சத்திஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்திற்கு ஒடிசா மாநிலம் நுவாபடா மாவட்டத்திலிருந்து செல்லும்போது நான் கரியாபந்த் வட்டார தலைநகரமான தியோபோகைக் கடக்க நேரிட்டது. அங்கு தான் அசாதாரணமாக இளைஞர்கள், சிறுவர்கள் மிதிவண்டிகளில் செல்வதைக் கண்டேன்.
அவர்கள் ராஜாக்களைப் போன்று அலங்காரம் செய்திருந்தனர். அவர்கள் மாலைகள், பளபளப்பான மேலாடைகள், சலங்கைகள், பல வகையான கிரீடங்கள் அணிந்திருந்தனர். ஒருவர் மணமகன் தலைப்பாகையைக் கூட அணிந்திருந்தார். நான் எனக்குள் இப்படி நினைத்துக் கொண்டேன்: அவர்கள் நாடக குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
நான் நின்றதும், அவர்களும் நின்றனர். உடனடியாக அவர்களை புகைப்படங்கள் எடுத்தேன். எங்கே செல்கிறீர்கள் என நான் கேட்டவுடன் 25 வயது மதிக்கத்தக்க சோம்பாரு யாதவ் என்பவர், “தெய்வத்திற்கு முன்பு ஆடுவதற்காக நாங்கள் தியோபோக் செல்கிறோம்,” என்றார்.
நான் அவர்களைச் சந்தித்த தியோபோக் வட்டாரம் கோசம்கனி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 7-8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நுவாகுடா கிராமத்திலிருந்து குல்ஷன் யாதவ், கிர்தன் யாதவ், சோம்பாரு, தேவேந்திரா, தன்ராஜ், கோபிந்திரா ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் கிராமத்தில் விவசாயிகளாக, விவசாயத் தொழிலாளர்களாக அல்லது பள்ளிக்குச் செல்பவர்களாக இருக்கின்றனர்.

தமிழில்: சவிதா