“நீர் மட்டம் உயர்ந்தால், எங்களின் உயிர் ஆடும்,” என்கிறார் ஹரேஸ்வர் தாஸ். அசாமின் பக்ரிபாரியில் வசிக்கும் அவர், புதிமரி ஆற்றில் உயரும் நீர் மட்டம் வீடுகளையும் பயிர்களையும் அழித்துவிடும் என்பதால் மழைக்காலங்களில் கிராமம் விழிப்போடு இருக்கும் என்கிறார்.
“மழை பெய்தால், உடைகளை மூட்டைக் கட்டி நாங்கள் தயாராக இருப்போம். கடந்த முறை வந்த வெள்ளம் கல் வீடுகளை கூட அழித்துவிட்டது. மூங்கில்களையும் களிமண்ணையும் கொண்ட புதிய சுவர்கள் மீண்டும் எழுப்பப்பட்டன,” என்கிறார் அவரின் மனைவி சாபித்ரி தாஸ்.
”(தற்போது பழுதாகிவிட்ட) டிவியை சாக்குப் பையில் போட்டு, கூரை மேல் வைத்தேன்,” என்கிறார் நிராதா தாஸ். முந்தைய தொலைக்காட்சியையும் பழைய வெள்ளங்கள் சேதப்படுத்தியதாக கூறுகிறார்.
ஜூன் 16, 2023 இரவு மழை கடுமையாக பெய்தது. கடந்த வருடம் கரையில் உடைந்து போன பகுதியை சரி செய்ய மணல் பைகளை வைத்திருந்தார்கள் மக்கள். இரண்டு நாட்கள் சென்றன. மழை ஓய்வதாக இல்லை. பக்ரிபாரியும் அருகாமை கிராமங்களான தெபர்காவோன், மடோய்கடா, நிஸ் கவுர்பஹா, கந்திகர், பிகாபரா மற்றும் லஹாபாரா ஆகியவை, பலவீனமான கரைப்பகுதி மீண்டும் உடையக்கூடும் என்கிற பயத்தில் காவலுக்கு இருந்தன.
நல்ல வேளையாக, நான்கு நாட்களில் மழை குறைந்து, நீரும் வடியத் தொடங்கியது.
“கரை உடைந்தால் நீர் குண்டு போல, வழியிலுள்ள எல்லாவற்றையும் அழித்துவிடும்,” என விளக்குகிறார் உள்ளூர் ஆசிரியரான ஹரேஸ்வர் தாஸ். ஓய்வு பெற்றுவிட்ட 85 வயதுக்காரரான அவர், கே.பி.தியுல்குச்சி உயர்நிலை பள்ளியில் அசாமிய மொழி கற்பித்துக் கொண்டிருந்தார்.
1965ம் ஆண்டு கட்டப்பட்ட கரை, நன்மைகளை விட தீமைகளையே அதிகம் செய்தது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். “பயிர் நிலங்களை மீட்டுருவாக்குவதற்கு பதிலாக அவை மூழ்கடிக்கவே செய்தன.”

![His wife Sabitri (right) adds, 'The previous flood [2022] took away the two kutchha houses of ours. You see these clay walls, they are newly built; this month’s [June] incessant rain has damaged the chilly plants, spiny gourds and all other plants from our kitchen garden'](/media/images/02b-RUB09045-WR_and_PD-In_Bagribari-the_ri.max-1400x1120.jpg)
ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான ஹரேஸ்வர் தாஸ், 85, (இடது) 12 வெள்ளங்களை பார்த்திருக்கிறார். ‘கரை உடைந்தால் நீர் குண்டு போல, வழியிலுள்ள எல்லாவற்றையும் அழித்துவிடும்,’ என்கிறார் அவர். அவரின் மனைவி சாபித்ரி (வலது) சொல்கையில், ‘முந்தைய வெள்ளங்கள் (2022) எங்களின் இரு கல் வீடுகளையும் அடித்து சென்றுவிட்டது. நீங்கள் பார்க்கும் இந்த மண் சுவர்கள் புதிதாக கட்டப்பட்டவை. இந்த மாத (ஜூன்) மழை, வீட்டுத் தோட்டத்தின் மிளகாய் செடிகளையும் சுண்டக்காய்களையும் பிற செடிகளையும் சேதப்படுத்தி விட்டது,’ என்கிறார்


இடது: சாபித்ரியும் குடும்பத்தினரும் சேதத்தை தவிர்க்கும் வகையில் பொருட்களை உயரமான இடங்களில் வைக்கின்றனர். மழை பெய்தால் மூட்டை கட்டி அவர் தயாராக இருக்க வேண்டும். வலது: விதைக்கும் காலம் என்றாலும், நிலத்தை மணல் மூடியிருப்பதால் பக்ரிபாரியின் ஒரு விவசாயியும் விதைக்க முடியவில்லை
பக்ரிபாரி, வருடந்தோறும் வெள்ளம் வரும் பிரம்மபுத்திரை ஆற்றிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புதிமரி ஆற்றங்கரையில் இருக்கிறது. மழைக்காலங்களில் நீர்மட்டம் உயரும் என்கிற பயத்தில் கிராமவாசிகள் தூங்காமல் இரவுகளை கழிப்பார்கள். பக்சா மாவட்டத்திலுள்ள கிராமத்தின் இளைஞர்கள் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத இரவுகளில் தூங்காமல் கரைகளை கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். ”வருடத்தின் ஐந்து மாதங்களை, வெள்ளத்தை எதிர்த்து போராடிக் கொண்டோ அல்லது வெள்ளம் வரும் பயத்தினோடோ கழிக்கிறோம்,” என்கிறார் ஹரேஸ்வர்.
கிராமத்தில் வசிக்கும் ஜோகமாயா தாஸ் சொல்கையில், “கடந்த பல பத்தாண்டுகளாக கரை ஒரே இடத்தில்தான் மழைக்காலங்களின் போது நொறுங்குகிறது,” என்கிறார்.
அதனால்தான் அதுல் தாஸின் மகனான ஹிராக்ஜோதி சமீபத்தில் அசாம் காவல்துறையில் கான்ஸ்டபிளாக சேர்ந்திருக்கிறார். கரையைக் கட்டி, சரி பார்ப்பதில் அவருக்கு நம்பிக்கை போய்விட்டது.
“கரை, தங்கமுட்டை போடும் வாத்தை போல,” என்கிறார் அவர். ”ஒவ்வொரு முறை அது உடையும்போதும், கட்சிகளும் அமைப்புகளும் வந்து சேரும். ஒப்பந்ததாரர் கரையைக் கட்டுவார். ஆனால் அது மீண்டும் வெள்ளத்தில் உடையும்.” ஊரை சேர்ந்த இளைஞர்கள், சரியாக பழுது நீக்குமாறு கோரியபோது, “அவர்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டு அமைதியாக்கப்பட்டனர்,” என்கிறார் அந்த 53 வயதுக்காரர்.
பக்ரிபாரியின் வயல்களும் சாலைகளும் வீடுகளும் மக்களின் துயரங்களை பேசுகின்றன. சீக்கிரம் அவை தீரப் போகும் தோற்றத்தையும் தரவில்லை. புதிமரி ஆற்றை ஆய்வு செய்த நிலத்துக்குள்ளான நீர்வழிப்பாதை ஆணையத்தின் 2015ம் ஆண்டு அறிக்கை யின்படி “கரையைக் கட்டுவதும் பழுது பார்ப்பதும் நிரந்தரமாகி விட்டிருக்கின்றன.”


இடது: பக்ரிபாரியை சேர்ந்தவர்கள் புதிமரி ஆற்றின் கரைகளுக்கு கீழே மணல் மூட்டைகளை வைக்கின்றனர். வலது: மாநில நீர்வளத்துறை அரிப்பை தடுக்க மண் மூட்டைகளை பயன்படுத்துகிறது


இடது: ’கரை கட்டுதல் தங்க வாத்தை போலாகிவிட்டது,’ என்கிறார் பணமும் வளங்களும் வீணடிக்கப்படுவதை அதுல் தாஸ் சுட்டிக் காட்டி. வலது: 2021ம் ஆண்டு வெள்ளம் வர காரணமான கரையின் பலவீனமான பகுதிகளை தாங்கிப் பிடிக்க மணல் மூட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன
*****
2022-ல் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததும் ஜோகமாயா தாஸும் அவரின் கணவர் ஷம்புராமும் எட்டு மணி நேரங்களுக்கு ஜன்னலை பிடித்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. அந்த இரவு, நீர் அவர்களின் கழுத்தை எட்டியதும், இருவரும் கல் வீட்டை விட்டு வெளியேறி, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டிக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்கு சென்றனர். அந்த வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. ஜன்னல்கள் மட்டுமே அவர்கள் பிழைக்க காரணமாக இருந்தன.
“அது ஒரு கொடுங்கனவு,” என்னும் ஜோகமாயாவின் முகத்தில் அந்த இரவின் நிழல்கள் இன்னும் படிந்திருக்கிறது.
வெள்ளம் சேதப்படுத்திய வீட்டு வாசலில் நிற்கும் 40 வயது ஜோகமாயா, ஜூன் 16, 2022 அன்று இரவு நேர்ந்த அனுபவங்களை பகிர்கிறார். “நீர் வடிந்துவிடும் என்றும் கரை உடையாது என்றும் என் கணவர் தொடர்ந்து உறுதி கொடுத்துக் கொண்டே இருந்தார். பயத்தில் இருந்த நான், தூங்கிவிட்டேன். ஒரு பூச்சி கடித்து திடீரென நான் விழித்து பார்க்கும்போது படுக்கை கிட்டத்தட்ட மிதந்து கொண்டிருந்தது,” என்கிறார் அவர்.
கிராமத்தின் பெரும்பாலானோரை போல அவர்களும் கோச் - ரஜ்போன்ஷி சமூகத்தை சேர்ந்தவர்கள். பிரம்மபுத்திரையின் கிளை ஆறான புதிமரியின் பிரதான வடக்கு கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அவர்கள் வசிக்கின்றனர்.
“இருட்டில் என்னால் ஒன்றும் பார்க்க முடியவில்லை,” என விளக்குகிறார் ஜோகமாயா. “ஒரு வழியாக ஜன்னலை எட்டிவிட்டோம். இதற்கு முன் வெள்ளங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு நீரை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. எனக்கருகே பாம்புகளும் பூச்சிகளும் போவதை உணர முடிந்தது. ஜன்னலை இறுக்கமாக பிடித்துக் கொண்டு என் கணவரை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்,” என்கிறார் அவர். மீட்புக் குழு வந்து இறுதியில் அவர்களை காலை 11 மணிக்கு மீட்டது. மொத்த பிரச்சினையும் தொடங்கியது அதிகாலை 2.45 மணிக்கு.
கடந்த பல பத்தாண்டுகளாக கரை ஒரே இடத்தில்தான் மழைக்காலங்களின் போது நொறுங்குகிறது
வீடுகளை மீண்டும் கட்டியதில் வருடாந்திர செலவுகளில் சோர்ந்திருக்கும் கிராமவாசிகள், இந்த வருட மழை வெள்ளத்தால் சேதமான வீடுகளை பழுதுபார்க்க தயாராக இல்லை. கரையில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து வாழும் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை வெள்ளத்துக்கு இழந்தவர்களாக இருப்பார்கள். அல்லது திரும்பி போக பயத்தில் இருப்பார்கள்.
42 வயது மதாபி தாஸும் அவரின் கணவரான 53 வயது தந்தேஸ்வர் தாஸும், கடந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டை ஒரு வழியாக பழுது பார்த்தார்கள். ஆனால் அவர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை. “நீர் மட்டம் உயர்ந்ததும் நாங்கள் கரைக்கு வந்துவிட்டோம். இந்த காலத்தில் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை,”என்கிறார் மதாபி.
கரையில் வாழ்பவர்கள், குடிநீர் கண்டுபிடிப்பது பெரும் சிரமம். வெள்ளங்களுக்கு பிறகு பலரின் ஆழ்துளைக் கிணறுகள் மணலில் புதைந்துவிட்டதாக சொல்கிறார் மதாபி. ஒரு பக்கெட் முழுக்க இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களைக் காட்டி அவர், “நீரில் நிறைய இரும்பு இருக்கிரது. ஆழ்துளைக் கிணறுகளுக்கு பக்கத்தில் நாங்கள் நீரை வடிகட்டி, கரைக்கு பக்கெட்களிலும் பாட்டில்களிலும் கொண்டு செல்கிறோம்,” என்கிறார்.
“இனி இங்கு விவசாயம் பார்ப்பதிலோ வீடு கட்டுவதிலோ பலனில்லை. வெள்ளம் எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் அடித்து சென்று விடுகிறது,” என்கிறார் அதுலின் மனைவி நிராதா தாஸ். “நாங்கள் இரு முறை டிவி வாங்கினோம். இரண்டுமே வெள்ளத்தால் சேதமாகின,” என்கிறார் அவர், மூங்கில் கம்பத்தில் சாய்ந்து கொண்டு.
739 பேர் (மக்கள்தொகை கணக்கெடுப்பு) வசிக்கும் பக்ரிபாரி மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். ஆனால் அது, வெள்ளத்தாலும் வெள்ளம் விட்டுச் செல்லும் மணலாலும் மாறிவிட்டது. நிலம் விளைவிக்க முடியாததாகி விட்டது.


இடது: வீட்டில் மண் வடிகட்டி வைத்து நீரெடுக்க மதாபி தாஸ் கரையிலிருந்து வருகிறார். ஜூன் 2023-லிருந்து குடிநீருக்கான இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்கிறார். வலது: ‘நீர் மட்டம் உயர்ந்ததும் நாங்கள் கரைக்கு வந்தோம். இம்முறை ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை’ என்கிறார் தந்தேஸ்வர் (ஊதா டி-ஷர்ட்). விளைபருவ காலங்களுக்கு இடையில் அவர் விவசாயியாகவும் கொத்தனாராகவும் பணிபுரிகிறார். அவருக்கு பின் த்விஜென் தாஸ் நிற்கிறார்
![Left: 'We bought a TV twice. Both were damaged by the floods. I have put the [second damaged] TV in a sack and put it on the roof,' says Nirada.](/media/images/07a-RUB09152_copy-WR_and_PD-In_Bagribari-t.max-1400x1120.jpg)

இடது: ‘நாங்கள் இருமுறை டிவி வாங்கினோம். இரண்டுமே வெள்ளத்தால் சேதமாகி விட்டன. இரண்டாவது (சேதமான) டிவியை சாக்கில் கட்டி கூரையில் போட்டுவிட்டேன்,’ என்கிறார் நிராதா. வலது: நிலத்தை மணல் மூடியிருப்பதால் நடவு இன்னும் தொடங்கவில்லை
*****
“அதிக விவசாய நிலம் தேடிதான் எங்களின் முன்னோர்கள் இங்கு வந்தனர்,” என்கிறார் ஹரேஸ்வர். கம்ருப் மாவட்டத்தின் குயா கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த பெற்றோருடன் இளம் வயதில் இங்கு வந்தவர் அவர். பக்ரிபாரி ஆறின் கிழக்கு பக்கத்தில் குடும்பம் வசிப்பிடத்தை உருவாக்கிக் கொண்டது. ”இந்த பசுமையான பகுதியில் குறைவான மக்கள்தொகைதான் இருந்தது. புதர்களை எல்லாம் அவர்கள் (வளர்ந்தவர்கள்) வெட்டி நிலத்தை சீர்திருத்தி தேவையான அளவுக்கு விளைநிலத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆனால் இப்போது நிலம் இருந்தும் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை,” என அவர் சுட்டிக் காட்டுகிறார்.
கடந்த வருடம் (2022) ஹரேஸ்வர், நெல் விதைகளை பயிரிட்டு மறுநடவு செய்ய தயாராக இருந்தபோதுதான் வெள்ளம் வந்தது. அவரின் நிலத்தில் எட்டு பிகா (2.6 ஏக்கர்) நிலம் நீருக்கடியில் சென்றுவிட்டது. பயிர் யாவும் நாசமாகிவிட்டது.
“இம்முறையும் நான் கொஞ்சம் விதைத்தேன். ஆனால் உயரும் நீர்மட்டம் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டது. இனி நான் விவசாயம் செய்ய மாட்டேன்,” என்கிறார் ஹரேஸ்வர் பெருமூச்சுடன். ஜூன் மாதத்தில் பெய்த தொடர் மழை அவர்களின் தோட்டத்தில் விளைந்திருந்த மிளகாய், சுண்டைக்காய் மற்றும் பிற செடிகளை அழித்துவிட்டது.
விவசாயத்தை விட்டுச் செல்ல வேண்டிய நிலையில் இருந்த பல குடும்பங்களில் சமிந்திரா தாஸின் குடும்பமும் ஒன்று. “எங்களிடம் 10 பிகா (3.3 ஏக்கர்) விவசாய நிலம் இருந்தது. இப்போது நிலமே கண்ணில் படவில்லை. எங்கள் வீட்டுக்கு பின்னிருக்கும் கரையிலிருந்து நீர் கசியத் தொடங்கிவிட்டது,” என்கிறார் 53 வயதான அவர். “ஆற்று மட்டம் உயர்ந்ததும் நாங்கள் மீண்டும் கூடாரத்துக்கு (மூங்கில் கம்பங்களையும் தார்ப்பாயையும் கொண்டு உருவாக்கிய தற்காலிக வசிப்பிடம்) சென்றுவிட்டோம்.”


இடது: ‘எங்களுக்கு 10 பிகா நிலம் இருந்தது. நிலம் இப்போது புலப்படவே இல்லை. மணற்குன்றாக அது மாறிவிட்டது,’ என்கிறார் சமிந்திரா நாத் தாஸ். வலது: வெள்ளம் சேதப்படுத்திய வீட்டுக்கு முன் பாரம்பரிய மணல் வடிகட்டி. அதிக இரும்பு தாது இருப்பதால், நீரை இங்கு வடிகட்டாமல் குடிக்க முடியாது


இடது: ’2001ம் ஆண்டில் சம்புராமை திருமணம் செய்து இங்கு வந்ததிலிருந்து நான் பார்த்ததெல்லாம் வெள்ளம் மட்டும்தான்,’ என்கிறார் ஜோகமாயா. வலது: 2022ம் ஆண்டு வெள்ளம், நெல் நிலங்களை மண்ணில் புதைத்த பிறகு, ஜோகமாயாவும் அவரது கணவர் ஷம்புராம் தாஸும் தினக்கூலி வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்
ஜோகமாயா மற்றும் ஷம்புராம் குடும்பத்துக்கு மூன்று பிகா (கிட்டத்தட்ட ஒரு ஏக்கர்) நிலம் இருந்தது. பிரதானமாக அதில் அவர்கள் நெல் விளைவித்தனர். எப்போதேனும் கடுகையும் விளைவித்தனர். 22 வருடங்களுக்கு முன் திருமணமான போது, குவஹாத்தியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்த இந்த கிராமம் பசுமையான விளைநிலமாக இருந்ததாக ஜோகமாயா நினைவுகூருகிறார். இப்போது வெறும் மணற்குன்றுகள்தான் இருக்கின்றன.
நிலம் பாலையான பிறகு, ஷம்புராம் விவசாயத்தை கைவிட்டு விட்டு வேறு வேலை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. பக்ரிபாரியிலுள்ள பலரை போல அவரும் தினக்கூலி தொழிலாளர் ஆனார். இப்போது அவர் அருகாமை கிராமங்களில் வேலை பார்த்து நாளொன்றுக்கு 350 ரூபாய் சம்பாதிக்கிறார். “விவசாயம் அவருக்கு பிடித்த வேலையாக இருந்தது,” என்கிறார் ஜோகமாயா.
தினக்கூலி வேலையும் நிலையாகக் கிடைப்பதில்லை. வீட்டில் வேலை பார்க்கும் ஜோகமாயா ஒருநாளுக்கு 100-150 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். ஒருகாலத்தில் நிலங்களில் அவர் நெற்பயிர் நடும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறரின் நிலங்களிலும் உபரி பணத்துக்காக அவ்வப்போது அவர் வேலை பார்த்திருக்கிறார். விவசாயம் மட்டுமின்றி, ஜோகமாயாவுக்கு நெசவும் தெரியும். சொந்தமாக தறி வைத்து, துண்டு மற்றும் அசாமிய பெண்கள் பயன்படுத்தும் மேலங்கி போன்றவற்றை நெய்தும் பணம் ஈட்டியிருக்கிறார்.
விவசாயத்துக்கு வாய்ப்பில்லாமல் போனபிறகு, தறியைதான் அவர் அதிகம் சார்ந்திருக்கும் நிலை உருவானது. ஆனால் அதையும் ஆறு அழித்தது. “ அதியா ஒப்பந்தத்தின்படி (உரிமையாளருக்கு கிடைப்பதில் பாதியை கொடுக்கும் உடன்படிக்கை) கடந்த வருடம் வரை நான் நெய்து கொண்டிருந்தேன்,” என்கிறார் ஜோகமாயா. “இப்போது தறி சட்டகம்தான் மிஞ்சியிருக்கிறது. வெள்ளம் மற்ற எல்லாவற்றையும் அடித்து சென்றுவிட்டது.”
வேலையுமின்றி வருமானமுமின்றி, கவுர் பகா நவமிலான் உயர்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் 15 வயது மகன் ரஜிபின் கல்விக்கு பணம் கட்டுவது சிரமமாகி இருப்பதாக ஜோகமாயா சொல்கிறார். கடந்த வருடம், இச்சம்பவம் நடப்பதற்கு முன், அச்சிறுவனை அவர்கள் கரைக்கருகே இருக்கும் ஓர் உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அவர்களுக்கு திருதிமணி மற்றும் நிதுமணி என இரு மகள்கள் இருக்கின்றனர். திருமணமாகி இருவரும் கதானிபாராவிலும் கெண்டுகோனாவிலும் வாழ்கின்றனர்.
*****


இடது: அதுல் தாஸும் மனைவி நிராதாவும் வாழ்க்கை முழுக்க வெள்ளங்களுடன் போராடி வருகின்றனர். வலது: ஜுன் 2023-ன் மூன்றாவது வாரத்தில் கரைகடந்த ஆறால் நாசமான வாழைத்தோப்பை அதுல் நமக்குக் காட்டுகிறார். பிற காய்கறிகளுடன் சேர்த்து அவர் விதைத்திருந்த எலுமிச்சையும் வெள்ளத்தால் நாசமானது
புதிமரி ஆற்றின் தொடர் வெள்ளங்களால் அதுல் தாஸின் குடும்பம் தடுமாற்றத்தில் இருக்கிறது. “3.5 பிகா (1.1 ஏக்கர்) நிலத்தில் வாழை நட்டேன். ஒரு பிகா (0.33 ஏக்கர்) நிலத்தில் எலுமிச்சைகள் நட்டேன். ஒரு பிகாவில் பூசணிகளும் வெள்ளை பூசணிகளும் நட்டேன். இம்முறை நீர் மட்டம் உயர்ந்து என் எல்லா பயிர்களும் அழிந்து போயின,” என்கிறார் அதுல். சில வாரங்கள் கழித்து, மூன்றில் இரு பங்கு பயிர்கள் மீண்டன.
அதுலை பொறுத்தவரை, சாலை வசதி இல்லாததால் பல கிராமவாசிகள் விவசாயத்தை கைவிட்டிருக்கின்றனர். கரை உடைந்து சாலைகள் பாதிப்படைந்ததால், விளைச்சலை விற்க விரும்பியவர்கள் சந்தைக்கு செல்வதென்பது இயலாத காரியமாக இருந்தது.
“என் விளைச்சலை வழக்கமாக ரங்கியாவுக்கும் குவஹாத்திக்கும் கொண்டு செல்வேன்,” என்கிறார் அதுல். “இரவு நேரத்தில் வாழைப் பழங்களையும் எலுமிச்சைகளையும் வேனில் ஏற்றினால், அதிகாலை 5 மணிக்கு குவஹாத்தியின் ஃபேன்சி பஜாரை அடைந்து பயிரை விற்றுவிட்டு, காலை எட்டு மணிக்கே வீட்டுக்கு திரும்பும் காலம் ஒன்று இருந்தது.” கடைசி வெள்ளத்துக்கு பிறகு இச்சூழல் இல்லாமல் போய்விட்டது.
“துலாபாரிக்கு என் விளைச்சலை படகில் கொண்டு சென்றிருக்கிறேன். என்ன சொல்வது! 2001ம் ஆண்டிலிருந்து கரை பலமுறை உடைந்துவிட்டது. 2022ம் ஆண்டு வெள்ளத்துக்கு பிறகு, அதை சரி செய்ய ஐந்து மாதங்கள் ஆனது,” என்கிறார் அதுல்.
“வெள்ளங்கள் எங்கள் எல்லாரையும் அழித்துவிட்டது,” என கரை உடைந்து ஏற்பட்ட குழப்பத்தை நினைவுகூர்ந்து புலம்புகிறார் அதுலின் தாயான பிரபாபாலா தாஸ்.
கிளம்புவதற்காக நாங்கள் கரையேறியபோது அவரின் மகன் எங்களை பார்த்து புன்னகைக்கிறார். “போன தடவையும் நீங்கள் மழைக்காலத்தில்தான் வந்தீர்கள். ஒரு நல்ல இயல்பான நாளில் வாருங்கள்,” என்கிறார் அவர். “எங்களின் நிலத்திலிருந்து காய்கறிகளை உங்களுக்கு அனுப்புகிறேன்.”
தமிழில் : ராஜசங்கீதன்