ஒவ்வொரு களத்துக்குமாக தூக்கிச்சென்றபடி இருக்கிறார்கள். எந்தவகை கிருமிநாசினியோ தூய்மைப்படுத்தியோ இருந்தாலும்கூட (இந்த மையங்களில் இப்போது இல்லை என்பது வேறு), ஒவ்வொரு முறையும் கருவிகளை கிருமிநீக்கம்செய்வது என்பது சாத்தியம் இல்லை. ஏனென்றால் அது வேலையைச் சுணங்கச்செய்யும்

விரைவு என்பதுதான் பணியாளர்கள் மத்தியில் முக்கியமானது. ஒரு நிமிடத்துக்குள் 4-5 கி.கி. பையை நிரப்புகிறார்கள்

கோணிப் பைகளைத் தைக்கத் தயாராகிறார்கள். இதைத் தனியாகச் செய்யமுடியாது. ஒருவர் சணல் சரடைப் பிடித்துக்கொள்ள, இன்னொருவர் சரியாக சரடை அறுக்கிறார்

கோணிப்பைகளை இழுத்து, எடைபோட்டு, வரிசையாக பணியாளர்கள் நிறுத்திவைக்கிறார்கள். கோணிகளை எண்ணுவதற்கு வசதியாக இருக்கும்

எல்லா பணியாளர் குழுவினரும் - ஒவ்வொன்றிலும் 40-50 பேர் - 3,200 கோணிப்பைகளை மதியத்துக்குள் சுமைவண்டிகளில் ஏற்றிவிடுகிறார்கள்

ஒரு குவிண்டால் நெல்லுக்கு இந்தப் பணிக்காக விவசாயி ரூ.35 தருகிறார். மொத்தம் 3,200 பைகளுக்கும் சேர்த்து அவர்களுக்கு 44,800 ரூபாய் கிடைக்கிறது; அதை வேலைநாள்களுக்கு ஏற்ப சமமாகப் பங்கிட்டுக்கொள்கின்றனர். இன்றைக்கு வேலைசெய்யும் ஒருவருக்கு ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகே மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கும்
தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்