செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஒருநாள் கோரமாராத் தீவுக்கு வந்த ஒரு படகு பரபரப்பாக இருந்தது.. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் படகிலிருந்து இறங்கிச் செல்லும் வேகத்தில் இருந்தனர். மழைவெள்ளத்தால் வேறு இடங்களில் இருக்கும் உறவினர்களின் வீட்டில் தங்கியிருந்துவிட்டு, நீர் வற்றியதும் வீடுகளுக்கு அவர்கள் திரும்புகின்றனர். கக்த்வீப் நிலத்திலிருந்து தீவுக்கு படகில் 40 நிமிடங்கள் ஆகும். மாதத்துக்கு இருமுறை படகு இரு பக்கமும் சென்று வருகிறது. ஆனால் இந்த வழக்கம், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் இருக்கும் சிறுத் தீவில் வசிக்கும் கோரமாரா கிராமவாசிகளின் நீண்டகாலப் போராட்டத்தை மறைத்துவிடுகிறது.
கடல் மட்ட உயர்வு, புயல்கள், கனமழை முதலிய காலநிலை மாற்ற நிகழ்வுகள் கோரமாரா மக்களின் வாழ்க்கைகளை கடினமாக ஆக்கியிருக்கிறது. பல காலமாக நேர்ந்த வெள்ளமும் மண் அரிப்பும் தனித்திருக்கும் அத்தீவை ஹூக்ளியின் முகத்துவாரமாக மாற்றியிருக்கிறது.
யாஸ் புயல் மே மாதத்தில் தாக்கியபோது சுந்தரவனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் சாகர் ஒன்றியத்தில் இருக்கும் கோரமாராவும் ஒன்று. மே 26ம் தேதி புயலுடன் பொங்கிய கடல் தீவின் கரைகளைக் கடந்து மொத்தத் தீவையும் 15-20 நிமிடங்களில் வெள்ளத்தில் மூழ்கடித்தது. 2020ம் ஆண்டின் அம்ஃபான் புயல் மற்றும் 2019ம் ஆண்டின் புல்புல் புயலால் பாதிக்கப்பட்டிருந்த தீவுவாசிகள் மீண்டும் அழிவைச் சந்தித்தனர். அவர்களின் வீடுகள் பிய்த்தெறியப்பட்டு நெல், வெற்றிலைகள் இருந்த சேமிப்புக் கிடங்குகளும் சூரியகாந்தி நிலங்களும் வெள்ளத்தில் அழிந்தன.
காசிமாரா படகுத்துறைக்கு அருகே இருக்கும் அப்துல் ராஃப்ஃபின் வீடும் புயலில் அழிக்கப்பட்டது. “மூன்று நாட்கள் உணவில்லை. மழை நீர் குடித்து உயிர் வாழ்ந்தோம். பிளாஸ்டிக் போர்வைகள்தான் பாதுகாப்புக்கு இருந்தன,” என்கிறார் தையற்காரரான ராஃப். 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொல்கத்தாவில் வேலை பார்க்கிறார். அவரும் அவருடைய மனைவியும் நோய்வாய்ப்பட்டபோது, “எங்களுக்கு கோவிட் வந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர்,” என்கிறார் அவர். “பலர் கிராமத்திலிருந்து தப்பி விட்டனர்,” என்கிறார். “நாங்கள் அங்கேயே இருந்தோம். பாதுகாப்பாக தப்பிக்க வழி இல்லை.” ஒன்றிய வளர்ச்சி அதிகாரிக்கு தகவல் சொல்லப்பட்ட பிறகுதான் ராஃப்ஃபுக்கும் அவரது மனைவிக்கும் மருத்துவம் கிட்டியது. “எப்படியேனும் கக்த்வீப்புக்கு வந்து விடுமாறு ஒன்றிய வளர்ச்சி அதிகாரி கூறினார். அங்கு அவசர ஊர்தி வசதிகளை அவர் செய்து வைத்திருந்தார். கிட்டத்தட்ட 22,000 ரூபாய் (மருத்துவத்துக்கு) செலவழித்தோம்.” ராஃப்ஃபும் அவரது குடும்பமும் அப்போதிருந்து தீவின் முகாமில்தான் வசிக்கின்றனர்.
வீடுகள் அழிந்த பலரும் தற்காலிக முகாம்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மந்திர்தலா கிராமவாசிகள், தீவிலேயே உயரமான பகுதியான மந்திர்தலா சந்தைக்கு அருகே இருக்கும் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். சிலர் அருகே இருக்கும் குறுகிய சாலையில் முகாம் அமைத்திருக்கின்றனர். ஹத்கோலா, சுன்புரி மற்றும் காசிமாரா பகுதிகளைச் சேர்ந்த 30 குடும்பங்கள், கோரமாராவுக்கு தெற்கே இருக்கும் சாகர் தீவு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் இடம் மாறுவதற்கென அங்கே நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ரெசால் கானின் வீடு. அவரும் அவரின் குடும்பமும் சாகர் தீவில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்
ரெசால் கானின் குடும்பமும் அவற்றில் ஒன்று. காசிமாராவில் இருக்கும் அவரின் வீடு அழிந்துவிட்டது. “தீவை விட்டு நான் செல்ல வேண்டும். ஆனால் ஏன் செல்ல வேண்டும்?” என ஒரு புயல்நாளில், புயலால் பாதிக்கப்பட்ட மசூதிக்குள் அமர்ந்தபடி கேட்டார். “என்னுடைய பால்யகால நண்பர் கணேஷ் பருவாவை விட்டு நான் எப்படிச் செல்ல முடியும்? அவருடையத் தோட்டத்தில் இருக்கும் பாகற்காய் நேற்று என் குடும்பத்தின் இரவுணவுக்கு சமைக்கப்பட்டது,” என்கிறார் அவர்.
பாதிப்பிலிருந்து கிராமவாசிகள் மீளக் கூட நேரமின்றி, யாஸ் புயல் உருவாக்கிய கடலலைகள் ஜூன் மாதத்தில் வெள்ளத்தை உருவாக்கியது. அதற்குப் பிறகு பருவமழை பிரளயத்தைத் தந்தது. பேரிடர் விளைவுகளால் கவலைப்பட்ட மாநில நிர்வாகம், வசிப்பவர்களின் உயிர் பாதுகாப்புக்காக அவர்களை இடம்பெயர்த்தத் தொடங்கியது.
”புயலுக்குப் பிறகு என்னுடைய கடையில் உப்பு, எண்ணெய் தவிர வேறு எதுவும் இல்லை,” என்கிறார் மந்திர்தலாவின் கடைக்காரரான அமித் ஹால்தர். “கடல் அலைகளில் எல்லாம் மூழ்கிவிட்டது. இந்தத் தீவில் இருக்கும் முதியவர்கள் எவரும் இத்தகைய பெரிய அலைகளை இதற்கு முன் கண்டதில்லை. மரங்களில் ஏறி நாங்கள் தப்பிக்குமளவுக்கு அலைகள் உயரமாக இருந்தன. அலை அடித்து சென்றுவிடாமல் இருக்க மரங்களின் உச்சங்களில் சில பெண்கள் கட்டிப் போடப்பட்டிருந்தனர். நீர் மட்டம் அவர்களில் கழுத்து வரை இருந்தது,” என்கிறார் ஹல்தார். “எங்களின் கால்நடைகளை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.”
சுந்தரவனத்தின் காலநிலை மாற்ற நெருக்கடி பற்றிய 2014ம் ஆண்டின் ஆய்வு ப்படி, கடல் மட்ட உயர்வும் நுட்பமான நீரோட்டத் தன்மைகளும் கோரமாராவில் கடுமையான கடலோர அரிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. 1975ம் ஆண்டில் 8.51 சதுர கிலோமீட்டராக இருந்தத் தீவின் மொத்த பரப்பளவு 2012ம் ஆண்டில் 4.43 சதுர கிலோமீட்டராகக் குறைந்திருக்கிறது. தொடர் இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றால் தீவிலிருந்து வெளியேறுபவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது. 2001ம் ஆண்டில் 5,236 ஆக இருந்த கோரமாராவின் மக்கள்தொகை 2011ம் ஆண்டில் 5,193 ஆக குறைந்திருப்பதாகவும் ஆய்வு சொல்கிறது.
நேரும் துயரங்களையும் தாண்டி கோரமாராவின் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். செப்டம்பர் மாதத்தின் அந்நாளில் ஆறு மாத குழந்தையான ஆவிக், முதன்முதலாக சோறு உண்ணும் விழாவுக்கான வேலைகளை ஹத்கோலா முகாமில் இருக்கும் அனைவரும் எடுத்துச் செய்தனர். சுருங்கி வரும் நில ஆதாரம், இந்த சுற்றுச்சூழல் அகதிகளை அவர்களின் வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மையுடன் சமரசம் செய்யக் கட்டாயப்படுத்துகிறது. எனவே அவர்கள் தங்கள் வீடுகளை மீண்டும் கட்டுகிறார்கள் அல்லது புதிய தங்குமிடம் தேடுகிறார்கள்.

கடலலைகளுக்குப் பிறகு கக்த்வீப்பிலிருந்து திரும்பும் கோரமாராவாசிகள்

இந்த வருடத்தின் மே 26ம் தேதி யாஸ் புயலால் கடலலைகள் தீவின் கரைகளை கடந்து புகுந்து தீவை வெள்ளத்தில் மூழ்கடித்தது

வெள்ளம் தாக்கும் தீவுவாசிகள் மீண்டும் வாழ்க்கைகளை கட்டியெழுப்பும் நம்பிக்கையுடன் திறந்த வானுக்குக் கீழ் பிழைத்திருக்கின்றனர்

கோரமாராவிலிருந்து கிளம்பி சாகர் தீவுக்கு இடம்பெயரும் முன் காசிமாராவின் தன் வீட்டைப் பார்க்கிறார் ஷேக் சனுஜ்

காசிமாரா கணவாயில் உணவுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்; யாஸ் புயலால் வீடுகள் அழிந்த பிறகு அவர்கள் நிவாரணத்தில் உயிர் பிழைத்து வருகின்றனர்

காசிமாரா படகுத்துறைப் பகுதியில் படகு மூலம் உணவு தானியங்கள் மற்றும் ரேஷன் பொருட்கள் வந்து சேருகின்றன

படகில் இருந்து இறங்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வீடு திரும்பும் அவசரத்தில் உள்ளனர்

கோரமாராவின் மிக உயரமான இடமான மந்திர்தலா பஜாருக்கு அருகிலுள்ள தற்காலிக தங்குமிடம். ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு கிராம மக்கள் இங்கு தஞ்சம் புகுந்தனர்

அமித் ஹல்தார் சேதமடைந்த வீட்டின் அருகே நிற்கிறார். மந்திர்தலா பஜார் அருகே உள்ள தனது மளிகைக் கடையில் சேமித்து வைத்திருந்த அனைத்துப் பொருட்களையும் இழந்தார்

காசிமாரா படகுத்துறை அருகே வசிக்கும் ஒரு வீட்டின் ஈரமானத் தரையில் மண் பரப்பப்படுகிறது

தாகுர்தாசி கோருய் ஹத்கோலாவில் உள்ள தற்காலிக தங்குமிடம் அருகே வலையை நெய்கிறார். அவரும் அவரது குடும்பமும் அரசாங்கத்தால் இடமாற்றம் செய்யப்படுவார்கள்

ஹத்கோலாவில் உள்ள முகாமில் காக்லி மண்டல் (ஆரஞ்சு நிறப் புடவையில்). சாகர் தீவுக்கு மாற்றப்பட்ட 30 குடும்பங்களில் அவரது குடும்பமும் ஒன்று

சாகர் தீவில் தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் பட்டாவை காசிமாராவைச் சேர்ந்த அப்துல் ராஃப் வைத்திருக்கிறார்

செப்டம்பர் 9ம் தேதி அன்று ஹத்கோலா தங்குமிடத்தில், குழந்தை ஆவிக்கின் ’முதல் அரிசி உணவு உண்ணும் விழா’விற்கு முன்பு அவரது தாய். முகாமில் உள்ள மற்றவர்கள் சமையலில் உதவுகிறார்கள்

மந்திர்தலா பஜார் அருகே உள்ள தங்குமிடத்தில் மதிய உணவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்

காசிமாரா படகுத்துறையில் உணவுப் பொட்டலங்களைப் பெற மக்கள் மழையில் கூடுகிறார்கள்

காசிமாரா படகுத்துறையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் புடவைகளை பெண்கள் வாங்குகின்றனர்

கொல்கத்தாவிலிருந்து ஒரு மருத்துவக் குழு மந்திர்தலாவுக்கு அருகிலுள்ள கோரமாராவின் ஒரே ஆரம்ப சுகாதார நிலையத்திற்குவாரத்திற்கு ஒருமுறை செல்கிறது. மற்ற நேரங்களில், மருத்துவ உதவிக்கு சுகாதார செயற்பாட்டுப் பணியாளர்களை மக்கள் நம்பியிருக்கிறார்கள்

செப்டம்பர் 9 ஆம் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிட் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. கோரமாராவில் நடத்தப்பட்ட 17வது முகாம் இதுவாகும்

ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டப் பெயரைத் தக்க வைத்துக் கொண்ட கோரமாரா தபால் நிலையத்தின் தபால் அலுவலர், தனது பணியிடத்தை அடைய ஒவ்வொரு நாளும் பருய்பூரிலிருந்து 75 கிலோமீட்டர் பயணம் செய்கிறார். அதிக ஈரப்பதம் காரணமாக தபால் நிலையத்தில் உள்ள காகிதங்கள் மற்றும் கோப்புகள் ஈரமாகி, அவை உலர வைக்கப்படுகின்றன

அஹல்யா ஷிஷு ஷிக்ஷா கேந்திரா பள்ளியிலுள்ள ஒரு வகுப்பறை, இப்போது படுக்கைகள் விரிக்கப்பட்டு, காய்கறிகளை சேமிப்பதற்கான இடமாக செயல்படுகிறது. கோவிட் -19 பரவலிலிருந்து மந்திர்தலாவில் உள்ள இப்பள்ளி மூடப்பட்டுள்ளது

காசிமாராவில் உள்ள நியாயவிலைக் கடைக்கு பின்புறம், உப்புநீரால் நாசமடைந்த வெற்றிலை வயலில் அரிசி, கோதுமை மூட்டைகள் காய்ந்துக் கிடக்கின்றன. பயிர்கள் நாசமாகி துர்நாற்றம் வீசுகிறது

காசிமாரா படகுத்துறை அருகே உள்ள கிராமவாசிகள் புயலால் வேரோடு சாய்ந்த மரத்தின் மிச்சத்தைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்

சுன்புரி பகுதியில் வசிப்பவர்கள் மீன் பிடிக்க வலை வீசுகின்றனர். கோரமாராவில் வாழ்வதற்கான போராட்டம் தொடர்கிறது
தமிழில் : ராஜசங்கீதன்