”இவை எல்லாம் எதை பற்றி எனக்கு தெரியாது. அநேகமாக மோடியுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். இங்கு நான் உணவுக்காக வருகிறேன். பசியோடு தூங்குவதை பற்றி நாங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை,” என்கிறார் 16 வயது ரேகா (இக்கட்டுரையில் இருக்கும் பலரை போல் அவரும் தன் முதல் பெயரை பயன்படுத்தவே விரும்புகிறார்). அவர் ஒரு குப்பை பொறுக்கும் தொழிலாளி. குப்பைகளில் இருப்பவற்றில் பயன்படுத்தக் கூடியவற்றை பிரித்தெடுப்பவர். வடக்கு தில்லியின் அலிப்பூரில் வாழ்கிறார். சிங்கு போராட்ட தளத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பகுதி.
செப்டம்பரில் அமலான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நவம்பர் 26 தொடங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் ஹரியானா தில்லி எல்லையில் இருக்கும் ஒரு தடுப்பில் அவர் இருக்கிறார். போராட்டம் பலதரப்பட்ட மக்களை ஈர்த்திருக்கிறது. விவசாயிகள், ஆதரவாளர்கள், ஆர்வமுடையவர்கள் போன்ற பலர். இன்னும் பலர் விவசாயிகளும் குருத்வாராக்களும் நடத்தும் சமூக சமையற்கூடங்களில் கிடைக்கும் இலவச உணவுகளுக்காகவே வருகின்றனர். சமையற்கூடங்களில் வேலை பார்ப்பவர்கள் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் வரவேற்கின்றனர்.
அவர்களில் பல குடும்பங்கள் நடைபாதையிலும் குப்பங்களிலும் வசிப்பவர்கள். அவர்கள் போராட்டங்களுக்கு வருவதே உணவுக்காக மட்டும்தான். காலை 8 மணி தொடங்கி இரவு 9 மணி வரை நாள் முழுக்க உணவு வழங்கப்படுகிறது. சோறு, பருப்பு, பகோடா, லட்டு, ரொட்டி தண்ணீர், பழச்சாறு எல்லாமும் கிடைக்கிறது. மருந்துகள், போர்வைகள், சோப்புகள், காலணிகள், உடைகள் முதலிய பல பொருட்களையும் தன்னார்வலர்கள் இலவசமாக வழங்குகின்றனர்.
23 வயது ஹர்ப்ரீத் சிங்கும் ஒரு தன்னார்வலர். பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் குமான் கலன் கிராமத்தை சேர்ந்தவர். அறிவியல் பட்டப்படிப்பு படிப்பவர். “சட்டங்கள் தவறானவை என நாங்கள் எண்ணுகிறோம்,” என்கிறார் அவர். “பண்படுத்தப்பட்ட இந்த நிலங்களுக்கு எங்களின் முன்னோர்களே உரிமையாளர்கள். இப்போது அரசு எங்களை வெளியேற்ற முயலுகிறது. நாங்கள் இந்த சட்டங்களை ஆதரிக்கவில்லை. நாங்கள் ரொட்டி சாப்பிட விரும்பாவிட்டால், யாரால் எங்களை கட்டாயப்படுத்த முடியும்? இந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.”
”ஊரடங்கு காலத்தில் எங்களுக்கு உணவே கிடையாது,” என்கிறார் 30 வயது மீனா (பச்சை நிற முக்காடு அணிந்திருப்பவர்) சிங்கு எல்லையிலிருந்து 8 கிலோமீட்ட்ர் தொலைவில் இருக்கும் வடக்கு தில்லியின் அலிப்பூரில் வசிக்கிறார். சாலையில் பலூன்கள் விற்பவர். “இங்கு நாங்கள் சாப்பிடுவது இதற்கு முன் நாங்கள் சாப்பிட்ட எதையும் விட நன்றாக இருக்கிறது எங்களுக்கு தேவையானதை காட்டிலும் அதிகமாக விவசாயிகள் எங்களுக்கு கொடுக்கின்றனர். ஒரு வாரமாக இங்கு வந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாளுக்கு இரு முறை வந்து விடுகிறோம்”

23 வயது விவசாயி ஹர்ப்ரீத் சிங் (நீலத் தலைப்பாகை) பஞ்சாபின் குமான் கலன் கிராமத்தை சேர்ந்தவர். அவரும் அறிவியல் பட்டப்படிப்பு படிப்பவர். போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும் வீட்டிலிருந்து கிளம்பி வந்துவிட்டார். “நாங்கள் அனைவரும் விவசாயிகள். இந்த சட்டங்கள் தவறானவை என நினைக்கிறோம். பண்படுத்தப்பட்ட இந்த நிலங்களுக்கு எங்களின் முன்னோர்களே உரிமையாளர்கள். இப்போது அரசு எங்களை வெளியேற்ற முயலுகிறது. நாங்கள் இந்த சட்டங்களை ஆதரிக்கவில்லை. நாங்கள் ரொட்டி சாப்பிட விரும்பாவிட்டால், யாரால் எங்களை கட்டாயப்படுத்த முடியும்? இந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்” என்கிறார்

“இங்கு என் சகோதரர்களுடன் நான் வேலை பார்க்கிறேன்,” என்கிறார் ஹர்ப்ரீத் சிங் (படத்தில் இல்லை). “இது எங்கள் குருவின் சமையற்கூடம். இங்கு வேலை ஓயாது. எங்களுக்கும் ஆயிரக்கணக்கான மற்றோருக்கும் உணவளிக்கிறது. பலர் எங்களுக்கு உதவ வருகின்றனர். நோக்கத்துக்காக நன்கொடையளிக்கின்றனர். சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை இங்கேயே இருப்பது என்கிற தீர்மானத்துடன் வந்திருக்கிறோம். இங்கு வரும் அனைவரும் திரும்பிச் செல்கையில் வயிறு நிரம்பிச் செல்வதை உறுதிச் செய்யும் வகையில் நாள்தோறும் உணவளிக்கப்படுகிறது”

50 வயது ராஜ்வந்த் கவுர் (சிவப்பு துப்பட்டா போட்டிருப்பவர்) வடமேற்கு தில்லியின் ரோகிணியை சேர்ந்தவர். அவருடைய மகன் சமையற்கூடங்களில் வேலை பார்க்கவென தினசரி இங்கு வருவதில் ஆர்வம் ஏற்பட்டு அவரும் போராட்டத்தில் இணைந்திருக்கிறார். “என்னுடைய ஆதரவை தெரிவிக்க வேறேதும் என்னால் செய்ய முடியாது,” என்கிறார் அவர். “ஆகவே என் மகனுடன் சேர்ந்து சமையலில் உதவுவதெனவும் இங்கு தினசரி வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பதெனவும் முடிவு செய்துவிட்டேன். இங்கு வேலை பார்த்து நம் விவசாய சகோதரர்களுக்கு சேவை செய்வது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது”

பஞ்சாபின் மெலர்கோட்லாவிலிருந்து ஒரு இஸ்லாமியர் குழு வந்து சர்தா என்கிற உணவு வகையை செய்து கொடுக்கின்றனர். அவர்களின் பிரத்யேக உணவு வகை. போராட்டத்தின் முதல் நாளிலிருந்து வழங்கப்படுகிறது. பஞ்சாப்பின் இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்த தாரிக் மன்சூர் ஆலம், இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாக பல நூற்றாண்டுகளாக இருக்கும் பகுதியிலிருந்து வருவதாக கூறுகிறார். விவசாயிகளின் போராட்டத்துக்கு உதவ அவர்களின் பிரத்யேக உணவை எடுத்து வந்திருக்கிறார்கள். “அவர்கள் போராடும்வரை நாங்கள் அவர்களுக்கு பக்கபலமாக இருப்போம்,” என்கிறார் தாரிக்

கரன்வீர் சிங்குக்கு 11 வயதாகிறது. அவரின் தந்தை சவுமெயின் என்கிற உணவை தள்ளுவண்டியில் வைத்து விற்கிறார். “என்னுடைய நண்பர்கள் இங்கு வருமாறு அழைத்தனர். கேரட் அல்வா சாப்பிட வந்தோம்,” என சிரித்தபடி சொல்கிறார் கரன்வீர்

ஹரியானாவின் குந்த்லி கிராமத்தை சேர்ந்தவர் முன்னி. கட்டுமான தளங்களில் வேலை பார்ப்பவர். அவரின் குழந்தைகளை உணவுக்காக போராட்ட களத்துக்கு அழைத்து வந்திருக்கிறார். “எனக்கு சிறு குழந்தைகள் இருக்கின்றனர்,” என்கிறார் அவர். “அவர்களை இங்கு அழைத்து வந்திருக்கிறேன். இவை எல்லாமும் எதை பற்றி என்பது எனக்கு தெரியாது. பயிருக்காகவும் விளைச்சலுக்காகவும் போராடுகிறார்கள் என நினைக்கிறேன்”

உணவு கிடைக்கும் இடம் என்பது மட்டுமின்றி பூஜா போன்றோருக்கு வாழ்வாதாரமாகவும் போராட்டக் களம் இருக்கிறது. பல்வேறு அலுவலகங்களிலிருந்து சேரும் குப்பைகளை எடுப்பவர் பூஜா. ஹரியானாவின் குந்த்லியை சேர்ந்தவர். போராட்டக்களத்தில் கிடக்கும் குடுவைகள், அட்டைப்பெட்டிகள் போன்றவற்றை பொறுக்க கணவரோடு வந்திருக்கிறார். “நான் தரையைப் பெருக்கி குப்பையை பொறுக்குவேன்,” என்கிறார் அவர். அவர்கள் என் மகளுக்கு உணவும் பாலும் கொடுக்கின்றனர். தினசரி இங்கு நாங்கள் வருகிறோம். அவர்கள் வழங்கும் எல்லா உணவுகளும் நன்றாக இருக்கிறது. சில நேரங்களில் வாழைப்பழங்களும் ஆரஞ்சுகளும் கொடுக்கின்றனர். சில நேரங்களில் சோப்புகளும் போர்வைகளும் கொடுக்கின்றனர். குடுவைகளை விற்று ஒரு நாளுக்கு 200லிருந்து 300 ரூபாய் வரை நான் சம்பாதிக்கிறேன். என் குழந்தைகளுக்கான செலவை பார்த்துக் கொள்ள உதவுகிறது. இவர்களின் நல்ல தன்மைக்கு இவர்கள் விரும்புவதை கடவுள் கொடுப்பார்”

கர்னாலை சேர்ந்த ஆசிரமம் ஒன்றின் தன்னார்வலர்கள் சூடான பால் தயாரித்து இரவு கதகதப்பாக இருக்கவென விவசாயிகளுக்கு கொடுக்கின்றனர். உலர்பழங்களும், நெய்யும், பேரீச்சம்பழமும், மஞ்சளும் தேனும் போட்டு பால் தயாரிக்கின்றனர். ஒவ்வொரு காலையும் கர்னாலின் பால் மையங்களில் இருந்து பால் வாங்கப்படுகிறது

பஞ்சாப்பின் காபுர்தாலா மாவட்டத்திலிருந்து வந்திருக்கும் தன்னார்வலர்கள் மாலை நேர சிற்றுண்டியாக பகோடா செய்கிறார்கள். போராட்ட களத்தில் கூட்டமாக இருக்கும் இடம் இதுதான்

அக்ஷய்க்கு 8 வயது. சாகிலுக்கு 4 வயது. “எங்களின் பெற்றோர் ஓர் ஆலையில் வேலை பார்க்கின்றனர். என் தாய் அதிகாலையிலேயே கிளம்பிவிடுவார். எனவே எங்களுக்கு காலை உணவு அவரால் தயாரிக்க முடியாது. அதனால்தான் இங்கு தினசரி வந்து சாப்பிடுகிறோம்,” என்கின்றனர். “எனக்கு ஸ்ப்ரைட் பிடிக்கும்,” என்னும் அக்ஷய், “இவனுக்கு (சாகில்) பிஸ்கட்டுகள் பிடிக்கும்…” என்கிறார்

9 மற்றும் 7 வயது ஆகும் ஆஞ்சல் மற்றும் சாக்ஷி (தரையில் அமர்ந்துகொண்டு) சொல்கிறார்கள், “எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் எல்லைக்கு செல்லுங்கள், உணவு கிடைக்கும் என்றார்”

போராட்டக்களத்தில் மருத்துவ முகாம்களும் இருக்கின்றன. விவசாயிகளுக்கு மட்டுமின்றி யார் வந்தாலும் இலவச மருந்துகள் கிடைக்கின்றன. அருகே உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களும் முகாம்களுக்கு வருகின்றனர்

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 37 வயது கஞ்சன் 6500 ரூபாய் மாத வருமானத்துக்காக ஓர் ஆலையில் வேலை பார்ப்பதாக சொல்கிறார். “எனக்கு சில நாட்களாக காய்ச்சல் இருக்கிறது. ஏற்கனவே சிகிச்சைக்கென நிறைய பணம் செலவழித்து விட்டேன். ஆலையில் இருக்கும் ஒருவர் சிங்கு எல்லையில் இலவச மருந்துகள் கொடுப்பதாக சொன்னார். இங்கு வந்து எனக்கு தேவையான மருந்துகளை பெற்றுக் கொண்டேன். எல்லாருக்கும் உதவும் சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நூற்றுக்கணக்கான ரூபாய்கள் ஆகும் மருந்துகளையும் உணவையும் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்”

பஞ்சாப்பை சேர்ந்த 20 வயது டர்ன் டரன் பற்பசையும் சோப்பும் பிஸ்கட்டுகளும் விநியோகிக்கிறார். தில்லி-ஹரியானா எல்லையில் தடை தொடர்வதால் ட்ராக்டர்களின் நீண்ட வரிசை போராடும் விவசாயிகளுக்கு மட்டுமில்லாமல் அருகில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் உதவுகிறது. சானிட்டரி நாப்கின், போர்வை தொடங்கி, உணவு, மருந்துகள், பல் துலக்கும் ப்ரஷ்ஷுகள், சோப்புகள் யாவும் விநியோகிக்கப்படுகின்றன
தமிழில்: ராஜசங்கீதன்