கோரை வெட்டுவதில் திறன்பெற்ற ஒருவர் 15 நொடிகளில் ஒரு செடியை வெட்டி, அரை நிமிடத்தில் குலுக்கி, அடுத்த சில நிமிடங்களில் ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். அத்தனை விரைவாக ஒரு சிறந்த கோரை வெட்டுபவரால் இந்த வேலையை முடித்துவிட முடியும். புற்கள் வகையைச்சார்ந்த இந்தச்செடி, அவர்களைவிட உயரமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு கட்டும் கிட்டத்தட்ட 5 கிலோ உள்ளது. பெண்கள் அவற்றை எளிதாக சுமந்து செல்கிறார்கள். ஒவ்வொருவரும் தலையில் 12 முதல் 15 கட்டுகளை ஒரே நேரத்தில் வெயிலில் அரை கிலோ மீட்டர் தொலைவு சுமந்து செல்கின்றனர். கட்டுக்கு ரூ.2 ஈட்டுவதற்காக இவர்கள் இவ்வளவு கஷ்டப்படவேண்டியுள்ளது.
ஒரு நாளில் அவர்கள் ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் 150 கோரை கட்டுகள் பறிக்கிறார்கள். இந்த கோரை புற்கள் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தின் ஆற்றுப்படுகையில் அதிகளவில் வளர்கின்றன.
கரூரின் மனவாசி கிராமத்தில், காவிரிக்கரையோரம் உள்ள ஒரு நத்தமேட்டில் இந்த கோரைவெட்டும் பெண்கள் வேலை செய்கிறார்கள். இங்கு கோரை வெட்டுபவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கிறார்கள். அவர்கள் நாளொன்றுக்கு 8 மணிநேரம் ஒரு சிறிய இடைவேளையுடன் வேலை செய்கிறார்கள். பசுமையாக அடர்ந்து வளர்ந்துள்ள கோரைகளின் தண்டுகளை கையுறையின்றி வெறும் கையிலே அரிவாளால் குனிந்து வெட்டுகிறார்கள். அவற்றை கட்டாக கட்டி, பெற்றுக்கொள்ளும் இடத்தில் ஒப்படைக்கிறார்கள். அதற்கு திறமை, பலம் மற்றம் கடின உழைப்பும் தேவைப்படுகிறது.
பெரும்பாலான பெண்கள் தாங்கள் சிறு பெண்களாக இருந்தது முதலே கோரை வெட்டுவதாக கூறுகின்றனர். “நான் பிறந்தது முதலே கோரைக்காடு தான் எனது உலகம். நான் 10 வயதாக இருந்தபோதிலிருந்தே வயல்களில் வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.3 சம்பாதிப்பேன்“ என்று 59 வயதான சௌபாக்கியம் கூறுகிறார். 5 பேர் கொண்ட அவரது குடும்பத்திற்கு உணவளிக்க தற்போது அவரது வருமானம் உதவுகிறது.
எம். மகேஸ்வரி (33). கணவனை இழந்த இவருக்கு பள்ளி செல்லும் இரண்டு மகன்கள் உள்ளனர். தன் தந்தை தன்னை மாடு மேய்க்கவும், கோரை வெட்டவும் அனுப்புவதை நினைவு கூறுகிறார். “நான் பள்ளி வாசலை கூட மிதித்ததில்லை“ என்று அவர் சோகமாக கூறுகிறார். “இந்த வயல்வெளிகளே எனது இரண்டாவது வீடு“ என்று அவர் மேலும் கூறுகிறார். ஆர். செல்வி (39) தனது தாயை பின்பற்றி தானும் கோரை வெட்டுகிறார். “எனது தாயும் கோரை வெட்டுபவர்தான். நான் இந்த வேலையை சிறிது வயதில் இருந்தே துவங்கிவிட்டேன்“ என்று அவர் கூறுகிறார்.
முத்தரையர் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள், இச்சமுதாயம் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் சமுதாயமாக குறிப்பிடப்பட்டுள்ளது, இவர்கள் அனைவரும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆமூரைச் சேர்ந்தவர்கள். ஆமூர் முசிறி தாலுகாவில் உள்ள ஒரு கிராமம். நத்தமேட்டில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதுவும் காவிரிக்கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம்தான். ஆனால், மண் குவாரிகளால், ஆமூரில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. “ஆற்றில் தண்ணீர் இருந்த காலத்தில் எங்கள் ஊரில் கோரை முளைத்தது. பின்னர் தண்ணீர் குறைவான அளவு தண்ணீரே உள்ளது. எனவே நாங்கள் வேலைக்காக நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது“ என்று மகேஸ்வரி கூறுகிறார்.
இதனால், ஆமூரில் வசிப்பவர்கள் நீர்ப்பாசன வசதியுள்ள அருகமை கரூர் மாவட்டத்திற்கு பயணம் செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் அங்கிருந்து பஸ்சிலோ, லாரியிலோ பணம் கொடுத்து பயணம் செய்து, நாளொன்றுக்கு ரூ. 300 ஈட்டுகிறார்கள். வி.எம். கண்ணன் (47), தனது மனைவி கே. அக்கண்டியுடன் சேர்ந்து கோரை வெட்டுவபவர், “மற்றவர்களுக்காக காவிரி நீர் உறிஞ்சப்படுகிறது. ஆனால், உள்ளூர்வாசிகளான எங்களுக்கு கிடைக்காமல் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்“ என்ற முரணான விஷயத்தை கூறுகிறார்.
ஏ. மாரியாயி, தனது 15 வயது முதலே கோரை வெட்டுபவராக உள்ளார். அவர் கூறுகையில், “நாங்கள் நாளொன்றுக்கு 100 கட்டுகள் கோரை வெட்டுவோம். தற்போது, குறைந்தபட்சம் 150 கட்டுகள் வெட்டி, ரூ.300 சம்பாதிக்கிறோம். முன்பெல்லாம் கூலி மிகக் குறைவாக இருந்தது. ஒரு கட்டுக்கு 60 பைசா மட்டுமே கிடைத்தது“ என்றார்.
“1983ம் ஆண்டில், 12.5 பைசாவாக இருந்தது“ என்று கண்ணன் நினைவு கூறுகிறார். அவர் தனது 12 வயது முதல் கோரை வெட்டுவதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.8 சம்பாதித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர்தான், ஒப்பந்தக்காரர்களிடம் பலமுறை முறையிட்ட பின்னர் ஒரு கட்டுக்கு ரூ. 1 உயர்த்தப்பட்டது. பின்னர் அது ரூ.2 ஆக ஆனது.
மணி, ஆமூரில் இருந்து கூலியாட்களை அழைத்து வருபவர், ஒன்று முதல் ஒன்றரை ஏக்கர் குத்ததை நிலத்தில் வணிக நோக்கில் கோரை பயிரிட்டுள்ளார். வயலில் தண்ணீர் அளவு குறைவாக இருக்கும்போது, ஒரு ஏக்கருக்கு வாடகை ரூ. 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மாதத்திற்கு வழங்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். “தண்ணீர் அளவு அதிகமாக இருந்தால், 3 முதல் 4 மடங்கு வாடகை அதிகம் கொடுக்க வேண்டும்“ என்று அவர் மேலும் கூறுகிறார். அவருக்கு மாத நிகர வருமானம், ஏக்கருக்கு ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும். ஒருவேளை குறைத்து மதிப்பிடப்படிருக்கலாம்.


இடது: வி.எம். கண்ணன், (இடது) மற்றும் அவரது மனைவி அக்கண்டி ( வலது), இவர்கள் இருவரும் கோரை வயல்களில் ஒன்றாகவே பணிபுரிகிறார்கள். ஆமூரில் இருந்து கோரை வெட்டுவதற்கு வருபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.
கோரை புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். சைப்பர்ஏசியே குடும்பத்தைச் சார்ந்தது. இது தோராயமாக 6 அடி உயரம் வரை வளர்கிறது. இது கரூர் மாவட்டத்தில் வணிக நோக்கத்தில் பயிரிடப்படுகிறது. இங்கிருந்து முசிறியில் உள்ள கோரைப்பாய் மற்றும் மற்ற பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது ஒரு புகழ்பெற்ற பாய் தயாரிக்கும் மையம்.
இந்த தொழிற்சாலை, வயலில் வேலை செய்யும் தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது. ரூ.300 சம்பாதிப்பது பெண்களுக்கு எளிதானது அல்ல, அவர்கள் காலை 6 மணிக்கே பணிகளை துவக்குவார்கள். காலை 6 மணிக்கே தங்கள் வேலையை துவங்குவார்கள். நீண்டு வளர்ந்துள்ள கோரையை குனிந்து, வளைந்திருக்கும் அரிவாள் கொண்டு அடியில் வெட்டுவார்கள். அவர்கள், பருவ மழைக்காலங்களில் சில நாட்கள் தவிர, ஆண்டு முழுவதும் பணி செய்வார்கள்.
“நான் காலை 4 மணிக்கே எழுந்து, குடும்பத்தினருக்காக சமைத்துவைத்துவிட்டு, அவசரஅவசரமாக ஓடிவந்து பஸ்சை பிடித்து, வயலுக்கு வரவேண்டும். நான் சம்பாதிக்கும் பணம் பஸ் பயணத்திற்கு, சாப்பாட்டுக்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் இந்த வேலை தேவைப்படுகிறது என்று கூறுகிறார் 44 வயதான ஜெயந்தி.
“எனக்கு வேறு என்ன வழிகள் உள்ளன? இந்த ஒரு வேலை மட்டும்தான் எனக்கு கிடைக்கிறது. எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தவன் 9ம் வகுப்பும், இளையவன் 8ம் வகுப்பும் படிக்கிறார்கள்“ என்று மகேஸ்வரி கூறுகிறார். அவரின் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.
பெரும்பாலும் அனைத்து பெண்களும் கோரை வெட்டுவதில் கிடைக்கும் தொகையில்தான் தங்களின் குடும்பத்தை நடத்துகின்றனர். “நான் இரண்டு நாட்கள் இங்கு வேலைக்கு வரவில்லையென்றால், எனக்கு சாப்பிடுவதற்கு வீட்டில் ஒன்றும் இருக்காது“ என்று செல்வி கூறுகிறார். அவரது 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு அவரது வருமானம் முக்கியமானது.

நாள் முழுவதும் குனிந்து, கோரை வெட்டுவது எம்.ஜெயந்திக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்துகிறது. அவர், அவரது வருமானத்தில் பெரும் பகுதியை மருத்துவ செலவிற்காக உபயோகிக்கிறார்.
ஆனால், பணம் பற்றாக்குறையாகத்தான் உள்ளது. “எனது இளைய மகள் செவிலியருக்கு படிக்கிறார். எனது மகன் 11ம் வகுப்பு படிக்கிறார். நான் மகனின் படிப்பிற்கு எவ்வாறு பணம் சம்பாதிப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. எனது மகளின் கட்டணத்தையே நான் கடன் வாங்கிதான் செலுத்தியுள்ளேன்“ என்று மாரியாயி கூறுகிறார்.
அவர்களின் வருமானம் ரூ.300ஆக உயர்ந்தும் ஒரு நன்மையும் இல்லை. “முன்பெல்லாம் நாங்கள் வீட்டிற்கு ரூ.200 எடுத்துச்செல்வோம். அதில் நிறைய காய்கறிகள் வாங்கலாம். ஆனால், தற்போது ரூ.300 எங்கள் போதியதாக இல்லை“ என்று சௌபாக்கியம் கூறுகிறார். அவர் வீட்டில், அவரது தாய், கணவர், மகன், மருமகள், அவர் உள்பட 5 பேர் உள்ளனர். “எனது வருமானத்தில் தான் அனைவரும் சாப்பிட வேண்டும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் பெண்களின் வருமானத்தை நம்பியே உள்ளனர். ஏனெனில் ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். “எனது மகன் கொத்தனர். அவர் ஒரு நாளைக்கு ரூ.1,000 கூட சம்பாதிப்பார். ஆனால், அவரது மனைவிக்கு ஒரு பைசா கூட கொடுக்கமாட்டார். அனைத்தையும் குடிப்பதற்கே பயன்படுத்துவார். அவர் மனைவி பணம் கேட்டால், அவரை கடுமையாக அடித்து தாக்குவார். எனது கணவர் வயதானவர். அவரால் வேலைக்கு செல்ல முடியாது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த கடினமான வாழ்க்கை பெண்களின் உடல் நிலையை வெகுவாக பாதிக்கிறது. “நான் நாள் முழுவதும் குனிந்து கோரை வெட்ட வேண்டியுள்ளதால், எனக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது“ என்று ஜெயந்தி கூறுகிறார். “கடைசியில் நான் வாரமொருமுறை மருத்துவமனைக்குச்செல்கிறேன். அந்த பில் தொகையே ரூ.500 மூதல் ரூ.1,000 வருகிறது. நான் சம்பாதிக்கும் அனைத்தும் என் மருத்துவ செலவிற்கே செல்கிறது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
“எனனால் இதை நீண்ட காலம் செய்ய முடியாது“ என்று மாரியாயி சோகமாக கூறுகிறார். அவர் கோரை வெட்டும் வேலையை நிறுத்த விரும்புகிறார். “எனது தோள்பட்டை, இடுப்பு, நெஞ்சு, கைகள் மற்றும் கால்கள் வலிக்கிறது. எனது கைகள் மற்றும் கால்களில் கூர்மையான கோரை புற்கள் கிழித்து விடுகின்றன. உங்களுக்கு தெரியுமா வெயிலில் வேலை செய்வது எவ்வளவு கொடுமை என்று‘‘ அவர் கேட்கிறார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறி தாலுகா ஆமூரைச் சேர்ந்த பெண், அருகிலுள்ள கரூர் மாவட்டத்திற்கு பயணம் செய்து, கோரை அறுவடை செய்து வருமானம் ஈட்டுகிறார். நீண்டு வளர்ந்துள்ள புல் வகையைச் சேர்ந்த தாவரம், தமிழ்நாட்டில் உள்ள காவிரியாற்றுப்படுகையில் அதிகளவில் வளர்ந்து வருகிறது

ஏ.மாரியாயி கோரை வயல்களில், 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகிறார். தற்போது அவருக்கு உடல் வலி ஏற்படுவதால், அவரால் குனிந்து வேலை செய்ய முடியவில்லை. கோரை கட்டை தூக்க முடியாமல் சிரமப்படுகிறார். மாரியாயி தனது 5 மகள்கள் மற்றும் ஒரு மகனை படிக்கவைத்து விட்டார். அவருக்கு கோரை வெட்டுவதில் கிடைத்த வருமானத்திலே மூத்த மகள்கள் 3 பேருக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டார்.

வாழ்க்கை எப்போதும் அவருக்கு போராட்டமாக இருந்துள்ளது என்று மகேஸ்வரி கூறுகிறார். கணவனை இழந்த அவரின் இரண்டு மகன்களும் உயர் நிலைப்பள்ளியில் படிக்கிறார்கள். “நான் பள்ளி சென்றதே இல்லை. அதற்காக மிகவும் வருந்துகிறேன். நான் படித்திருந்தால், வேறு ஏதாவது வேலை கூடுதலாக செய்திருப்பேன்.“ அவர் சிறு பிள்ளை பருவத்தில் இருந்தே கோரை வெட்டுகிறார்.

ஆர்.செல்வி கோரையை வெட்டி, உதறிவிட்டு, காய்ந்த பகுதிகளை தனியாக அடுக்கி வைக்கிறார். அவரது 4 பேர்கள் கொண்ட குடும்பத்தை அவரது வருமானமே காப்பாற்றுகிறது. “நான் 300 ரூபாய் சம்பாதித்தாலும், 100 ரூபாய் மட்டுமே எனக்கு கிடைக்கும். 200 ரூபாயை எனது கணவர் குடிப்பதற்காக வாங்கிக்கொள்வார். எங்கள் வீட்டு ஆண்கள் மட்டும் குடிக்கவில்லையென்றால், நாங்கள் இதைவிட ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும்“ என்று அவர் கூறுகிறார்.

மகேஸ்வரி (இடது), ஆர்.கவிதாவின் கண்ணில் பட்ட தூசியை எடுத்துவிடுவதற்கு உதவுகிறார். எஸ். ராணி (வலது) அவரது கண்ணில் உள்ள தூசியை தனது துண்டு மூலம் துடைத்து விடுவதற்கு பார்க்கிறார். கோரையை பிரித்து எடுத்து கட்டி வைக்கும்போது, அதிலிருந்து பறந்துவரும் தூசி இந்தப்பெண்களுக்கு கண்ணில் தொடர் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

காலை 6 மணி முதல் கடுமையான 8 மணி நேர வேலைக்கு மத்தியில் ஒரு 10 நிமிட சிறிய இடைவேளை கிடைக்கிறது. அதில் அமர்வதற்கு அங்கு சிறிது நிழல் கூட இல்லை. வெட்டவெளியிலே சூரிய ஒளியிலே அமர்ந்து அவர்கள் சிறிது தேநீர் பருகுகிறார்கள்.

எம். நிர்மலா, வெட்டி, கட்டப்பட்ட கோரை கட்டுகளை உதறுகிறார். இந்த கட்டுகள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறியில் உள்ள பாய் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பாய் உள்ளிட்ட பொட்கள் தயாரிக்கப்படுகிறது

கவிதா அவரால் முடிந்தளவு கோரையை அடிக்கிறார். தண்டிலிருந்து உலர்ந்த பகுதிகளை நீக்குகிறார். அதற்கு பலமும், திறமையும் தேவைப்படுகிறது. ஒரு அனுபவம் வாய்ந்த பெண் ஒரு கட்டுக்கு எவ்வளவு தேவைப்படுமோ அந்தளவை சரியாக வெட்டுகிறார்.

கவிதா எப்போதும், சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் வேலை செய்கிறார். அவர் திருமணத்திற்கு பின்னர் கோரை வெட்ட துவங்கியுள்ளார்.

இடமிருந்து வலம் : எஸ்.மேகலா, ஆர்.கவிதா, எம்.ஜெயந்தி மற்றும் கே. அக்கண்டி சுட்டெரிக்கும் வெயிலில் சிறிய இடைவேளைக்குப்பின்னர் பணிகளை துவக்கிவிட்டனர். கோடை காலங்களில் தங்கள் மீது தண்ணீரை ஊற்றிக்கொண்டு வெயிலை சமாளித்து வேலை செய்கிறார்கள்.

மேகலாவின் கணவர் படுத்த படுக்கையாக உள்ளார். எனவே மேகலா கோரை வெட்டி வரும் கூலியில் தன் வாழ்க்கையை நடத்துகிறார்.

ஏ.காமாட்சியின் மகன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அவரது மகன் 2018ம் ஆண்டில் இறந்துவிட்டார். தனது 66 வயதில் தனியாக வசிக்கும் அவர், கோரை வயல்களில் வேலை செய்து வரும் வருமானத்தில் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

பெண்கள் கோரை கட்டுகளை தரையில் தட்டி, அவற்றை சமமாக்குகிறார்கள். ஒப்பந்ததாரர் மணி (இடது) நுணியை வெட்டி அனைத்தையும் ஒரே அளவாக்குகிறார்.

ஏ.வசந்தா, தலையில் கட்டுகளை வைத்துக்கொண்டு, தனது காலிலே அடுத்தடுத்த கட்டுகளை தூக்கி தலையில் வைத்துக்கொள்கிறார். அதில் அவர் திறன் பெற்றவராக இருக்கிறார். காலை இடுப்பளவு உயர்த்தி அங்கிருந்து ஒரு கையில் எடுத்து, தலைக்கு மாற்றிக்கொள்கிறார். எவர் உதவியுமின்றி அவர் தானே செய்துகொள்கிறார். ஒவ்வொரு கட்டும் 5 கிலோவுக்கு மேல் உள்ளது.

அந்தப்பெண்களால் ஒரே நேரத்தில் 10 முதல் 12 கட்டுகளை தங்கள் தலையில் சுமக்க முடிகிறது. அந்த கட்டுகளை பெற்றுக்கொள்ளும் இடத்திற்கு அரை கிலோ மீட்டர் தொலைவு அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து செல்கிறார்கள். “இந்த வேலை செய்வது எனக்கு பாதுகாப்பாக உள்ளது. ஏனெனில் இங்குள்ள பெண்களில் பெரும்பாலானோர் உறவினர்கள்தான்“ என்று மகேஸ்வரி கூறுகிறார்.

ஒரு பெருஞ்சுமையை சுமந்துகொண்டு வரும் மாரியாயி, “அதிகாலை எழுந்து, அவசரமாக வயலுக்கு வந்து, நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு, வீட்டிற்கு விரைந்து செல்கிறார். எனக்கு ஓய்வென்பதே கிடையாது. நான் முடியாமல் இருந்தால்கூட என்னால் வீட்டில் படுத்து ஓய்வெடுக்க முடியாது. இங்கு வந்து வேலைக்கு இடையே சிறிது ஓய்வெடுத்துக்கொள்வேன்“

கோரை கட்டுகள் அனைத்தும் ஒரு இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அவை லாரி மூலம் பாய் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

வேலை செய்யும் பெண்கள் இறுதியாக தங்கள் வேலையை முடித்துவிட்டு, மதிய உணவை 2 மணிக்கு சாப்பிடுகிறார்கள். “அருகிலே வேலை கிடைத்தால், நாங்கள் வீட்டிற்கு ஒரு மணிக்கே திரும்பிவிடுவோம். இல்லாவிட்டால், மாலை அல்லது சில நேரங்களில் இரவு கூட ஆகிவிடும் வீட்டிற்கு செல்வதற்கு“ என்று வசந்தா கூறுகிறார்.
கட்டுரைக்கு உதவியவர் அபர்ணா கார்த்திக்கேயன்
தமிழில்: பிரியதர்சினி R.