சாயம் தோய்க்கும் நிபுணரான அப்துல் ரஷீத்தின் மிகவும் மதிக்கத்தக்க சொத்து என்பது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருந்த ‘master book of colour codes’ (நிறக் குறியீடுகளின் நிபுணத்துவப் புத்தகம்) என்னும் அவரது புத்தகம்தான். பக்கத்துக்குப் பக்கம், 1940களில் இருந்து அவர் செய்து வந்த பாரம்பரிய காஷ்மீரி சாயம் தோய்க்கும் கலையைக் குறித்த வழிகாட்டி புத்தகம் அது.
அவரது பணியகமான, அப்துல் ரஷீத் & சன்ஸ், பழைய ஸ்ரீநகரின் அமைதியான பக்கவாட்டுத் தெருவில் அமைந்திருக்கிறது. கையில் புத்தகத்துடன், பணியகத்தின் ஓரத்தில் முன்நோக்கி உடலைத் தள்ளியபடி, குனிந்து அமர்ந்திருக்கிறார் 80 வயதான அப்துல் ரஷீத். முரண் என்னவென்றால், இப்போது மங்கிய நிலையில், வண்ணம் பூசி நிறைக்காமல் இருக்கும் சுவர்களால் ஆன இந்த இடத்தில்தான் மிக அழகான வண்ணங்கள் உருவாக்கப்பட்டன.
காலை 10.30 மணியளவில், சாயம் தோய்க்கும் பணி தொடங்குகிறது. இரண்டு மூட்டைகள் பட்டு நூல்களை சாயம் தோய்ப்பதற்கு ஒரு நாள் முழுவதும் நேரம் எடுக்கும். நூலை சுத்தமாகக் கழுவுவதில் இருந்து இந்தப் பணி தொடங்குகிறது. ரஷீத் சொல்வதைப்போல், “நூல் மிகவும் சுத்தமாக இருந்தால்தான், சாயமும் சுத்தமாக இருக்கும். ஒருவர் உண்மையான அழகால் நிறைந்து இருப்பதற்கு முன்பாக, அனைத்து அசுத்தங்களில் இருந்தும் விடுபட வேண்டும்” என்கிறார்.
நூல்களைச் சுத்தம் செய்தபின், இந்தத் தொழிலில் இருக்கும் ரஷீத்தின் 42 வயது மூத்த மகனான நெளஷத், பழைய பித்தளைப் பாத்திரத்தில் இருக்கும் சூடான நீரில் பழுப்பு நிற பொடியைக் கலக்குகிறார். நெளஷத் மட்டுமே இந்த சாயத் தொழிலில் இருக்கிறார். மற்றொரு மகன் கார்பெட் வணிகம் செய்கிறார்.வண்ணக்கலவை நிரந்தரமானதாக இருப்பதற்கு பித்தளைப் பாத்திரம் உதவுகிறது. உள்ளூர்ச் சந்தையில் வாங்கப்பட்ட வண்ணப்பொடியை, கொஞ்சம் கொஞ்சமாக அக்கறையுடனும், துல்லியமாகவும் சூடான நீரில் சமமாகக் கலக்குகிறார். அதற்குப் பிறகு, மரக்கட்டைகளில் சுற்றப்பட்ட நூலை அதில் முக்கி மெதுவாக அதைச் சுற்றுகிறார். இந்த நடைமுறைக்கு சில மணிநேரங்கள் செலவாகிறது. ஏனெனில் நூல் தன்னுள் வண்ணத்தை உள்வாங்கிக் கொள்வதற்கான நேரத்தை எடுத்துக்கொள்கிறது.
சாயம் தோய்க்கும் பணி முடிவடைந்ததும், நூலை வெளியில் எடுக்கும் நெளஷத் நெருப்பில் வெப்பத்தில் அதைக் காட்டி உலரச் செய்கிறார். நூல் முழுவதும் வண்ணச்சாயம் சமமாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கிறார். சரியாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்கு, அவரது தந்தை ரஷீத்திடம் அதைக் காட்டுகிறார். தந்தையும் மகனும் திருப்தியடைந்தால், அந்தப் பணி முடிவுபெறுகிறது. இல்லையென்றால், நூலை இன்னும் சிறிது நேரத்திற்கு வண்ணம் கலந்த நீரில் வைக்கிறார். மீண்டும் அதில் வண்ணத்தைக் கலந்து கொஞ்சம் ப்ளீச்சுடன், அதை முக்கி வைக்கிறார். ஒவ்வொரு நூலும் அழகான தோற்றத்தைப் பெறும் திறன் கொண்டது என அப்துல் ரஷீத் நம்புகிறார்.
இன்று காலையில், மிகவும் கச்சிதமான முறையில் நூலில் வண்ணம் ஏற்றப்பட்டிருந்தது. ஆனால் இனிமேல் நடக்கப்போவதுதான் இன்னும் முக்கியமான வேலை. மிகப் பொருத்தமானவராக, அந்த வேலையை ரஷீத் மட்டுமே செய்கிறார். சாயம் தோய்க்கப்பட்ட ஒரு நூலை எடுத்து, அவரது மதிப்புக்குரிய வழிகாட்டிப் புத்தகத்தின் மீது ஒட்டுகிறார். நடுங்கும் அவரது கைகளால், அது தொடர்பான அனைத்து விவரங்களையும் எழுதுகிறார்.
இலையுதிர்காலத்திலும், நடுங்கும் குளிர்காலத்திலும், கோடைக்காலத்திலும் செய்யப்படும் இந்த வண்ணம் தோய்க்கும் கலை மெதுவாக அழிந்து வருகிறது. தேவை அதிகமாக இருக்கும்போது, வாடிக்கையாளர்கள் கார்பெட்டுகளும், போர்வைகளும் செய்யும் உற்பத்தியாளர்களாக இருப்பார்கள். பணியகத்துக்கு நூல் மூட்டைகளைக் கொண்டு வருவார்கள் – சாயம் தோய்ப்பவர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேர உழைப்பைச் செலுத்துவார்கள். மாதத்துக்கு 20,000 முதல் 25,000 ரூபாய் வரை பணம் ஈட்டுவார்கள். கோடைக்காலத்தில் தேவை இருக்கும்போது 10 மணிநேரம் மட்டுமே உழைப்பை அளிப்பார்கள்.
நிலையாக இருப்பது என்னவென்றால், பணியின் மீது ரஷீத்துக்கும், நெளஷத்துக்கும் மற்றும் அவர்களது உதவியாளரான முஷ்டக்குக்கு இருக்கும் அர்ப்பணிப்புதான். சில சமயங்களில், கோஷங்கள் எழுப்பும் போராட்டங்களும், போலீஸ் கெடுபிடிகளும் இந்த பணிக்கு இடையூறாக இருக்கும். ஆனால், அப்துல் ரஷீத் & அவரது மகன்கள், இந்த அசாதாரண நிலைகளால் தங்களின் வேலையைக் கெடுவதற்கு விடுவதில்லை.
பல போர்வை மற்றும் பாய்விரிப்பு உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது, பெருமளவில் தயாரிக்கப்படும் சாயம் தோய்க்கப்பட்ட நூல் மூட்டைகள். வேகமாக செய்து தரப்படும் என்னும் பெயரில் அவை தரம் குறைந்தவையாக இருக்கின்றன. வேகத்தின் பெயரில் நூலின் சாயத்திறனை அவர்கள் சமரசம் செய்து கொள்கிறார்கள். சாயம் தோய்க்கும் பணியைத் தொடங்கியபோது, இந்தக் கலை வடிவம் மிகவும் சிறப்பான ஒன்றாக இருப்பதாகச் சொல்கிறார் ரஷீத். இந்தப் பணியைச் சார்ந்து பலரது வாழ்வாதாரம் இருந்ததாகவும், ஆயினும் பல பாரம்பரிய கைவினைத் திறன்களைப் போலவே இதுவும் அழிவின் விளிம்பில் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கிறார் ரஷீத்.
“சந்தைகளில் உடனுக்குடன் கிடைக்கும் இந்த மலிவான சீனத் தயாரிப்புகள், இத்தொழிலைச் செய்துவந்த பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு முடிவாக வந்துவிட்டது”, என்கிறார் நெளஷத். “இந்த வியாபாரத்தை செய்யப்போகும் கடைசி தலைமுறை என்னுடையதுதான். இந்த வேலைக்கு எனது பிள்ளைகள் வருவதை நாம் விரும்பவில்லை. இந்தப் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறி, நல்ல பட்டங்கள் பெற்று அலுவலக வேலைகளில் இருப்பதையே நான் விரும்புகிறேன். இந்த வணிகம் என்னோடு முடிந்துவிடும். இதற்கு இனிமேல் எதிர்காலம் இல்லை” என்கிறார்.
வாடிக்கையாளர்கள் தங்கள் போர்வைகளையும், கார்பெட்டுகளையும் செய்வதற்கான சாயப்பணிக்கு இவர்களிடம் வருவது மிகவும் குறைந்துவிட்ட பிறகும்கூட, ரஷீத்தும் அவரது மகனும் எதற்காக இந்த பணியைத் தொடர்ந்து செய்கிறார்கள்? இந்த கேள்வியைக் கேட்டவுடன் அப்துல் ரஷீத் தனது கண்களைச் சிமிட்டி, ஜன்னல் வழியே வரும் சூரிய ஒளியைப் பார்த்துக்கொண்டே, எல்லோரும் சூரிய வெப்பத்தால் பலனடைகிறார்கள். யாரும் இந்த ஒளியின் மீது கவனத்தைக் குவிக்கமாட்டார்கள் இல்லையா? இந்தப் பகல் முடிந்துகொண்டிருப்பதைப் போலவே, பாரம்பரியமான இந்தத் தொழில் இனிமேல் வளர்ச்சியைச் சந்திக்காது என்கிறார்.

பழைய ஸ்ரீநகரின் தெருவில், 1942-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்துல் ரஷீத் & மகன்களின் பணியகம்.

எழுபது ஆண்டுகளில் தொடர்ச்சியான தன் அனுபவங்களை தொகுத்து வைத்திருக்கும் தனது புத்தகமான ‘நிறக் குறியீடுகளின் நிபுணத்துவப் புத்தகத்தை’ நமக்குக் காட்டுகிறார் 80 வயதிலும் உழைக்கும் சாயம் தோய்க்கும் நிபுணர் அப்துல் ரஷீத்.

சாயம் தோய்ப்பதைப் பற்றிய பெருமளவிலான தகவலைக் கொண்டிருக்கிறது இந்த ‘நிபுணத்துவப் புத்தகம்’. நிறங்கள், நிறங்களில் இருக்கும் பொருட்கள், அதைச் செய்யும் முறை ஆகியவற்றுடன், சாயம் தோய்த்த நூல்களும் மாதிரித் தகவலாக அதில் ஒட்டப்பட்டிருக்கிறது.

அவர்களின் உதவியாளர் முஷ்டக், சாயம் தோய்க்கப்படுவதற்கு முன்பாக நூலைச் சுத்தப்படுத்துவதற்காக ஒரு பெரிய பித்தளைப் பாத்திரம் முழுவதும் சுத்தமான நீரை நிரப்புகிறார். நூல் நன்றாக அதில் மூழ்கவைக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்கிறார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும்போதே ரஷீதின் மகன் நெளஷத் பாத்திரத்தில் இருந்து சுத்தப்படுத்தப்பட்ட நூலை எடுக்கிறார்.

தந்தையின் ‘நிறக் குறியீடுகளின் நிபுணத்துவப் புத்தகத்தில்’ சொல்லப்பட்டிருக்கும் தகவலின் அடிப்படையில் வண்ணப் பொடியை அளக்கிறார்.

உலர்ந்த வண்ணப்பொடியை சூடான நீரில் கலக்குகிறார்.

நெருப்பில் சூடாகும் அந்தக் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நூல் வண்ணத்தை உறிஞ்சுகிறது.

சரியான நிறம் வருவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமாக, 20 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் கடந்து - நூலின் சூடு தணிந்ததும் அதன் தன்மையைப் பரிசோதித்த நெளஷத் நூலில் வண்ணம் சரியாக வந்துள்ளதா என்று பார்க்கிறார்.

நெளஷத்தும், அவரது உதவியாளரும் நூலை எடுத்து அதிகமாக இருக்கும் நீரை பிழிகின்றனர்.

இறுதியாக, நெளஷத் நூலின் சில இழைகளை காயவைத்து, சரியான நிறத்தை அடைந்திருக்கிறதா என்று பார்க்கிறார். அந்த நிறம் வரவில்லையெனில், இன்னும் கொஞ்சம் வண்ணப்பொடியையும், ப்ளீச்சையும் கலந்து நூலை அதில் ஊறவைக்கிறார். இந்த மொத்த நடைமுறையும் நீண்ட அனுபவத்தின் வழியாக பக்குவப்பட்டுள்ளது. தந்தை, மகன் ஆகிய இருவரும் இதில் திருப்தியடையும் வரை இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அசலான புகைப்படம், ‘க்ளாசிங் இமேஜிங்’ இதழில் டிசம்பர் 2016-இல் அச்சிடப்பட்டது.
தமிழில்: குணவதி