உஸ்மானாபாத் மாவட்டத்தில் 6-7 ஆண்டுகளுக்கு முன்பு மராத்வாடாவின் கமஸ்வாடி கிராமத்தில் குடும்ப சொத்து பிரிவினையில் தனக்கு கிடைத்த நான்கு ஏக்கர் நிலத்தில் சந்திப் ஷெல்கி விவசாயம் செய்தார். அப்போது அவருக்கு 19 வயதுதான். “எனது மூத்த மகன் மகேஷிற்கு இருகால்களும் நடக்க முடியாது,” என்று கண்ணீர் மல்க சொல்கிறார் சந்திப்பின் தாய் நந்துபாய். “சந்திப்பின் மாமாதான் மொத்த நிலத்தையும் [பாக பிரிவினைக்கு முன்பு] கவனித்து வந்தார். என் கணவர் வயலில் வேலை செய்வார். அனுபவமற்றவர் என்பதால் முடிவுகளை எடுக்க மாட்டார்.”
ஷெல்கிஸ் குடும்பத்தினர் சோளம், கோதுமை, சோயாபீன் போன்றவற்றை பல ஆண்டுகளாக பெரிய லாபமின்றி பயிரிட்டு வந்தனர். எனவே 2017ஆம் ஆண்டு விதைப்பு காலத்தில் கரும்பு நடவு செய்ய சந்திப் முடிவு செய்தார். “பணப் பயிர்தான் எங்களை கடனிலிருந்து விடுவிப்பதற்கான வழி,” என்கிறார் தகர கூரை வேய்ந்த அரை இருளான வீட்டில் அமர்ந்தபடி நந்துபாய்.
சந்திப் விவசாயத்தில் இறங்கி இரண்டு ஆண்டுகளில், 2012ஆம் ஆண்டு பருவம் தவறிய மழை, வறட்சி, புயல் என மராத்வாடாவில் நான்காவது ஆண்டாக மோசமான வானிலை நிலவியது. பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. ஷெல்கி குடும்பம் உள்ளூர் வங்கியில் ரூ.3.5 லட்சம் கடன் வாங்கியது. தனியாரிடமிருந்து ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக கடன் வாங்கியது.
இந்த நெருக்கடியிலும் தனது மூத்த சகோதரி சந்தியாவின் திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்திப் ஏற்பாடு செய்தார். “அவன் மிகவும் பொறுப்பானவன், நேர்மையானவன்,” என்கிறார் அவர். “சமையலறையில் அம்மாவிற்கு உதவுவான், சகோதரரை கவனித்துக் கொள்வான்.”

எங்களை கடன்களில் விடுவிக்க பணப் பயிர்கள் ஒரு வழியாக இருந்தது' , என்கிறார் சந்திப்பின் துயர்மிகு தாய் நந்துபாய் ஷெல்கி
மாநில அரசு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) உறுதி செய்யவில்லை என்பதால் கடன்களை அடைப்பதற்கு பாரம்பரிய உணவுப் பயிர்களை நம்பக் கூடாது என சந்திப் நினைத்தார். சந்தை விலையில் ஏற்றஇறக்கம் ஏற்பட்டு லாபத்தில் உறுதியற்ற நிலை அதிகரிக்கிறது. ஆனால் கரும்பிற்கு எம்எஸ்பியுடன் அரசு உதவித்தொகை அளிக்கிறது. நல்ல கரும்பு பயிர் அதிகளவு லாபத்தை உறுதி செய்யும் என சந்திப் நினைத்தார். ஆனால் அவற்றை பயிரிடுவதிலும் பிற ஆபத்துகள் உள்ளன. உணவுப் பயிர்களைவிட இப்பயிருக்கு கூடுதல் தண்ணீரும், முதலீடும் தேவைப்படுகிறது.
“எதுவாகினும் நாங்கள் கீழே விழுகிறோம்,” என்கிறார் நந்துபாய். “ஏதோ ஒன்று செய்ய வேண்டும்.”
குடும்பத்தை முன்னேற்றும் நோக்கில் சந்திப் தனியாரிடம் மேலும் ரூ.1 லட்சம் கடன் வாங்கி ஆழ்துணை கிணறு தோண்டினார். அதிர்ஷ்டவசமாக அதில் தண்ணீரும் இருந்துள்ளது. கடனுக்கு கரும்பு தண்டுகளை வாங்கி தனது பண்ணையில் உள்ள வேப்ப மரத்தின் கீழ் அவற்றை அடுக்கினார். விதைப்பு தொடங்குவதற்கும், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் வாங்குவதற்கும் நல்ல மழையை சந்திப் எதிர்பார்த்திருந்தார்.

உஸ்மானாபாத் மாவட்டம், கமஸ்வாடி கிராமத்தில் உள்ள ஷெல்கியின் குடும்பம்: ஏற்கனவே பெரிய விலையைக் கொடுத்துவிட்டது, சந்திப்பின் தந்தை பால்பீமும் விவசாயத்தில் இதே நிச்சயமற்ற நிலையை சந்திக்கிறார்
அதே நிலையில், கடனும் வளர்ந்தது. வங்கிக் கடன்களை தாண்டி குடும்பத்தினரின் தனியார் கடன் (முன்பு வாங்கியதுடன் கூடுதலாக மற்றொரு கடன்) என ரூ.3 லட்சம் ஆக பெருகியது. “விளையாத பயிர்கள் எங்களை நிரந்தரமாக சீர்குலைத்தது,” என்கிறார் சந்திப்பின் தந்தையான 52 வயது பால்பீம். “அவன் மீது அழுத்தம் மேலும் அதிகமானது.”
பயிரிடுவதற்காக நம்பிக்கையுடன் வேப்ப மரத்தடியில் மூட்டைகள் நிறைய பயிர்களை அடுக்கி வைத்திருந்த அதே இடத்தில் ஜூன் 8ஆம் தேதி சந்திப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “மரத்தில் உடல் தொங்குவதை காலை 8 மணிக்கு அக்கம்பக்கத்தினர் கண்டனர்,” என்கிறார் அதே மரத்தின் நிழலில் அமர்ந்தபடி பால்பீம். “நாங்கள் மிக அருகில் சென்றபோது தான் சந்திப் என உணர்ந்தோம். நான் உறைந்துவிட்டேன்.”

சந்திப் தூக்கிட்டு கொண்ட மரத்தின் அடியில் பால்பீம் ஷெல்கியும், கிராமவாசிகளும்
இந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களில் உஸ்மானாபாத்தைச் சேர்ந்த மேலும் 55 விவசாயிகள் இதே நிலையை தேடிக் கொண்டனர் என்கிறது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரவு. ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு தற்கொலை என உயர்ந்தது. 2016ஆம் ஆண்டில் நல்ல மழை பெய்தபோதும், வறட்சி குறைந்த பிறகும் இறப்பு விகிதம் குறையவில்லை.
மராத்வாடாவில் நல்ல பருவமழை இல்லாததும் விவசாயிகளின் தற்கொலைகளை, துயரங்களை தடுக்கத் தவறியதற்கு ஒரு காரணம். விதைப்பு காலத்தில் கடன் திரட்ட விவசாயிகளுக்கு வாய்ப்பில்லாததும் காரணம்.
யாரை அவர்கள் அணுகுவார்கள்? வங்கிகள் கடன்களை வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றன. பிராந்திய வங்கிகள் தீவிர பாகுபாடு காட்டுவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு சொல்கிறது. மார்த்வாடாவின் எட்டு மாவட்டங்களில் 1 கோடி 80 லட்சம் மக்கள் தொகை, அதுவே புனே மாவட்டத்தில் 90 லட்சம் தான் மக்கள்தொகை. ஆனால் வணிக வங்கிகள் (தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார்) மார்த்வாடாவுக்கு (ரூ. 45,795 கோடி) மார்ச் 2016 வரை வழங்கிய மொத்த வங்கிக்கடன் புனே மாவட்டத்தில் (ரூ. 140, 643 கோடி) வழங்கப்பட்ட முன்தொகை என்பது மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு. பொருளாதார ரீதியாக ஈர்க்காதது, அப்பிராந்தியங்களில் விவசாயம் சார்ந்த தொழில்கள் செழிக்காததற்கு ஒரு காரணமாகிறது. இதனால் வங்கிகள் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன.
அனைத்து இந்திய பணியாளர் வங்கி கூட்டமைப்பின் கூடுதல் செயலாளர் தேவிதாஸ் துல்ஜாபுர்கர் பேசுகையில், மகாராஷ்டிராவின் 90 சதவீத வங்கித்துறை என்பது தானே, மும்பை, புனே ஆகிய மூன்று பிராந்தியங்களில் மட்டும் பரிமாற்றங்கள் நடைபெறுவதாகச் சொல்கிறார். “வளர்ந்த பிராந்தியங்களின் வளமையை வளர்ச்சியற்ற பிராந்தியங்களுக்கு பரிமாற்றம் செய்து இடைவெளியை நிரப்பும் ஒரு பாலமாக செயல்பட வேண்டும்,” என்கிறார் அவர். “மாறாக அவை இந்த இடைவெளியை நிலைக்கச் செய்கின்றன.”
பயிர்க்கடனையும், பருவ கடன்களையும் ஒன்றாக்கி விவசாய கடன் என்று வங்கிகள் மறுசீரமைப்பு செய்துள்ளன. பயிர்க்கடனுக்கான (விதைகள், உரங்கள் வாங்குவது போன்ற வேளாண்மை செயல்பாடுகளுக்கு) வட்டி விகிதம் 7 சதவீதம். அதில் 4 சதவீதத்தை மாநில அரசு செலுத்துகிறது. பருவக் கடன் (டிராக்டர்கள், இயந்திரங்கள் போன்ற முதன்மை முதலீடுகளுக்கு பயன்படுத்துவது) என்பதில் வட்டி விகிதம் இரு மடங்கு வசூலிக்கப்படும். மறுசீரமைப்பின் மூலம் வங்கிகள் இரண்டு கடன்களையும் ஒன்றாக்கி புதிய பருவ கடன் என்கின்றன. இது விவசாயிகளின் பாக்கிகளை பூதாகரமாக்கி புதிய கடன்கள் வாங்குவதற்கு தகுதியற்றவர்களாக வகைப்படுத்துகிறது.
ஒளரங்காபாத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா வங்கியின் ஓய்வுபெற்ற அலுவலர் பேசுகையில், மறுசீரமைப்பிற்கு எதிராக விவசாயிகளுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். “ஆனால் அனைத்து வங்கி அதிகாரிகளும் அப்படி செய்வதில்லை,” என்கிறார் அவர். “வீடுகளில் சோதனையை தவிர்க்க இதுபோன்ற கடன்களுக்கு செல்லுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.”
பாரம்பரியமாக கணக்கு வைத்துள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளை அணுகும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். ஆனால் மராத்வாடாவின் ஆறு மாவட்டங்களில் உள்ள ஆறு வங்கிகளும் கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டன, பெரும்பாலும் செல்வாக்குமிக்க கடனாளிகளிடம் கடனை திரும்பப் பெற முடியாத இயலாமை நிலைக்குச் செல்கின்றன. லத்தூர், ஒளரங்காபாத் மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் கூட நல்ல முறையில் செயல்படவில்லை.
இதனால் சந்திப் போன்ற விவசாயிகள் உடனடியாக பணத்தை பெறுவதற்கு தனியார் வட்டி கடைக்காரர்களை அணுகுகின்றனர். இதில் மாதம் 3-5 சதவீதம் வரை வட்டி பெருகுகிறது அல்லது ஆண்டிற்கு 40-60 சதவீதம் வரை செல்கிறது. எனவே நிர்வகிக்கக்கூடியதாகக் கூறப்படும் தொகை கூட, வட்டி சேர்க்கப்பட்டால், இறுதியில் அசல் தொகையைவிட பல மடங்கு அதிகமாகி விடலாம்.
பீட் மாவட்டம் அஞ்சன்வாடி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது பக்வான் ஏதி, அவரது மனைவி சகர்பாய் தனியார் வட்டி கடைக்காரரை காண தயாராகிக் கொண்டிருந்தனர். “எனக்கு ஏற்கனவே ஹைதராபாத் வங்கியில் 3 லட்சம் ரூபாய் கடன் உள்ளது, தனியாரிடம் 1.5 லட்சம் வாங்கியுள்ளேன்,” என்கிறார் ஏதி. “என் இரு மகன்களின் கல்விக்கும் கொஞ்சம் பணத்தை செலவிட்டுள்ளோம். அவர்கள் புனேவில் படித்தனர். இப்போது வேலை தேடிக் கொண்டிருக்கின்றனர்.”

தீவிர கடன்சுமையில் உள்ள பீட் மாவட்டம், அஞ்சன்வாடி கிராமத்தைச் சேர்ந்த பக்வான் ஏதி, அவரது மனைவி சக்கர்பாய்: ' நிச்சயமற்ற இந்த வாழ்க்கையை என் மகன்கள் ஏன் வாழ வேண்டும்?' என கேட்கிறார் அவர்
தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் உணவுப் பயிர்கள் விதைப்பதற்கு தயார் செய்ய விதை, உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு சுமார் ரூ.30,000 வரை ஏதி செலவிடுகிறார். ஆள் கூலி, உழவுச் செலவும் உள்ளது. இதுபோன்ற கணக்குகளை தனது தலைமுறையில் கடைசியாக செய்யும் நபராக தான் மட்டுமே இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். “நிச்சயமற்ற வாழ்க்கையை எனது மகன்கள் ஏன் நடத்த வேண்டும்?” என கேட்கிறார் அவர். “கடன் அதிகரிப்பதும் வலியைத் தருகிறது. விவசாயிகளை பிறரது இரக்கத்திற்கு ஆளாக்குவதையே இப்போதைய அமைப்பு செய்கிறது.”
போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜூன் 24ஆம் தேதி மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நவிஸ், 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு வாங்கிய விவசாய கடன்களை மாநில அரசு ரத்து செய்வதாக அறிவித்தார். இப்போது விவசாயிகள் கடன் சுமையின்றி பயிர் கடனுக்கு வங்கிகளை அணுகலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுவும் வேலைதான் என்கிறார் ஏதியின் உறவுக்காரரான 40 வயது அஷோக். “இங்குள்ள ஒவ்வொரு நிதி நிறுவனத்திடமும் எங்களுக்கு கடன் எதுவும் பாக்கியில்லை எனக்கூறும் வகையில் என்ஓசி [தடையில்லா சான்றிதழ்] வாங்க வேண்டும். லஞ்சம் கொடுத்து பல முறை சென்று வந்தால்தான் என்ஓசி கிடைக்கும். 6-7 இடங்களில் எனக்கு என்ஓசி தேவைப்படும். ஒவ்வொரு இடத்திலும் என்னால் எப்படி லஞ்சம் கொடுக்க முடியும்? நேரத்திற்கு வேலையைத் தொடங்காவிட்டால், ஒட்டுமொத்த பருவமும் வீணாகிவிடும்.”
இதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு மகன் தற்கொலை செய்து கொண்ட போதிலும் பால்பீம் வேலைக்குத் திரும்பும் நிலை ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கும் போது கரும்பு பயிரிட சந்திப் திட்டமிட்டு இருந்தார். இப்போது சந்திப்பைப் போன்று அவரது தந்தையும் நல்ல மழைக்காலத்திற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
தமிழில்: சவிதா