டஷி தெலெக் (திபெத்திய மொழியில் வாழ்த்துவது) என்கிறார் பெமா ரிஞ்சன். பிறகு கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்கு அருகே இருக்கும் ஹன்லே பள்ளத்தாக்கின் தொடுவானத்தை நோக்கி நடந்தார். கூடவே ஒரு நாள் முழுவதும் மேய்ந்த முடித்து ஊருக்கு திரும்பும் ஒரு பெரும் பஷ்மினா ஆட்டு மந்தையும் நடந்தது.
280 சங்பே குடும்பங்கள் வாழும் ஹன்லேவின் சமூகத் தலைவரான கர்மா ரிஞ்சனின் இரண்டாவது மகள் பெமா. செம்மறி ஆடுகளையும் காட்டு எருதுகளையும் வளர்க்கும் மேய்ச்சல் பழங்குடியினர் சங்க்பா. நவம்பர் முதல் மே மாதம் வரை நீளும் குளிர்காலங்களில் அவர்கள் எந்த உழைப்பும் செய்வதில்லை. கோடைகாலத்தில் அதிக உயரத்துக்கு மேய்ச்சலுக்கு செல்வார்கள். சில காலத்துக்கு முன்னால் ஹன்லே பள்ளத்தாக்கின் நலாங் மேய்ச்சல் நிலத்தில் அவர்களை சந்தித்தேன். 14000 அடி உயரத்தில் இருக்கும் சங்தங் என்கிற பீடபூமியில் இருக்கும் பள்ளத்தாக்கு அது. கிழக்கு பக்கமிருக்கும் திபெத்தை நோக்கி பல நூறு கிலோமீட்டர்களுக்கு விரியும் பீடபூமி. திபெத்திய பீடபூமியின் ஒரு பகுதி.
மேய்ச்சல் காலத்தில் கூடாரம் போடுவது தொடங்கி விறகு சேகரிப்பது, மேய்ப்பது, பால் கறப்பது உள்ளிட்ட பல வேலைகளை சங்க்பா பெண்கள் செய்கின்றனர். இத்தனைக்கும் நடுவில் குழந்தைகளுக்கும் சமையலுக்கும் கூட நேரம் அவர்களால் ஒதுக்க முடிகிறது.
திபெத் பள்ளத்தாக்கில் பல மேய்ச்சல் பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன. மேற்கு இமயமலையில் சங்க்பாவும் (
The Changpas who make cashmere பார்க்கவும்)
கிழக்கத்திய மலைகளில் ப்ரோக்பாவும் ((See
Brokpa: ‘The jungle is our mother'
பார்க்கவும்) வசிக்கின்றனர். இச்சமூகங்கள் மலைமுகடுகளாலும் பள்ளத்தாக்குகளாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும் கலாச்சாரம், இனம் மற்றும் ஆன்மரீதியாக பிணைக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்த பயணத்தில், கிழக்கு இமயமலையின் காடுகள் இருக்கும் பகுதியில் வசிக்கும் ப்ரோக்பா பழங்குடிகளை சந்தித்தேன். அவர்கள் மோன்பா பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பகுதியினர் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கெமாங்க் மற்றும் தவாங் மாவட்டங்களில் வாழ்கின்றனர். அவர்களும் கோடைகாலங்களை உயர்ந்த இடங்களில் கழிக்கின்றனர். குளிர்காலம் தொடங்கும்போது அவர்கள் தங்களின் எருது மந்தைகளை அழைத்துக் கொண்டு மேற்கு கமெங் மாவட்டத்தின் லகாம் பகுதியில் இருக்கும் தங்களின் வாழ்விடங்களுக்கு திரும்புகின்றனர்.
சிறு குடியிருப்பை எட்டு மணி நேரம் நடந்து நான் அடைந்தேன். வழியில் 70 வயது நிறைந்த யமா செரிங்கை சந்தித்தேன். “எனக்கு வயதாகிவிட்டது. என்னால் மலையேற முடியாது. அதனால் சர்ப்பி (எருது பாலாடை கட்டி) தயாரிப்பு, பேரக் குழந்தைகள் கவனிப்பு போன்ற வீட்டுவேலைகளை மட்டும் செய்கிறேன். தேவைப்பட்டால் மட்டும் கோடை காலத்தில் எப்போதாவது மேலே செல்வதுண்டு.”
கடந்த வருடத்தின் மே மாதத்தில் அருணாச்சல் பிரதேசத்துக்கு மீண்டும் சென்றேன். 11152 அடி உயரத்தில் இருக்கும் சந்தர் குடியிருப்புக்கு சென்றேன். இச்சமயத்தில் லெகி சுசுக் என்பவரின் வீட்டில் தங்கினேன். அவர் இரண்டு குழந்தைகளின் தாய். 30 எருதுகளின் உரிமையாளர். ப்ரோக்பா பெண்களும் சங்க்பா சமூக பெண்கள் போலவே செயல்படுகின்றனர். எல்லா சமூகங்களின் வாழ்க்கைமுறைகளிலும் குழந்தைகள் பற்றியும் மந்தைகளை பற்றியும் அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வழக்கம் இருக்கிறது. சந்தர் பகுதியில் எல்லா ப்ரோக்பா பெண்களும் ஒன்றிணைந்து கோம்பா என்கிற புத்த வழிபாட்டுத் தலம் கூட கட்டினார்கள்.
சில காலம் கழித்து, குளிர் மலைகளிலிருந்து கோடை வறட்சி நிலவும் குஜராத்தின் கச் பகுதியிக்கு சென்றேன். அங்கு ஃபக்கிரனி ஜாட் ((
The endless search for grazing grounds
பார்க்கவும்) என்கிற பழங்குடி சமூகம் வசித்தது. கச்சி மற்றும் கரை ஒட்டகங்களை அவர்கள் வளர்க்கிறார்கள். அவர்களின் இடப்பெயர்ச்சி மிகவும் சிக்கலான விஷயங்களை உள்ளடக்கியது. அவர்கள் கொண்டிருக்கும் ஒட்டகம் மற்றும் தண்ணீர் கிடைக்கும் சாத்தியம் போன்ற விஷயங்களை பொறுத்தது. அவர்களின் நம்பிக்கையை பெறவே நான் பலமுறை அங்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு பலரை சந்தித்த நான் ஜாட் ஹசீனாவையும் சந்தித்தேன். அவரும் அவருடைய கணவரான ஜாட் அயுப்பும் சொந்தமாக 80 ஒட்டகங்கள் வைத்திருக்கிறார்கள். வருடம் முழுவதும் பச்சாவ் தாலுகாவுக்குள் அவர்கள் இடம்பெயர்கின்றனர். அச்சமூகம் பிற்போக்கான சமூகம். வெளியில் இருந்து வருபவர்களுடன் பெண்கள் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் எங்கும் இருக்கிறார்கள். லக்பத் தாலுகாவில் உள்ள த்ரங்காவத் கிராமத்தில் துடிப்புமிக்க நசிபிபாய் ஷெர்மாமத் ஜாட்டை சந்தித்தேன். அவர் இந்தியும் பேசினார். “எங்களின் மேய்ச்சல் நிலங்கள் ஏற்கனவே குறைந்துவிட்டது. எங்களின் பாரம்பரிய வாழ்க்கையை கைவிடும் கட்டத்தை நாங்கள் நெருங்கி விட்டோம். எங்களுக்கு ஆதரவு தேவை. எங்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும்.”

தனித்து விடப்பட்ட எருது கன்றை அதன் இருப்பிடத்தில் அன்புடன் பராமரிக்கும் ப்ரோக்பா பழங்குடி சமூகத்தை சேர்ந்த லெகி சுசுக்

இளம் ப்ரோக்பா பெண் ஒருவர், மேற்கு கெமங் மாவட்டத்தில் 11250 அடி உயரத்தில் இருக்கும் திரங் பள்ளத்தாக்கின் கணவாய் ஒன்றில் நெருப்பூட்ட மூலிகைகளும் வேர்களும் சேகரித்துக் கொண்டிருக்கிறார்

யமா செரிங் வருடம் முழுவதும் லகம் கிராமத்தில் வாழ்கிறார். ஒவ்வொரு பருவகாலத்துக்கும் உயரத்தில் இருக்கும் மகோவிற்கு இடம்பெயர்வது அவருக்கு சிரமமாக இருக்கிறது. அவரை போன்ற முதியவர்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்கின்றனர். சர்ப்பி தயாரித்து பிற மோன்பா கிராமத்துவாசிகளுக்கு விற்கும் வேலையும் செய்கின்றனர். சர்ப்பி என்பது எருது பாலில் தயாரிக்கப்படும் பாலாடை கட்டி. ப்ரோக்பா சமூகங்களிலும் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது

ப்ரோக்பாவின் பெண்கள் குழு ஒன்று திரங் பள்ளத்தாக்கில் இருக்கும் ஸ்தூபியில் ஜெபிக்க சென்று கொண்டிருக்கிறார்கள்

லகம் கிராமத்தில் வாழும் பெமா க்யுர்மே, நிலத்தில் வேலை பார்த்து திரும்பிய மகள் ரின்செனின் முடியிலிருக்கும் தூசை நீக்க முயற்சிக்கிறார்

லடாக்கின் ஹன்லே பள்ளத்தாக்கில் இருக்கும் மேய்ச்சல் நிலத்தில் குடும்பத்துக்காக கூடாரம் கட்டுகிறார் டோனா. சுமை அதிகமாக இருக்கும் வேலை. 13000 அடியில் இந்த வேலையை சுலபத்தில் செய்ய முடியாது

13245 அடி உயரத்தில் இருக்கும் ஹன்லே பள்ளத்தாக்கில் கெஷ்மிர் ஆடுகளை மேய்க்கிறார் யம் சென் மோ

நெருப்புக்கு தேவையான பொருட்களை சேகரித்து திரும்பியிருக்கிறார் பெமா. ஆகஸ்டு மாதம் என்பது கோடைகாலத்தின் பிற்பகுதி. ஆனால் புல்வெளிகளை இன்னும் பனி போர்த்தியிருக்கிறது. பெமா சேகரித்த பொருட்களால் அவரது கூடாரத்தில் சிறிய அடுப்பு தொடர்ந்து எரிவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது

மாற்றிக்கொள்ள கூடிய வசிப்பிடத்தில், சோனம் வாங்கே பாரம்பரிய வெண்ணெய் தேநீர் தயாரிக்கிறார். சங்க்பா சமூகத்தில் பிரசித்தி பெற்றது

28 வயதாகும் டென்சென் டோர்யே இளைய மகன் டோட்டேவுடன் பிற்பகல் ஓய்வில் இருக்கிறார். காலைகளும் மாலைகளும் சங்க்பாக்களுக்கு வேலைகள் அதிகம் இருக்கும். பிற்பகல் நேரங்களில் இளைப்பாற முடியும்

குஜராத்தின் கச் பகுதியை சேர்ந்த ஃபக்கிரனி ஜாட் பெண்கள், சூடான கோடை நாட்களிலும் அவர்களின் பாரம்பரிய உடைகளையே அணிகிறார்கள். அவர்கள் தயாரிக்கும் பெண்களுக்கான உடைகளை விற்பதே இல்லை

த்ரங்கவத் கிராமத்தில் இருக்கும் நசிபிபாய் ஷெர்மாமாத் ஜாட், தன்னுடைய 60 காரை ஓட்டக மந்தைக்கான மருத்துவ பொருட்களை புஜ்ஜை சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமிருந்து பெறுகிறார்

தன்னுடைய ஒட்டகங்களுடன் குடிநீர் தேடி நடக்கிறார் ஜாட் ஹசீனா. ஒவ்வொரு வருடமும் கோடைகாலம் உச்சம் பெறும்போது உணவுக்கும் குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒருநாள் மட்டும் ஒரு இடத்தில் தங்கி அடுத்த நாள் இடம்பெயர வேண்டிய சூழல் குடும்பத்துக்கு இருக்கிறது

லக்பத் தாலுகாவின் குகாரியானா கிராமத்தில் சணல் மற்றும் புற்களில் கட்டப்பட்ட புதிய வீட்டுக்குள் இருக்கும் சிறுமி பாக்யானி ஜாட். குடிசையை கட்ட தாய் ஆயிஷா ஜாட் உதவியதாக சொல்கிறார் அவர்

லக்பத் தாலுகாவில் இருக்கும் மோரி கிராமத்தில் ஷமானி ஜாட் தன்னுடைய நான்கு மகன்கள் மற்றும் கணவரான கரிம் ஜாட் ஆகியோருக்கு இரவு உணவு தயாரிக்கிறார்
தமிழில்: ராஜசங்கீதன்.