அம்ரோஹாவிலிருந்து டெல்லி செல்லும் காசி விஸ்வநாத் விரைவு ரயிலில் அதிகாலை வேளையில் அமர்ந்திருந்த அய்னுல் ஷேக்கின் மனதிற்குள் பலவிதமான அச்சங்கள் எழுந்தன. “எனக்கு பயமாக இருந்தது. நான் பம்பாய் செல்கிறேன். மிக தொலைவிற்கு செல்கிறேன். அவர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? நான் எப்படி சமாளிப்பேன்?” இந்த பதற்றமே பெண்களுக்கான பொது ரயில் பெட்டியில் பயணித்த அந்த 17 வயது சிறுமியின் இரவு உறக்கத்தை பறித்தது.
அவரது மாமனார் ஆலிமும் அதே ரயிலில்தான் பயணித்தார். டெல்லியிலிருந்து மற்றொரு ரயில் பிடித்து பாந்த்ரா முனையத்திற்கு அவர்கள் வந்தனர். மக்தூம் அலி மஹிமி தர்காவிற்கு வெளியே பிச்சை எடுக்கும் தனது தொழிலை தொடங்குவதற்கு முன், மாஹிமில் உள்ள நயி பஸ்தி குடிசைப் பகுதியில் இருந்த புதிய வீட்டிற்கு அய்னுலை அவர் அழைத்துச் சென்றார்.
அய்னுல் ஷேக்கும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இத்தொழிலை செய்தார். மத்திய மும்பை கஸ்தூர்பா மருத்துவமனையில் பல வாரங்களாக இருக்கும் தனது 18 மாத மகனின் மருத்துவ செலவுக்கு இத்தொகை உதவியது. மகனுக்கு என்ன தொந்தரவு என்பதை அய்னுல் அறியவில்லை. “என்னால் யாரிடமும் [மருத்துவ செலவிற்கு] பணம் வாங்க முடியாது, வாங்கினால் யார் திருப்பி செலுத்துவது?” என கேட்கிறார் அவர்.
மும்பையில் ரயில் ஏறியபோது அவருக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை.
விரைவு ரயிலில் பயணித்த அன்று அய்னுலிடம் கொஞ்சம் துணிகள் கொண்ட ஒற்றை பை மட்டுமே இருந்தது. தனது புகுந்த வீட்டிற்காக சிறிது சிறிதாக சேர்த்து வாங்கிய பாத்திரங்கள் அனைத்தும் விற்கப்பட்டன. அவர் சிறுமியாக இருந்தபோதே பிற வீடுகளில் பாத்திரம் துலக்கி, துணிகளை துவைத்து, வயல்களில் வேலை செய்துள்ளார். “ எனக்கு கொஞ்சம் பணம் அல்லது உணவு கொடுப்பார்கள். பணத்தை பெட்டியில் போட்டு வைத்து திருமணத்திற்காக சேமித்தேன். 5,000 ரூபாய் வரை சேமித்து அருகமை கடைக்கு சென்று பித்தளை கிண்ணங்கள், தட்டுகள், கரண்டிகள், செம்பு குவளைகள் போன்றவற்றை வாங்கினேன். ”
அய்னுல் ஷேக் தனது இளைய மகள் ஜூனைத், மகள் மெஹ்ஜபீனுடன்; அவரது மூத்தமகன் முகமது புகைப்படத்திற்கு நிற்க மறுத்துவிட்டான்
அவர் திருமணமாகி அம்ரோஹாவில் அதே மொஹல்லாவில் கணவர் ஜமீலின் வீட்டிற்குச் சென்றபோது, குடிப் பழக்கத்திற்கு அடிமையான ஜமீல் பாத்திரங்கள் ஒவ்வொன்றாக விற்று குடித்துள்ளார். பாந்த்ரா ரயில் முனையத்தில் இறங்கி 10 ஆண்டுகள் ஆகியும் அவர் கணவரிடம், இரத்தம் வரும்வரை அடிக்கடி அடி வாங்கி வருகிறார். மும்பை வந்தவுடன் இந்த வன்முறை தொடங்கிவிட்டது. எனினும் எப்போது தொடங்கியது என்பது பற்றி அவருக்கு நினைவில்லை. “என் அம்மாவிடம் தொலைப்பேசியில் பேசினேன்,” என்கிறார் அய்னுல். “நீ அங்குதான் வாழ வேண்டும், உன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்…”
பாத்திரங்கள் விற்கப்பட்டதும் அய்னுல், பட்வால் மொஹல்லாவை விட்டு வெளியேறி உத்தரப் பிரதேசத்தின் ஜோதிபா புலே நகர் மாவட்டத்தில் உள்ள அம்ரோஹா நகரின் (அப்போதைய) கிராமப் புறநகரில் உள்ள பிறந்த வீட்டிற்கு சென்றார். அவருக்கு தாய், இரண்டு சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் உள்ளனர். அய்னுலின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். “நாங்கள் சல்மான் ஜாட்டைச் சேர்ந்தவர்கள்,” என்கிறார் தாராவியின் ஒரு ஓரத்தில் தகரம், அஸ்பெஸ்டாஸ் கொண்டு கட்டப்பட்ட ஒற்றை அறை வீட்டின் தரையில் அமர்ந்தபடி அவர். “எங்கள் சமூக ஆண்கள் பாரம்பரியமாக முடிதிருத்தும் தொழில் செய்பவர்கள். அப்பா குடிசையில் அமர்ந்தபடி முடி வெட்டுதல், ஷேவிங் செய்து அவ்வப்போது சிறிது சம்பாதிப்பார். நாங்கள் மிகவும் வறுமையான குடும்பம். அம்மா சில சமயம் பிள்ளைகள் ஆறு பேருக்கும் பசியை போக்க குடிப்பதற்கு வெந்நீர் அல்லது வெல்ல துண்டு கொடுப்பார். எங்களிடம் முறையாக உடைகள் கூட இருக்காது. ஒரு பக்கம் நீளம், மறுபக்கம் கருப்பு என பொருந்தாத செருப்புகளை அணிந்திருப்போம். ஊக்குப்போட்டு வைத்திருப்போம்.அய்னுல் ஷேக் தனது இளைய மகள் ஜூனைத், மகள் மெஹ்ஜபீனுடன்; அவரது மூத்தமகன் முகமது புகைப்படத்திற்கு நிற்க மறுத்துவிட்டான்
ஆறுபேரில் இளையவரான அய்னுல் பள்ளிக்குச் சென்றதில்லை. ஓரளவு வளர்ந்ததும் அனைவருக்கும் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர். ஒரு சகோதரர் மோட்டார் பழுது பார்க்கும் கடையில் உதவியாளராகவும், இருவர் ரிக்ஷா இழுப்பவர்களாகவும் இருந்தனர். அவரது தாய் அய்னுலின் மூத்த சகோதரியுடன் (இருவருக்கும் பின்னர் காசநோய் ஏற்பட்டது) இணைந்து பீடி சுற்றியுள்ளார். 1000 பீடி சுற்றி முகவரிடமிருந்து ரூ.50 பெற்றுள்ளனர். அய்னுல் தனது மூத்த சகோதரியுடன் சேர்ந்து அருகில் உள்ள ஜோயா கிராம வயல்களில் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். பெரும்பாலும் அதில் கிடைக்கும் உணவு தானியங்களைக் கொண்டு குடும்பத்தின் உணவு பிரச்னையை சமாளித்துள்ளனர். “அந்நாட்களில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வேலை செய்வேன், ஓய்வெடுத்துவிட்டு மகிழ்ச்சியாக இருப்பேன்.”
காலபோக்கில் ஷேக்கின் குடும்பம் தந்தையின் பணிமனையிலிருந்து வீட்டை சிறிது அகலப்படுத்தினர். உள்ளூர் நிறுவன திட்டத்தின் கீழ் அவரது தாய் மருத்துவச்சியாக பயிற்சி பெற்று சிறிது சம்பாதிக்கத் தொடங்கினார். அய்னுலுக்கு 13 வயதானபோது (இப்போது 30களில் உள்ளார், வயது, ஆண்டு போன்றவற்றில் லேசான குழப்பம் இருந்தாலும், பழைய நினைவுகளை விளக்கமாக சொல்கிறார்), தந்தைக்கு உடல்நலம் குன்றி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் முடக்குவாதத்தில் இருந்தார். குடும்பம் மீண்டும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது. “நாங்கள் மிகவும் முயற்சித்தோம், எங்கள் மொஹல்லாவில் இருந்தவர்களும் உதவினர். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.” அய்னுலுக்கு 15 வயதிருந்தபோது அவரது தந்தை இறந்தார். 16 வயதானபோது அவரது சகோதரர்கள் திருமண ஏற்பாட்டை செய்துவிட்டனர்.
அய்னுல் சிறிதுகாலம் மாமனார் ஆலிமின் வீட்டில் வசித்தார். அவர் சில மாதங்கள் மும்பையில் தங்கி பிச்சை எடுத்து சம்பாதித்துவிட்டு அம்ரோஹாவில் சில மாதங்கள் தங்கி செலவு செய்துள்ளார். அய்னுலின் மாமியார் சிறிது காலத்தில் இறந்துவிட்டார். கணவரின் சகோதரரும் பட்வால் மொஹல்லாவில் முடிதிருத்தம் செய்தார். திருமணமாகி ஓராண்டிற்கு பிறகு அய்னுலை மும்பைக்கு ஆலம் அழைத்துச் சென்றுள்ளார்.

அய்னுலின் ஒற்றை அறை வீடு அமைந்துள்ள தெரு
ஜமீல் கிடைக்கும் வேலைகளை செய்துள்ளார் - தாராவியில் மறுசுழற்சி துறையில் சுமை தூக்குபவராக இருந்தும், உத்தரப் பிரதேசத்திற்கு கோதுமை, அரிசி எடுத்துச் செல்லும் லாரியில் உதவியாளராக பயணித்தும் தினமும் ரூ.150-200 வரை சம்பாதித்துள்ளார். ஆலிம் அவ்வப்போது குடும்பத்திற்கு சிறிது பணம் கொடுத்து உதவியுள்ளார். அவர் சூதாட்டத்தில் பணத்தை இழந்தாலும், அவர் அவ்வப்போது உதவியாக இருந்ததாக சொல்கிறார் அய்னுல்.
மும்பை வந்த சில ஆண்டுகளுக்கு அய்னுல் எந்த வேலைக்கும் செல்லவில்லை. “தர்காவிற்குச் சென்று பிச்சை எடுக்க அனுமதிக்குமாறு என் கணவரிடம் கேட்பேன்,” என்கிறார் அவர். “நான் வீட்டு வேலைக்குச் செல்கிறேன் என்றால்கூட அவர் எங்கும் செல்ல அனுமதிக்க மாட்டார். தினமும் ரூ.30 என்னிடம் கொடுத்து அதற்குள் குடும்பத்தை நிர்வகிக்கச் சொல்வார். எங்கள் அக்கம்பக்கத்தினர் மிகவும் இரக்கமுள்ளவர்கள் என்பதால் சிலசமயம் எஞ்சும் உணவுகளைக் கொடுப்பார்கள்.” அவரது மூத்த மகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது ஜமீலின் கண்டிப்புகளை கடந்து அய்னுல் தர்காவில் வேலைக்கு செல்லத் தொடங்கினார்.எட்டு ஆண்டுகளுக்கு முன் ஆலிம் இறந்தபோது, “மிக மோசமான காலம் தொடங்கியது.” எப்போதும் முரடனாக இருக்கும் ஜமீல் மேலும் மோசமாகிவிட்டார். “என்னை நிறைய அடிப்பார்,” என்கிறார் அய்னுல். “அவரிடமிருந்து பல கெட்ட வார்த்தைகளை நான் கேட்டுவிட்டேன். மாஹிமில் ஒருமுறை என்னை தண்டவாளத்தில் தள்ளி இறக்கச் சொன்னார்.” அப்படி தள்ளப்பட்டபோது முழங்கால் உடைந்த காயத்தை என்னிடம் அவர் காட்டினார். “கையால் அடிப்பது, கிடுக்கி, கம்பு என எது கிடைத்தாலும் அதைகொண்டு என்னை அவர் அடிப்பார். என்னால் என்ன செய்ய முடியும்? நான்தான் தாங்கிக் கொள்ள வேண்டும்.”
இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு 15 வயதில் முகமது, 9 வயதில் ஜூனைத் என இரு மகன்கள், 11 வயதில் மெஹ்ஜபீன் என்ற மகளும் உள்ளனர். “என் கணவரை விட்டுச் செல்லுமாறு சிலர் சொல்வார்கள்,” என்கிறார் அவர். “எங்கள் சமூகத்தில் அவர்களின் திருமணங்களை ஏற்க மாட்டார்கள். என் பிள்ளைகளின் நிலை என்னவாகும்?”
சிறிது காலத்தில் தர்காவில் அய்னுல் ஒரு பெண்ணை சந்தித்து மாதம் ரூ.600 என வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். அதிலிருந்து திருமண மண்டபங்களில் ஒப்பந்தக்காரர்களால் பாத்திரம் துலக்கும் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவது, புறநகரான ஜோகேஸ்வரிக்கு வீட்டு செவிலியராகச் செல்வது என அய்னுல் பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்.
சில ஆண்டுகள் அவர் தனது பிள்ளைகள், கணவருடன் மாஹிம்-தாராவியில் சிறிய அறைகளில் வாடகைக்கு தங்குவது, நடைபாதையில் தூங்குவது, தெருக்களில் தங்குவது என வாழ்ந்து வந்தார். தாராவியில் வாடகைக்கு அறை எடுக்க ரூ.5000 முன்பணம் செலுத்த வேண்டும். அய்னுலிடம் அந்த சிறிய தொகை கூட இருப்பதில்லை. “நான் மெல்ல மக்களை அறிந்துகொண்டு முன்பணமின்றி அறை பெற்றேன். நான் பல அறைகளை விட்டுச் சென்றுள்ளேன் [வாடகை கொடுக்க முடியாமல்], வேறு அறை கிடைக்கும் வரை தெருக்களில் தங்கியிருக்கிறேன்.”
அய்னுல் இப்போது கொஞ்சம் நிரந்தரத் தன்மையை கண்டறிந்து வீட்டில் வசிக்கிறார்
‘நான் பல அறைகளை விட்டுச் சென்றுள்ளேன் [வாடகை கொடுக்க முடியாமல்], வேறு அறை கிடைக்கும் வரை தெருக்களில் தங்கியிருக்கிறேன்…’
2012 ஜனவரி மாதம் அவர் வசிக்கும் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. “அதிகாலை 3 மணி இருக்கும். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தோம்,” என அய்னுல் நினைவு கூர்கிறார். “நாங்கள் மேற்கூரையில் தாவி ஓடினோம்.” தீ விபத்திற்குப் பிறகு அவரும், அவரது பிள்ளைகளும் மாஹிம்-சியான் பாலத்திற்கு அடியில் எட்டு மாதங்கள் தங்கியிருந்தனர். கணவரும் அவருடன் தான் இருந்தார். “மழைக்காலம் மிகவும் கஷ்டமான காலம்,” என்கிறார் அவர். “வீடு ஒழுகும்போது எனது குழந்தைகளுடன் சேர்ந்து அருகில் உள்ள பழைய இரும்பு கடையில் தங்கிக் கொள்வேன்.”
உள்ளூர் அமைப்புகளும், தலைவர்களும் தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினர் என்கிறார் அய்னுல். அவரும் தானியங்கள், பாத்திரங்கள், வாளிகள், அடுப்பு, பாய்கள் போன்றவற்றை பெற்றார். மெல்ல அய்னுலின் நட்பு வட்டம் விரிவடைந்து அவர்களின் உதவியோடு குடும்பத்துடன் வசிக்க பாலத்தில் அறை கிடைத்துள்ளது. காற்றோட்டமில்லாத அறைகளைப் போன்றில்லாமல் பெரிய ஜன்னல், சிறிது காற்றும் வீசுகிறது. “இங்கிருப்பது மொட்டை மாடியில் வசிப்பது போல உள்ளது,” என பெருமையுடன் அவர் என்னிடம் சொல்கிறார்.
மார்ச் 2015 முதல் மறுசுழற்சி செய்யும் உள்ளூர் தன்னார்வ அமைப்பில் பழைய காகிதங்களை வகைபிரிக்கும் வேலையை அய்னுல் பெற்றார். இதனால் அவருக்கு நிலையாக மாதம் ரூ.6000 வருமானம் கிடைக்கிறது. சொந்தக் காலில் நிற்கும் உணர்வையும் அது கொடுத்தது. அவரது வருமானத்தில் ரூ.3500 அறை வாடகைக்கும், ரூ.1000 உணவு, மாவு, காய்கறி வாங்க எனவும் செலவிடுகிறார். தீ விபத்தில் குடும்ப அட்டை தொலைந்த நிலையில் புதிய அட்டை கிடைத்துள்ளது. எஞ்சும் வருமானத்தில் மின்சாரம், பிற செலவுகளை கவனித்துக் கொள்கிறார். “என் பிள்ளைகள் வயிறு நிரம்ப உண்பதை கண்டு நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்,” என்கிறார் அவர்.
அருகில் உள்ள பொது கழிப்பறைகளை குடும்பம் பயன்படுத்துகிறது. சமூக குழாயில் நீர் பிடிக்க மாதம் ரூ.200 (உள்ளூர் பெண் அரசியல்வாதிக்கு கொடுக்க வேண்டும்) செலவாகிறது. அய்னுல் தினமும் மாலை 7-8 மணி வரை வாளிகள், டப்பாக்கள், பாட்டில்களில் நீர் பிடிப்பார். “என் மகன் முகமது நிரப்பி தூக்கிச் செல்ல உதவுகிறான்,” என்கிறார் அவர். நான் சென்றிருந்தபோது 6ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள் மெஹ்ஜபீன் பள்ளி புத்தகங்களுடன் பரபரப்பாக இருந்தாள். 2ஆம் வகுப்பு படிக்கும் இளைய மகன் ஜூனைத் வெட்கத்துடன் சிரித்தான். இருவரும் அருகில் உள்ள நகராட்சிப் பள்ளியில் படிக்கின்றனர்.

அய்னுலின் வீட்டிற்குச் செல்ல அவர் நிற்கும் இரண்டு செங்குத்தான ஏணிகளில் ஏற வேண்டும். வலது: அவரது ஜன்னலின் வழியாக பம்பாயின் ஒரு துண்டு காட்சி
5ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திய முகமது அவ்வப்போது வெல்டரிங் உதவியாளராக இருந்து அல்லது அக்கம்பக்கத்தினருக்கு புத்தகங்களை விநியோகம் செய்து ஒருநாளுக்கு ரூ.100 சம்பாதிக்கிறான். மாமாவைப் போன்று மெக்கானிக் ஆவது அல்லது அருகில் உள்ள தெருவோர புத்தக கடையைப் போன்று ஒரு கடையை சொந்தமாக வைப்பது என அவனது இலட்சியமும் மிகச் சிறியது. “ என் சமூகத்தினரைப் போன்று முடிதிருத்துநராக விரும்பினேன், ஆனால் அதை கற்க வேண்டும்… நான் எந்த வேலையும் செய்வேன், என் அம்மாவிற்கு ஏதாவது பணம் ஈட்டி கொடுத்தால் போதும்.”
அய்னுலை தந்தை அடிக்க வரும்போது முகமது இப்போது தடுக்கிறான். இதனால் ஜமீல் கத்திவிட்டு சென்றுவிடுகிறார். பல ஆண்டுகளாக அடிவாங்கியது, கடின உழைப்பு, பசி போன்றவை அய்னுலின் உடல்நலத்தையும் பாதித்துள்ளது - அவர் வெளிர்ந்து இரத்த அழுத்தம், அடிக்கடி தலைவலி போன்ற பிரச்னைகளுடன் இருக்கிறார்.
சிறிது காலம் அய்னுல் பட்வால் மொஹல்லா சென்றிருந்தார். நீண்ட காலமாக காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாய் மறையும் வரை அங்கிருந்தார். “என் அம்மா எனக்கு உதவுவதற்காக கொஞ்சம் பணம் அனுப்புவார்,” என மென்மையாக சொல்கிறார் அய்னுல். சில ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அய்னுல் தனது பிறந்த ஊருக்குச் சென்று வருகிறார். அண்ணன் மகளின் திருமணத்திற்காக அம்ரோஹாவிற்கு ரயிலேற அவர் தயாராகி வருகிறார்.
“என் சொந்த ஊரில் சிறிய வீட்டை கட்டிவிட வேண்டும் என்ற கனவு என் மனதில் உள்ளது. என் மண்ணில்தான் இறக்க வேண்டும். என் மனம், என்னை மூச்சுத்திணற வைக்கும் பம்பாயில் இல்லை… எனது கிராமத்தில் பசியோடு இருந்தபோதுகூட சமாளித்துக் கொள்வோம். என் நினைவுகள் சிறு வயதில் செலவிட்ட அந்த இடத்தில்தான் உள்ளன, அங்கு நான் எளிதாக சிரித்துவிடுவேன்.”
தமிழில்: சவிதா