லுங்கியை மடித்துக்கட்டிக் கொண்டு, 40 அடி உயரப் பனை மரத்தில் பாதி தூரத்தை 30 விநாடிகளில் ஏறிவிடுகிறார் அஜய் மகாதோ.
வானுயர நிற்கும் பனைமரத்தின் உச்சிக்கு நாள்தோறும் ஏறிச்சென்று, கீற்றுகளுக்கு நடுவே குருத்தில் இருந்து வடியும் சாற்றை பிடித்துக்கொண்டு இறங்குகிறார்.
அது வெயில் கொளுத்தும் ஒரு மே மாதக் காலைப்பொழுது. பிகார் மாநிலத்தின்
சமஸ்டிபூர் மாவட்டத்தில், இந்த 27 வயது, கள் இறக்கும் தொழிலாளி மரம் ஏறத் தயாராகிக்
கொண்டிருக்கிறார். தனது இரண்டு கையிலும் காய்ப்பு காய்த்திருப்பதைக் காட்டி, “இது பனைமரம்
மாதிரி கெட்டியாகிவிட்டது,” என்கிறார் அஜய்.
“ஏறும்போது மரத்தின் மீது பிடி உறுதியாக இருக்கவேண்டும். மரத்தை இரண்டு கை, கால்களாலும் கவ்வியதைப் போல பிடித்துக்கொள்ளவேண்டும்,” என்று கூறும் அஜய், எப்படி விரல்களைக் கோர்த்துக்கொள்வது, எப்படி மரத்தை கைகளால் சுற்றிப் பிடித்துக்கொள்வது என்று செய்து காட்டுகிறார். ஒல்லியான, சொரசொரப்பான பனை மரத்தில் ஏறும் இந்தக் கடுமையான வேலை அவரது நெஞ்சிலும், கைகளிலும், கணுக்கால் அருகிலும் தழும்பை ஏற்படுத்திவிட்டது.
“நான் 15 வயதில் பனை மரம் ஏறத் தொடங்கினேன்,” என்று கூறும் அந்த கள் இறக்கும் தொழிலாளி, 12 ஆண்டுகளாக இந்த வேலையை செய்கிறார்.
ரசூல்பூர் என்ற ஊரைச் சேர்ந்தவரான அஜய், பாரம்பரியமாக கள் இறக்கும் பாசி சமூகத்தவர். அஜய் குடும்பத்தவர் குறைந்தது மூன்று தலைமுறையாக இந்த தொழிலை செய்துவருகின்றனர்.


தன் இரு பாதங்களையும் சுற்றி ‘பகசி’ எனப்படும் (தோல் அல்லது ரெக்சினால் செய்யப்படும்) பட்டையை மாட்டிக் கொண்டு பனை மரம் ஏறுகிறார் அஜய். இரண்டு விரல்களையும் கோர்த்து மரத்தை எப்படிப் பற்றிக்கொள்வது என்று (வலது) காட்டுகிறார் அவர்


சொரசொரப்பான பனைமரத்தில் பல ஆண்டுகளாக ஏறி இறங்குவதால், அவரது கை கால்களில் கருப்பாக காய்ப்புக் காய்த்திருக்கிறது
“தொடக்கத்தில், நான் மரத்தில் பாதியளவு ஏறி இறங்கிவிடுவேன்,” என்று நினைவுபடுத்திக் கூறும் அவர், இந்தத் திறனை வளர்த்துக்கொள்ளும்படி தனது தந்தை ஊக்குவித்தார் என்று கூறுகிறார் “அப்போது பனை மரத்தின் உச்சியில் இருந்து கீழே பார்க்கும்போது, இதயமே நின்றுவிடும்போல் இருக்கும்.”
“முதல் முறை நான் பனைமரம் ஏறியபோது, என் நெஞ்சிலும், கை கால்களிலும் ரத்தம் வந்துவிட்டது. உடலின் இந்தப் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக தோல் முரடாகிவிட்டது,” என்று கூறும் அஜய், மரத்தில் ஏறி இறங்கும்போது தனது கை, கால் சதைகள் மரத்தில் உரசியதால் ஏற்பட்ட காயங்களைப் பற்றிச் சொல்கிறார்.
அஜய் காலையில் ஐந்து பனை மரங்களும், மாலையில் ஐந்து பனை மரங்களும் ஏறுகிறார். இடையில், வெயில் நேரத்தில் ஓய்வெடுக்கிறார். ரசூல்பூரில் 10 மரங்களை குத்தகைக்கு எடுத்துள்ள அஜய் அந்த நிலத்தின் உரிமையாளருக்கு ஒரு மரத்துக்கு ஓர் ஆண்டுக்கு 500 ரூபாய் அல்லது அதற்கு இணையான மதிப்புள்ள மரச்சாறு தருகிறார்.
“வைகாசி மாதத்தில் (ஏப்ரல் – ஜூன்) ஒவ்வொரு மரமும் 10 புட்டி சாறு தரும். இந்த அதிகபட்ச உற்பத்திக்குப் பிறகு, சாறு கிடைப்பது குறையத் தொடங்கும்,” என்கிறார் அஜய்.
நுரைத்து வரும் இந்த மரச்சாற்றில் ஒன்று கருப்பட்டி தயாரிப்பார்கள், அல்லது கள் ஆக்குவார்கள். “ஒரு புட்டி 10 ரூபாய் என்ற விலையில் இந்த சாற்றை மொத்த வியாபாரிகளிடம் கொடுத்துவிடுவோம். ஒவ்வொரு புட்டியிலும் சுமார் 750 மி.லி. சாறு உள்ளது. வைகாசி மாதம், அஜய் தினமும் ரூ.1,000 சம்பாதிப்பார். ஆனால், அதன் பிறகு 9 மாத காலம் அவரது வருவாய் கிட்டத்தட்ட 60-70 சதவீதம் குறைந்துவிடும்.
காலையில் 5 பனை மரங்கள், மாலை 5 பனை மரங்கள் ஏறும் அஜய் இடையில் வெயில் என்பதால் ஓய்வெடுக்கிறார்
பருவம் தவறிய காலத்தில் தனது உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ஒரு புட்டி சாறு, ரூ.20 என்ற விலைக்கு விற்கிறார் அஜய். அவரது மனைவியும், மூன்று குழந்தைகளும் இந்த வருவாயை நம்பி இருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர்கள் அதிக அளவில் இருக்கும் மாவட்டங்களில் ஒன்று சமஸ்டிபூர். தன்னை சுற்றியுள்ள எல்லோரும் போகும் வழியில் போகாமல் சமஸ்டிபூரிலேயே தங்கி கள் இறக்கும் வேலையில் ஈடுபடுகிறார் அஜய்.
*****
மரம் ஏறுவதற்கு முன்பாக தன் இடுப்பைச் சுற்றி இறுக்கமாக தார்பாஸ் (நைலான் பெல்ட்) கட்டிக் கொள்கிறார் அஜய். ஓர் இரும்பு அகுரா (கொக்கி), ஒரு பிளாஸ்டிக் கேன், ஓர் அருவாள் ஆகியவற்றை தார்பாசில் மாட்டிக் கொள்கிறார். “10 லிட்டர் சாறு இருந்தாலும் நகராத அளவுக்கு இறுக்கமாக, பத்திரமாக தார்பாசை கட்டிக்கொள்ளவேண்டும்,” என்கிறார் அஜய்.
குறைந்தது 40 அடி உயரமுள்ள பனை மரத்தில் அவர் ஏறுகிறார். மரத்தின் வழுக்கும் தன்மையுள்ள மேல் பகுதிக்குச் சென்றவுடன், தனது இரு பாதங்களை சுற்றி அணிந்துள்ள ‘பகாசி’யை வைத்து தனது பிடியை இறுக்கிக்கொள்வதை நான் பார்த்தேன். பகாசி என்பது இரு பாதங்களையும் சுற்றி அணிந்துகொள்ளும் தோல் அல்லது ரெக்சினால் ஆன ஒரு பட்டை.
முதல் நாள் மாலையே பனையின் குருத்தை வெட்டிவிட்டு, அதில் ஒரு மண் பானையை மாட்டிவிட்டு வந்துவிட்டார் அஜய். 12 மணி நேரத்துக்குப் பிறகு, பானையில் சேர்ந்திருக்கிற சுமார் 5 லிட்டர் சாற்றினை இறக்குவதற்காக மீண்டும் மரம் ஏறுகிறார் அவர். தேனீக்கள், எரும்புகள், குளவிகள் அண்டாமல் இருப்பதற்காக, அந்தக் கலனின் கீழ்ப் பகுதியில் பூச்சி மருந்து தடவுவதாக பிறகு அவர் என்னிடம் கூறினார்.


இடது: மரம் ஏறுவதற்குத் தயாராகும் அஜய், பெல்ட் போல இருக்கும் தார்பாசை இடுப்பைச் சுற்றி இறுக்கமாக கட்டிக்கொள்கிறார். 'பத்து லிட்டர் ஏற்றினாலும் அசையாத அளவுக்கு தார்பாசை இறுக்கமாக கட்டிக்கொள்ளவேண்டும்,' என்கிறார் அவர். வலது: பிகார் மாநிலம், சமஸ்டிபூர் மாவட்டத்தின் ரசூல்பூரில் பனை மரம் ஏறுதல்


இடது: உச்சியில் இருக்கும் கீற்றுகளுக்கு நடுவே இருந்து மரச்சாறு இறக்கும் அஜய். வலது: பிளாஸ்டிக் கேனில் சாற்றினை ஊற்றிக்கொண்டு கீழே இறங்குகிறார் அவர். உரிய பருவத்தில், அதிகபட்சமாக ஒரு மரம் 10 புட்டிகள் அளவுக்கு சாறு கொடுக்கும்
மரத்தின் உச்சியில் அபாயகரமான முறையில் அமர்ந்துகொண்டு, குருத்தில் அருவாளால் புதிதாக ஒரு வெட்டு வெட்டுகிறார் அஜய். பிறகு அதில் காலி பானையை மாட்டிவிட்டு இறங்குகிறார். மொத்த வேலையும் 10 நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்டது.
நேரம் போகப் போக இந்தச் சாறு கெட்டியாகி, புளித்துவிடும். எனவே “இறக்கிய உடனே மரத்துக்கு அருகிலேயே கள் அருந்துவதுதான் சிறந்தது,” என்று யோசனை கூறுகிறார் அஜய்.
கள் இறக்குவது ஆபத்துகள் நிறைந்த ஒரு தொழில். லேசாக நிலை தடுமாறுவதோ, கீழே விழுவதோ உயிரையே பறித்துவிடும் அல்லது நிரந்தரமாக ஆளை முடக்கிவிடும்.
மார்ச் மாதம் இப்படி மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார் அஜய். “மரத்தில் இருந்து என் பிடி நழுவி நான் விழுந்துவிட்டேன். என்னுடைய மணிக்கட்டில் பாதிப்பு ஏற்பட்டது” என்கிறார் அவர். அதன் பிறகு ஒரு மாதம் அவரால் மரம் ஏற முடியவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் அஜயின் உறவினர் ஒருவர் (அவரும் கள் இறக்கும் தொழிலாளிதான்) மரத்தில் இருந்து கீழே விழுந்து அவரது இடுப்பு எலும்பும் கால் எலும்பும் உடைந்துவிட்டது.
இன்னொரு மரம் ஏறி கொஞ்சம் பனங்காய் வெட்டிப்போட்டு, அதில் இருந்து அருவாளால் நுங்கு எடுத்து எனக்குத் தருகிறார்.
“இந்தாங்க இந்த இள நுங்கு சாப்பிடுங்க. நகரத்தில் இந்த ஒரு பகுதியை 15 ரூபாய்க்கு விற்பார்கள்,” என்கிறார் சிரித்துக்கொண்டே.


புதிதாக இறக்கிய வெள்ளை நுரை ததும்பும் கள்ளை, சைக்கிளில் கட்டிவைத்திருக்கும் பெரிய பிளாஸ்டிக் கேனுக்கு மாற்றுகிறார் அஜய்


இடது: குருத்தில் வெட்டுப் போடுவதற்காக அருவாளைத் தீட்டுகிறார் அஜய். வலது: தன்னுடைய காலை ஷிப்ட் முடிந்து, வெயில் காயத் தொடங்குவதற்கு முன்பாக சுமார் 5 மரங்கள் ஏறி இறங்கியிருப்பார் அஜய்
சிறிதுகாலம் நகரத்தில் வாழ்ந்தவரான அஜய் அது திருப்தியாக இல்லை என்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி, சூரத் நகரங்களுக்குச் சென்று கட்டுமானத் தலங்களில் வேலை செய்திருக்கிறார் அஜய். அங்கே ஒரு நாளைக்கு ரூ.200-250 சம்பாதித்தார். ஆனால், “அங்கே வேலை செய்ய எனக்குப் பிடிக்கவில்லை. வருவாயும் குறைவு,” என்கிறார்.
கள் இறக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாய், அவருக்கு நிறைவை அளிக்கிறது.
கள் இறக்கும் வேலையில் போலீஸ் ரெய்டு வரும் சிக்கலும் இருக்கிறது என்றாலும், அவர் இந்த வேலையை விரும்புகிறார். மது மற்றும் கள் உள்ளிட்ட போதைப் பொருட்களை “உற்பத்தி செய்வது, புட்டியில் அடைப்பது, விநியோகம் செய்வது, கொண்டு செல்வது, சேகரிப்பது, இருப்பு வைப்பது, வைத்திருப்பது, வாங்குவது, நுகர்வது,” ஆகிய வேலைகளில் எவரும் ஈடுபடக்கூடாது என்கிறது பிகார் மதுவிலக்கு, ஆயத் தீர்வை சட்டம் 2016 . ரசூல்பூரில் போலிஸ் இதுவரை ரெய்டுக்கு வரவில்லை. ஆனால், “இதுவரை அவர்கள் வரவில்லை என்பதால், இனியும் வரமாட்டார்கள் என்பது இல்லை,” என்கிறார் அஜய்.
போலீஸ் பொய் வழக்குகள் போடுவதாக பலரும் கூறுவது அவருக்கு அச்சத்தைத் தருகிறது. “எப்போது வேண்டுமானாலும் போலீஸ் வரலாம்,” என்கிறார் அவர்.
ஆனால், இடர்ப்பாட்டை எதிர்கொள்ள அஜய் தயாராக இருக்கிறார். “இங்கே
ரசூல்பூரில் நான் குடும்பத்தோடு வாழ்கிறேன்,” என்று உள்ளங்கையில் புகையிலையைத் தேய்த்துக்கொண்டே
சொல்கிறார் அவர்.
ஒரு மூங்கில் கழி மீது மண் போட்டு அதன் மீது தன்னுடைய அறுவாளை கூர் தீட்டுகிறார். தன்னுடைய கருவியை தயார் செய்துகொண்டு அடுத்த பனை மரத்தை நோக்கிச் செல்கிறார் அவர்.
பிகாரில் விளிம்புநிலை மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்த ஒரு தொழிற்சங்கத் தலைவரின் நினைவில் அளிக்கப்படும் மானியத்தின் உதவியோடு இந்தக் கட்டுரை தயாரிக்கப்பட்டது.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்