காலை 9 மணி இருக்கும்.. வடவர்லபல்லே கிராமத்துக்கு அருகில், ஐதராபாத் - சிறிசைலம் நெடுஞ்சாலையின் ஊடாக, 150 முரட்டுப் பசுக்களை எஸ்லாவத் பன்யா நாயக் மேய்த்தபடி இருக்கிறார். அவை, கிழக்குத் தொடர்ச்சி மலையின் நல்லமல்லா வனச்சரகத்தில் உள்ள அமராபாத் புலிகள் காப்பகப் பகுதியின் மையமான இடத்துக்குள் நுழைகின்றன. கணிசமான மாடுகள் அங்குள்ள புல்வெளியில் மேயத் தொடங்குகின்றன. மற்றவை, மெல்லிய இலைகளைக் கொண்ட கிளைகளின் பக்கம் போக முயல்கின்றன.
எழுபத்தைந்து வயதான நாயக், இலம்பாடி சமூகத்தைச் சேர்ந்தவர். அவருடைய மாடுகள் அனைத்தும் - இங்குள்ள பெரும்பாலான கால்நடை வளர்ப்போருடையதைப் போல - துருப்பு இனக் கால்நடைகள்தான். இலம்பாடி (ஒரு பட்டியல் பழங்குடியினர்), யாதவா அல்லது கோல்லா (ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்டோர்), செஞ்சு (பாதிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட ஒரு பழங்குடியினர்) ஆகியோரே, துருப்பு மாடுகளை பாரம்பரியமாக வளர்த்துவருகிறார்கள். இந்த மாடுகளுக்கு சிறிய, கூர்மையான கொம்புகளும் கடினமான, வலுவான கால்களும் இருக்கும். இவை, மாறுபட்ட நிலப்பரப்புகளுக்கு எளிதில் நகர்ந்துகொள்கின்றன - அதாவது, ஈர நைப்புள்ள மண்ணுள்ள பகுதிக்கும் அதேநேரம் வறண்ட சரளை மண்பகுதிக்கும், கனமான சுமைகளை எளிதில் இழுத்துச் செல்கின்றன. அத்துடன், குறைவான தண்ணீரை வைத்தே குறிப்பிட்ட பகுதியின் வெப்பத்தைத் தாக்குப்பிடித்து வாழமுடியும்.
அமராபாத் மண்டலானது, தெலுங்கானா - கர்நாடக எல்லையில் உள்ள கிராமங்களுக்கு கிழக்கே இருக்கிறது. இதனால் அந்த எல்லைப் பகுதியிலிருந்து மாடுகளை வாங்க நிறைய விவசாயிகள் வருகிறார்கள். இந்த மாடுகள், புள்ளிகளைக் கொண்டிருப்பதால் இங்குள்ளவர்கள் 'போடா துருப்பு' என்று பெயர் வைத்துள்ளனர். தெலுங்கில், 'போடா' என்றால் புள்ளி, ’துருப்பு 'என்றால் கிழக்கு - கிழக்குப் புள்ளி மாடுகள் என்று பொருள். உழவு ஊர்திகளையோ பிற பண்ணை இயந்திரங்களையோ வாங்கமுடியாத சிறு, குறு விவசாயிகளுக்கு, இந்த போடாதுருப்புகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

எஸ்லாவத் பன்யா நாயக், 75, அவருடைய இணையர் எஸ்லாவத் மரோனி, 60. இங்குள்ள சமூகங்களில் கால்நடை வளர்ப்பிலோ அவற்றின் வியாபாரத்திலோ பொதுவாக பெண்கள் ஈடுபடுவது இல்லை. ஆனால், வீட்டுக் கொட்டில்களுக்கு மாடுகள் வந்துவிட்ட பிறகு, பெண்கள் அவற்றை கவனித்துக் கொள்கிறார்கள். சில நேரங்களில் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ஆண்கள் மாடுகளை ஓட்டிச்செல்லும்போது பெண்கள் தங்கள் இணையருடன் செல்வார்கள்; அங்கு தற்காலிகமான குடில்களில் தங்கிக்கொள்வார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்கு சில வாரங்களுக்குப் பிறகு, பெரும்பாலும் நவம்பரில், வணிகர்களும் உழவர்களும் குருமூர்த்தி ஜதரா எனும் உள்ளூர்த் திருவிழாவில் கூடுவார்கள். அதில் மாட்டுக்கன்றுகளின் வியாபாரம் நடக்கும். அமராபாத்திலிருந்து 150 கி.மீ. தொலைவில் நடைபெறும் இந்த வர்த்தகமானது, ஒரு மாத கண்காட்சியின் ஒரு பகுதியாகும். இதில் இலட்சக்கணக்கானவர்கள் வந்துசெல்வார்கள். நாயக் போன்ற மாடு வளர்ப்பவர்களிடம் மாடுகளை மாட்டுவணிகர்கள் வாங்கிச் செல்வார்கள். 12 மாதம் முதல் 18 மாதமுள்ள 2 கிடாக்கன்றுகள் ரூ.25,000 முதல் ரூ.30,000வரை விலைபோகும். இந்தச் சந்தையில் ஐந்து இணை மாடுகளை நாயக் விற்பது வழக்கம். சில நேரங்களில் ஒன்றோ இரண்டோ வேறு மாதங்களில் விற்கவும் செய்யும். இந்த மாட்டுவிற்பனைக் காட்சியில் உழவர்களோ வாங்கும் வேறு யாருமோ ஓர் இணை மாடுகளுக்கு ரூ. 25,000 முதல் ரூ. 45,000 ரூபாய் விலையாகத் தருகிறார்கள். சில நேரங்களில், மாட்டு வணிகர்களே உழவர்களாகவும் இருக்கின்றனர். விற்கப்படாத மாடுகளை அவர்கள் தம் கிராமங்களுக்கு இட்டுச்சென்று, ஆண்டு முழுவதும் தங்கள் பண்ணைகளிலேயே விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் மாடுகளைப் பராமரிப்பது கணிசமான நேரத்தை எடுத்துக்கொள்வதாகும். அமராபாத் ஊரானது, புதர், புல், மூங்கில் ஆகியவற்றால் மூடப்பட்ட வறட்சியான இலையுதிர்க் காட்டுப் பகுதியாகும். இந்த காப்பகப் பகுதிகளில் ஜூன் முதல் அக்டோபர்வரை கால்நடைகளுக்கு போதுமான தீவனம் கிடைக்கும். ஆனால், நவம்பரிலிருந்து மேய்ச்சல் நிலம் வறண்டுவிடும். காப்புக்காட்டின் மையப்பகுதிக்குள் நுழைய வனத் துறை தடைவிதிப்பதால், கால்நடைகளுக்கு தீவனம் தேடுவது கடினமாகிவிடுகிறது.
இந்த வாய்ப்பு இல்லாது போனவுடன், நாயக் தன் ஊரான மன்னனூரிலிருந்து தெலுங்கானாவின் மகாபூப்நகர் (இப்போது நாகர்கர்னூல்) மாவட்டத்தின் அமராபாத் மண்டலில் உள்ள அவரின் சகோதரி ஊரான வதர்லபள்ளிக்கு இடம்பெயர்கிறார். அங்கு, காடுகளுக்கு அடுத்ததாக பருவகாலத்தில் மாடுகள் உட்கொள்ள வசதியாக ஒரு தானியக் களஞ்சியத்தை அமைத்துள்ளார்.

"மாடுகளோடு ஒன்றியபடிதான் நாங்கள் இருக்கிறோம். கன்றுக்குட்டிகளை எங்கள் பிள்ளைகளைப் போல கவனித்துக்கொள்கிறோம். இவை, பல தலைமுறைகளாக எங்களுடன் இருந்துவருகின்றன. அவற்றைச் சார்ந்துதான் நாங்கள் இருக்கிறோம். எங்கள் பெற்றோர் அவற்றைச் சார்ந்து இருந்தனர்; நாங்களும் அவற்றைச் சார்ந்து இருக்கிறோம்; எங்கள் குழந்தைகளும்கூட அப்படித்தான்..” - 38 வயதான கந்தலா அனுமந்து சொல்கிறார். அவர், இலம்பாடி சமூகத்தைச் சேர்ந்தவர். நாகர்கர்னூல் மாவட்டத்தின் அமராபாத் மண்டலில், இலட்சுமபூர் (பி.கே) கிராமத்தில் உள்ள ’அமராபாத் போடா லட்சுமி கோவு சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.

"மேய்ச்சலுக்காக மாடுகளை குறைந்தபட்சம் 6 - 8 கிலோமீட்டர் தொலைவுக்கு இட்டுச்சென்றுவிட்டு, பின்னர் திரும்பக் கொண்டுவருகிறோம். மேய்ச்சலுக்காக உயரமான மலைகளில் அவற்றால் எளிதாக மேலே ஏறிச் செல்லமுடியும்" என்கிறார் அனுமந்து. கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே, சிறிசைலம் அணையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆந்திரத்தின் கர்னூல் மாவட்டத்துக்கும் தெலுங்கானாவின் மகாபூப்நகர் மாவட்டத்துக்கும் இடையிலான இந்தப் பகுதியில், ஒரு மாதமாக இந்தப் பசுமாடுகள் கிடைபோடப்பட்டு உள்ளன.

" காட்டில் நாங்கள் ஒரு கூடாரத் தீமூட்டலை ஏற்படுத்தினோம். இது, எங்கள் கிடை மாடுகள் எங்கள் கூடாரத்தைக் கண்டுகொள்வதற்கான ஓர் ஏற்பாடு." என்கிறார் அனுமந்து. இந்தத் தீமூட்டல், அனுமந்துவின் தற்காலிகமானக் குடிலுக்கு அருகில் உள்ளது. மாடுகள் ஆற்றைக் கடந்ததும், தெலுங்கானா பகுதியிலிருந்து ஆந்திரப் பகுதிக்கு அவற்றை இட்டுச்செல்ல உதவுகிறது.

"கிருஷ்ணா நதியை அவற்றால் எளிதில் கடந்துவிடமுடியும். நாங்கள் ஒரு குரல் விட்டவுடன், அவை அனைத்துமே ஆற்றில் குதிக்கின்றன. எங்களின் பேச்சைக் கேட்கவேண்டும் என்பதற்காக அவற்றை நாங்கள் அடிப்பதில்லை. ஒரு சீழ்க்கை ஒலி கொடுத்தால் போதும். முதலில் ஒரு மாடு மட்டுமே சிறிது முனைப்பு காட்டவேண்டும். மற்ற எல்லா மாடுகளும் மந்தையில் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் முதல் மாட்டைப் பின்தொடரும். மாடுகளுக்கு எங்கள் கட்டளைகளைப் புரியவைப்பதற்காக குறிப்பிட்ட விதமான ஒலிகளை எழுப்புவோம். இது, ஒரு வகையான மொழி. எல்லாமும் அப்படி இல்லாவிட்டால்கூட, குறைந்தது சில மாடுகளாவது நாங்கள் சொல்வதை அறிந்துகொண்டு, அதற்கேற்ப நடந்துகொள்கின்றன.”என்கிறார் அனுமந்து.


இடது: கன்றுகள் நலத்துடன் வளர்வதை உறுதிப்படுத்த அதிகமான பாலை எஸ்லவத் பன்யா நாயக் கறக்காமல் அப்படியே விட்டுவிடுகிறார். வலது: இரண்டு வாரமே ஆன கன்றுகூட நீந்த முடியும். ஆனாலும் நீந்தும்போது பாதுகாப்புக்காக காய்ந்த மரத்துண்டுடன் அது கட்டப்பட்டு இருக்கும்.

"முன்னர் இதே தானியக் களஞ்சியத்தில் மாட்டுமந்தை தங்கியிருந்தபோது, மழை பெய்து கொட்டகைகள் நீரில் மூழ்கிவிட்டன. இந்த மாடுகளின் கால்கள் ஒருபோதும் மென்மையாக ஆவதில்லை. இவை தனித்துவமானவை; இந்த மாட்டினத்துக்கு சிறப்பானவை." என்று அனுமந்து கூறுகிறார்.


அமராபாத் வனமானது ஒரு புலிகள் காப்புக்காடு என்பதால், இங்கு வனத்துறையினருக்கும் கால்நடை வளர்ப்போருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும். பெரியதொரு குழுவாக நகரும்போது, தீவனத்துக்காக மேய்ச்சல் அதிகமாகவும் குறைவாகவும் உள்ள பகுதிகளுக்கு இடையே மந்தை நகரும். " காட்டில் வேட்டையாடும் ஒரு விலங்கு அருகில் இருப்பதை மாடுகளால் உணர்ந்துகொள்ளமுடியும். புலியோ சிறுத்தையோ கரடியோ தங்களைச் சுற்றி இருந்தால், மாடுகள் ஒன்றாகச்சேர்ந்து அதைத் துரத்துகின்றன. இன்றுகூட அச்சம்பேட்டை வனப்பகுதியில் ஒரு புலி இருப்பதாக அவற்றுக்குப் பட்டதும், அவர்கள் அமராபாத் வனப்பகுதிக்குச் செல்கின்றன. அமராபாத் மண்டலத்தில் அப்படி ஏதாவது இருந்தால், மாடுகள் மட்டிமடுகு வனப்பகுதிக்குச் சென்றுவிடும்.”என்கிறார், மன்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவரான மாடுவளர்க்கும் இராமாவத் மல்லையா நாயக் (வலது). இருந்தாலும் சில நேரங்களில், சிறுத்தைகள் அரிதாக புலிகள்கூட மாடுகளையும் சிறிய கன்றுக்குட்டிகளையும் தாக்கி, கொன்றுவிடுகின்றன.

இலட்சுமபூர் (பி.கே) கிராமத்தைச் சேர்ந்த இரத்னாவத் இரமேசைப் (மேலே) போன்ற சிறு, குறு விவசாயிகளுக்கு போடா துருப்பு மாடுகள் பெரிய உதவியாக இருக்கின்றன. “அது எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும், இந்த மாடுகள் ஒருபோதும் வேலைசெய்யாமல் இருப்பதில்லை! ஒரு பேச்சுக்கு, அடுத்தநாள் இறந்துவிடுவதாக அதற்குத் தெரிந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். முந்தைய நாள் முழுவதும் அது வேலைசெய்யும், வீட்டிற்கு வந்து, மறுநாள்தான் இறந்துபோகும்." என்கிறார் மல்லையா நாயக்.


இடது: (பி.கே) இலட்சுமாபூரைச் சேர்ந்த கந்தலா பாலு நாயக்குக்கு ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. அதில், அவர் பருத்தி, மிளகாய், தானியங்கள், பருப்புவகைகளைப் பயிரிடுகிறார். போடா துருப்புகளைச் சார்ந்திருக்கிறார். வலது: “ பாலென்கி, இட்டி, போரி, லிங்கி என்று அவற்றைக் கூப்பிடுவேன்.. எங்கள் தெய்வங்களின் பெயர்கள், இவை..” என நினைவுகூர்கிறார், அனுமந்துவின் தாயாரான 80 வயதான கந்தலா கோரி.

"ஒவ்வோர் ஆண்டும் மாடுகளை விற்க 'குருமூர்த்தி ஜதாரா' (மகாபூப்நகர் மாவட்டத்தில் உள்ள சின்னச்சிந்தகுந்தா மண்டலின் அம்மாபூர் கிராமத்தில் நடக்கும் உள்ளூர்த் திருவிழா)வுக்குப் போவோம். இரெய்ச்சூர், அனந்தபூர், மந்திராலயம் வட்டாங்களிலிருந்து மாடுகளை வாங்க மக்கள் வருவார்கள். விவசாயத்திற்கு மிகவும் பொருத்தமானது இந்த மாட்டு இனம் சிறந்ததென அவர்கள் நம்புகிறார்கள்.” என்கிறார் அனுமந்து.
தமிழில்: தமிழ்கனல்