நான் சோர்வாக உள்ளேன். என் மனமும் உடலும் கனக்கின்றன. என் கண்கள் என்னைச் சுற்றி நிகழும் ஒடுக்கப்பட்ட மக்களது மரணங்களின் வலிகளால் நிறைந்து கிடக்கின்றன. நான் பணி செய்த பற்பல கதைகளை எழுத இயலாத படி என் மனநிலை மரத்துப்போயுள்ளது. இந்தக் கதையை நான் எழுதத் துவங்கும்போது கூட அரசாங்கம் சென்னை அனகாபுத்தூரில் தலித் மக்களின் குடியிருப்புக்களை இடித்துக் கொண்டிருக்கிறது. நான் மென்மேலும் முடங்கி போகிறேன்.
கடந்த அக்டோபர் 7, 2023 அன்று ஒசூரில் நிகழ்ந்த பட்டாசு தொழிலாளர் மரணங்களில் இருந்து இன்னும் என்னால் மீள இயலவில்லை. நான் தற்போது வரை 22 மரணங்களை ஆவணப்படுதியுள்ளேன். இவர்களுள் எட்டு பேர் 17 முதல் 21 வயதுள்ள மாணவர்களாவர். இவர்கள் அனைவரும் பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள். அந்த எட்டு மாணவர்களும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதோடு அதோடு நெருங்கிய நண்பர்களாவர்.
நான் ஒளிப்படக் கலையைக் கற்றுக்கொள்ளத் துவங்கியது முதலாகவே பட்டாசுக் கடைகள், கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தேன். வெகு நாட்கள் முயற்சித்தும் என்னால் புகைப்படம் எடுக்க அனுமதி பெற இயலவில்லை. இந்தத் தொழிற்சாலைகளோ, கிடங்குகளோ ஒருபோதும் அனுமதி அளிப்பதில்லை என்பதையும், உள்ளே செல்வதோ புகைப்படம் எடுப்பதோ அவ்வளவு எளிதல்ல என்பதையும் பின்னர் தான் விசாரித்தறிந்து கொண்டேன்.
என் பெற்றோர்கள் தீபாவளிக்காக புத்தாடைகளோ பட்டாசுகளோ எப்போதும் வாங்கித் தந்ததில்லை. அதற்கு வசதியும் இருக்காது. என் அப்பாவுடைய உடன்பிறந்த மூத்த சகோதரர் (பெரியப்பா) தான் புத்தாடை வாங்கித் தருவார். தீபாவளி கொண்டாடுவதற்காக நாங்கள் அவர் வீடுக்குச் சென்று விடுவோம். அவர் வாங்கித் தரும் பட்டாசுகளையே, அவர் பிள்ளைகள் உட்பட, அனைவரும் வெடிப்போம்.
எனக்கு பட்டாசு வெடிப்பதில் நிறைய ஆர்வம் இருந்தது. வளர்ந்த பின்னர் பட்டாசு வெடிப்பதோடு கூட தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடுவதையும் அடியோடு நிறுத்திக் கொண்டேன். ஒளிப்படக்கலைக்குள் வந்த பின்பு உழைக்கும் மக்களின் வாழ்க்கை குறித்துப் புறிந்து கொள்ளத் தொடங்கினேன்.
புகைப்பட கலை மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு வருடமும் தீபாவளியின் போது பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்துகள் நிகழ்ந்தன. இந்த விபத்துகள் பற்றி கவலைப்படாத ஒரு இடத்தில்தான் நான் இருந்தேன்.

பட்டாசு க்கடையில் நடந்த வெடி விபத்தில் இறந்த எட்டு சிறுவர்களும் தர்மபுரி மாவட்டம் அம்மாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் . மரணங்கள் நடந்து ஒரு வாரம் கழித்து , அந்த கிராமம் அமைதியாயிருந்தது . யாரும் தீபாவளியை கொண்டாடவில்லை
ஆனால் இந்த வருடம் (2023) இந்த விபத்துகளை ஆவணப்படுத்தவாவது வேண்டும் என்று நினைத்தேன். இந்தச் வேளையில் தான் தமிழ்நாடு- கர்நாடக எல்லைப் பகுதியில், கிருஷ்ணகிரி அருகிலுள்ள ஒரு ஊரில் நேர்ந்த பட்டாசு வெடி விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த எட்டு சிறுவர்கள் பலியானது தெரியவந்தது. மற்றெல்லா வெடிவிபத்துகள் போலவே இது குறித்தும், அதைத் தொடர்ந்த போராட்டங்கள் குறித்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவே அறிந்து கொண்டேன்.
அவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு தீபாவளிக் கால தற்காலிக வேலைக்காகச் சென்றவர்கள் என்பதைத் எனக்குத் தெரிந்த தோழர்கள் மூலம் தெரியவந்த போது அது என்னை ஆழமாக பாதித்தது. ஏனெனில் நாங்களும் கூட பண்டிகை கால தற்காலிக வேலைகளுக்குச் செல்பவர்களாகத் தான் இருந்தோம். விநாயகர் சதுர்த்தியின் போது அருகம்புல் மாலைகள், எருக்கம்புல் மாலைகள் கட்டி விற்றதுண்டு. முகூர்த்த நாட்களில் திருமண நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறும் வேலைக்குச் சென்றிருக்கிறோம்.
என்னைப் போன்றே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையிலிருந்த சிறுவர்கள் இந்த விபத்துக்குள்ளாகி இறந்தது என்னை கடுமையாக பாதித்தது.
இதை நிச்சயமாக ஆவணப்படுத்தியே ஆக வேண்டும் என முடிவெடுத்து நான் சென்ற இடம் தர்மபுரி மாவட்டம், ஆமூர் தாலுகாவில் உள்ள அம்மாபேட்டை. இக்கிராமம் தர்மபுரிக்கும் திருவண்ணாமலைக்கும் இடையே பாயக்கூடிய தென்பெண்ணை ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ளது. ஆற்றைக் கடந்தால் அக்கரையில் திருவண்ணாமலை.
அந்தக் கிராமத்தை அடைய மூன்று பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டியிருந்தது. பேருந்தில் பயணித்த நேரம் முழுமையும் அங்குள்ள சூழலை நன்கறிந்த தோழர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். என்னை ஆமூரிலிருந்து அம்மாபேட்டைக்கு பேருந்தில் வழியனுப்பி வைத்த தோழர் நான் அங்கு சென்று சேரும் போது பேருந்து நிலையதில் மேலும் சில தோழர்கள் எனக்காக காத்துக்கொண்டிருப்பர் என உறுதியளித்தார். பேருந்து அம்மாபேட்டைக்குள் நுழைந்த்ததும் நான் முதலில் கண்டது அங்கு கூண்டுக்குள் பேரமைதியுடன் நின்ற அம்பேத்கர் சிலை. எங்கும் நிசப்தம். அந்த அமைதி ஒரு மயானத்தின் அமைதி போலிருந்தது. அது என் உடலெங்கும் பரவி பெரும் நடுக்கத்தை உண்டாக்கியது. அங்குள்ள வீடுகளிலிருந்து சிறு ஒலி கூட எழவில்லை. ஏதோ அந்த மொத்த இடத்தையும் காரிருள் சூழ்ந்தது போல.
இங்கே கிளம்பியதிலிருந்து எதுவும் சாப்பிடத் தோன்றவில்லை. அம்பேத்கர் சிலை முன்பிருந்த கடையில் இரண்டு வடையும் தேனீரும் மட்டும் சாப்பிட்டுவிட்டு நான் சந்திக்க வேண்டிய தோழர் வரக் காத்திருந்தேன்.
வந்தவர் என்னை மகனை இழந்தவர்களுள் முதலாம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். 'ஆஸ்பெஸ்டாஸ்' மேற்கூரை அமைக்கப்பட்டிருந்த அவ்வீட்டின் ஒரு பக்கச் சுவர் மட்டுமே பூச்சு செய்யப்பட்டிருந்தது.

வி..கிரி இறக்கும் போது அவருக்கு வயது 17. இளைய மகன், குறைந்த மதிப்பெண் பெற்றதால் துணை மருத்துவப் படிப்புக்கு கல்லூரியில் இடம் கிடைக்காததால் வேலையில் சேர்ந்தார்
பூட்டியிருந்த கதவை நெடுநேரம் தட்டிய பின்னர் ஒரு பெண் கதவைத் திறந்தார். அவர் உறங்கிப் பல நாட்கள் ஆனது போலிருந்தது. தோழர் அவர் பெயர் வே.செல்வி (வயது 37), வெடிவிபத்தில் இறந்துபோன வே.கிரி (வயது17) யின் அம்மா என்றார். அவரை தூக்கத்திலிருந்து எழுப்பியதற்காக வருந்தினேன்.
விட்டுக்குள் நுழைந்ததும் பூசப்படாத அந்தச் சுவற்றில் பள்ளிச் சீருடையணிந்த சிறுவனது புகைப்படம் ஒன்று மாலையணிவிக்கப்பட்டு பூசப்படாத அச்சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்தது . எனக்கு என் தம்பியைப் பார்ப்பது போலிருந்தது.
(கொரொனா) ஊரடங்கு முடிந்திருந்த போது என் தம்பியும் ஒரு பட்டாசு கடைக்கு தற்காலிக வேலைக்குச் சென்றான். நான் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. என் அம்மா அவன் வீடு திரும்பும் வரையிலும் கவலையோடு காத்திருப்பார்.
கிரியின் தாயாரால் எதுவும் பேச முடியவில்லை. மகனைப் பற்றிக் கேட்டதும் ஒரு மூளையில் அமர்ந்து அழத் தொடங்கிவிட்டார். உடன் வந்த தோழர் அவரது அண்ணன் வரும் வரை காத்திருக்கலாம் என்றார். கிரியின் இரண்டாவது அண்ணன் வந்ததும் அவர் தம்பியின் இறப்பைப் பற்றி சொல்லத் துவங்கினார்.
"என் பெயர் சூரியா, வயது 20. எங்கள் அப்பா பெயர் வேடியப்பன். அவர் மாரடைப்பால் இறந்து ஏழு வருடங்கள் ஆகிறது."
அவர் இதைச் சொன்னதும், அவர்களது அம்மா, மிகுந்த தயக்கத்துடன் தட்டுத் தடுமாறி பேசத் தொடங்கினார். "அவர் இறந்த பின்னர் மிகுந்த சிரமத்துக்குள்ளானோம். என் மூத்த மகன் 12ஆம் வகுப்பு முடித்த உடன் வெளியூர் சென்று வேலை பார்த்து பணம் அனுப்பத் துவங்கினான். இருந்த கடன்களையெல்லாம் அடைக்கத் தொடங்கினோம். அவன் தம்பிகளும் பெரியவர்களாகி விட்டனர். ஆகவே அவனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் முடித்தோம். மிகுந்த சிரமங்களுக்கு இடையில் படிக்க வைத்தேன். இப்படி நடக்குமென்று நினைக்கவே இல்லை." என்றார்.
ஒரு வருடம் கல்லூரிக்கு செல்ல முடியாததால், இரண்டு மாதங்கள் ஜவுளிக் கடைக்குச் சென்றான், இரண்டு மாதங்கள் வீட்டில் இருந்தான். நண்பர்கள் செல்வதால் பட்டாசு கடைக்கு சென்றான். அப்புறம் இப்படி ஆயிடுச்சு."


இடது: கிரியின் குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்று அவரது மறைந்த தந்தை வேடியப்பனின் புகைப்படத்தில் வைக்கப்பட்டுள்ளது. வலது: அவரது தாயார் வி.செல்வியால் பேச முடியவில்லை. நான் கிரியைப் பற்றி அவரிடம் கேட்டபோது அவர் வீட்டின் மூலையில் உட்கார்ந்து அழத் தொடங்கினார்
"வழக்கமாக இந்த சீசனில் தம்பி துணிக்கடைகளுக்குத் தான் வேலைக்குப் போவான். இந்த முறை இந்த (பட்டாசு கடை) வேலைக்குப் போனான். அவன் 12ஆம் வகுப்பு தேறியிருந்தான். மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால் அவன் விண்ணப்பித்த பாரா மெடிக்கல் இடம் கிடைக்கவில்லை. ஒரு ஆடி சீசனில் துனிக்கடைக்கு வேலைக்குப் போனவன் ரூ.25000 ஈட்டி வந்து அதில் ரூ.20000 ஐக் கொண்டு குடும்பதின் கடன் ஒன்றை அடைத்தான்.
அப்பாவின் இறந்து இந்த எட்டு ஆண்டுகளில் நாங்கள் இருவரும் பல்வேறு வேலைகளுக்குச் சென்றோம். அதில் கிடைக்கும் வருமானதில் இருந்து தான் இருந்த கடன்களை பகுதியாகவும், சிலவற்றை முழுமையாகவும் செலுத்தத் தொடங்கினோம். எங்கள் அண்ணன் திருமணத்தின் போது கூடுதலாக ரூ.30000 கடன் வாங்க வேண்டியதாயிற்று.
எனவே நாங்கள் கிடைக்கும் வேலைகள் எல்லாவற்றையும் செய்தோம். ஆளுக்கொரு பக்கமாக வேலைக்குச் சென்றிருந்தோம். ஆனால் சில பிரச்சினைகளால் திரும்ப வர வேண்டியதாயிற்று. அந்த பட்டாசு கடை உரிமையாளர் எங்கள் பகுதியிலுள்ள ஒரு பையனுக்குத் தொடர்பு கொண்டு வேலை காலி இருப்பத்தாகச் சொல்லியுள்ளார். முதலில் சிலர் சென்றனர். இரண்டாவது குழுவில் என் தம்பி சென்றான்.
வேலைக்குச் சென்ற பசங்களுக்கிடையில் ஏதோ பிரச்சினைகள் எழ, என் தம்பி கிரி என் அண்ணனோடு சென்று தங்கி அவருடனேயே வேலைக்குச் செல்லத் துவங்கினான். கோவில் காரியமாக அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது அந்த பட்டாசு கடையில் வேலை பார்த்து வந்தவர்கள் தம்பி கிரியை திரும்ப வேலைக்கு வரும்படி அழைத்துள்ளனர். அக்டோபர் 7, 2023 அன்று அங்கே வேலைக்குச் சென்றுள்ளான். அன்றைக்கே அந்த விபத்து நடந்துள்ளது.
அவன் ஒரே ஒரு நாள் தான் அங்கு வேலை செய்தான்.
அவன் அக்டோபர் 3, 2006 அன்று பிறந்தவன். இப்போதுதான் அவன் பிறந்த நாளைக் கொண்டாடினோம். அதற்குள்ளாக இப்படி நடந்துவிட்டது.
அப்போது எங்கள் ஊரில் யாருக்கும் என்ன நடந்தது என்பதே தெரியாது. அந்த விபத்திலிருந்து தப்பித்த எங்கள் ஊரைச் சேர்ந்த இருவர் தான் எங்களுக்குர்த் தகவல் சொன்னார்கள். மேலும் விசாரித்த போது தான் எங்கள் ஊரைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள் இறந்து விட்டதைத் தெரிந்து கொண்டோம். வாடகை வண்டி அமர்த்திக் கொண்டு சென்று இறந்தவர்களை அடையாளம் காட்டினோம்.

உயிரிழந்த மற்றொரு நபரான 19 வயதான ஆகாஷின் புகைப்படம் மாலை அணிவிக்கப்பட்டு வீட்டின் முன் உள்ள நாற்காலியில் வைக்கப்பட்டது. புகைப்படத்தின் அருகில் அவரது தந்தை எம்.ராஜா அமர்ந்திருக்கிறார்
வழக்கு பதியப்பட்டது. கர்நாடக முதலமைச்சர், தமிழக அமைச்சர் கே.பி. அன்பழகன், ஒரு எம்.எல்.ஏ, ஒரு எம்.பி மற்றும் சிலரும் வந்தனர். மாவட்ட ஆட்சியர் ரூபாய் மூன்று இலட்சத்துக்கான காசோலையை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் வருவார் என்றார்கள், வரவில்லை. " என்றார் சூரியா.
"இறந்தவர்கள் அனைவர் குடும்பத்திலும் ஒருவருக்கு, அவர்களது கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசாங்க வேலை வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை."
"வாய்க்கும் வயிறுக்குமான வாழ்க்கைப் பாடு எங்களுடையது. எவரோ ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைத்தால் அது பேருதவியாக இருக்கும்." என எஞ்சியிருக்கும் இருவரில் எவரோ ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கின்றனர் கிரியின் குடும்பத்தார்.
கிரியின் அம்மா பேசி முடித்ததும் கிரியின் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். அவர் அண்ணன் அவர்களது அப்பாவின் இறப்பு அறிவிப்புப் புகைப்படத்தை சுட்டிக்காட்டினார். அதில் சட்டகத்தின் ஓரமாக, கிரி குழந்தையாக நின்று கொண்டிருக்கும் சிறு புகைப்படம் ஒன்று இருந்தது. மிக அழகான புகைப்படம் அது.
"கரூரில் உள்ள சிப்காட் போல எங்களுக்கும் ஏதாவது வாய்ப்புகள் இருந்திருந்தால் எங்கள் பிள்ளைகள் வேலைக்காக அவ்வளவு தூரம் சென்றிருக்க மாட்டார்கள். வேலை முடிந்து திரும்பும் போது எல்லொருக்கும் புதிய அலைபேசி வாங்கித் தருவதாக மூளைச்சலவை செய்து பிள்ளைகளை அழைத்துச் சென்றுள்ளனர். குடவுனுக்குள் பட்டாசு தீப்பற்றியது யாருக்குமே தெரியவில்லை. எட்டு பேரும் மூச்சுத் திணறலால் இறந்துள்ளனர். அவர்கள் வெளியேறி வர நினைத்திருந்தாலும் வர முடியாத அளவுக்கு பாதை மிகவும் குறுகலால இருந்ததை நாங்கள் பின்னர் தான் கண்டு கொண்டோம்." என்றார் தோழர் பாலா.
இதைத் தோழர் பாலா சொல்லி முடிக்க என் தம்பி பாலா நினைவில் வந்து போனான். அந்த இடமே மேலும் இறுக்கமானதாகத் தோன்றியது. மூச்சடைப்பது போல் உணர்ந்தேன். என் இதயம் மரத்துப் போயிருந்தது.
இறந்த எட்டு பேர் வீடுகளிலும் அவர்களது நேசத்துக்குறிய பிள்ளைகளின் புகைப்படங்களை 'ஃப்ரேம்' செய்து வைத்திருந்தனர். வீடுகள் அனைத்தும் கல்லறைகளைப் போன்று தோற்றமளித்தன. சுற்றத்தார் வருவதும் போவதுமாக இருந்தனர். இவ்விபத்து நேர்ந்து ஒரு வாரம் ஆகியிருப்பினும் வேதனையும் கண்ணீரும் எஞ்சியிருந்தன. உறவினர்களும் தத்தமது வீடு திரும்பாமலிருந்தனர்.


'இப்படி ஒரு வேலைக்கு போவது இதுதான் முதல் முறை. இவரது தாயார் (வலது) 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்' என்று ஆகாஷ் பற்றி எம். ராஜா சொல்கிறார்
![Raja says Akash was particularly fond of Dr. B.R. Ambedkar. 'He had hung his [Ambedkar’s] portrait [near his bed] so that he would be the first image to see when he woke up'](/media/images/07-PAL_9250-PK-Every_house_is_like_a_grave.max-1400x1120_Ou8b82x.jpg)
ஆகாஷ் அம்பேத்கரை மிகவும் விரும்பினார் என்று ராஜா கூறுகிறார். 'அவர் அம்பேத்கரின் உருவப்படத்தை [தன்னுடைய படுக்கைக்கு அருகில்] தொங்கவிட்டிருந்தார் அதனால் அவர் விழித்தெழுந்தவுடன் பார்க்கும் முதல் பிம்பம் அவராகத்தான் இருக்கும்,' என்று அவர் மேலும் கூறுகிறார்
இறந்த மற்றொருவரான ஆகாஷ் வீட்டின் முன்பு ஒரு நாற்காலியில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டு மாலையிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்துக்கு முன்பு அவரது அப்பா படுத்துக்கிடந்தார். அது இரண்டே அறைகள் கொண்ட வீடு. நான் உள்ளே நுழைந்ததும் ஆகாஷின் தாயாரது இறப்பு அறிவிப்புப் புகைப்படம் ஒன்று இன்னொரு நாற்காலியில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.
நான் பேசத் தொடங்கியதும் கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கிவிட்டார். மதுபோதையில் வேறு இருந்தார். என்னை அழைத்துச் சென்ற தோழர் தான் அவரை அமைதிப்படுத்தி பேச வைத்தார்.
"என் பெயர் எம்.ராஜா, வயது 47. ஒரு டீக்கடையில் கிளாஸ் கழுவும் வேலை செய்கிறேன். என் மகன், அவன் நண்பர்கள் அந்த பட்டாசு கடைக்கு வேலைக்குச் செல்கிறார்கள் என்பதாலேயே அவனும் போனான். அவன் ரொம்ப நல்ல பிள்ளை; விவரமானவனும் கூட. அன்று அவன் வேலைக்குக் கிளம்பும் போது என்னிடம் 200 ரூபாய் கொடுத்ததுடன் நான் குடிக்கக் கூடாது என அறிவுறுத்திச் சென்றான். 10 நாட்களில் திரும்பி விடுவதாகவும், என்னை நன்றாகப் பார்த்துக்கொள்ளப் பொவதாகவும் சொன்னான். இந்த மாதிரி வேலைக்கு அவன் போவது இது தான் முதல் முறை. நான் அவனை வேலைக்குப் போகச் சொன்னதே இல்லை." என்று கலங்கினார்.
ஆகாஷுக்கு அம்பேத்கர் மீதிருந்த பெரும் பற்று குறித்து ராஜா பேசலானார். "காலையில் விழித்ததும் தான் காணும் முதல் பிம்பம் அவருடையதாகவே இருக்க வேண்டும் என்பதற்க்காக அவர் [அம்பேத்கர்] படத்தை சுவறில் மாட்டி வைத்திருந்தான். நம் பிள்ளைகள் வாழ்க்கையில் மேலேறி வரத் துவங்கி விட்டனர் என்று நினைத்துக்கொண்டிருந்த போதே என் மகனுக்கு இப்படி நேர்ந்து விட்டதே. அவன் முதலில் துணிக்கடைக்குத் தான் வேலைக்குச் சென்றான். இம்முறை பட்டாசு கடைக்கு வேலைக்குச் சென்றது கூட எனக்குத் தெரியவில்லை. கல்லூரியில் இருந்து இரண்டு ஆண்டுகளிலேயே இடைநின்ற போதிலும் கூட அவன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. நான் 400 ரூபாய் தினக்கூலிக்கு ஒரு டீக்கடையில் வேலை செய்கிறேன். எனக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். என் மனைவி இறந்து 12 ஆண்டுகள் ஆகிறது. நான் என் பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்."

21 வயதான வேடியப்பன் தான் குண்டுவெடிப்பில் இறந்தவர்களில் மிக வயதானவர். அவர் இறப்பதற்கு 21 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்
அடுத்ததாக நாங்கள் 21 வயதான வேடியப்பன் வீட்டுக்குச் சென்றோம். கோட்-சூட் அணிந்த அவரது புகைப்படம், அம்பேத்கர் படத்துக்கு அருகில், அவர் இறப்பை அறிவிக்கும்படியாக சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. இறந்த எட்டு பேரில் இவர் மட்டுமே திருமணமானவர். அவருக்குத் திருமணமாகி 21 நாட்கள் தான் ஆகியிருந்தது. வேடியப்பனின் மனைவி இன்னும் அந்நிகழ்வின் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அவரது தந்தையைத் தவிர வேறெவரும் பேசும் நிலையில் இல்லை.
"நாங்கள் தர்மபுரி மாவட்டம் டி.அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பம் பெரும் வசதி படைத்ததெல்லாம் அல்ல. எங்கள் ஊரிலிருந்து ஏழு பேரும், எங்கள் மாவட்டதிலிருந்து பத்து பேரும் அங்கே சென்றுள்ளனர். வேலையின்மை காரணமாக மட்டும் தான் இத்தகைய வேலைகளுக்குச் சென்றனர். இது நிகழும் போது அவர்கள் வேலைக்குச் சேர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் ஆகியிருக்கும்."
"தமிழ்நாடு அரசாங்கமும் சரி, கர்நாடக அரசாங்கமும் சரி, இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று அறிவிக்கவில்லை. இறப்புச் சான்று கூட பெற முடியாத சூழலில் தான் உள்ளோம். தமிழ்நாடு அரசாங்கம் இறப்புச் சான்றும் நிவாரணமும் வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசாங்க வேலை வழங்க வேண்டும்."


இடது: கேசவன் தனது தாய் கிருஷ்ணவேணி மற்றும் மூத்த சகோதரருடன் இருக்கும் புகைப்படம். வலது: அவர் வெடி விபத்தில் இறந்தபோது அவர் பட்டாசு கடையில் வேலை செய்வது அவரது தாயாருக்கு தெரியாது


இடது: குமாரியின் மகன் முனிவேல் வெடிவிபத்தில் இறந்தபோது அவருக்கு 20 வயது. இறந்த மற்ற அனைவரையும் போலவே அவரது புகைப்படமும் அவர்களின் வீட்டிற்கு வெளியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வலது: இளம்பரிதியின் பெற்றோர், பானு மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தங்கள் மகனின் புகைப்படத்திற்கு அருகில் நிற்கின்றனர்
கேசவனின் அம்மா கிருஷ்ணவேனி. முப்பதுகளின் இறுதியிலிருக்கும் இவர் தன் மகன் பட்டாசு கடைக்கு வேலைக்குச் சென்றது குறித்தே தனக்குத் தெரியாதென்றார். "அவன் தனது நண்பர்களோடு சேர்ந்து சென்றிருக்கிறான். அரசாங்கதிடமிருந்து இது வரை எந்தத் தகவலும் இல்லை. ஆனால் வேலை கொடுப்பார்கள் என நம்புகிறோம்."
இவ்விபத்தில் தன் மகனை இழந்த முப்பத்தைந்து வயது குமாரி, விபத்து நிகழ்ந்த தினத்தில் தன் மகன் பகிர்ந்து கொண்ட 'செல்ஃபிகள்' குறித்து பேசிக் கொண்டிருந்தார். "தீபாவளி நேரத்து செலவுகளுக்காகவே, எங்களுக்குப் புத்தாடைகளும், பரிசுகளும் வாங்கித் தர வேண்டியே, அவர்கள் இத்தகைய ஆபத்து மிகுந்த வேலைகளுக்குச் சென்றனர். அவர்களுக்கு பட்டாசு கடைகளில் ரூ.1000 சம்பளமாகக் கிடைக்கும். இதுவே துணிக்கடைகள் என்றால் ரூ.700 அல்லது 800 தான்."
"அவர்கள் மதிய உணவருந்திக் கொண்டிருக்கும் 'செல்ஃபிகளை' பார்த்த கொஞ்ச நேரத்திலேயே அவர்களைப் பிணமாகக் கண்ட என் மனநிலையை உங்களால் கற்பனை செய்தாவது பார்க்க இயலுமா?"
"எந்தக் குடும்பமும் எங்களைப் போல் துன்புறக் கூடாது. இனி பட்டாசுக் கடைகளில் விபத்துகளே நேரக் கூடாது. அப்படியே நிகழ்ந்தாலும் தப்பித்துக் கொள்வதற்கான வழிவகைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாத கடைகள் செயல்பட அனுமதிக்கப்படக் கூடாது. இது போன்றதொரு இழப்பைச் சந்திக்கும் கடைசி குடும்பம் எங்களுடையதாக இருக்கட்டும்." என்றார் குமாரி.


இடது: விபத்து நடப்பதற்கு முன்பு டி.விஜயராகவன், கேசவன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பிய புகைப்படம். வலது: 'அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர்கள் எரிந்து போயிருந்தார்கள்' என்கிறார் விஜயராகவனின் அப்பா


சரிதா தனது தொலைபேசியில் விஜயராகவனின் புகைப்படத்தைக் காட்டுகிறார். தனது மகனின் நினைவுகள் அனைத்தும் தனது தொலைபேசியில் உள்ள புகைப்படங்களில் இருப்பதாக அவர் கூறுகிறார்
நாங்கள் 18 வயது டி.விஜயராகவனின் வீட்டுச் கென்றிருந்தோம். அவரது அம்மா மிகவும் உடல்நிலை சரியில்லாதிருந்ததால் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அவர் மிகவும் சோர்வுற்றிருந்ததை அவர் திரும்ப வந்த போது கண்டுகொண்டோம். அந்நிலையிலும் விஜயராகவனின் சகோதரி அளித்த மோரைப் பருகிய பின்னரே எங்களோடு பேசினார்.
"துணிக்கடைக்கு வேலைக்குப் போவதாகத் தான் எங்களிடம் சொன்னான். ஆனால் ஏன் பட்டாசுக் கடைக்குப் போனான் என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை. அவன் கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டும் எனினும் அவன் அந்தச் சுமையை எங்கள் மேல் ஏற்ற விரும்பவில்லை என எனக்குத் தெரியும். ஏனென்றால் எங்களிடம் உள்ள அனைத்தையும் என் மகளின் மருத்துவத்துக்காக செலவிட்டுக் கொண்டிருந்தோம். அரசாங்கம் எங்களுக்கு எதேனும் வேலை அளித்தால் நன்றாக இருக்கும்." என்றார் 55 வயதான சரிதா.
அந்த 8 பிள்ளைகளும் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு விஜயராகவனின் தந்தை மற்றும் சில தோழர்களோடும் சென்றிருந்தோம். "ஏற்கனவே அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து போயிருந்தனர். எல்லோரையும் ஒன்றாகவே தகனம் செய்து விட்டோம்." என்றார் விஜயராகவனின் அப்பா.
எதிர்கால வாழ்வுக்கான நம்பிக்கைகளையும் அன்பையும் ஏந்தி நின்ற எட்டு இளம் உயிர்களின் தகனத்துக்கு மௌன சாட்சியாக தென்பெண்ணை ஆறு பேரமைதியுடன் பாய்ந்து கொண்டிருந்தது.
மரத்துப்போன இதயத்துடன் அங்கிருந்து திரும்பினேன்.
இரண்டு நாட்கள் கடந்திருந்தன. பட்டாசுத் தொழிற்சாலைகளின் மையமான சிவகாசியில் 14 பேர் இறந்த செய்தியுடன் அந்நாள் விடிந்தது.

எட்டு சிறுவர்களும் ஒன்றாக தகனம் செய்யப்பட்டனர்

தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இடையே ஓடும் தென்பண்ணை ஆறு