“நீங்கள் வெளிச்சத்துடன் பிறந்தவர்கள். நாங்கள் இருளுடன் பிறந்தவர்கள்,’ என்கிறார் நந்த்ராம் ஜமுங்கார், மண் வீட்டுக்கு வெளியே அமர்ந்து கொண்டு. ஏப்ரல் 26, 2024 அன்று தேர்தலை சந்திக்கவிருக்கும் அம்ராவதி மாவட்டத்தின் காதிமால் கிராமத்தில் ஏப்ரல் 26, 2024 அன்று தேர்தல் நடக்கிறது. நந்த்ராம் குறிப்பிடும் இருள் வாழ்க்கை உண்மை. மகாராஷ்டிராவின் அந்தப் பழங்குடி கிராமத்துக்கு மின்சார இணைப்பு கிடையாது.
“ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், யாராவது வந்து மின்சாரம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுப்பார்கள். மின்சார இணைப்பை கூட விடுங்கள், அவர்கள் திரும்பி வரக் கூட மாட்டார்கள்,” என்கிறார் 48 வயது நிறைந்த அவர். தற்போது அத்தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கும் சுயேச்சை வேட்பாளரான நவ்நீத் கவுர் ரானா 2019ம் ஆண்டில் சிவசேனா வேட்பாளரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆனந்த் ராவ் அத்சுலை வீழ்த்தி வென்றார். இந்த வருடம் அவர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
சிகல்தாரா தாலுகாவின் இந்த கிராமத்தில் இருக்கும் 198 குடும்பங்கள் (கணக்கெடுப்பு 2011) பிரதானமாக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சார்ந்திருக்கிறார்கள். சிலரிடம் சொந்தமாக நிலம் இருக்கிறது. வானம் பார்த்த பூமி. பெரும்பாலும் சோளம் விளைவிக்கப்படுகிறது. காதிமாலில் பெரும்பான்மையாக வசிக்கும் பட்டியல் பழங்குடியினர், குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகள் இன்றிதான் வாழ்ந்து வருகின்றனர். கொர்க்கு பழங்குடி சமூகத்தை சேர்ந்த நந்த்ராம் கொர்க்கு மொழி பேசுகிறார். பழங்குடித் துறை அமைச்சகத்தால் 2019ம் ஆண்டில் அருகி வரும் மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் மொழி அது.
'எங்கள் கிராமத்துக்குள் எந்த அரசியல்வாதிகளையும் அனுமதிக்க மாட்டோம்'
“50 வருடங்களாக மாற்றம் வருமென்ற நம்பி வாக்களித்து வந்தோம். ஆனால் நாங்கள் முட்டாளாக்கப்பட்டோம்,” என்கிறார் நந்த்ராமுக்கு அருகே அமர்ந்திருக்கும் தினேஷ் பெல்கார் அவருக்கு ஆறுதல் சொல்லியபடி. தன் எட்டு வயது மகனை 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விடுதிப் பள்ளிக்கு அவர் அனுப்ப வேண்டியிருந்தது. கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளி இருக்கிறது. ஆனால் முறையான சாலை இல்லை. போக்குவரத்து இல்லை. ஆசிரியர்களும் தொடர்ந்து வருவதில்லை. “வாரத்திற்கு இருமுறை அவர்கள் வருவார்கள்,” என்கிறார் 35 வயது தினேஷ்.
“பல தலைவர்கள் பேருந்து கொண்டு வருவதாக வாக்குறுதி கொடுக்கிறார்கள்,” என்கிறார் ராகுல். “ஆனால் அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு காணாமல் போய் விடுகிறார்கள்.” ஊரக வேலைவாய்பு திட்டத்தில் பணிபுரியும் 24 வயது தொழிலாளரான அவர், போக்குவரத்து சரியாக இல்லாததால் ஆவணங்களை நேரத்துக்கு சமர்ப்பிக்க முடியாமல், கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டார். “கல்வியை நாங்கள் கைவிட்டு விட்டோம்,” என்கிறார் அவர்.
“கல்வி இரண்டாம் பட்சம்தான். முதலில் எங்களுக்கு குடிநீர் தேவை,” என்கிறார் நந்த்ராம் உரத்த குரலில். மேல்காட் பகுதியின் மேற்பகுதியில் இருக்கும் அப்பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.


இடது: நந்த்ராம் ஜமுங்கர் (மஞ்சள்) மற்றும் தினேஷ் பெல்கார் (ஆரஞ்சு நிறத் துணி) ஆகியோர் மகாராஷ்டிராவின் காதிமால் கிராமத்தில் வசிக்கின்றனர். அந்த கிராமத்தில் எப்போதும் குடிநீர் இணைப்பும் மின்சார இணைப்பும் இருந்ததில்லை. வலது: கிராமத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஓடை கிட்டத்தட்ட காய்ந்து விட்டது. ஆனால் மழைக்காலங்களில் அப்பகுதியின் நீர்நிலைகள் கரைபுரண்டு வெள்ளத்தை ஏற்படுத்தி மோசமாக்கும் சாலைகளும் பாலங்களும் பழுது நீக்கப்படுவதில்லை
அன்றாடம் கிட்டத்தட்ட 10-15 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குடிநீர் எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த வேலையை செய்வது பெரும்பாலும் பெண்கள்தான். கிராமத்தில் இருக்கும் எந்த வீட்டிலும் குழாய் இல்லை. மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நவால்காவோனில் இருந்து நீர் கொண்டு வரவென மாநில அரசாங்கம் குழாய்கள் பதித்திருக்கிறது. ஆனால் நீண்ட கோடைகால மாதங்களில் அவை வறண்டிருக்கின்றன. கிணற்று நீர் குடிக்கும் தரத்திலும் இல்லை. “பழுப்பு நிற நீரைத்தான் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் குடிக்கிறோம்,” என்கிறார் தினேஷ். அதனால் கடந்த காலத்தில் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு, டைஃபாயிட் போன்ற உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன.
காதிமாலின் பெண்களுக்கு ஒரு நாளென்பது காலை மூன்று அல்லது நான்கு மணிக்கு குடிநீர் எடுப்பதற்கான நீண்ட நடையில் தொடங்குகிறது. “கிட்டத்தட்ட மூன்று, நான்கு மணி நேரங்களுக்கு நாங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும்,” என்கிறார் 34 வயது நம்யா ரமா திகார். அருகிலுள்ள அடிகுழாய்க்கே ஆறு கிலோமீட்டர் செல்ல வேண்டும். ஆறுகள் காய்ந்து விடுவதால், இந்த இடம் வன விலங்குகள் தாகம் தணிக்கும் இடமாகவும் இருக்கிறது. மேல்காட்டின் மேற்பகுதியிலுள்ள செமாதோ புலிகள் சரணாலயத்திலிருந்து புலிகளும் கரடிகளும் இங்கு வருவதுண்டு.
நீரெடுப்பதுதான் நாளின் முதல் வேலை. நம்யா போன்ற பெண்கள் எல்லா வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைக்கு காலை எட்டு மணிக்கு கிளம்ப வேண்டும். நிலத்தை திருத்தும் வேலையையும் கட்டுமானப் பொருட்களை சுமக்கும் வேலையையும் நாள் முழுக்க செய்து விட்டு, இரவு 7 மணிக்கு அவர்கள் மீண்டும் நீரெடுக்க செல்ல வேண்டும். “எங்களுக்கு ஓய்வே இல்லை. நோயுற்றாலும், கருவுற்றாலும் கூட நாங்கள்தான் சென்று நீர் எடுக்க வேண்டும்,” என்கிறார் நம்யா. “குழந்தை பெற்றாலும் இரண்டு, மூன்று நாட்கள்தான் நாங்கள் ஓய்வெடுக்க முடியும்.”


இடது: மேல்காட்டின் மேற்பகுதி பல வருடங்களாக கடும் குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. ஒரு நாளில் இருமுறை நீரெடுக்கும் சுமையை பெண்கள்தான் சுமக்கின்றனர். ‘மூன்று நான்கு மணி நேரங்களுக்கு வரிசையில் நாங்கள் காத்திருக்க வேண்டும்,’ என்கிறார் நம்யா ரமா திகார். வலது: அருகே இருக்கும் அடிகுழாய்க்கேன் ஆறு கிலோமீட்டர் நடக்க வேண்டும்


இடது: இங்குள்ள கிராமவாசிகள் பெரும்பாலும் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை செய்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. ஓர் ஆரம்பப் பள்ளி உண்டு. அங்கும் வகுப்புகள் முறையாக நடப்பதில்லை. வலது: பெண்கள் குழந்தை பெற்றாலும் ஓய்வு பெற முடிவதில்லை என்கிறார் நம்யா ரமா திகார் (பிங்க் புடவை)
இந்த வருட தேர்தல்களில் நம்யா தெளிவான ஒரு நிலைப்பாடு எடுத்திருக்கிறார். “எங்கள் கிராமத்துக்கு குழாய் வரும் வரை நான் வாக்களிக்கப் போவதில்லை.”
கிராமத்திலுள்ள பிறரும் அதே வகை கருத்தைதான் சொல்கிறார்கள்.
“சாலைகள், மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை,” என்கிறார் முன்னாள் ஊர்த் தலைவரான 70 வயது பாப்னு ஜமுங்கர். “எந்த அரசியல்வாதியையும் ஊருக்குள் நுழைய விட மாட்டோம். பல வருடங்களாக எங்களை முட்டாளாக்கி விட்டார்கள். இனி முடியாது.”
தமிழில் : ராஜசங்கீதன்