வட மும்பையின் மத் தீவில் தொங்கர்படா குடியிருப்பு உள்ளது. 40 முதல் 45 கோலி மீனவ சமுதாயத்தினர் இங்கு வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து காலாவைப் (மீன்கள் காயவைக்கும் மைதானத்தை) பயன்படுத்துகிறார்கள். மத்தில் இதுபோன்ற மேலும் சில மைதானங்கள் உள்ளன.
கிட்டத்தட்ட ஒவ்வொரு கோலி குடும்பத்தினரும் 5 முதல் 10 பேரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். இந்த தொழிலாளர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆந்திர பிரதேசம், உத்திர பிரதேசம், மஹாராஷ்ட்ரா மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வருபவர்களாவார்கள். இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மும்பைக்கு செப்டம்பர் மாதம் முதல் ஜீன் மாதம் வரை வருகிறார்கள். இவர்கள் கோலிகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்கிறார்கள். 8 மாதத்தில் ரூ.65 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களில் ஆண்கள் 4 முதல் 5 பேர் வரை கோலி குடும்பத்தினர் வழங்கும் அறைகளில் ஒன்றாக தங்கிக்கொள்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலான பெண்கள் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் குழந்தைகள் உள்ளிட்ட மொத்த குடும்பத்தினருடன் வருவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.700 வாடகைக்கு தனித்தனி இடங்களை கோலிகள் ஒதுக்குவார்கள்.

ரங்கம்மா (வலப்புறம் உள்ளவர், அவரது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விரும்புபவர்), ஆந்திரப்பிரதேசத்தின் கர்ணுல் மாவட்டத்தில் உள்ள மந்திரிகி கிராமத்தில் இருந்து வருகிறார். அவர் தெலுங்கு இல்லாமல் மராத்தி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை சரளமாக பேசுகிறார். அவர், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் 20 ஆண்டுகளாக வருகிறார். ஆசிரியராக உள்ள அவரது மகன் மட்டும் கிராமத்தில் தங்கிவிட்டார். “மழை இல்லை“ என்று அவர் ஹிந்தியில் கூறுகிறார். “எனவே எங்களுக்கு விவசாயம் செய்யக்கூடியதற்கான சாத்தியம் இல்லை. எனவே நாங்கள் இங்கு வேலைக்காக வருகிறோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்

உத்திரபிரதேச மாநிலம் ஜானுபூர் மாவட்டம் தர்மபூர் கிராமத்தில் இருந்து சுரேஷ் ராஜாக் வருகிறார். அவர் தானே மாவட்டத்தில் உள்ள தாம்பிவல்லியில் உள்ள ஒரு பெயின்ட் தொழிற்சாலையில் 7 ஆண்டுகள் வேலை செய்தார். சில மாதங்களுக்கு முன்னர்தான் மத்துக்கு இடம்பெயர்ந்தார். “எனது கிராமத்தில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக இங்கு வருகிறார்“ என்று அவர் கூறுகிறார். “வேலைக்கும் அதற்கான கூலியும் இங்கு நன்றாக கிடைக்கிறது“

ஞான்சந்த் மயூர்யாவும் (இடது), தரம்பூரில் இருந்து வருபவர். இவர் 2016ம் ஆண்டு தொங்கர்படா வருவதற்கு முன்னர் மத்திய மும்பையில் உள்ள சாத்ரஸ்தாவில் ஒரு மரத்தொழிற்சாலையில் வேலை செய்தார். மத்தில் உள்ள மற்றவர்களும் அதே கிராமத்தில் இருந்து வருபவர்கள்தான். சுபேதார் கவுதம் (நடுவில் இருப்பவர்) 5 ஆண்டுகளாக வருகிறார். தீரஜ் விஸ்வகர்மா (வலது) 20 வயதான அவர் இன்னும் படித்துக்கொண்டிருக்கிறார். தேர்வெழுதுவதற்காக அவ்வப்போது ஜானுபூருக்கு செல்வார்

“நாக்வா(வேலை கொடுப்பவர்கள்), பெரிய படகுகளில் சென்று இரவு முழுவதும் மீன் பிடிப்பார்கள்“ என்று சுரேஷ் கூறுகிறார். 3 முதல் 4 மணிக்குள் நாங்கள் படகுகள் திரும்பியதற்கான ஓசையை கேட்போம். பின்னர் நாங்கள் சிறிய படகுகளில் சென்று பிடித்த மீன்கள் அனைத்தையும் நிலத்திற்கு எடுத்து வருவோம். மீன்பிடி படகில் செல்வதற்கு எங்கள் கிராமத்தில் இருந்து வந்துள்ள ஒருவரும் விரும்ப மாட்டோம். ஆழக்கடல் எங்களை அச்சுறுத்தும். எனவே அந்த வேலையை நாக்வாக்களிடம் விடுவதே சாலச்சிறந்தது“ என்று அவர் மேலும் கூறுகிறார்

பிடித்த மீன்கள் வந்தவுடன் ரங்கம்மாவின் ஒவ்வொன்றாக பிரித்தெடுக்கும் பணிகள் துவங்குகின்றன. அவர் ஒரு கூடையை காட்டி கூறுகிறார், “பாருங்கள் இதில் பெரியது முதல் சிறியது வரை அனைத்து வகையான மீன்கள், இறால்கள் மற்றும் குப்பைகளும் உள்ளன. நாங்கள் அதை தனித்தனியாக பிரித்தெடுக்கிறோம்“. பின் மதியவேளையில் காய்வதற்காக பரப்பி வைக்கப்பட்டுள்ள ஜவாலாவால் நிலமே ரோஜா நிறத்தில் மாறிவிட்டது

லதா கோலி (இடது), ரேஷ்மா கோலி (நடுவில்) காலாவில் உள்ள வேலைகொடுப்பவர்களில் ஒரு குடும்பத்தினர். கோலிகள் தங்கள் வேலையாட்களை நாக்கார் (வேலைக்காரர்கள்) என்று அழைக்கிறார்கள். அதில் ஒருவர் மாரியப்ப பாரதி(வலது) மந்த்ரிகி கிராமத்தைச் சேர்ந்தவர். “எங்கள் குடும்பத்தினர் 10 புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர். நாங்களும், அவர்களும் ஒரே வேலையைத்தான் செய்வோம்“ என்று ரேஷ்மா கூறுகிறார். புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது எங்களுக்கு மிகவும் அவசியம். ஏனெனில், கோலிகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளதுடன், அவர்களின் பிள்ளைகள் வேறு வேலைகளுக்கும் சென்றுவிட்டார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்

பெண்களும், சில ஆண்களும் சேர்ந்து பல்வேறு மீன்கள் மற்றும் இறால்களை பிரித்து எடுத்துவிட்டால், அவை ஐஸ்கட்டிகளுடன் பெட்டிகளில் அடைக்கப்பட்டு வட மும்பையில் உள்ள மலாட் மீன் சந்தைக்கு எடுத்துச்செல்லப்படும். சில மீன்கள் வெயிலில் வைத்து உலர்த்தப்படும். அரை நாளுக்கு பின்னர், மற்றொரு பகுதி திருப்பிபோடப்படும். இதனால், அனைத்து பக்கங்களும் காய்ந்துவிடும்

மந்திரிகி கிராமத்தைச் சேர்ந்த தனர் கந்தால் உடனடியாக விற்கப்படும் அல்லது உலர்த்தப்படும் அனைத்து மீன்களையும் கழுவுகிறார்

சிலர் பாம்பில் மீனை கழுவுகிறார்கள், பாம்பே டக் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு மீன்களை கோர்த்து மூங்கில் சட்டத்தில் அழகாக தொங்க விடுகிறார்கள். அவை தென்மேற்கு திசைகளில் வைக்கப்படுகிறது. இதனால், இருபுறத்திற்கும் சமமான அளவு சூரிய ஒளி கிடைக்கும்

மூங்கில் சட்டத்தில் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகள் கட்டிவிடப்படுகின்றன. அவற்றையும் காகம் என்று எண்ணி காகங்கள் அப்போதுதான் அருகில் வராது. இது சில நேரங்களில் பயனுள்ளதாக உள்ளது

மீன்களை பிரித்து, சுத்தப்படுத்தி, காய வைக்கும் வேலைகள் முடிந்தவுடன், மீன்பிடி வலைகளை மடித்து வைக்கும் வேலைதான் மிச்சம் உள்ளது. டோமினிக் கோலி (51), அந்தப்பகுதியில் மரியாதைக்குரியவராகவும், மூத்த நபராகவும் இருக்கிறார். 6 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளார். அவர்கள் 6 பேரும் புலம்பெயர் தொழிலாளர்கள். அவர், படகை இயக்குவது, மீன்பிடித்தல், பிடித்தவற்றை காயவைப்பது மற்றும் வலைகளை சரிசெய்வது என அனைத்து வேலைகளையும், தனது பணியாளர்களுடன் சேர்ந்து தானும் செய்கிறார். அவரும், தொங்கர்படாவில் உள்ள மற்ற கோலி குடும்பத்தினரும், அப்துல் ரஜாக் சோல்கர் (மேலே) என்ற மீன் வலைகள் தயாரிப்பவரை, தங்களின் வலைகளை சரிசெய்வதற்காக அமர்த்தியுள்ளனர். சோல்கர், மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டம் ராஜாப்பூர் தாலுக்காவைச் சேர்ந்தவர். “எனது தந்தை வலை பின்னுவார். தற்போது நான் பின்னிக்கொண்டிருக்கிறேன்“ என்று அவர் கூறுகிறார். “நான் தினக்கூலித்தொழிலாளி. இன்று நான் இங்கு இருக்கிறேன். நாளை நான் வேறு எங்காவது இருப்பேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்

மீன் உலர்த்தும்
இடத்தில் இதுபோன்ற அனைத்து வேலைகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கையில், மற்ற அனைவரும்
அவர்வர் வேலைகளில் மூழ்கியுள்ளனர். பசித்த காகங்கள், நாய்கள், கொக்குகள் என அனைத்தும்
மீன்களின் வாசத்திற்காகவும், தங்களுக்கான உணவை விரைவாக பறித்துக்கொள்ள முடியும் என்ற
நம்பிக்கையிலும் நாள் முழுவதும் அந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வருகின்றன
தமிழில்: பிரியதர்சினி. R.