பாகிஸ்தான் எல்லையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் சகோதரரின் கராஜில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஷம்ஷெர் சிங் தன் உபகரணங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக அவர் இங்கு விருப்பமின்றி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
35 வயது ஷம்ஷெர் மூன்றாம் தலைமுறையாக சுமை தூக்கும் வேலையை செய்கிறார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகாவில் ஒரு காலத்தில் அவர் வேலை பார்த்திருக்கிறார். அவர் சார்ந்த பிரஜாபதி சமூகம், பிற பிற்படுத்தப்பட்ட சமூகமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானுடனான பஞ்சாபின் இந்த எல்லையில் சிமெண்ட், ஜிப்சம் மற்றும் காய்ந்த பழங்கங்களை வந்ததும் நூற்றுக்கணக்கான ட்ரக்குகள் அவற்றை அன்றாடம் சுமந்து செல்லும். தக்காளிகள், இஞ்சி, பூண்டு, சோயாபீன், பருத்தி நூல் போன்றவை அதே சமயத்தில் பாகிஸ்தானுக்கு ட்ரக்குகளில் செல்லும்.
“இந்த ட்ரக்குகளில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலை” பார்த்த 1,500 சுமைதூக்கும் தொழிலாளிகளில் ஒருவர்தான் ஷம்ஷெர். அப்பகுதியில் ஆலைகள் எதுவும் இல்லை. அட்டாரி-வாகாவின் எல்லையின் 20 கிமீ சுற்றளவில் இருக்கும் கிராமங்களின் நிலமற்ற மக்கள், பெரிதும் இந்த எல்லை தாண்டும் வணிகத்தைதான் தங்களின் வாழ்வாதாரமாக கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் அட்டாரி - வாகாவில் ஷம்ஷெர் சுமை தூக்கும் தொழிலாளராக பணிபுரிந்தார். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக, அவர் சகோதரரின் கராஜில் வேலை பார்க்கிறார்
2019ம் ஆண்டில், 40 இந்திய பாதுகாப்பு படையினரின் உயிர்பறித்த புல்வாமா தாக்குதலுக்கு தில்லி இஸ்லாமாபாத்தை குற்றஞ்சாட்டிய பிறகு நிறைய மாறிப் போனது. பாகிஸ்தானுக்கு அளித்திருந்த ’வணிகம் புரிய மிகவும் விருப்பத்துக்குரிய நாடு (MFN)’ என்கிற அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றது. 200 சதவிகித சுங்க வரியை இறக்குமதிக்கு விதித்தது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததால் ஏற்பட்ட வணிகக் கட்டுப்பாடுகளை கொண்டு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
எல்லை கிராமங்களில் வாழும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் அமிர்தசரஸ் மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் வாழும் 9,000 குடும்பங்களும் கடும் பாதிப்பை சந்தித்ததாக 2020ம் ஆண்டில் Bureau of Research on Industry and Economic Fundamentals (BRIEF) அமைப்பு 202ம் ஆண்டில் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
அமிர்தசரஸ் நகரத்து வேலைகளுக்கு செல்ல வேண்டுமெனில் கூடுதலாக 30 கிலோமீட்டர் பேருந்து பயணத்துக்கான செலவும் சேரும். கிட்ட்டத்தட்ட அன்றாடம் 100 ரூபாயாகும். கூலி வேலையில் ரூ.300 கிடைக்கும் என்கிறார் ஷம்ஷெர். “ஒரு நாளுக்கு 200 ரூபாயை வீட்டுக்கு கொண்டு வருவதால் என்ன பயன?”
முக்கியமான அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் டெல்லியிலிருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரசாங்கம் தங்களை பொருட்படுத்தவில்லை என நினைக்கிறார்கள். எனினும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பது அவர்களது பிரச்சினையை அம்பலமேற்றும் என நம்புகிறார்கள். மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால், எல்லையை மீண்டும் திறக்க வைக்க முடியும். அவர்களுக்கு வேலைகள் மீண்டும் கிடைக்கும்.


இடது: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கொடிகள், அட்டாரி - வாகா எல்லையில். வலது: அட்டாரி ஒருங்கிணைந்த செக்போஸ்ட்டில், பல பொருட்களை சுமந்து ட்ரக்குகள் அன்றாடம் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வருகின்றன. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்கின்றன. 2019ம் ஆண்டில் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான வணிக உறவுகள் முறிந்து போய், சுமை தூக்கும் தொழிலாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்
இப்போது எல்லையில் எப்போதேனும் வேலை இருக்கும். ஆஃப்கானிஸ்தான் ட்ரக்குகள் மட்டும் பயிர்களுடன் வரும். வேலை கிடைப்பது கஷ்டமாக இருக்கும் முதிய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அந்த வேலைகள் அளிக்கப்படும் என்கிறார் ஷம்ஷெர்.
எல்லையை மூடுவது எதிர்ப்பு தெரிவிக்கும் பாணி என்பதை இங்குள்ள சுமை தூக்கும் தொழிலாளிகள் புரிந்திருக்கின்றனர். “ஆனால் எங்களின் குடும்பங்களின் அடுப்பு அணைந்து போயிருப்பதையும் அவர்கள் உணர வேண்டும்,” என்கிறார் ஷம்ஷெர்.
ஐந்து வருடங்களாக தொழிலாளர்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பயனில்லை. “எல்லையை திறக்கும்படி கடந்த ஐந்து வருடங்களில் நாங்கள் மனு கொடுக்காத மாநில அரசாங்கமும் இல்லை, ஒன்றிய அரசாங்கமும் இல்லை,” என்கிறார் அவர்.
கெளன்கே கிராமத்தை சேர்ந்த தலித் தொழிலாளியான சுச்சா சிங், “அமிர்தசரஸில் தற்போது எம்.பி.யாக இருக்கும் குர்ஜீத் சிங் அவுலா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இங்கு வாழ்பவர்களின் வாழ்வாதாரத்துக்காக அவர் அவ்வப்போது நாடாளுமன்றத்தில் மோடி அரசாங்கத்துக்கு கோரிக்கை வைக்கிறார். ஆனால் அவரின் கட்சி அதிகாரத்தில் இல்லாததால், அரசாங்கம் ஏதும் செய்யவில்லை.


பல்ஜீத்தும் (நிற்பவர்) அண்ணன் சஞ்சித் சிங்கும் (அமர்ந்திருப்பவர்) ரோரன்வாலாவை சேர்ந்தவர்கள். எல்லைப் பகுதியில் சுமை தூக்கும் வேலையை இழந்திருக்கிறார் பல்ஜீத். வலது: ஹர்ஜீத் சிங்கும் பக்கத்து வீட்டுக்காரரான சந்தீப் சிங்கும் சுமை தூக்கும் தொழிலாளர்க்ளாக இருந்தவர்கள். ஹர்ஜீத் தற்போது பழத்தோட்டத்தில் வேலை பார்க்கிறார். சந்தீப் தினக்கூலி வேலை பார்க்கிறார். இருவரும் அட்டாரியிலுள்ள ஹர்ஜீத்தின் வீட்டுக் கூரையை பழுது பார்க்கின்றனர்


இடது: பல்ஜீத்தும் (நிற்பவர்) அண்ணன் சஞ்சித் சிங்கும் (அமர்ந்திருப்பவர்) ரோரன்வாலாவை
சேர்ந்தவர்கள். அவர்களும் சுமை தூக்கும் வேலையை இழந்திருக்கிறார்கள். வலது: ஏழு பேர்
கொண்ட குடும்பத்தில், மாதந்தோறும் விதவைத் தாய் பெறும் உதவித்தொகையான 1,500 ரூபாய்
மட்டும்தான் ஒரே வருமானம்
சுமை தூக்கும் வேலை போன பிறகு, 55 வயது தலித்தான மசாபி சீக்கியர், மகனுடன் மேஸ்திரி வேலை செய்து அன்றாடம் 300 ரூபாய் ஈட்டுகிறார்.
2024ம் ஆண்டு தேர்தலில் இருக்கும் ஒருமித்த சூழல் ஆர்வத்தை தரக்கூடியதாக இருப்பதை ஷம்ஷெர் விளக்குகிறார்: “இந்த தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கவிருந்தோம். ஆனால் எங்களின் வாழ்வாதாரம் ஒன்றிய அரசை சார்ந்திருக்கிறது. பாஜகவுக்கு வாக்களிக்க எங்களுக்கு விருப்பமில்லை எனினும், அதுதான் தேவையாக இருக்கிறது.”
ஜுன் 4, 2024-ல் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் வேட்பாளர் குர்ஜீத் சிங் அயுஜ்லா வெற்றி பெற்றிருக்கிறார். எல்லை பிரச்சினையில் அவரால் செல்வாக்கு செலுத்த முடியுமா என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.
தமிழில் : ராஜசங்கீதன்