தில்லி சலோ எனும் அறைகூவல் கேட்டதுதான் தாமதம்- மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்ட வார்லி பழங்குடியின விவசாயிகள் 2018 நவம்பர் 27 அன்று டெல்லியை நோக்கி பயணத்தைத் தொடங்கினர். தகனுவிலிருந்து விரார் தொடர்வண்டி நிலையம்வரை அவர்கள் புறநகர் மின் தொடர்வண்டியிலும் அங்கிருந்து மைய மும்பைக்கு இன்னொரு தொடர்வண்டியிலும் டெல்லிக்கு மூன்றாவதாக ஒரு தொடர்வண்டியிலும் பயணித்தனர்.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் 150- 200 அமைப்புகளின் கூட்டமைப்பான- அனைத்திந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்பட்ட நவ.29-30 டெல்லி பேரணிக்கு அவர்கள் வந்துகொண்டிருந்தனர். அதில் முதன்மையானது அனைத்திந்திய விவசாயிகள் சபைதான். வரலாற்றுப் புகழ்பெற்ற வார்லி எழுச்சியின்போது அதற்குத் தலைமைவகித்த கோடுட்ட்டாய் பருலேக்கர்தான், இந்த அமைப்புக்கும் தலைமை. பழங்குடியினரிடையே பரவலான ஆதரவைப் பெற்றவர்.
அடக்க அளவைத் தாண்டி ஒரே பெட்டியில் இருபத்து நான்கு மணி நேரம் தொடர்ச்சியாகப் பயணம்செய்த பின்னர், பால்கரின் 100 பேர் குழு அசரத் நிஜாமுதீன் நிலையத்தை அடைந்தது. இது அந்தப் பயணத்தில் முக்கிய அம்சம்.

பால்கர் மாவட்டத்தின் தகனு வட்டத்திலிருந்து மீனா பார்சி கோம், சகரி வன்சாத் தண்டேகர் மற்றும் பலர் நவ.27 அன்று பிற்பகலில் தகனு சாலை நிலையத்தில் ஒன்றுகூடினர்


மீனாவுக்குப் பூவைத்துவிடுவதில் சக்காரி உதவுகிறார். கஜ்ராக்களை இசைத்தபடி பளிச்சென உடையணிந்த வார்லி பழங்குடி பெண்கள் தகனு நிலையத்தை பொலிவாக்கினார்கள


நீலம் பிரகாஷ் ராவ்தே ஒரு வாரமாக வீட்டைவிட்டுப் பிரிந்துள்ளார். அவருடைய மூன்று பிள்ளைகளும் முன்னரே அவரை(அம்மாவை)ப் பிரிந்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச்சில் நடந்த விவசாயிகள் பேரணியிக்கு நீலம் போயிருந்தபோது சின்னப் பிள்ளைக்கு உடல்நலம் குன்றிப்போனது. அவளுக்கு இவர் தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தார். மீனாவுக்கு விவசாயிகள் சபை செயல்பாட்டில் நெடுங்காலமாக ஈடுபாடு


தகனு சாலை நிலையமானது மைய மும்பை தொடர்வண்டி நிலையத்திலிருந்து புறநகர் இருப்புப்பாதைப் போக்குவரத்தில் மேற்குப்பகுதியில் வடக்காக 144 கிமீ தொலைவில் உள்ளது. இந்த வழித்தடம்தான் மேற்கு மாநிலங்களிலிருந்து மும்பைக்கும் இங்கிருந்து அந்தப் பகுதிகளுக்குமாக தொடர்வண்டிகள் செல்வதற்கான மும்முரமான வழித்தடமாகும்

பேரணி, பங்கேற்கும் விவசாயிகள் பற்றிய விவரங்களைக் குறித்துக்கொள்ளும் போலீசாரை ஈர்த்த விவசாயிகள் சபையினர்

பால்கர் மாவட்டத்தின் மற்ற வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெண் தோழர்களுடன் தகனு நிலையத்தில் இணைந்துகொண்டனர். அவர்கள் விக்ரம்காட்டைச் சேர்ந்த ஆண்கள்

டெல்லியை நோக்கிய தொடர்வண்டிப் பயணம் கடினமானது. கூட்டம் நிரம்பிவழியும் முன்பதிவில்லாத பெட்டியில் 21 மணி நேரம் 200 பயணிகள் நசுங்கியபடி பயணம்செய்தனர். அவர்களில் பாதி பேர் பால்கர் விவசாயி சங்கத்தினர்தான்

பால்கர் மாவட்டம், தகனு வட்டம், தமங்கான் கிராமத்தின் சுனிதா வால்வி,(40), 21 மணி நேரமும் அப்படியே உட்கார்ந்திருப்பார். கழிப்பிடத்துக்குப் போய்வருவது என்பது ஒருவர்மேல் ஒருவராக நசுக்கியபடி உட்கார்ந்திருக்கும் சக பயணிகளைத் தாண்டி ஒரு பயணம்போலத்தான்! முன்பதிவில்லாத பெட்டியில் பயணம்செய்வதால் கழிப்பிடத்துக்குப் போய்வருவதற்குள் உட்கார்ந்திருந்த இடம் மீண்டும் கிடைக்காது


முண்டியடித்து உட்கார்ந்திருந்தபோதும் இந்த நீண்ட கடினமான பயண நேரத்தைக் கழிக்க விவசாயி சங்கத்தினர் புரட்சிகரப் பாடல்களைப் பாடினர். விவசாய நெருக்கடி பற்றி தானே எழுதிய பாடல்களைப் பாடினார், மாவட்ட ஊராட்சிக் குழுவின் முன்னாள் உறுப்பினர் இராஜா கெகுலா
மும்பையின் ஜோகேசுவரியிலிருந்து வந்திருந்த சஞ்சீவ் சமந்தால், விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணியில் பங்கேற்ற நடுத்தட்டு வகுப்பு மும்பைக்காரர்களில் ஒருவர்.

இராஜஸ்தானிலிருந்து வந்திருந்த பெண் பயணிகள் பால்கர் விவசாயிகளின் உரையாடல்கள், முழக்கங்களை கவனமாகக் கேட்டனர். அவர்களும் விவசாயிகளே. இராஜஸ்தானின் பண்டி மாவட்டம், இண்டோலி வட்டம், தப்லானா கிராமத்தைச் சேர்ந்த மன்பரி தேவி, வறட்சியால் எவ்வாறு தங்களின் சோளம், கோதுமைப் பயிர்கள் நாசமாகின என்பதை எங்களிடம் விவரித்துக்கூறினார். கரௌலி மாவட்டம், தோடாபீம் வட்டத்தைச் சேர்ந்த பிரேம்பாய் நம்மிடம், வெளியாள் செலவில்லாமல் மொத்த குடும்பமும் சேர்ந்து உழைத்தும் இடுபொருள் செலவை ஈடுசெய்யும் அளவுக்குகூட விளைச்சல் இருப்பதில்லை என்றார். பயிர்களுக்கு ஒரு குறைந்தபட்ச ஆதரவு விலை, பாசன நீர்ப் பிரச்னைக்குத் தீர்வு இரண்டும் டெல்லி மார்ச் பேரணியில் முக்கிய கோரிக்கைகளாக இருந்தன


சில சமயங்களில் மோசமான ஆண்கள் கூட்டமாக இருக்கையில் அதை எதிர்கொள்ள பெண் பயணிகள் இந்த இரண்டு நாள் பயணத்தில் கடும் அவதி அடைந்தனர்
சுனிதா வால்வியின் தந்தை ஒரு விவசாயி சபை செயற்பாட்டாளர். இந்த ஆண்டின் முந்தைய நாசிக் - மும்பை நீண்ட பயணத்திலும் பங்கேற்ற சுனிதா, “எங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும்வரை பேரணி போய்க்கொண்டே இருப்போம்.” என்றார்

ஒருவழியாக நவ.27 இரவு 9.25 மணிக்கு மைய மும்பை நிலையத்திலிருந்து புறப்பட்ட கோல்டன் மெயில் தொடர்வண்டி, மறுநாள் மாலை 6.45 மணிக்கு நிஜாமுதீன் நிலையத்தை அடைந்தது

தொடர்வண்டிகளில் பெரிய குழுவாகப் பயணம்செய்கையில் காணாமல்போவதும் நடப்பது வழக்கம். 24 பெட்டிகள் கொண்ட நீண்ட தொடர்வண்டி என்பதால், ஒவ்வொரு பெட்டி முன்பாகவும் விவசாயிகள் சபையின் பதாகை காட்டப்பட்டு அங்கு வந்து கூடுமாறு ஏற்பாடுசெய்யப்பட்டது

பால்கர் குழுவில் இப்போதைக்கு 100 பேர் இருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் சிக்லாங்கரில் உள்ள சிறி பாலா சாகிப்ஜி குருத்வாராவுக்கு நடந்துசெல்லவேண்டும். அங்குதான் உழவர்க்கான தேசம் அமைப்பின் தன்னார்வலர்கள் தங்குமிடத்துக்கும் உணவுக்கும் ஏற்பாடுசெய்துள்ளனர்

டெல்லியின் நெரிசலான கசமுசா போக்குவரத்தில் நிஜாமுதீனிலிருந்து குருத்வாராவுக்குச் செல்ல விவசாயிகளுக்கு 20 நிமிட நடை ஆகிவிட்டது. அங்கு சுவையான டெல்லியின் சாலையோர உணவுவகைகள் கிடைக்கவிருந்தன

நகர்ப்புற ஆதரவு அமைப்பான உழவர்க்கான தேசம் அமைப்பின் தன்னார்வலர்களும் விவசாயிகள் சபையின் தன்னார்வலர்களும் குருத்வாரா நிர்வாகமும் சேர்ந்து மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலுங்கானா மற்றும் சில தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த விருந்தினர்களுக்காக, கட்டிமுடிக்கப்படாத கட்டத்தில் படுக்கை விரிப்புகள், மின்வசதி, தண்ணீர், நடமாடும் கழிப்பிடங்களை அமைத்துத் தந்தனர். நவ.29 பிற்பகல்வாக்கில் 5 ஆயிரம் பேரைக் கொண்ட தில்லி சலோவின் தென்னிந்தியக் குழுவானது இராமலீலை மைதானத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியது. குருத்வாராவுக்கும் அதற்கும் 9 கிமீ தொலைவு இடைவெளி. ஐந்து முனைகளிலிருந்து மைதானத்தை அடைவதில் இதுவும் ஒரு நடைபயண வழி ஆகும். நவ.30-ல் அனைவரும் ஒன்றுகூடி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்வார்கள்
தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்