தபாலா சக்மா பிறந்தபோது இருண்ட வானத்தை கருமேகங்கள் சூழ்ந்திருந்தது. எனவே அவரது பெற்றோர் அவருக்கு ‘இருண்ட வானம்‘ என்ற பெயரை தேர்ந்தெடுத்தனர். அவர்கள் மொழியில் சக்மா என்பதன் அர்த்தம் இதுதான். ஆனால் அந்த இருள் தபாலாவின் வாழ்க்கை முழுவதும் தங்கிவிட்டது. அவர் மூன்று வயதில் தனது பார்வையை இழந்துவிட்டார். அம்மை நோயுடன், தீவிர வயிற்றுப்போக்கால் மாலைக்கண் நோய் ஏற்பட்டு, இறுதியில் நிரந்தரமாக பார்வை தெரியாமல் போய்விட்டது.
ஆனால், தபாலாவை இது பாதித்தாலும், அவர் தனது 16 வயதில் மூங்கில் கூடைகள் தயாரிப்பதற்கு கற்றுக்கொண்டார். தற்போது 65 வயதான அவர், “மூங்கில் குச்சிகளை வைத்து வடிவங்கள் செய்வதற்கு நானாகவே கற்றுக்கொண்டேன். எனது இளம் வயதில், என்னால் மூங்கில் வீடு செய்வதற்கு போதுமான சக்தி இருந்தது“ என்று கூறுகிறார்.
தபாலா, ராஜீவ் நகரில் வசித்து வந்தார். அந்த கிராமத்தில் 3,530 பேர் வசித்து வருகின்றனர். இது மிசோரம் மாநிலத்தின் மாமிட் மாவட்டம் சாவல்னுவம் வட்டத்தில் உள்ளது. அவர் சக்மா சமூகத்தைச் சார்ந்த பழங்குடியினர். அவர்களில் பெரும்பாலானோர் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள். அவர்களின் முதன்மை தொழில் விவசாயமாகும். இந்த மாவட்டத்தின் மலைகளில் வளமான மண் உள்ளது. அதில் பெரும்பாலானோர் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வார்கள். அவர்கள் நெல், சோளம், எள், பாக்கு, அன்னாசி மற்றும் பிற பயிர்களை சாகுபடி செய்வார்கள். அங்கு அடர்ந்த மூங்கில் காடுகளும் உள்ளன. துடைப்பம் தயாரிப்பதும் உள்ளூர் பொருளாதாரத்திற்கான ஆதாரமாக உள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு திறமையான கலைஞராக தபாலா தனது வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை மூங்கில் கூடைகள் தயாரிப்பதன் மூலமே சம்பாதித்துக்கொள்கிறார். தற்போது அவர் மற்றவர்களுக்கு, எவ்வாறு மூங்கில் கூடைகள் தயாரிப்பது என்று கற்றுக்கொடுக்கிறார். ஒருமுறை அவர் ஒரு வடிவத்தை தொட்டு பார்த்துவிட்டால் அதேபோல் தன்னால் உருவாக்க முடியும் என்று கூறுகிறார். “நான் பல்வேறு வகையான மூங்கில் கூடைகளை வடிவமைக்கிறேன். மீன் பொறிகள், கோழிக் கூடுகள் மற்றும் பிரம்பு இருக்கைகள் ஆகியவற்றை தயாரிக்கிறேன். குச்சிகளை ஒன்றிணைத்து துடைப்பமும் செய்கிறேன். கிட்டதட்ட அனைத்து வகையான தயாரிப்பு முறையும் எனக்குத் தெரியும்.“ என்று அவர் மேலும் கூறுகிறார். கூடை வகைகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் கொண்ட பொருட்களை அவர் தயாரிக்கிறார்.
“எனக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 18 வயதாவதற்கு முன்னரே அனைத்து மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது அவர்கள் தனித்தனியாக வசிக்கின்றனர்”, என்று தபாலா கூறுகிறார். குடும்பத்தின் வருமானம் நடுத்தரமாக உள்ளது. கூடைகளை உள்ளூர் சந்தையில் விற்பதன் மூலம் மாதத்திற்கு ரூ.4 ஆயிரம் சம்பாதிக்கிறார் தபாலா. அவரது மனைவி சந்திரமாலா (59), அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்கிறார். அவர்களின் 24 வயதான மகள் ஜெயலலிதா விவசாய தினக்கூலியாக வேலை செய்கிறார்.
தனது பார்வை திறனை மிகச்சிறிய வயதிலேயே இழந்தாலும், அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதில் தபாலாவுக்கு எவ்வித தயக்கமும் இருந்ததில்லை. அவர் அடிக்கடி கிராம சந்தைக்கு எளிதாக நடந்து செல்வார். அருகில் மற்றும் தொலைவில் உள்ள இடங்களுக்கு ஒரு ஊன்றுகோலுடன் தானாகவே நடந்து சென்றுவிடுகிறார். குடும்பத்தினர் உதவியுடன் அவர் அரிசி மூட்டையோ அல்லது விறகுக் கட்டைகளையோ குறிப்பிட்ட தொலைவிற்கு தூக்கி சுமந்து செல்கிறார். “நான் இளைஞனாக இருந்தபோது என்னால் வெளிச்சத்தை உணர முடிந்தது. குறிப்பாக சூரிய ஒளியை பகலில் நன்றாக உணர முடியும். ஆனால், வயதானதால் நான் அந்த சக்தியை இழந்துவிட்டேன். ”
இந்த காணொளியில், மூங்கில் குச்சிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டுகிறார் தபாலா. அவரது வாழ்க்கையைப் பேசிக்கொண்டே அழகாக குச்சிகளை கோழிக்கான கூடாக மாற்றுகிறார். மூங்கில் பொருட்கள் செய்வதில் அவர் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், அவரை அதற்காக பாராட்டினாலும், தன்னிடம் அபாரமான திறமை உள்ளது என்று கருதியதில்லை என்றும் அதற்காக பாராட்டப்பட்டதில்லை என்றும் நம்மிடம் தனியாகக் கூறுகிறார்.


தமிழில் : பிரியதர்சினி . R.