டிசம்பர் 11ம் தேதி காலை, மின்சாரக் இணைப்புகளை அவர்கள் அகற்றிக் கொண்டிருந்தபோது அருகே இருந்த கடைக்காரர் ஒருவர் அழத் தொடங்கி விட்டார். “நாங்கள் இல்லாமல் அவர் தனிமையில் இருப்பதாக உணர்வார் என அவர் சொன்னார். எங்களுக்கும் கடினமாகதான் இருக்கப் போகிறது. எனினும் விவசாயிகளின் வெற்றி பெரியக் கொண்டாட்டம்தான்,” என்கிறார் குர்விந்தர் சிங்.
மேற்கு தில்லியின் திக்ரி போராட்டக் களத்தில் தற்காலிகக் கூடாரங்களை குர்விந்தரும் அவரது ஊரைச் சேர்ந்த விவசாயிகளும் பிரிக்கத் தொடங்குகையில் காலை 8.15 மணி. அவ்வப்போது மூங்கில் இணைப்புகளை மரப்பலகை கொண்டு உடைக்கிறார்கள். சில நேரங்களில் அடித்தளத்தை உடைக்க செங்கற்களைப் பயன்படுத்துகின்றனர். 20 நிமிடங்களில் எல்லாமும் குவியலாக மாறியது. தேநீர் மற்றும் பகோடா சாப்பிட இடைவேளை எடுத்துக் கொண்டனர்.
“இந்த வீடுகளை எங்களின் சொந்தக் கைகள் கொண்டு கட்டினோம். இப்போது அதே கைகள் கொண்டு அகற்றுகிறோம்,” என்கிறார் 34 வயது குர்விந்தர். அவருடைய குடும்பம் கோதுமை, நெல் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் இருக்கும் தங்கியான் கிராமத்திலுள்ள ஆறு ஏக்கர் நிலத்தில் விளைவிக்கிறது. “வெற்றியுடன் வீடு திரும்புவதில் சந்தோஷமாக இருக்கிறது. அதே நேரம் இங்கு உருவான உறவுகளை விட்டுப் பிரியும் துயரும் இருக்கிறது.”
“போராட்டம் தொடங்கியபோது இங்கு ஒன்றுமே இல்லை. சாலைகளில்தான் உறங்கினோம். பிறகு இந்த வீட்டை நாங்கள் உருவாக்கினோம்,” என்கிறார் 35 வயது தீதார் சிங். அவரும் லூதியானா மாவட்டத்தின் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்தான். கோதுமை, நெல், உருளைக்கிழங்கு மற்றும் பச்சைக் காய்கறிகளை ஏழு ஏக்கர் நிலத்தில் விளைவிக்கிறார். “நிறைய விஷயங்களை நாங்கள் இங்குக் கற்றுக் கொண்டோம். குறிப்பாக இங்கு தங்கி இருக்கையில் சகோதரத்துவ உணர்வைக் கற்றுக் கொண்டோம். எல்லா அரசுகளும் எங்களுக்குள் சண்டைதான் மூட்டி விடுகின்றன. ஆனால் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களிலிருந்த நாங்கள் அனைவரும் இங்கு கூடியபோது நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள்தான் எனப் புரிந்து கொண்டோம்.
“பஞ்சாபில் தேர்தல்கள் வருகின்றன. சரியான நபருக்கு நாங்கள் வாக்களிப்போம்,” என்கிறார் குர்விந்தர். “எங்களுடன் கரம் கோர்ப்பவர்களுக்குதான் (ஆதரவளிப்பவர்கள்) நாங்கள் வாக்களிப்போம். அதிகாரத்துக்கு வந்து எங்களை ஏமாற்றுபவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம்,” என்கிறார் தீதார்.
![It’s difficult for us [to leave]. But the win of the farmers is a bigger celebration', said Gurwinder Singh.](/media/images/02a-Image-33-ST.max-1400x1120.jpg)

இடது: ‘கிளம்புவதற்கு எங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் விவசாயிகளின் வெற்றி பெரிய கொண்டாடத்துக்கானது,’ என்கிறார் குர்விந்தர் சிங். வலது: லூதியானா மாவட்டத்தின் அவரது கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, திக்ரி கூடாரத்தைப் பிரிக்கிறார்
அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்று பிற கோரிக்கைகளையும் ஏற்ற பிறகு, தில்லி எல்லையில் ஒரு வருட காலமாக தொடரும் விவசாயப் போராட்டங்களை நிறுத்திக் கொள்வதாக 40 விவசாயச் சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்த் கிசான் மோர்ச்சா கூட்டமைப்பு டிசம்பர் 9ம் தேதி அறிவித்தது.
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகள் கடன் போன்ற பிற பிரதானப் பிரச்சினைகளும் இருக்கின்றன. அவை குறித்து ஒன்றிய அரசுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு முடிவெடுத்திருக்கிறது.
“நாங்கள் போராட்டத்தை நிறுத்திதான் வைத்திருக்கிறோம். முடித்துவிட வில்லை. சிப்பாய்கள் விடுப்பில் செல்வது போல், விவசாயிகளாகிய நாங்களும் விடுப்பில் செல்கிறோம். அரசு கட்டாயப்படுத்தினால் நாங்கள் மீண்டும் வருவோம்,” என்கிறார் தீதார்.
“இந்த அரசு (குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற விவசாயப் பிரச்சினைகளில்) தொந்தரவு செய்தால், முதல்முறை வந்ததைப் போல நாங்கள் திரும்ப வருவோம்,” என்கிறார் குர்விந்தர்.
தங்கியான் கிராமப் போராட்டக்காரர்கள் இருக்கும் பகுதியிலிருந்து சில மீட்டர் தொலைவில், சத்பிர் கோதாராவும் ஹரியானாவின் ஃபதேபாத் மாவட்டத்திலுள்ள தானி போஜ்ராஜ் கிராமத்தைச் சேர்ந்த பிறரும் ஒரு சிறு ட்ரக்கில் இரண்டு காற்றாடிகளையும் தண்ணீர் ட்ரம்களையும் இரண்டு குளிர்சாதனங்களையும் தார்பாய்கள் மற்றும் இரும்புத் தடிகள் ஆகியவற்றையும் அவர்களின் வசிப்பிடத்திலிருந்து ஏற்றி முடித்திருந்தனர்.


இடது: ‘குறைந்தபட்ச ஆதார விலைக்கு போராட வேண்டுமெனில் நாங்கள் திரும்ப வருவோம். எங்களின் போராட்டம் நிறுத்திதான் வைக்கப்பட்டிருக்கிறது’, என்கிறார் சத்பிர் கொதாரா (ஆரஞ்சு நிறத் துணி அணிந்திருப்பவர்). வலது: ‘இங்குக் குப்பைகள் சேகரிக்க நாங்கள் வந்தபோது எங்களைப் போன்ற ஏழைகளுக்கு தினசரி இரு வேளை உணவை அவர்கள் அளித்தனர்,’ என்கிறார் கல்பனா தாசி


இடது: ‘எங்களின் கிராமத்திலிருந்து இரண்டு, மூன்று கிராமங்களுக்கு முன் மோகாவில் இருக்கும் பட்டரை நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் முதலில் அடைந்து விடும். அங்கு மலர்களால் நாங்கள் வரவேற்கப்படுவோம். பிறகு இறுதியில் எங்களின் கிராமத்தை நாங்கள் அடைவோம்,’ என்கிறார் சிரிந்தர் கவுர். வலது: அவரது கிராமத்தைச் சேர்ந்த பிற போராட்டக்காரர்களுடன் சேர்ந்து ட்ராக்டர் ட்ராலியில் ஏற்றுவதற்காக பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருக்கிறார்
இந்தச் சாலையில் (ரோடக்குக்கு செல்லும் சாலை) செல்லும் டிராக்டர்கள் பிளாஸ்டிக் மற்றும் காகித மலர்களாலும் பளபளப்பான துணிகளாலும் சங்கக் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. ”அலங்கரித்த பிறகு எங்களின் டிராக்டர்களை எடுத்துச் செல்வோம். ஒரு கொண்டாட்டமான திருமண ஊர்வலம் போல் செல்வோம்,” என்கிறார் பஞ்சாபின் மோகா மாவட்டத்தின் தலா கிராமத்தைச் சேர்ந்த 50 வயது சிரிந்தர் கவுர். ஒரு டிராக்டர் ட்ராலியில் அவரது குடும்பத்தின் படுக்கைகள், சமையல் பாத்திரங்கள் போன்றவை ஏற்றப்பட்டிருக்கின்றன. இன்னொரு ட்ராலியில் ஆண்கள் செல்கின்றனர். பெண்கள் ஒரு ட்ரக்கில் செல்கின்றனர்.
“‘எங்களின் கிராமத்திலிருந்து இரண்டு, மூன்று கிராமங்களுக்கு முன் மோகாவில் இருக்கும் பட்டரை, நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் முதலில் அடைந்து விடும். அங்கு மலர்களால் நாங்கள் வரவேற்கப்படுவோம். பிறகு இறுதியில் எங்களின் கிராமத்தை நாங்கள் அடைவோம்,’ என்கிறார் சிரிந்தர். தாலா கிராமத்திலுள்ள நான்கு ஏக்கர் நிலத்தில் அவரது குடும்பம் நெல், கோதுமை மற்றும் கொண்டைக் கடலை ஆகிய பயிர்களை விளைவிக்கிறது. விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவரென தன்னைக் குறிப்பிடுகிறார் அவர். “இப்போதும் (டிசம்பர் 11 வரை) என்னுடைய சகோதரிகளின் கணவர்களில் ஒருவர் திக்ரியிலும் ஒருவர் சிங்குவிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர். எங்கள் குடும்பம் இங்கு (ரோடக் சாலையில்) இருக்கிறோம். போராட்ட வீரர்கள் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். இந்தப் போராட்டத்திலும் வெற்றி அடைந்திருக்கிறோம். எங்களின் (மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டுமென்ற) கோரிக்கை நிறைவேறிவிட்டது. இனி எங்களின் (பாரதிய கிசான்) சங்கம் சொல்லும்படி செய்வோம்.”
அருகே இன்னொரு ட்ராலியில் இருந்த 48 வயது கிரண்ப்ரீத் கவுர் சோர்வாக தெரிந்தார். பஞ்சாபின் மோகா மாவட்டத்திலுள்ள பாத்னி காலன் கிராமத்தைச் சேர்ந்தவர். “ஒரு மணி நேரம்தான் தூங்கினோம். நேற்றிலிருந்து நாங்கள் உடைமைகளை கட்டிக் கொண்டிருந்தோம்,” என்கிறார் அவர். “வெற்றிக் கொண்டாட்டம் அதிகாலை 3 மணி வரை நடந்தது.”
அவரது ஊரில் அவரது குடும்பத்துக்கு இருக்கும் 15 ஏக்கர் நிலத்தில் கோதுமை, நெல், சோளம், கடுகு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை குடும்பத்தினர் விளைவிக்கின்றனர். “அமைதியாக போராடுவது எப்படி எனப் பலரும் இங்குக் கற்றுக் கொண்டனர். உரிமைகளுக்காகப் போராடினால் ஜெயிக்க முடியும் என்பதையும் கற்றுக் கொண்டனர்,” என்கிறார்.
அவர்கள் சாலையில் ஆக்கிரமித்திருந்த ஒவ்வொரு துண்டு நிலத்தையும் அவரும் பிறரும் சுத்தப்படுத்தியதாக கிளம்புவதற்கு முன் அவர் சொல்கிறார். ”இங்கிருக்கும் நிலத்தை நான் வணங்கினேன். போராடுவதற்கான களத்தை எங்களுக்கு அது கொடுத்தது. நீங்கள் வணங்குவதை நிலம்தான் திரும்பக் கொடுக்கும்.”


இடது: கிரண்ப்ரீத் கவுர், அமர்ஜீத் கவுர் மற்றும் குர்மீத் கவுர் அனைவரும் பத்னி காலனைச் சேர்ந்தவர்கள். ட்ராலியில் கிளம்பத் தயாராக இருக்கிறார்கள். ‘ ஒரு மணி நேரம்தான் தூங்கினோம். நேற்றிலிருந்து நாங்கள் உடைமைகளை கட்டிக் கொண்டிருந்தோம். வெற்றிக் கொண்டாட்டம் அதிகாலை 3 மணி வரை நடந்தது,’ என்கிறார் கிரண்ப்ரீத் சிங். வலது: ‘எங்களின் கிராமவாசிகள் எங்களை வரவேற்பார்கள்,’ என்கிறார் பதிண்டாவின் பாரதிய கிசான் சங்கத் தலைவரான பரம்ஜித் கவுர்
பகதூர்கரில் இருக்கும் பாரதிய கிசான் சங்கப் பிரதான மேடையினருகே, பதிண்டா மாவட்ட சங்கப் பெண்களின் தலைவரான பரம்ஜித் கவர் எல்லாப் பொருட்களையும் ட்ராலிக்குள் வைக்க முயன்று கொண்டிருந்தார். சாலைக்கு நடுவே 60 வயது பரம்ஜித், உருளைக்கிழங்குகளும் தக்காளிகளும் பச்சைக் காய்கறிகளும் விளைவித்த துண்டு நிலத்தையும் சுத்தம் செய்துவிட்டார். (பார்க்க: திக்ரி விவசாயிகள்: ‘வாழ்க்கைக்கும் இதை மறக்க மாட்டோம்’ .) ”அவற்றை (பயிரை) வெட்டி, காய்கறிகளை இங்கிருக்கும் தொழிலாளர்களுக்குக் கொடுத்து விட்டேன்,” என்கிறார் அவர். “சில பொருட்களை மட்டும்தான் வீட்டுக்குக் கொண்டு செல்கிறோம். மரத்துண்டுகள், தார்பாய்கள் முதலியவற்றை வீடு கட்ட ஏழைகளுக்குக் கொடுத்து விட்டோம்.”
இரவில் எங்களின் ட்ராலி வழியிலிருக்கும் குருத்வாராவில் நிறுத்தப்பட்டு அடுத்த நாள் காலை மீண்டும் பயணிக்கும் என்கிறார் அவர். “எங்களின் கிராமவாசிகள் எங்களை வரவேற்பார்கள். எங்களின் நிலத்தைப் பாதுகாத்ததற்காக நாங்கள் நிறையக் கொண்டாடுவோம். எனினும் எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை. இரண்டு நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, பிற கோரிக்கைகளுக்காக பஞ்சாபிலிருந்து போராடுவோம்.”
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, வீடு திரும்பும் போராட்ட விவசாயிகளின் டிராக்டர் ட்ராலிகளும் பிற வாகனங்களும் கடந்து சென்றன. போக்குவரத்தைப் பார்த்துக் கொள்ள ஹரியானா காவல்துறை பணியமர்த்தப்பட்டிருக்கிறது. பஞ்சாப் கிசான் சங்க மேடைக்கு அருகே இருக்கும் போராட்டக் களத்தின் முகப்பில், கடந்த வருடம் தில்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுப்பதற்காக போடப்பட்ட கற்பாறைகளை ஜேசிபி இயந்திரம் இடித்துக் கொண்டிருந்தது.
காலை 11 மணிக்கெல்லாம் திக்ரி மைதானங்கள் காலியாகி விட்டது. ஒரு சில போராட்டக்காரர்கள்தான் இருந்தனர். அவர்களும் கிளம்பத் தயாராக இருந்தனர். ஒரு வருடம் முழுக்க ‘விவசாயயிகள் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக’ என்ற கோஷங்கள் எதிரொலித்த போராட்டக் களம் அமைதியாக இருந்தது. கொண்டாட்டங்களும் கோஷங்களும் விவசாயிகளின் கிராமங்களில் தொடர்ந்து எதிரொலிக்கும். அவர்கள் போராடும் உறுதியில் இருக்கின்றனர்.

ஹரியானாவின் பதேகபாத் மாவட்டத்திலுள்ள தானி போஜ்ராஜ் கிராமத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் மேற்கு தில்லிக்கு அருகிலுள்ள திக்ரி போராட்டக் களத்தில் தங்கள் கூடாரங்களைப் பிரித்து உடைமைகளை ட்ரக்குகளில் ஏற்றுகின்றனர்

அவ்வப்போது, மூங்கில் இணைப்புகளை உடைக்க ஒரு மரப் பலகையைப் பயன்படுத்தினார்கள், சில சமயங்களில் அடித்தளத்தை உடைக்க செங்கற்களைப் பயன்படுத்தினார்கள்

கிளம்புவதற்கான தயாரிப்பு வேலைகள் முந்தைய இரவு தொடங்கி டிசம்பர் 11 அதிகாலை வரை தொடர்ந்தது: 'இந்தத் தங்குமிடங்களை நாங்கள் எங்கள் கைகளால் கட்டினோம், இப்போது எங்கள் சொந்தக் கைகளால் அவற்றை அகற்றுகிறோம்'

குர்விந்தர் சிங் (நீலப்பச்சை நிற தலைப்பாகையில், நடுவில்) மற்றும் அவரது கிராமத்தைச் சேர்ந்த பிறப் போராட்டக்காரர்கள், மேற்கு தில்லிக்கு அருகில் உள்ள திக்ரி போராட்டக் களத்தில் பிரிக்கப்பட்ட கூடாரங்களுக்கு வெளியே

மெத்தைகள், படுக்கைகள், தார்ப்பாய்கள் மற்றும் பல பொருட்கள் குவிக்கப்பட்ட டிராக்டர் ட்ராலிகளில் ஆண்கள் அமர்ந்திருந்தனர். சிலர் லாரிகளிலும், மற்றவர்கள் கார்களிலும் பொலேரோக்களிலும் கிளம்பினர்

பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் ஹரியானாவின் பகதுர்கர் நகருக்கு அருகில் உள்ள தங்கள் கூடாரத்தில் (25 பேர் வசித்தக் கூடாரம்) மின்விசிறி மற்றும் மின் இணைப்புகளை அகற்றுகின்றனர். ஜஸ்கரன் சிங் (விசிறியை அகற்றியபடி) கூறினார்: 'எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தேவைப்பட்டால் திரும்புவோம்'

ரோடக் சாலையில் தற்காலிகக் குடியிருப்புகளை அகற்றும் போது, உள்ளூர் பெண் தொழிலாளர்களுக்கு மர மேசைகளையும் பிற மறுபயன்பாட்டு பொருட்களை விவசாயப் போராட்டக்காரர்கள் வழங்கினர்

"நாங்கள் எங்கள் டிராக்டர்களை அலங்கரித்தப் பிறகு அவற்றை எடுத்துச் செல்கிறோம், ஒரு கொண்டாட்டமான திருமண ஊர்வலம் போல செல்வோம்" என்று சிரிந்தர் கவுர் கூறுகிறார்

பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட் மாவட்டத்தின் பாகியானா கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், போராட்டத்தின் முதல் நாளிலும், போராட்டத்தின் கடைசி நாளிலும் கலந்து கொண்டவர்களைக் கவுரவிக்கின்றனர்

பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட் மாவட்டத்தின் டெம்ரு குர்த் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், ரோடக் சாலையில் போராட்டக் களத்தை விட்டு கிளம்பத் தயாராகின்றனர்

ஃபரித்கோட் மாவட்டத்தின் டெம்ரு குர்த் கிராமத்தைச் சேர்ந்த போராட்ட விவசாயிகள்: உடைமைகள் கட்டப்பட்டு, லாரிகளி ஏற்றப்பட்டுவிட்டன. குழுப் புகைப்படத்திற்கான நேரம் இது

பஞ்சாபின் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி சிரித்துக்கொண்டே டிரக்கில் கிளம்புகிறார்

பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், போராட்டக் களத்திலிருந்து டிரக்கில் கிளம்புகின்றனர். வெற்றியும் உறுதியும் கொண்டுள்ளனர்

இடமிருந்து வலமாக: முக்தேயர் கவுர், ஹர்பால் கவுர், பயந்த் கவுர் மற்றும் ஹமீர் கவுர் ஆகியோர் போராட்டக் களத்திலிருந்து வெளியேறும் முன் ரோடக் சாலையில் கொண்டாட்ட நடனம் ஆடுகின்றனர்

சாலையின் நடுவே இருந்த நிலத்தில் உருளைக்கிழங்கு, தக்காளி, கடுகு மற்றும் பச்சைக் காய்கறிகளை பயிரிட்டிருந்த நிலத்தை சுத்தப்படுத்திய பரம்ஜித் கவுர், 'நான் அவற்றை வெட்டி இங்குள்ள தொழிலாளர்களுக்கு காய்கறிகளைக் கொடுத்தேன்' என்று கூறினார்

டிசம்பர் 11 ஆம் தேதி காலை 11 மணியளவில், திக்ரி மைதானம் காலியாகி விட்டது, ஒரு சில போராட்டக்காரர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அவர்களும் கிளம்பத் தயாராக இருந்தனர்

ஒரு வருடமாக பரபரப்பாக இருந்த ஹரியானாவின் பகதுர்கர் நகருக்கு அருகில் உள்ள பாரதிய கிசான் சங்கத்தின் மேடை டிசம்பர் 11 அன்று அமைதியாக இருக்கிறது

விவசாயப் போராட்டக்காரர்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க, தொழிற்சங்க மேடையிலிருந்து சற்றுத் தொலைவில், கடந்த ஆண்டு போடப்பட்டிருந்த கற்பாறைகளை ஜேசிபி இயந்திரம் உடைத்துக் கொண்டிருக்கிறது

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தின் பலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வெற்றியைக் கொண்டாடுகின்றனர்

ரோடக் சாலையில் டிராக்டர்-ட்ராலிகள், டிரக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றில் விவசாயிகள், டிசம்பர் 11 காலை தங்கள் கிராமங்களுக்குத் திரும்புகின்றனர்

வீடு திரும்பும் விவசாயிகளின் வாகனங்கள் ஏற்படுத்தும் போக்குவரத்தை கட்டுப்படுத்த ஹரியானா போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்

வழியெங்கும் கொண்டாட்டமான வாழ்த்துகள்

விவசாயிகள் வீடு திரும்புவதால், ஒரு வருடமாக ‘விவசாயிகள் தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக’ என்ற கோஷங்கள் எதிரொலித்த போராட்டக் களம் அமைதியாக இருக்கிறது. கொண்டாட்டங்களும் கோஷங்களும் விவசாயிகளின் கிராமங்களில் தொடர்ந்து எதிரொலிக்கும். அங்கு போராட்டத்தைத் தொடர அவர்கள் உறுதியாக உள்ளனர்
தமிழில் : ராஜசங்கீதன்