வெள்ள நீர் உயரத் துவங்கியபோது, பார்வதி வாசுதியோ தனது வீட்டை விட்டு வெளியேறும்போது தன் கணவரின் பாரம்பரிய தலைப்பாகையை தன்னுடன் எடுத்துக்கொண்டார். "நாங்கள் இதையும் சிப்பிலியையும் (ஒரு இசைக் கருவி) மட்டுமே எங்களுடன் கொண்டு வந்தோம். நடப்பது எதுவாக இருந்தாலும், இந்த தலைப்பாகை எங்களால் ஒருபோதும் விட்டு விட முடியாது", என்கிறார் அவர். அந்த தலைப்பாகை மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவரது கணவர் கோபால் வாசுதியோ இறை பாடல்களைப் பாடும்போது அதை அணிந்து கொள்கிறார்.
ஆகஸ்ட் 9 அன்று எழுபதுகளின் பிற்பகுதியில் இருக்கும் கோபால் ஒரு பள்ளியின் அறையில் ஒரு மூலையில் விரக்தியுடன் அமர்ந்திருந்தார். "எனது மூன்று ஆடுகள் இறந்து விட்டன, எங்களால் மீட்கப்பட்ட ஒரு ஆடும் நோய்வாய் பட்டிருப்பதால் இறக்கக்கூடும்", என்று அவர் கூறினார். கோபால், வாசுதியோ சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார், இச்சமூகத்தினர் பகவான் கிருஷ்ணனை வணங்குபவர்கள். இவர்கள் வீடு வீடாகச் சென்று பக்திப் பாடல்களைப் பாடி யாசகம் பெறுவர். பருவமழைக்கால மாதங்களில் கோல்ஹாபூர் மாவட்டத்தின் ஹட்கானங்கள் தாலுகாவில் உள்ள தனது கிராமமான பெந்தவாடேயில் விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார் அவர். "கடந்த ஒரு மாதமாக, கனமழை காரணமாக வயல்களில் எந்த வேலையும் நடைபெறவில்லை, இப்போது வெள்ளம் வேறு மீண்டும் வந்துவிட்டது", என்று அவர் கிட்டத்தட்ட கண்களில் கண்ணீருடன் கூறினார்.
பெந்தவாடே விவசாயிகள் மழையின் தாமதமான வருகை காரணமாக தங்களது மானாவரி பயிர்களின் விதைப்பை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்தனர் - இங்கு பொதுவாக முதல் மழை ஜூன் மாதத்தின் துவக்கத்திலேயே துவங்கிவிடும். ஆனால் இப்போது மழை பெய்தபோது, சோயாபீன், நிலக்கடலை மற்றும் கரும்பு ஆகிய பயிர்களை மூழ்கடிக்க அதற்கு வெறும் ஒரு மாதம் மட்டுமே தேவைப்பட்டது.
திருமண புகைப்படங்கள் எடுப்பதற்காக தான் பயன்படுத்தும் ட்ரோன் - மக்களை மீட்க உதவும் - என்பதை ஆசிப் சற்றும் எதிர்பார்க்கவில்லை: 'நாங்கள் எந்த நபரையும் உயிர் இழக்க விடமாட்டோம். விலங்குகளையும் காப்பாற்றப் போகிறோம்' என்று கூறினார்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி துவங்கி கொட்டித்தீர்த்த கனமழையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவின் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் 200 முதல் 250 கிராமங்களில் ஒன்று பெந்தவாடே (என்கிறது பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா வின் செய்திகள்). கனமழை ஆகஸ்ட் 11 க்கு பிறகே குறையத் துவங்கியது
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மக்கள் தொகை 4686 - இதில் 450 குடும்பங்களிலுள்ள சுமார் 2500 பேரும், கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள வெள்ள நிவாரண முகாம்களுக்கும், பள்ளி கட்டிடங்களிலும், கிராமத்திற்கு வெளியில் இருக்கும் தலைவரின் வீட்டிற்கும் (அங்கு தண்ணீரின் அளவு உயரவில்லை) அனுப்பப்பட்டதாக, பெந்தவாடேயின் தலைவர் ககாசோ சவான் தெரிவித்தார்.
வாசுதியோ, அவரது மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருடன் ஆகஸ்ட் ஆகஸ்டு 3-ஆம் தேதி கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தஞ்சமடைந்தார். நான்கு நாட்களுக்குப் பிறகு அங்கும் தண்ணீரின் அளவு உயர்ந்ததால் கிராமத்திற்கு வெளியே இருக்கும் துவக்கப்பள்ளிக்கு அவர்கள் மாற வேண்டியிருந்தது. எழுபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் பார்வதி ஆகஸ்ட் 9ஆம் தேதி என்னிடம், "நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஒரு வாரம் ஆகிறது. நாங்கள் இங்கேயே இன்னும் ஒரு மாதத்திற்கு தங்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது. இன்று தண்ணீரில் நீந்தி வெளியே சென்று வந்த சிறுவன் ஒருவன் எங்கள் வீடு இடிந்து விட்டது என்று கூறினான்", என்று கூறினார்.
பெந்தவாடேயில் இவர்களது குழுவைப் போன்ற பிற உள்ளூர் குழுக்களின் பெருத்த முயற்சிக்கு இடையேயும் பிற கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் முயற்சிக்கு இடையேயும், பல விலங்குகள் உயிரிழந்துள்ளன. பெந்தவாடேயில் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்றாலும் கோல்ஹாபூர் மற்றும் சங்லி மாவட்டங்களில் வெள்ளத்தால் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புனே வட்டார ஆணையர் சொல்லியிருப்பதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வமாகவோ, நம்பும்படியாகவோ ஏக்கர் அளவில் பயிர் சேதம் பற்றிய மதிப்பீடுகள் இன்னும் கணக்கிடப்படவில்லை.


ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெள்ள நீர் உயரத் துவங்கியபோது, பார்வதி வாசுதியோ (இடது) தனது வீட்டை விட்டு வெளியேறும்போது தன் கணவர் கோபால் வாசுதியோவின் (வலது) பாரம்பரிய தலைப்பாகையை மட்டுமே தன்னுடன் எடுத்துக்கொண்டார்

விவசாய குடும்பங்கள் அவசரமாக தங்களது மீதமான உடமைகளை காப்பாற்ற முயன்றனர். அவர்கள் அனைவரும் உள்ளூர் பள்ளியில் உள்ள ஒரு நிவாரண முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வர்ணா நதியிலிருந்து (கிருஷ்ணாவின் துணை நதி) வெள்ள நீர் பெந்தவாடே வழியாக ஓடியது. மூன்று அறைகள் கொண்ட கிராமத்தின் துவக்கப் பள்ளியில் 20 குடும்பங்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர், அங்கு சில விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கவனித்துக் கொள்ள முயற்சித்தனர், சிலர் மதிய உணவிற்காக காத்திருந்தனர், இன்னும் சிலர் சற்று ஒதுங்கி அமர்ந்திருந்தனர். ஒருவேளை அவர்கள் 2005 வெள்ளத்தை பற்றி நினைவு கூர்ந்து இருக்கக்கூடும். அந்த வருடம் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் ,கோல்ஹாபூரில் ஒரு மாதத்தில் 159 சதவீத மழை பெய்த்து என்று சொன்னதாக செய்திகள் கூறின - ஆனால் இம்முறை 9 நாட்களிலேயே 480 சதவீத மழை பெய்திருக்கிறது. மேலும் ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து இருந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை ஹட்கானங்கள் தாலுகாவில், 450 மில்லி மீட்டர் மழை பதிவானதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் கூறுகின்றன

ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஒரு வாகனத்தின் மூலம் கிராமத்திலுள்ள துவக்கப் பள்ளிக்கு மாற்றப்பட்டார், தனது வயது 95 என்று சொல்லும் அனுபாய் போஸலே. நடுங்கிக் கொண்டிருக்கும் அவர் தன்னை முழுமையாக போர்வையால் மூடிக்கொண்டு இருக்கிறார். இந்தப் பேரழிவை அவர் 1953 வெள்ளத்துடன் ஒப்பிட்டு, அப்போது தோண்டைவாடி கிராமத்தில் (சதாரா மாவட்டத்தின் கரத் வட்டத்தில்) இருந்த தனது வீடு இடிந்ததை நினைவு கூர்ந்தார். இந்த வெள்ளம் முந்தையவற்றை (2005 மற்றும் 1953) விட மிகவும் மோசமானது என்று மிக சன்னமான குரலில் தெரிவித்தார். மற்ற அனைவரும் மதிய உணவு வந்து விட்டதா என்பதைப் பார்க்க பள்ளி அறைகளை விட்டு வெளியே வந்த பிறகு அவர் அமைதியாக இருந்தார். ஆகஸ்ட் 9 மதியம் 2 மணி. தன்னார்வலர்களும் மற்றும் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உணவினை கொண்டு வந்தனர், ஆனால் அவர்களுக்கு உணவு அடிக்கடி கிடைக்கவில்லை

மேல் இடது: பெந்தவாடேயைச் சேர்ந்த உஷா பாட்டீல் என்ற குடும்ப தலைவி கிராமத்தை விட்டு வெளியேறும் போது இரண்டு பூனைகளையும் ஒரு ஆட்டையும் தன்னுடன் கூட்டி வந்தார். கிராமவாசிகள் தங்களால் இயன்றவரை ஒவ்வொரு விலங்கினையும் காப்பாற்றவே முயற்சி செய்தனர், ஆனால் பல விலங்குகள் தண்ணீரின் காரணமாக வெளியே வர மறுத்துவிட்டன. மேல் வலது: சோம்நாத் பசாஞ்,19, தனது வீட்டை விட்டு வெளியேறும்போது அவர் தன்னுடன் கொண்டு வந்த காதல் கிளிகளுடன். கீழ் இடது: எந்த பசுக்களும் (அவைகளும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டன) பால் தரவில்லை, என 47 வயதான, கோபால் மற்றும் பார்வதி தம்பதியின் மகனான அஜித் கூறுகிறார். கால்நடைகளுக்கு தீவனம் இல்லை. அவை அனைத்தும் நோய்வாய்பட்டு இருக்கின்றன மேலும் இங்கு அதற்கான மருத்துவரும் இல்லை. அவர்களின் மாடு விரைவில் இறந்து விடும் என்று அவர் பயப்படுகிறார். வயதானவர்களில் பலர் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல விலங்குகள் இன்னும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. விவசாயிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து நான்கு 4 அடி ஆழ தண்ணீருக்குள் நடந்து சென்று தீவனங்களை கொண்டு வருகின்றனர். உள்ளுர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரண முகாம்களில் தீவனங்களைை வழங்கி வருகின்றன. கீழ் வலது: வெள்ள நீர் கால்நடை கொட்டகைக்குள் புகுந்துவிட்டது, அதன் பிறகு கோச்சி கிராம (பெந்தவாடேயில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள) விவசாயிகள் தங்களது விலங்குகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்

வர்ணா நதியில் இருந்து வந்த நீர் அர்ச்சனா இங்காலேவின் 2.5 ஏக்கர் வயலில் நுழைந்தது. 6 குவிண்டால் சோயாபீன் மற்றும் ஒரு குவிண்டால் நிலக்கடலையையும் தான் இழந்து இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார். தனது வீட்டிலிருந்து வெளியேறிய நான்கு நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 9 அன்று அதே கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து தண்ணீரின் மட்டத்தை பார்க்க அவர் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அதற்காக உடைந்த செங்கற்களைக் கொண்டு நடை பாதை ஒன்றை உருவாக்கி இருந்தார்

34 வயதான, நாகேஷ் பந்வாடே, 'இரண்டு நாட்களுக்கு முன்பு சுமார் 10 மணி அளவில் எனது வீட்டின் பின்புறம் சுவர் இடிந்து விழுந்தது', என்று கூறுகிறார்


இடது: பெந்தவாடேயில் உள்ள துவக்கப் பள்ளியில் இளைஞர்களின் குழு தங்களது ஸ்மார்ட்போன்களில் விளையாடிக் கொண்டிருந்தனர். வலது: பெந்தவாடேயின் சில குடும்பங்கள் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டனர், ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு அதாவது ஆகஸ்ட் 6 ஆம் தேதி பள்ளி வளாகத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது


கோச்சி கிராமத்தின் தெருக்களில் தேங்கியிருக்கும் வெள்ள நீர் மற்றும் தனது வீட்டிற்குச் செல்லும் ஒரு விவசாயி


அருகில் உள்ள தண்ணீரில் மூழ்கிய வயல்களிலிருந்து தக்காளி கிராமத்திற்குள் மிதந்து கொண்டிருந்தது; சந்தோலி அணையில் அதிகப்படியான நீர் இருப்பதால் வர்ணா நதி நிரம்பி வழிகிறது


இடது: பல குடும்பங்கள் கோச்சியில் உள்ள மராத்தி உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டன. வலது: வெள்ளம் குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளது. கோச்சியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே சுத்தமான மழை நீரை சேகரிப்பதற்காக தங்களது பாத்திரங்களை வைத்துள்ளனர். 'எங்களைச் சுற்றி எங்கும் தண்ணிர் காடாக உள்ளது, ஆனால் குடிப்பதற்கு எங்களிடம் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை', என்று கூறுகிறார் கோச்சியில் வசிப்பவரும், ஹட்கானங்கள் பஞ்சாயத்து சமிதியின் உறுப்பினருமான வசந்த் கௌரவ். '2005 வெள்ளப்பெருக்கில் 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன (கோச்சியின் மக்கள்தொகை 5832) ஆனால் இப்போது 450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2005 இல் நாங்கள் 900 பேரை மீட்டோம், நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் செல்ல இரண்டு வாரங்கள் பிடித்தது', என்று கூறுகிறார்

ஜூன் 27 அன்று, 41 வயதான, தனாஜி வகாரே, கோச்சியில் உள்ள தனது 27 குந்தா நிலத்தில் (0.675 ஏக்கர்) கரும்பு விதைத்துள்ளார். "நான் மொத்தம் ரூபாய் 14000 செலவு செய்துள்ளேன்", என்று அவர் கூறுகிறார். தனாஜியின் கரும்பு பயிரை இப்போது பார்க்க முடியாது - ஏனெனில் அது தண்ணிருக்கு அடியில் மூழ்கிவிட்டது - மேலும் அவர் தான் 54 டன் விளைச்சலை இழந்துள்ளதாக மதிப்பிடுகிறார். 'வெள்ள நீர் வடிந்த பிறகு, முதலில் வயலில் எவ்வளவு மண் மிச்சமிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதன் பிறகு அதை சமன் செய்ய வேண்டும்'. குறைந்தபட்சம் ரூபாய் 10,000 ஆவது செலவு செய்தால் தான், தன் நிலத்தை சரிசெய்ய முடியும் என்று கவலையுடன் இருக்கிறார். கரும்பு பயிரிட்ட விவசாயிகள் விவசாயக்கடன் பெற்றிருந்தனர். தங்கள் வயல்கள் தண்ணீரில் மூழ்கி, முழுப் பயிர்களும் அழிக்கப்பட்டு விட்டதால் தங்கள் கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்று இப்போது அவர்கள் கவலையில் இருக்கிறார்கள்
தமிழில்: சோனியா போஸ்