பஞ்சாப் முழுக்க (2019-20ல்) 152 பிரதானக் களங்கள், 279 துணைக் களங்கள் மற்றும் 1,389 கொள்முதல் மையங்கள் என வியாபித்திருக்கும் பெரிய வலைப்பின்னல். ஜஸ்விந்தர் சிங்குக்கு அது பாதுகாப்பு க்கான வலையாக இருந்தது. இத்தகைய மண்டி முறையில் ஒரு விவசாயி பாதுகாப்பாக உணர்கிறார் என்கிறார் சங்க்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயது ஜஸ்விந்தர். அவரின் குடும்பம் 17 ஏக்கர் நிலத்தில் பயிரிடுகிறது. “என்னுடைய விளைச்சலை எந்தத் தயக்கமோ பணம் கிடைக்குமா என்கிற சந்தேகமோ இன்றி மண்டிக்கு எடுத்துச் செல்ல முடியும். என்ன முறை அது என எனக்குத் தெரியும். நிச்சயமாக எனக்கான பணமும் கிடைக்கும்.”
பிரதானக் களங்கள்தான் பெரிய மண்டிகள் (சுனமில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பதைப் போல்). இந்தக் களங்களில், விவசாயிகளுக்கான இடங்கள் முறையாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அவர்களின் விளைச்சலைக் கொண்டு வந்து அங்கு கொட்டி வைக்கலாம். அவர்களுக்கான தரகு முகவரின் கடைகளுக்கு முன்னால் வழக்கமாக கொட்டி வைக்கப்படும். பிரதானக் களங்களில் இடமில்லாத காலங்களில் அவற்றுக்கு அருகேயே வழங்கப்படும் இடங்களே துணைக் களங்கள் ஆகும். கொள்முதல் மையங்கள் என்பவை சிறிய மண்டிகள். வழக்கமாக அவை கிராமங்களில் இருக்கும் (புகைப்படங்களில் இருக்கும் ஷெரோன் மண்டி போல). இவை எல்லாமும் இணைந்ததுதான் பஞ்சாபின் விரிந்த விளைபொருட்கள் சந்தைப்படுத்தும் கமிட்டியின் வலைப்பின்னலாகும்.
“என்னுடைய பயிர் விற்கப்படும்போது எனக்குத் தரகர் ஒரு ஜெ-படிவம் தருவார். பணம் கிடைக்கும் வரை அதுதான் எனக்கானப் பாதுகாப்பு,” என்கிறார் ஜஸ்விந்தர். “எல்லாவற்றைக் காட்டிலும் மிக முக்கியமாக எனக்கு வர வேண்டியப் பணத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் நான் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு தெரிய வேண்டும். அதுதான் எனக்கு பெரிய பாதுகாப்பு,” என்கிறார் அவர் (பஞ்சாப் விவசாயப் பொருட்கள் சந்தைச் சட்டத்தைக் குறிப்பிட்டு).
பயிர்கள் முறையான வகையில் தனியாராலும் அரசின் உணவு வாரியத்தாலும் கொள்முதல் செய்யப்படுவதை மண்டிகள் முறை உறுதிப்படுத்துகிறது. பிரதானமாக கோதுமையும் நெல்லும் வாங்கப்படுகின்றன. மாநில அரசின் குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்கப்படுகின்றன. பஞ்சாபின் மண்டிகளை தானியம் அடைந்ததும், உணவு வாரியம் அதன் தரத்தை பரிசோதிக்கிறது. அவை கொண்டிருக்கும் ஈரப்பதம் முதலிய தன்மைகள் தரமதிப்பீடு செய்யப்படுகின்றன. பிறகு அந்த தானியம் ஏலம் விடப்பட்டு விற்கப்படுகிறது. இம்முறை தரகர்களின் வழியாக செயல்படுகிறது. இந்த தொடர்புச் சங்கிலியில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
அணுகுதலும் சார்ந்திருத்தலும் இத்தகைய முறையின் முக்கியச் சிறப்புகள் என்கிறார் துகால் கலன் கிராமத்தைச் சேர்ந்த 32 வயது அமந்தீப் கவுர். “முக்கியமான விஷயம் என்னவென்றால் என்னுடைய விளைச்சலை நேராக கிராமத்தின் மண்டிக்கு கொண்டு செல்ல முடியும். அது சுலபமாக இருக்கிறது. என் பயிருக்கு கிடைக்கும் விலையையும் (குறைந்தபட்ச ஆதார விலை) என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கரும்பு விஷயத்தில் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்கென மையப்படுத்தப்பட்ட அமைப்பு எதுவும் இல்லை. எனவே விவசாயிகள் நல்ல விலை கிடைப்பதற்காக ஒவ்வொரு நகரமாக அலைய வேண்டியிருக்கிறது. நல்ல விலை தேடி மாநிலம் முழுவதும் நாங்கள் எப்படி அலைய முடியும்?”

கோதுமை தானியம் சுனம் மண்டிக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக ஒரு ட்ராக்டரில் நிரப்பப்படுகிறது. ஒருநாளில் பல தடவை இம்முறை நடக்கிறது. அறுவடைக் காலம் ஏப்ரல் மாதத்துக்கு நடுவே தொடங்கி அடுத்த 10 நாட்களில் உச்சமடைகிறது
அமந்தீப்பின் குடும்பம் 22 ஏக்கரில் பயிரிடுகிறது. ஆறு ஏக்கர் அவர்களின் நிலம். மிச்சம் குத்தகைக்கு எடுத்த நிலம். “இப்போது நாங்கள் அதிகமாக தரகரை சார்ந்திருக்கிறோம்,” என்கிறார் அவர். “உதாரணமாக, ஒருவேளை மழை பெய்து கோதுமை ஈரமாகிவிட்டால், அதைத் தரகரின் மண்டியில் 15 நாட்கள் காய வைத்துவிட்டு, அதற்குப் பிறகும் அதை விற்க முடியுமென நம்பிக்கையுடன் இருக்க முடியும். தனியார் மண்டியில் அது நிச்சயமாக சாத்தியமில்லை.”
“விளைச்சலை நாங்கள் விற்ற பிறகு அந்த பணம் ஆறு மாதங்கள் கழித்து வரும். ஆனால் அதுவரை தரகர் பணவோட்டத்துக்காக எங்களுக்கு பணம் கொடுப்பார்,” என்கிறார் மங்க்வால் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது ஜக்ஜீவன் சிங். மூன்று ஏக்கர் நிலத்தில் அவர் நெல்லையும் கோதுமையையும் விளைவிக்கிறார். “மேலும் மண்டியைப் பொறுத்தவரை குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதால் என்னுடைய செலவுகளை சரிகட்டப் பணம் கிடைத்து விடும் உறுதியும் உண்டு.”
ஆனால், விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 தரகர்களை இல்லாமலாக்கி, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக வாங்குபவரிடம் விற்க வழிவகை செய்கிறது. 1960களின் மத்தியில் நேர்ந்த பசுமை புரட்சி காலம் தொடங்கி, பஞ்சாபில் பல பத்தாண்டுகளாக தரகர்கள், மண்டிகள் மற்றும் பிற தொடர்புகளைக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கும் நம்பகத்தன்மைக் கொண்ட சந்தைச் சங்கிலியை இது பலவீனப்படுத்தக் கூடும்.
தில்லி எல்லைகளில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் இச்சட்டத்தை எதிர்க்கின்றனர். பல பத்தாண்டுகளாக இயங்கும் ஆதாரக்களத்தை அது நிர்மூலமாக்கும் என எண்ணுகின்றனர். விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியச் சட்டங்களையும் அவர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். மூன்றுச் சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டுமென கோருகின்றனர். இச்சட்டங்கள் 2020 ஜூன் 5 அன்று ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு வேகவேகமாக அம்மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டன.
இப்போராட்டங்கள் நவம்பர் 26, 2020 அன்று தொடங்கின. பஞ்சாபில் இன்னும் முன்னால் ஆகஸ்ட் மாத மத்தியிலே தொடங்கி செப்டம்பர்-அக்டோபரில் முழு வேகத்தை எட்டின.
பஞ்சாபின் தரகர்கள் சங்கம் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கிறது. அதன் தலைவரான ரவிந்தர் சீமா சொல்கையில், விவசாயி அவரது விளைச்சலை விற்பதற்கான வாய்ப்பை மண்டிகள் வழங்குவதாக குறிப்பிடுகிறார். “அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாது தனியார் வணிகர்களும் மண்டிகளில் இருப்பார்கள். எனவே நல்ல விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் நினைத்தால் அவர்களுக்கு ஒரு மாற்றும் இருக்கிறது.” புதிய சட்டம் விவசாயிக்கு இருக்கும் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் ஆக்குகிறது. அதே போல் மண்டிகளுக்கு வெளியே விற்பனையைக் கொண்டு செல்கிறது. இதன் அர்த்தம் வரிகள் (குறைந்தபட்ச ஆதார விலைக்காக வணிகர் கட்ட வேண்டியது) இருக்காது என்பதுதான். எனவே எந்த வணிகரும் மண்டிகளுக்கு கொள்முதல் செய்ய வர மாட்டார்கள் எனக் கூறும் சீமா, பிறகு மண்டிகள் முறை தேவையற்றதாக மாறி விடும் என்றும் கூறுகிறார்.

பஞ்சாபில் அறுவடை முறை பசுமைப் புரட்சிக்குப் பிறகு பெரிய அளவில் இயந்திரமயமாகி விட்டது. 35 லட்சம் ஹெக்டேர்களில் விளைந்து சராசரியாக 20.3 குவிண்டால் விளைச்சலை தலா ஒரு ஏக்கருக்கு தந்து 2019-20 ஆண்டில் கிட்டத்தட்ட 176 லட்சம் டன் கோதுமை மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது

சங்க்ரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 14, 2021 அன்று சுனம் மண்டியில் கோதுமை இறக்கப்படுகிறது

தங்களின் விளைச்சலை ஏலம் விடுவதற்காக மண்டிகளுக்கு எல்லா விவசாயிகளும் கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 132 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, மாநில மற்றும் ஒன்றிய அரசு நிறுவனங்களால் 2021ம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்டது (அதில் தனியார் 1 சதவிகிதத்துக்கும் குறைவானதைத்தான் வாங்கியிருக்கிறார்கள்)

66 வயது விவசாயி ரூப்சிங் ஷெரோன் கிராமத்தை சேர்ந்தவர். அவரது விளைச்சல் மண்டியை அடைந்ததிலிருந்து அதனருகே அமர்ந்து காத்திருக்கிறார். அது விற்கப்படும் வரை காத்திருப்பார். அதற்கும் 3 முதல் 7 நாட்கள் ஆகும்

சுனம் களத்தில் பெண் தொழிலாளர்கள் உமி நீக்க கோதுமையை கொண்டு செல்கின்றனர். மண்டிகளின் தொழிலாளர்களில் பெருமளவு பெண்கள்தான்

ஒரு தொழிலாளர் சுனம் மண்டியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் கோதுமையில் உமிகளை நீக்குகிறார்

விற்பனை முடிந்த பிறகு கோதுமை மூட்டைகளை ‘சீல்; வைக்கிறார் ஒரு தொழிலாளர். இந்த வேலைக்காக தரகர்களால் தொழிலாளர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்

ஏப்ரல் 15, 2021 அன்று ஷெரோன் மண்டியில் கோதுமை எடை போட்டப்படுகிறது

ஒரு பிற்பகலில் ஷெரொன் மண்டியில் ஓய்வு நேரம். இங்கிருக்கும் பெரும்பாலான தொழிலாளர்கள் பிகாரிலிருந்தும் உத்தரப்பிரதேசத்திலிருந்தும் வந்தவர்கள்

சுனம் மண்டியில் தொழிலாளர்களும் விவசாயிகளும் அரசு கொள்முதல் செய்து கோதுமை மூட்டைகளின் மீது ஓய்வெடுக்கின்றனர்

விற்பனை செய்யப்பட்ட கோதுமை மூட்டைகள் சந்தைகளுக்கும் கிடங்குகளுக்கும் கொண்டு செல்லப்பட ட்ரக்குகளில் ஏற்றப்படுகின்றன

ஷெரோன் மண்டியில் ஒரு மாலைப்பொழுதில் தொழிலாளர்கள். உச்ச நாட்களில் கோதுமை அறுவடைப் பெரிய அளவில் நடக்கும். எனவே அவர்கள் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள். தானியங்கள் நிரம்பிய ட்ராக்டர்கள் இரவு நேரத்திலும் வந்து கொண்டிருக்கின்றன

ஷெரோன் மண்டியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருக்கும் கோதுமைக்கு நடந்து செல்லும் ஒரு விவசாயி

ஷெரோன் மண்டியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் விவசாயிகள்

விளைச்சல் விற்பனையாகும் வரை அதைக் காக்கும் பொருட்டு அதனருகேயே இரவுப் படுக்கையை தயார் செய்யும் ஒரு விவசாயி

நமோல் கிராமத்தைச் சேர்ந்த மகேந்தர் சிங், சுனம் மண்டியில் இருக்கும் தரகர் கடைக்குள் அமர்ந்திருக்கிறார். பணம் கடன் கொடுப்பவர்களாக மட்டுமில்லாது விவசாயிகளுக்கு தரகர்கள் பூச்சிக்கொல்லி, உரங்கள் முதலியவற்றையும் கொடுத்து உதவுகிறார்கள்

பஞ்சாபின் தரகர்கள் சங்கத் தலைவரான ரவிந்தர் சிக் சீமா சுனம் மண்டியில். குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் இல்லையெனில் தனியார் வணிகரால் விவசாயி சுரண்டப்படுவார் என்கிறார் அவர்

சங்க்ரூர் மாவட்டத்தில் இருக்கும் சுனம் மண்டிதான் பிரதானக் களம். அதன் முக்கியமான காலம் கோதுமை அறுவடைக்காலம் (ஏப்ரல்) மற்றும் நெல் அறுவடைக்காலம் (அக்டோபர் - நவம்பர்) ஆகியவைதான். இந்த சந்தைப் பகுதிகள் வருடம் முழுக்க இயங்குகின்றன. வருடம் முழுக்க வரும் பருப்பு, பருத்தி, எண்ணெய் விதைகள் முதலியவற்றை விற்கப் பயன்படுகின்றன
இந்தப் புகைப்படங்கள் ஏப்ரல் 14-15, 2021ல் எடுக்கப்பட்டவை.
தமிழில் : ராஜசங்கீதன்