ஒரு சட்டையை இஸ்திரி போட சரோஜினிக்கு ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே ஆகிறது. அது முண்டுவாக இருந்தால் இரண்டு நிமிடங்கள். சில நேரங்களில் மிகவும் கசங்கிய சட்டையை ஈரமான துணியின் சிறிய துண்டுகளால் நிரப்பப்பட்ட ஒரு காலுறையுடன் தேய்த்து அவர் மீண்டும் இஸ்திரியை தொடர்கிறார். துணியை ஈரமாக வைத்திருக்கவும், சுருக்கங்களை போக்கவும் இது ஒரு சாதுர்யமான கண்டுபிடிப்பு.
எண்பது வயதான சரோஜினி தனது 15 வயதிலிருந்து கேரளாவின் கொச்சின் கோட்டையில் சலவை ( தோபி) வேலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட பகுதியான தோபி கானாவில் பணியாற்றி வருகிறார். "நான் ஆரோக்கியமாக இருக்கும் வரை, இதை [துணிகளை துவைப்பது மற்றும் இஸ்திரி போடுவது] செய்வேன்", என்று பொது சலவையகத்தில் இஸ்திரி போடுவதைத் தொடர்ந்தபடி அவர் கூறுகிறார்.
அதே இடத்தில் வேலை செய்யும் 60 வயதான குமரேசன் சொல்கிறார், "இங்கு கடின உழைப்பு மட்டுமே உதவும்," என. தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு, அவர் தனது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள தொட்டிக்கு (சலவை தொட்டி) சைக்கிளில் செல்கிறார். அவசர டெலிவரி இருக்கும் நாட்களில், குமரேசனின் வேலை அதிகாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடக்கும். "நாளை டெலிவரி கொடுக்க வேண்டும் என்பதால் இன்று நான் கொஞ்சம் ஓய்வெடுக்க முடியும். நாளை நான் வேகமாகச் செல்ல வேண்டியிருக்கும்," என்று அவர் கூறுகிறார்.


இடது: கொச்சியின் தோபி கானா, பொது சலவையகம், வேலி மைதானத்தின் ஒரு முனையில் அமைந்துள்ளது. வலது: சரோஜினி இஸ்திரி செய்து சுருக்கங்களை போக்குகிறார்; 15 வயதில் இருந்து அவர் இங்கு வேலை பார்த்து வருகிறார்
கிரேட்டர் கொச்சின் மேம்பாட்டு ஆணையத்தால் கட்டப்பட்ட தோபி கானா, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சி கோட்டை கிராமத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் வேலி மைதானத்தின் ஒரு முனையில் அமைந்துள்ளது. இது பட்டியல் சாதியினரான வண்ணார் சமூகத்தினரால் நடத்தப்படுகிறது. "இங்குள்ள வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 150 குடும்பங்களில் சுமார் 30 குடும்பங்கள் மட்டுமே தோபி கானாவில் வேலை செய்து வருகின்றன," என்று கிராமத்தில் உள்ள சமூக செயலாளர் எம்.பி.மனோகரன் கூறுகிறார்.
இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தங்கள் குழந்தைகளுக்கான அபிலாஷைகள் சலவைக்கு அப்பாற்பட்டவை. "என் குழந்தைகளுக்கு இந்த வேலையைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நான் அவர்களுக்கு கல்வியைக் கொடுத்தேன், அவர்கள் படித்தார்கள். இப்போது இது அவர்களின் வாழ்க்கை," என்று தோபி கானாவில் சலவைத் தொழிலாளியாக இருக்கும் கே.பி.ராஜன் கூறுகிறார்.
ராஜன் இதற்கு முன்பு பல தினசரி கூலி வேலைகளில் பணியாற்றியுள்ளார்: கேபிள் பதித்தல், கொத்தனார் வேலை, புல் வெட்டுதல் மற்றும் பிற. "ஆனால் நான் இந்த வேலையை [துணி துவைப்பது மற்றும் இஸ்திரி போடுவது] ஒருபோதும் விடவில்லை," என்று அவர் கூறுகிறார். "சில நாட்கள் எனக்கு 1,000 ரூபாயும், மற்ற நாட்களில் 500 ரூபாயும் கிடைக்கும். சில நாட்கள் எதுவுமே இல்லாமல் வீட்டுக்கு போவோம். அன்றைய தினம் நாம் எவ்வளவு வேலை செய்கிறோம் என்பதைப் பொறுத்து வருமானம் கிடைக்கும்," என்கிறார் 53 வயதான அவர்.
தோபி கானாவில் உள்ள தொழிலாளர்கள் தங்களுக்கான வாடிக்கையாளர்களை கட்டாயம் தேடிக்கொள்ள வேண்டும். துணிகளை துவைப்பது, வெளுப்பது மற்றும் சலவை செய்வது போன்ற சேவைகளை அவர்கள் வழங்குகிறார்கள். இஸ்திரி மட்டும் போட 15 ரூபாயும், சலவை மற்றும் இஸ்திரி என்றால் 30 ரூபாயும் அவர்களுக்கு கிடைக்கிறது.


இடது: டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், தோபி கானா சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து ஏராளமான சலவைகளை பெறுகிறது. வலது: சுற்றுலாப் பயணியிடம் பரிசாக பெற்ற டாலர் நோட்டை காட்டுகிறார் ஜெயப்பிரகாஷ்
டிசம்பர், பிப்ரவரி மாதங்களில் ஹோட்டல்களும், தங்கும் விடுதிகளும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் என்கிறார் குமரேசன். இந்த மாதங்களில், தோபி கானா நிறைய துணிகளை பெறுகிறது. மற்ற நேரங்களில், மருத்துவமனைகள், உள்ளூர் ஹோட்டல்கள் மற்றும் வீடுகள் அவர்களின் வாடிக்கையாளர்கள்.
கடந்த சில தசாப்தங்களில், இந்திய வீடுகளில் சலவை இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 68ஆவது சுற்று அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால் ஹேண்டிமேனும், தோபி ராஜனும் போட்டியை கண்டு கலங்கவில்லை. "எந்த இயந்திரமும் செய்ய முடியாத கஞ்சி போடுவது போன்ற விஷயங்கள் இன்னும் உள்ளன. அரசியல்வாதிகள் அணியும் ஆடைகளுக்கு, கையால் தான் செய்ய வேண்டும்,'' என்றார்.
ஏ.எஸ். ஜெயப்பிரகாஷ் கடந்த 23 ஆண்டுகளாக சலவையகத்தில் பணியாற்றி வருகிறார். "இது உங்கள் கார்ப்பரேட் வேலை கிடையாது. நாங்கள் எப்போது வேலை செய்ய விரும்புகிறோம் என்பதை நாங்களே தீர்மானிப்போம்," என்று 58 வயதான அவர் தாள நடையில் துணிகளை அடித்துக் கொண்டே கூறுகிறார்.

சலவை நிலையம் அமைந்துள்ள கொச்சின் கோட்டையில் உள்ள வேலி மைதானம்

இங்குள்ள தோபிகள் அதிகாலை ஐந்து மணிக்கே தங்கள் வேலையைத் தொடங்கி விடுவார்கள்

ஒவ்வொரு தொழிலாளிக்கும் சலவை செய்ய ஒரு தொட்டி ( சலவை தொட்டி) ஒதுக்கப்படுகிறது. பணியாளர் பற்றாக்குறை காரணமாக சில தொட்டிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன

குமரேசன் தனது தொட்டியில் வேலை செய்கிறார்

உறுதியான மூங்கில் கழிகளுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் துணிகளைத் தொங்கவிட்டபடி கமலம்மா

ராஜன் துணிகளை கயிறுகளுக்கு இடையில் கவனமாக நுழைத்து உலர்த்துகிறார்

நவீன சலவை இயந்திரங்கள் மற்றும் தானியங்கி சலவை மையங்களின் போட்டியால் கலங்காத ராஜன், ’ எந்த இயந்திரமும் செய்ய முடியாத கஞ்சி போடுதல் போன்ற விஷயங்கள் இன்னும் உள்ளன. அரசியல்வாதிகள் அணியும் ஆடைகளுக்கு, நாம் கையால் தான் செய்ய வேண்டும்.' என்கிறார்

தோபி கானாவின் சலவை கொட்டகைக்குள் மொடமொடப்பான வெள்ளை துணி உலர்த்துதல்

ராஜன் சுத்தம் செய்யப்பட்டு புத்துணர்ச்சியாக உள்ள வெள்ளை படுக்கை விரிப்புகளை மடித்து வைக்கிறார்

இங்கு பயன்பாட்டில் உள்ள சில இயந்திர உலர்த்திகளில் ஒன்று

தனது வேலையிலிருந்து ஓய்வு எடுக்கும் ஒரு தொழிலாளி சூடான தேநீரை குடிக்கிறார்

இஸ்திரி போடும் கொட்டகை தெய்வங்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

பாரம்பரிய இரும்பு பெட்டி, தோபிகளின் தோழர். பெட்டியின் உள்ளே இருக்கும் கரியை எரித்து இஸ்திரி போடுவதற்கு முன் சூடாக்க வேண்டும்

சரோஜினி, 80, சூடான நிலக்கரி நிரப்பப்பட்ட பாரம்பரிய இரும்புப் பெட்டி மீது ஊதுகிறார்

சிறு துண்டுகளாக வெட்டிய ஈரத்துணிகளை காலுறையில் நிரப்பி அதிக சுருக்கமுள்ள துணிகளில் தேய்த்துவிட்டு இஸ்திரி செய்யும் சரோஜினி

தோபி கானாவில் இப்போதும்
பயன்பாட்டில் உள்ள முதல் மின்சார இஸ்திரி பெட்டிகளில் ஒன்று

சரோஜினி துவைத்த துணிகளின் குவியலை கவனமாக மடித்துக் கொண்டிருந்தார்

நேர்த்தியாக கட்டப்பட்ட துணி மூட்டைகள் டெலிவரிக்கு தயாராக இருந்தன
தமிழில்: சவிதா