எப்போதும் போல, திருமணம் நடக்க இடத்தை அமைக்க கடுமையாக உழைக்கிறார் அனில் நார்கண்டே. ஆனால் நடக்கவிருக்கும் திருப்பத்தை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
பந்தாராவின் அலெசூர் கிராமத்தில் இசை அளிப்பவராகவும் அலங்காரம் செய்பவராகவும் இருக்கும் 36 வயது விவசாயியான அவர், மஞ்சள் நிற ஷாமியானாவை அண்டை கிராமத்தில் நடக்கும் ஒரு திருமணத்துக்காக போட்டிருந்தார். பிளாஸ்டிக் பூக்களால் அலங்கரித்திருந்தார். விருந்தாளிகளுக்கான நாற்காலிகளை அனுப்பி வைத்தார். மணமகனுக்கும் மணமகளுக்கும் அடர்சிவப்பு நிற சோஃபா. இசைக்கான DJ கருவியும் வெளிச்சத்துக்கான விளக்குகளும் போட்டிருந்தார்.
மணமகனின் எளிய செங்கல் வீடு திருமணத்தை முன்னிட்டு அழகாகியிருந்தது. மணமகள் மத்தியப்பிரதேச சியோனியிலிருந்தூ சத்புரா மலைகளை கடந்து வருகிறார்.
அற்புதமான தொடக்கமாக தன் வியாபாரத்துக்கு இருக்குமென அந்த நிகழ்வை அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. திருமண நாளின் மாலையில் நிலைமை மாறியதாக சொல்கிறார் அனில். வேலைக்காக புலம்பெயர்ந்து சென்றிருந்த 27 வயது மணமகன், திருமணத்துக்கு முதல் நாள் ஓடி விட்டார்.
”பெற்றோரை தொலைபேசியில் அழைத்து, திருமணம் நிறுத்தப்படவில்லை எனில் விஷம் குடித்து விடப் போவதாக கூறினார்,” என நினைவுகூருகிரார் அனில். “வேறொரு பெண்ணை அவர் விரும்பியிருந்தார்.”
திருமணம் நிறுத்தப்படுவதற்கு முன், மணமகளும் திருமண கூட்டமும் வந்து விட்டார்கள். சந்தோஷமாக இருந்திருக்க வேண்டிய தருணம், மணமகனின் பெற்றோருக்கும் கிராமத்துக்கும் தர்மசங்கடமாக மாறியிருந்தது.
மனமுடைந்திருந்த மணமகனின் தந்தை, பணம் கொடுக்க முடியாது என அனிலிடம் கூறினார்.


இடது: அனில் நார்கண்டே வசிக்கும் பந்தாராவின் தும்சார் தாலுகாவின் அலெசூர் அருகே திருமண இடம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத திருப்பமாக, மணமகன் மண நாளுக்கு முதல் நாள் ஓடி விட்டார். திருமணம் நிறுத்தப்பட்டது. மணமகனின் தந்தையால் அனிலுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை. வலது: நிலையான வருமானம் தரும் இடங்களாக விவசாயம் இல்லாது போனதால், அனில் போன்ற பலரும் வாழ்வாதாரத்துக்காக சிறு தொழில் செய்யத் தொடங்கினர். அலங்கார வியாபாரத்தில் கடந்த சில ஆண்டுகளில் அனில் 12 லட்ச ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்
சிறு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் அதிகமாக இருக்கும் பந்தாராவின் அலெசூர் கிராமத்தில் அமர்ந்திருக்கும் அனில், “பணம் கேட்க எனக்கு மனம் வரவில்லை,” என்கிறார். “அவர்கள் நிலமற்ற திவார்கள் (மீனவ சமூகம்). மணமகனின் தந்தை உறவினர்களிடமிருந்து கடன் வாங்கியிருந்தார்,” என்கிறார் அவர். வேலை பார்த்தவர்களுக்கான பணத்தை மட்டும் அனில் கேட்டார். தன்னுடைய கட்டணத்தை அவர் வாங்கவில்லை.
15,000 ரூபாய் நஷ்டம் என்னும் அனில், மூங்கில், மேடை சட்டகம், ஒலிபெருக்கிகள், DJ கருவிகள், பந்தல் துணி, புது சோஃபாக்கள் ஆகியவற்றை போட்டு வைத்திருந்த குடோனை நமக்குக் காட்டியபடி. அலங்காரப் பொருட்களை போட்டு வைக்கவென தன் சிறு சிமெண்ட் வீட்டருகே ஓரு பெரிய அறையை கட்டியிருக்கிறார் அவர்.
அலெசூர் கிராமம், சத்புரா மலைத்தொடரின் அடிவாரத்தில், தும்சார் தாலுகாவின் காட்டுப் பகுதியில் அமைந்திருக்கிறது. ஒரு பயிரை மட்டுமே விளைவிக்கும் இப்பகுதியில், விவசாயிகள் சிறு நிலங்களில் நெல் விளைவிக்கின்றனர். அறுவடைக்கு பிறகு பெரும்பாலானோர் வேலை தேடி புலம்பெயருகின்றனர். பெரிய தொழில்துறையோ சேவைகளோ அங்கு வேலை கொடுக்குமளவுக்கு இல்லை. அப்பகுதியில் பெருமளவில் இருக்கும் பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், கோடைகாலங்களில் தங்களின் பிழைப்புக்கு காடுகளை சார்ந்து இருக்கிறார்கள். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பொறுத்தவரை தும்சாரில் நிலைமை சிக்கலாக இருக்கிறது.
அனில் போன்ற பலரும் பிழைப்புக்கு சிறு தொழில்கள் செய்கின்றனர். விவசாயம் சரிவை கண்டிருப்பதால், அத்தொழில்களும் பாதிப்படைந்திருக்கின்றன.
DJ-க்கள் மற்றும் அலங்காரங்கள் கிராமங்களில் பிரபலமாகி இருக்கின்றன. ஆனால் தற்காலத்தில் தொழில் செய்வது சாதாரண விஷயமாக இல்லை என்கிறார் அனில். “கிராமவாசிகளின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருக்கிறது.”
அனில் எப்போதும் பாஜகவுக்கு வாக்களித்து வந்திருக்கிறார். அவரின் காவோலி சமூகம், உள்ளூர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் சமூகம். ஆனால் கிராமவாசிகளின் அரசியல் தேர்வில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை அவர் பார்க்கிறார் (பந்தாரா-கோந்தியா மக்களவை தொகுதி முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏப்ரல் 19 அன்று வாக்களித்திருக்கிறது). “யாருக்கும் வேலை இல்லை. மக்கள் கவலையில் இருக்கிறார்கள்,” என்கிறார் அவர். ஐந்து வருடத்தில் ஒருமுறை கூட பாஜக மக்களவை உறுப்பினரான சுனில் மேந்தே மக்களை சந்திக்கவில்லை என்பதே அவர் மீதான கோபத்தை அதிகமாக்கி இருக்கிறதென பாரி சந்தித்த பலரும் கூறுகின்றனர்.


மணத் தம்பதிகளுக்கான சோஃபா, DJ கருவிகள், ஒலி பெருக்கிகள், ஷாமியானா, சட்டகங்கள் போன்ற பொருட்களை வீட்டிலுள்ள குடோனில் வைக்கிறார் அனில்
இங்குள்ள பெண்கள் பெரிய விவசாய நிலங்களுக்கு அன்றாடம் செல்கின்றனர் என்கிறார் அனில். காலையில் கிராமத்துக்கு வந்தால், அவர்கள் வேலைக்கு மோட்டார் வாகனங்களில் செல்வதை காண முடியும். மாலை தாமதமாக வருவார்கள். “இளைஞர்கள் பிற தொழிற்சாலைகளிலும் சாலை மற்றும் கால்வாய் கட்டுமானத் தளங்களிலும் பணிபுரிய பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்கின்றனர்,” என்கிறார் அவர்.
ஆரோக்கியம் நன்றாக இருந்திருந்தால் அவரும் கூட வேலை தேடி புலம்பெயர்ந்திருப்பார் என்கிறார். இரண்டு குழந்தைகள் அவருக்கு. ஒரு குழந்தைக்கு வளர்ச்சி தேக்க குறைபாடு (Down Syndrome) இருக்கிறது. “பத்தாம் வகுப்பில் தோல்வியற்ற பிறகு, நாக்பூருக்கு சென்று வெயிட்டராக வேலை பார்த்தேன்.” ஆனால் அப்போது அவர் வீட்டுக்கு திரும்பி, கடன் வாங்கி, பெண் தொழிலாளர்களுக்கான போக்குவரத்துக்கு ஒரு டெம்போ வாங்கினார். அதில் வருமானம் இல்லாமல் போகவே, வாகனத்தை விற்று விட்டு, அலங்கார வியாபாரம் செய்யலாமென ஐந்து வருடங்களுக்கு முன் முடிவெடுத்தார். அந்த நிகழ்வுகளுக்கும் கடனில்தான் வேலை பார்த்தாக சொல்கிறார் அவர். “என் சேவைகளை எடுத்துக் கொண்டு, பணம் பிறகு தருவதாக சொல்வார்கள்,” என்கிறார் அனில்.
”மரண வீட்டில் பந்தல் போடும் வேலைக்கு நான் காசு வாங்குவதில்லை,” என்கிறார் அவர். “திருமணங்களுக்கு 15-20,000 ரூபாய் வரை கட்டணம் பெறுகிறேன். ஏனெனில் அவ்வளவுதான் மக்களால் கொடுக்க முடியும்.”
கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறார் அனில். ஏழு ஏக்கர் நிலத்தை பிணையாக வைத்து வாங்கியிருக்கும் கடனை தவணைகளில் கட்டிக் கொண்டிருக்கிறார்.
”என் விவசாயமும் பால் வியாபாரமும் நல்ல வருமானத்தை கொடுக்கவில்லை,” என்கிறார் அவர். “அலங்கார வியாபாரம் செய்யலாமென பார்க்கிறேன். நிறைய பேர் இந்த வியாபாரம் செய்ய வருகின்றனர்.”
*****
மக்களிடையே கோபமூட்டும் இன்னொரு விஷயமும் இருக்கிறது. தூரத்து பணியிடங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் மரணங்கள். பெரும்பாலான நேரங்களில், எந்த முடிவும் கிட்டாது. வழக்கும் முடியாது.
உதாரணமாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் இரு குடும்பங்களை பாரி சந்தித்தது. திருமணமாகாத 27 வயது விஜேஷ் கொவாலே நிலமற்றவர். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்திலுள்ள சொன்னெகவுனிபள்ளி கிராமத்தருகே இருக்கும் ஒரு அணையின் சுரங்க அணைக் கட்டுமானத்தில் வேலை பார்க்கும்போது மே 30, 2023 அன்று உயிரிழந்தார்.

ரமேஷ் கொவாலேவும் மனைவி ஜானாபாயும் ஆந்திராவுக்கு புலம்பெயர்ந்து சென்று வேலை பார்த்த இடத்தில் உயிரிழந்த மகன் விஜேஷை பற்றிய துயரத்தில் இருக்கின்றனர். மகனை இழந்து ஒரு வருடம் ஆகிறது. ட்ரக் ஒட்டுநராக இருக்கும் மூத்த மகன் ராஜேஷின் திருமண வேலைகளில் அவர்கள் இருக்கின்றனர். மற்ற மகன்கள் வெளியூர் சென்று வேலை பார்க்க குடும்பம் மறுப்பு தெரிவிக்கிறது
“அவருடைய உடலைக் கொண்டு வந்து இறுதிச் சடங்கு நடத்த 1.5 லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்தது,” என்கிறார் தந்தை ரமேஷ் கொவாலே. ‘மின்சாரம் பாய்ந்ததால்’ அவருடைய மகன் உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கை கூறுகிறது.
மின்சார கம்பியை எதிர்பாராமல் விஜேஷ் தொட்டிருக்கிறார் என முதல் தகவல் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. அவர் கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனையில் பலனின்றி இறந்திருக்கிறார்.
“அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனம் வாக்குறுதியை தாண்டி நிவாரணம் ஏதும் வழங்கவில்லை,” என்கிறார் கொவாலே. “கை காசாக கடந்த வருடம் நான் உறவினர்களிடம் பெற்ற கடனை இன்னும் அடைக்க வேண்டியிருக்கிறது.” திருமணம் முடிக்கவிருக்கும் விஜேஷின் அண்ணன் ராஜேஷ் ட்ரக் ட்ரைவராக பணிபுரிகிறார். கடைசித் தம்பி சதீஷ் விவசாய நிலங்களில் வேலை பார்க்கிறார்.
“அவசர ஊர்தியில் அவரின் உடலை கொண்டு வர இரண்டு நாட்கள் ஆனது,” என்கிறார் ரமேஷ்.
கடந்த வருடத்தில், விஜேஷ் போன்ற நான்கைந்து கிராமவாசிகள் வேலைக்கு சென்ற இடங்களில் இறந்திருக்கின்றனர் என்கிறார் அனில். ஆனால் அது வேறு கதை.
சிகாலிக கிராமத்தில், மகன் அதுலை இழந்த சுக்தேவ் உய்க்கிக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை.
“அது கொலையா, விபத்தா என்று கூட இன்னும் எங்களுக்கு தெரியவில்லை,” என்கிறார் சிறு விவசாயியான உய்க்கி. அவர் விவசாயத் தொழிலாளராகவும் பணிபுரிகிறார். “அவரின் உடலை கூட நாங்கள் பார்க்கவில்லை. ஏனெனில் ஆந்திரா போலீஸ் எங்களுக்கு தகவல் கொடுக்காமல், அவரது உடலை எரித்து விட்டனர்.”

அடல் உக்கியா வேலைக்கு சென்றிருந்த ஆந்திராவின் ராஜமுந்திரிக்கருகே மே 2023-ல் உயிரிழந்தார். அவரின் தந்தை சுக்தேவ், தாய் மற்றும் சகோதரி ஷாலு மாதவி ஆகியோர் இன்னும் பதில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். வரும் தேர்தலில் வாக்களிப்பது அவர்களின் மனதில் ஒரு பிரச்சினையாகவே இல்லை
டிசம்பர் 2022ல் வேலை தேடி புலம்பெயரும் குழு ஒன்றுடன் அதுல், ஆந்திராவின் ராஜமுந்திரியில் இருக்கும் நெல்வயலில் இயந்திரம் இயக்கும் வேலைக்கு சென்றார். மே 22, 2023ல் பெற்றோரை தொடர்பு கொண்டு, குழுவினருடன் திரும்பி வருவதாக கூறியிருக்கிறார்.
“அதுதான் அவரின் கடைசி அழைப்பு,” என நினைவுகூருகிறார் உய்க்கி. அதற்குப் பிறகு அதுலி செல்பேசி அணைக்கப்பட்டுவிட்டது. அவரின் சகோதரி ஷாலு மாதவி, அவர் திரும்பி வரவில்லை என்கிறார். “அவரை குறித்து விசாரித்து, அவர் வேலையிடத்துக்கு சென்ற பிறகுதான், ஒரு வாரம் கழித்து அவரது மரணம் குறித்து தெரிய வந்தது.”
குழப்பம் தரக்கூடிய சில காணொளிகளையும் குடும்பத்தினர் காட்டினர். ஒரு மது விடுதிக்கருகே சாலையோரத்தில் அதுல் கிடக்கும் காணொளிகள் அவை. “மக்கள் அவர் குடிபோதையில் இருப்பதாக நினைத்து விட்டுவிட்டனர். ஆனால் அவரை வாகனம் மோதியிருக்க வேண்டும்,” என்கிறார் தந்தை. பின்னந்தலையில் ஆழமான வெட்டுக்காயம் இருப்பதாக உடற்கூராய்வு அறிக்கை குறிப்பிட்டது. “உடல் எரிக்கப்பட்ட இடத்தை போலீஸ் எங்களுக்கு காட்டியது,” என்கிறார் உய்க்கி முதல் தகவல் அறிக்கையையும் உடற்கூராய்வு அறிக்கையையும் எங்களிடம் காட்டி. “என் மகனுக்கு என்ன ஆனது என்பது இன்னும் மர்மம்தான்.” அவருடன் சென்றவர்கள் ஏதும் சொல்ல மறுக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், வேலை பார்ப்பதற்காக புலம்பெயர்ந்துவிட்டனர் என்கிறார் அவர்.
“புலம்பெயர் தொழிலாளர்களின் இத்தகைய விபத்து மரணங்கள் அடிக்கடி நிகழ்கிறது. ஆனாலும் எங்களுக்கு பெரிய உதவி ஏதும் கிடைப்பதில்லை,” என்கிறார் சிக்லியின் தலைவரான சுலோச்சனா மெஹர். பந்தாரா போலீஸுக்கு வழக்கு தொடர்பாக அலைந்து ஓய்ந்து போனார்.
தேர்தலில் வாக்களிப்பதை விட மகனுக்கு நடந்தது என்னவென்பதை கண்டறிவதுதான் உய்க்கிக்கும் குடும்பத்தினருக்கும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. “அவர்களால் பலனில்லை,” என்கிறார் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் தொடர்பில்லாத நிலையை உணர்த்தும் வகையில் சுக்தேவ்.
அலெசூரில் இருக்கும் அனிலுக்கு கொவாலே மற்றும் உய்க்கி குடும்பங்களை தெரிந்திருக்கிறது. ஏனெனில் இரு குடும்பங்களின் மரண நிகழ்வுகளுக்கும் அவர்தான் பந்தல் (இலவசமாக) போட்டிருக்கிறார். “பெரிய வருமானம் இல்லையென்றாலும் இந்த தொழிலும் நிலமும் எனக்கு போதும்,” என்கிறார் அவர். “குறைந்தபட்சம் நான் உயிருடனாவது இருக்கிறேன்.”
தமிழில் : ராஜசங்கீதன்