பிப்ரவரி 18, 2024 அன்று பிற்பகல் 3 மணிக்கு நண்பகல் வெயிலில் கிட்டத்தட்ட 400 பேர் வண்ணமயமான உடைகளை அணிந்து சபாரிலிருந்து மைசூரு டவுன் ஹால் வரை அணிவகுத்து நகரில் நடக்கும் இரண்டாம் ப்ரைட் கூடலை கொண்டாடினர்.
“நான் இங்கிருக்க (அணிவகுப்பில்) பெருமையாக இருக்கிறது. மைசூரு மாறிவிட்டது,” என்கிறார் அந்த நகரத்தில் வளர்ந்த ஷைக்சாரா. “எதிர்பாலின உடைகளை நான் 5-6 வருடங்களாக உடுத்தி வருகிறேன். என்னை பார்க்கும் மக்கள், ‘ஏன் ஆண், பெண் உடைகளை உடுத்துகிறான்,’ என்பார்கள். ஆனால் இப்போது மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். என் தன்மைக்கு நான் பெருமை கொள்கிறேன்,” என்கிறார் பெங்களூரின் கால் செண்டர் ஒன்றில் வேலை பார்க்கும் அந்த 24 வயது இளைஞர். ஷைக்சாரா போல பலர் கர்நாடகா, கோவா மற்றும் தமிழ்நாடு போன்ற இடங்களிலிருந்து தங்கள் ஆதரவை தெரிவிக்க வந்தனர்.
கடவுள் எல்லம்மாவின் (ரேணுகா என்ற பெயரும் உண்டு) தங்கச்சிலைதான் கொண்டாட்டத்தின் மையம். கிட்டத்தட்ட 10 கிலோ எடை கொண்ட சிலையை, பங்கேற்பாளர்கள் தங்கள் தலைகளில், மேளக்காரர்களும் ஆட்டக்காரர்களும் சூழ சுமந்து வருகின்றனர்.


இடது: ஷைக்சாரா (நடுவே) சகினா (இடது) மற்றும் குணால் (வலது) ஆகியோருடன் ப்ரைட் அணிவகுப்பை கொண்டாடுகிறார். ‘இங்கு கலந்து கொள்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன். மைசூரு மாறியிருக்கிறது’ என்கிறார் ஷைக்சாரா. வலது: கராகை சேர்ந்த மாணவரான திப்பேஷ் ஆர், பிப்ரவரி 18, 2024 அன்று நடந்த அணிவகுப்பில்

10 கிலோ எடை கொண்ட எல்லம்மா தங்கச் சிலையை பங்கேற்பாளர்கள் தலைகளில் தூக்கி செல்கின்றனர்
திருநர் சமூகத்தினருடன் இயங்கும் தொண்டு அமைப்புகளான செவன் ரெயின்போஸ் மற்றும் நம்ம ப்ரைட் ஆகிய அமைப்புகளின் ஆதரவில் இந்த அணிவகுப்பு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. “இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாம் அணிவகுப்பு இது. காவல்துறை அனுமதி ஒருநாளிலேயே கிடைத்து விட்டது. கடந்த வருடம் அனுமதி கிடைக்க இரண்டு வாரங்கள் ஆனது,” என்கிறார் பிரணதி அம்மா. சமூகத்தினரால் மதிப்புடன் அவர் அப்படித்தான் அழைக்கப்படுகிறார். செவன் ரெயின்போஸ் அமைப்பின் நிறுவனரான அவர், கடந்த 37 வருடங்களாக இந்தியா முழுவதும் பாலினம் மற்றும் பாலின அடையாளங்கள் சார்ந்த தளங்களில் இயங்கி வருகிறார்.
“காவல்துறையுடன் உரையாட நாங்கள் கற்றுக் கொண்டு வருகிறோம். எங்களை ஏற்காமல், நாங்கள் இல்லாமல் போக வேண்டுமென விரும்பும் பலர் மைசூருவில் இன்னும் இருக்கின்றனர். ஆனால் வருடந்தோறும் இந்த அணிவகுப்பை வளர்த்து இன்னும் பன்முகத்தன்மையுடன் ஆக்க வேண்டும்,” என்கிறார் அவர்.
ஒரு கிலோமீட்டர் நீளம் இருக்கும் அணிவகுப்பு, மும்முரமாக இயங்கும் நகரத்தின் சந்தைக்கு ஊடாக சென்றது. உள்ளூர் காவலர்கள் போக்குவரத்தை சரி செய்து, கொண்டாட்டம் நல்லபடியாக நடக்க உதவினர். “இச்சமூகத்தை நாங்கள் மதிக்கிறோம். எந்த கெடுதலும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுடன் நாங்கள் நடக்கிறோம். இவர்களை (திருநரை) நாங்கள் ஆதரிக்கிறோம்,” என்கிறார் துணை உதவி ஆய்வாளரான விஜயேந்திர சிங்.
“திருநங்கைகள் இந்தியாவின் நுட்பமான வெளியை நிறைத்திருக்கிறார்கள். மாயாஜால நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களுக்கு பண்பாட்டு ரீதியிலான பாதுகாப்பு கிடைத்தாலும், பாரபட்சம் காட்டப்பட்டு அவர்கள் ஒடுக்கவும் படுகிறார்கள்,” என்கிறார் பால்புதுமையராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மனநல ஆலோசகரான தீபக் தனஞ்செயன். “மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, உள்ளூர் சமூகத்தினர் இயங்குகின்றனர். மனப்பாங்கை மாற்றுவது உடனடியாக நிகழாது. ஆனால் இத்தகைய அணிவகுப்புகள், சிறு நகரங்களில் கூட, வன்முறை ஏதும் நிகழாமல் நடத்தப்படுவதை பார்க்கையில் எனக்கு நம்பிக்கை பிறக்கிறது,” என்கிறார் அவர்.
ப்ரைட் அணிவகுப்புக்கு வந்த 31 வயது பிரியங்க் ஆஷா சுகாநந்த் சொல்கையில், “நான் பல்கலைக்கழகத்தில் ஒடுக்கப்பட்டேன். அச்சுறுத்தப்பட்டேன். எனவே என் உரிமைகளை வலியுறுத்தி அவர்களுக்கு மத்தியில் நிலை நாட்ட விரும்பினேன். நான் மற்றும் என்னைப் போன்ற ஒவ்வொருவரும் படும் துயரங்களை நினைவுறுத்ததான் ப்ரைட் அணிவகுப்பு நடக்கிறது. எனவேதான் இதில் கலந்து கொள்கிறேன்.” பெங்களூருவை சேர்ந்த கல்வியாளரும் சமையல் கலைஞருமான அவர், “மைசூரின் LGBTQ சமூகத்தினரின் மெய்யான வலிமையை பார்த்தோம். நம்பிக்கையாக இருக்கிறது,” என்கிறார்.

திருநர் கொடியை ஏந்தியிருக்கும் நந்தினி, ‘எங்கெல்லாம் சாத்தியம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் கலந்து கொள்வது முக்கியமாக நினைக்கிறேன். அதனால்தான் பெங்களூருவிலிருந்து இங்கு வந்திருக்கிறேன். எனக்கு சந்தோஷமாக இருக்கிறது,’ என்கிறார்

போக்குவரத்தை சரிசெய்ய உள்ளூர் காவல்துறை உதவியது. ‘இச்சமூகத்தை நாங்கள் மதிக்கிறோம். எதுவும் கெடுதலாக நடந்து விடாமலிருக்க அவர்களுடன் சேர்ந்து நாங்கள் நடக்கிறோம்,’ என்கிறார் துணை உதவி ஆய்வாளர் விஜயேந்திர சிங்

செவன் ரெயின்போஸ் மற்றும் நம்ம ப்ரைட் ஒருங்கிணைத்த அணிவகுப்பில் எல்லா பால்புதுமையரும் ஆதரவாளர்களும் கலந்து கொள்ளலாம்

ஆட்டோ ஓட்டுநர் அசார் (இடது) மற்றும் பால்புதுமையராக அடையாளப்படுத்திக் கொள்ளும் மனநல ஆலோகரான தீபக் தனஞ்செயன். ‘இதுபோல் முன்பெப்போதும் நான் பார்த்ததில்லை,’ என்கிறார் அசார்

இடதிலிருந்து வலது: பிரியங்க், தீபக், ஜமீல், அதில் பாஷா மற்றும் அக்ரம் ஜான். ஜமீல், அதில் பாஷா மற்றும் அக்ரம் ஜான் ஆகியோர் உள்ளூரில் துணிக்கடைகள் நடத்தும் வணிகர்கள். ‘அவர்களை (திருநர் சமூகத்தினர்) எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை எனினும் அவர்களை நாங்கள் வெறுக்கவில்லை. அவர்களுக்கும் உரிமைகள் வேண்டும்’

யெல்லம்மா கடவுள்தான் (ரேணுகா என்ற பெயரும் உண்டு) கொண்டாட்டத்தின் மையம்

வண்ண உடைகள் உடுத்தி சபார் முதல் மைசூரு டவுன் ஹால் வரை பங்கேற்பாளர்கள் பேரணி சென்றனர்

பெங்களூருவை சேர்ந்த மனோஜ் பூஜாரி பேரணியில் ஆடுகிறார்

ஒரு கிலோமீட்டர் நீள பேரணி, நகரத்தில் மும்முரமாக இயங்கும் சந்தையினூடாக சென்றது

பேரணியில் பங்கேற்பாளர்கள்

டவுன்ஹாலை நோக்கி செல்லும் கூட்டம்

பேகம் சோனி, அவரின் ஆடையை அவரே தைத்திருக்கிறார். பால்புதுமையராக இருப்பதன் விடுதலையை சிறகுகள் குறிப்பதாக சொல்கிறார்

ப்ரைட் கொடி

மேளம் வாசிப்பவர்கள் கூட்டத்துடன் பேரணி சென்றனர். ‘என் சமூகத்தில் பல திருநங்கை அக்காக்கள் இருக்கின்றனர். என் அக்காவும் திருநங்கைதான். அவர்களும் நம் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் என்பதால் அவர்களை ஆதரிக்கிறோம்,’ என்கிறார் நந்தீஷ் ஆர்

பேரணி மைசூரு டவுன் ஹாலில் நிறைவுற்றது
தமிழில்: ராஜசங்கீதன்