“முதலில் வரும் இடது பக்கம் திரும்புங்கள். நேராக கொஞ்ச தூரம். கறுப்பு தூணில் ஃபாஜி யின் புகைப்படம் இருக்கும். அதுதான் அவரது வீடு.” ராம்கர் சர்தாரனில் இருக்கும் மூத்த சைக்கிள் மெக்கானிக், முனையில் இருக்கும் வளைவை சுட்டிக் காட்டுகிறார். கிராமத்திலுள்ள மக்கள், அஜய்குமாரை ஃபாஜி (ராணுவ வீரர்) அல்லது தியாகி என குறிப்பிடுகின்றனர்.
ஆனால் அரசின் பார்வையிலோ அவர் இரண்டுமே இல்லை.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிராக நின்று இந்திய எல்லையை தன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அந்த 23 வயது இளைஞர் காத்து நின்றது முக்கியமாக இல்லை. அவரின் முதிய, நிலமற்ற தலித் பெற்றோர் பென்ஷன் அல்லது மகனுக்கான தியாகி என்ற அங்கீகாரம் ஆகியவற்றை குறித்து கனவு கூட காண முடியாது. முன்னாள் ராணுவ வீரருக்கான சுகாதார திட்டம் அல்லது கேண்டீன் கடைகளின் தள்ளுபடி என ராணுவ வீரர்களுக்கான எந்தப் பலனையும் அவர்கள் பெற முடியாது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி அஜய் குமார் சிப்பாயும் அல்ல, தியாகியும் அல்ல.
வெறும் அக்னிவீர்தான்.
லூதியானா மாவட்டத்தில் இருக்கும் இந்த கிராமத்தில், அரசு ஆவணம் முக்கியம். கிராண்ட் ட்ரங்க் சாலையில் 45 நிமிட பயணத்துக்குப் பிறகு, அழகான கடுக்காய் பூக்கள் பூத்திருக்கும் வயல்கள், ராம்கர் சர்தரன் நோக்கி உங்களை அழைத்து செல்லும். அங்குள்ள சுவர்களில் ஏற்கனவே தகவல்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ராணுவ உடையில் அஜயின் அழகிய புகைப்படங்களை தாங்கிய பதாகைகள் ஆங்காங்கே இருக்கின்றன. அவரை தியாகி பகத் சிங்குக்கு இணையாக அங்கு வைத்திருந்தனர். தோழர்களுடன் சென்று பகத் சிங் மரணத்தைத் தழுவி தொண்ணூறு ஆண்டுகள் ஆகி விட்டன. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அவருக்கு தியாகி அங்கீகாரம் வழங்கவே இல்லை.
ஒரு பதாகையில் இப்படி இருக்கிறது:
நவ்ஜவான் ஜாட் உத்டே நே
தான் நிஜாம் பாதல் ஜண்டே நே,
பகத் சிங் அஜ் வி பைதா ஹுந்தே நே,
பாஸ் நாம் பாதல் ஜாந்தே நே…
(இளைஞர்கள்
உயர்ந்தால்
மகுடங்கள் தாழும்.
அன்றாடம் பகத் சிங் பிறக்கிறார்
வெவ்வேறு பெயர்களை இவ்வுலகம் அவருக்கு கொடுக்கிறது…)


இடது: அஜய் குமாரின் வீட்டு வாசலில், அவரின் புகைப்படத்தை தாங்கியிருக்கும் கறுப்பு தூண்கள். வலது: ராம்கர் சர்தரன் கிராமத்திலுள்ள பதாகையில் மேற்கண்ட வாசகங்கள் இருக்கின்றன
ஜனவரி 2024-ல் ஜம்மு காஷ்மீரில் அஜய் குமார் தன் உயிரை தியாகம் செய்தார். தாய் வழி தாத்தாவான ஹவல்தார் பியாரா லால் கொடுத்த ஊக்கத்தில், அஜய் தன் பால்யகாலம் தொட்டு ராணுவத்தில் சேர விரும்பியிருந்தார். “பத்தாம் வகுப்பு முடித்த பிறகு அவர் அதற்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்,” என்கிறார் அவரின் தந்தை சரண்ஜித் சிங்.
“ஆனால் தேர்வு சமயத்தில் அக்னிவீருக்கும் சிப்பாய்க்கும் இருக்கும் வேறுபாடு அவருக்கு தெரிந்திருக்கவில்லை,” என்கிறார் அவர். இப்போது அவரின் மறைவுக்கு பிறகு, குடும்பத்துக்கு மட்டுமின்றி, கிராமத்தின் இளைஞர்களுக்கும் கூட ‘ஒப்பந்த சிப்பாய்’ என்றால் என்வென தெரிந்து விட்டது.
“நாங்கள் நடத்தப்பட்ட விதத்தில், இளைஞர்கள் வெறுப்படைந்து விட்டார்கள்,” என்கிறார் அஜயின் ஆறு சகோதரிகளில் இளையவரான 22 வயது அஞ்சலி தேவி. மறைவுக்கு பிறகும், அக்னிவீரின் குடும்பத்துக்கு எந்தப் பலன்களும் கிடைக்காது என அவர்களுக்கு தெரிந்து விட்டது.”
அவர் தன் கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்துகிறார். “அக்னீவீர்களை அவர்கள் கவசமாக பயன்படுத்துகின்றனர். ஏனெனில் அக்னிவீர் இறந்தாலும், அரசாங்கத்துக்கு எந்த சிக்கலும் இருக்காது. ஏதோ அவர்களின் தியாகத்துக்கு குறைவான மதிப்பு என்பது போல.”
பிரிட்டிஷ் காலத்திலிருந்து ராணுவத்துக்கு பிள்ளைகளை அனுப்பி வரும் இம்மாநிலத்தில் வாழும் இளைஞர்களின் மனங்களை, அக்னிவீரர்களின்பால் காட்டப்படும் இத்தகைய பாரபட்சங்கள் வெகுவாக பாதித்திருக்கிறது. 106 வருடங்களுக்கு முன் 1918ம் ஆண்டில் முடிந்த முதல் உலகப் போரில் பங்குபெற்ற பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்களில் இரண்டில் ஒருவர் பஞ்சாபை சேர்ந்தவர். அச்சமயத்தில் தற்கால ஹரியானாவும் பாகிஸ்தானிலுள்ள மேற்கு பஞ்சாபும்தான் பஞ்சாபாக இருந்தது. 1928ம் ஆண்டில் ராணுவத்தில் இருந்த 1,39,200 சிப்பாய்களில் 86,000 பேர் பஞ்சாபி சிப்பாய்கள்.
சில வருடங்களுக்கு முன் வரை, இதுவே நிலை. பாதுகாப்புத்துறை அமைச்சகம், நாடாளுமன்றத்தில் மார்ச் 15, 2021 அன்று அளித்த பதிலில், இந்திய ராணுவத்துக்கு அதிக வீரர்களை அனுப்பும் மாநிலங்களில் பஞ்சாப் இரண்டாம் இடத்தில் இருக்கும் உண்மை வெளிப்பட்டிருக்கிறது. (பஞ்சாபைக் காட்டிலும் ஏழரை மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசம் முதலாவது). இந்தியாவின் மக்கள்தொகையில் 2.3 சதவிகிதத்தை மட்டுமே கொண்டிருக்கும் பஞ்சாபின் மக்கள்தொகையிலிருந்து ராணுவத்தில் 7.7 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். உத்தரப்பிரதேச வீரர்கள் 14.5 சதவிகிதம் இருக்கின்றனர். எனினும் அம்மாநிலத்தின் மக்கள்தொகை, இந்திய மக்கள்தொகையில் 16.5 சதவிகிதம் ஆகும்.

இரண்டு வருடங்களுக்கு முன் அக்னிவீர் திட்டம் வந்ததும் மூடப்பட்ட சங்கூர் மாவட்டத்தின் லெராககா உடற்பயிற்சி அகாடமியில், ராணுவத்தில் சேரும் விருப்பத்துடன் அணிவகுத்து நின்ற இளைஞர்களின் 2022ம் ஆண்டு புகைப்படம்
அக்னிவீர் திட்டம் அமலான பிறகு, களத்தில் நிலவரம் பெரும் மாற்றத்தை அடைந்தது. ராணுவ பயிற்சி மையங்கள் சிறிய, பெரிய டவுன்களில் மாநிலம் முழுக்க முன்பு இருந்தன. ஆனால் கடந்த இரு வருடங்களில் அவற்றில் பல மூடப்பட்டுவிட்டன. ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கையும் சரிந்து விட்டது.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சங்ரூர் மாவட்டத்தின் லெஹ்ராககா டவுனில் ‘பிசிகல் அகாடெமி’ என்ற பெயரில் ராணுவப் பயிற்சி மையத்தை நடத்திக் கொண்டிருந்த சுரிந்தெர் சிங் தற்போது அதை மூடி விட்டார். பாடியாலா, சங்ரூர், பர்னாலா, ஃபதேகர் சாகிப் மற்றும் மன்சா மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அந்த அகாடமி மூலமாக பயிற்சி அளித்ததாக சொல்கிறார் அவர். அக்னிவீர் திட்டம் அமலான வருடத்தில், ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்து விசாரிப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆக சரிந்தது. “செலவுகளை கூட மீட்க முடியவில்லை. எனவே மையத்தை மூடிவிட்டோம்,” என்கிறார் அவர் வருத்தத்துடன்.
2011ம் அந்த மையம் தொடங்கப்பட்டு 2022ம் ஆண்டில் மூடப்படும் வரை, “கிட்டத்தட்ட 1,400-லிருந்து 1,500 இளைஞர்களுக்கு நாங்கள் ராணுவப் பயிற்சி கொடுத்தோம்,” என்கிறார் அவர்.
பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா போன்ற இடங்களிலுள்ள பயிற்சி மையங்களுக்கும் இதே நிலைதான் என்கிறார் சுரிந்தெர் சிங். “கிட்டத்தட்ட 80 சதவிகித மையங்கள் மூடப்பட்டுவிட்டன,” என்கிறார். 20 சதவிகித மையங்கள்தான் இயங்கி வருகின்றன. அதுவும் அவை காவல்துறை மற்றும் துணை ராணுவப் பயிற்சி மையங்களாக மாற்றப்பட்டதால்தான்.
”ஒரு ஊரிலிருந்து 50லிருந்து 100 இளைஞர்கள் முன்பு ராணுவத்தில் சேர விருப்பம் கொண்டிருந்தார்கள் என்றால், இப்போது அந்த எண்ணிக்கை இரண்டு, ஐந்தாக குறைந்திருக்கிறது. அக்னிவீர் திட்டம் இந்தளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது,” என்கிறார் அவர்.
பாடியாலா மாவட்டத்தின் நபா டவுனில் நியூ சைனிக் பப்ளிக் அகாடமி நடத்திக் கொண்டிருந்த கரம்ஜித் சிங், 2023ம் ஆண்டில் 60 மாணவர்கள் ராணுவத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக சொல்கிறார். ஆனால் புதிய திட்டட்த்தின் உண்மை தெரிய வந்ததால், அவர்களில் சிலர் மட்டும்தான் பயிற்சிக்கு வந்திருக்கிறார்கள். இறுதியில் அந்த அகாடமியும் மூடப்பட்டுவிட்டது.


சங்க்ரூரில் இருப்பதை போன்ற தேர்வு பயிற்சி மையங்கள் கடந்த இரு வருடங்களில், ராணுவத்தில் சேர விரும்புவோரின் எண்ணிக்கை குறைந்து போனதால் மூடப்பட்டு விட்டது
சங்ரூர் மாவட்டத்தின் அலிப்பூர் கல்சா கிராமத்தை சேர்ந்த ஜக்சிர் கார்கும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்தான். ஆனால் உடல் ஆரோக்கிய தேர்வுக்கு செல்லவில்லை. காரணம்? “நான்கு வருட வேலைக்காக உயிரை விட வேண்டாம் என கூறினார்கள் என் பெற்றோர். ஏதேனும் நடந்து விட்டாலும், குடும்பத்துக்கு ஒன்றும் கிடைக்காது. அகாடமியில் என் பேட்ச்சை சேர்ந்த பலர், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் உடல் ஆரோக்கிய தேவுக்கு செல்லவில்லை,” என்கிறார் அவர். மோட்டார் பைக்குகளை வாங்கி விற்கும் வணிகத்தில் ஜக்சிர் இருக்கிறார்.
ராணுவத்துக்கு பிள்ளைகளை அனுப்பும் பாரம்பரியம் தொன்று தொட்டு இருந்ததால், பஞ்சாபின் சிறு டவுன்களிலும் பெரும் நகரங்களிலும் தேர்வுப் பயிற்சி மையங்கள் இருந்திருக்கின்றன. இன்று அவற்றில் பல மூடப்பட்டோ அல்லது காவல்துறை பயிற்சி மையமாக மாற்றப்பட்டோ விட்டது என்கிறார் சுரிந்தெர் சிங். முதலில் இந்த மையங்கள், மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரை தேர்வுக்கு இருந்த தடையால் பாதிக்கப்பட்டன. முக்கியமாக கோவிட் தொற்றுக் காலத்தில் பாதிப்புக்குள்ளாகின. பிறகு கேள்வித்தாள் கசிந்ததில் பாதிப்படைந்தன.
பிறகு அக்னிபாத் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்தது. ஜூன் 14, 2022 அன்று ஒன்றிய அமைச்சரவையில் அற்புதமான தேர்வு முறை யாக அத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இளைஞர்கள் வழக்கமான 15 வருடங்களுக்கு பதிலாக நான்கு வருடங்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
“மூன்று சேவைகளுக்கான மனிதவளக் கொள்கையின் புதிய காலம் தொடங்கிவிட்டதாக” இத்திட்டத்தை அரசாங்கம் கொண்டாடி கொண்டு வந்தது. பாரியின் செய்திகளின்படி 2020ம் ஆண்டு வரை வருடாந்திர சராசரி தேர்வு 61,000-மாக இருந்திருக்கிறது. அக்னிபாத் திட்டத்தால், இது 46,000 ஆக குறையும்.
இந்தச் சரிவு, வாழ்க்கை முழுக்க ராணுவத்தில் பணியில் இருக்கலாம் என்கிற கிராமப்புற இளைஞர்களின் கனவுக்கு முடிவு கட்டியது. இந்த வேலைவாய்ப்பு கிராமப்புற இளைஞர்களுக்கு முக்கியம். இப்போது வெறும் நான்கு வருடங்கள் மட்டும்தான் அவர்கள் இருக்க முடியும். நான்கில் ஒரு பங்கு வீரர்கள் மட்டும்தான் வழக்கமான பணிக்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
கிராம சமூகத்தில் ராணுவப் பணிக்கு இருக்கும் மதிப்பையும் தாண்டி, அத்தகைய ஒரு நிலையான வேலைவாய்ப்புதான், பஞ்சாபிகள் ராணுவத்தில் சேர உற்சாகம் காட்டியதற்குக் காரணம் என்கிறார் பாடியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர கல்வித்துறையின் முன்னாள் தலைவராக இருந்த டாக்டர் உம்ராவ் சிங்.


பிள்ளைகளை ராணுவத்துக்கு அனுப்பும் பாரம்பரியத்தால், பயிற்சி மையங்கள் எப்போதும் பஞ்சாபின் சிறு டவுன்கள் மற்றும் பெரு நகரங்களில் இருந்திருக்கின்றன
“அக்னிவீர் திட்டம் அமலானபிறகு, ராணுவ வேலைக்கு இருந்த மதிப்பு போய்விட்டது. இப்போது அந்த வேலைகளை ‘ஒப்பந்த சிப்பாய்கள்’ எனக் குறிப்பிடுகிறார்கள். மதிப்பு போய்விட்டது. ராணுவத்தில் சேர விரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து விட்டது. அக்னிவீர் அமலான பிறகு, வெளிநாட்டுக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை தடாலடியாக அதிகரித்தது. ஆனால் இப்போது கனடா நாட்டுடன் இருக்கும் மோசமான உறவால், அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. ஏற்கனவே தீவிர விவசாய நெருக்கடியில் இருக்கும் பஞ்சாபின் கிராமப்புற சமூகம் ஒரு பேரழிவை எதிர்நோக்கியிருக்கிறது,” என்கிறார் டாக்டர் சிங்.
ராணுவத்தில் சேர்பவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் குடும்பங்களையும் நிலமற்ற தலித் குடும்பங்களையும் சார்ந்தவர்களாக இருந்தனர். மன்சா மாவட்டத்தின் ரங்க்ரியால் கிராமத்தில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களை எழுத்துத் தேர்வுக்கு தயார்படுத்தும் யத்விந்தர் சிங், “முன்பெல்லாம் ஐந்து-ஏழு ஏக்கர் நிலம் கொண்டிருந்த குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களிடம் கூட உற்சாகம் இருந்தது. ஆனால் இப்போது விவசாயப் பின்னணியிலிருந்து ஒருவர் வருவது கூட சிரமமாக இருக்கிறது. இப்போது வரும் இளைஞர்கள் அனைவரும் தலித் குடும்பங்களிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லாததால் இந்த வேலைக்கு ஆர்வம் காட்டுகிறார்கள்,” என்கிறார்.
அஜய் குமாரும் ஒரு நிலமற்ற தலித் குடும்பத்தை சேர்ந்தவர்தான். “கனவை அடைய, பல வருடங்களுக்கு அவர் தினக்கூலி வேலை செய்தார். அவரின் தாயும் பண்ணையார்களின் மாட்டுத் தொழுவத்தை சுத்தப்படுத்துவது தொடங்கி ஊரக வேலைத் திட்ட வேலைகள் வரை பல வேலைகளை செய்தார்,” என்கிறார் தந்தை சரன்ஜித் சிங். “பதிலுக்கு எங்களுக்கு என்ன கிடைத்தது? பணமா? பணம் கரைந்து விடும்.” (நிவாரணம் பற்றியல்ல, காப்பீடு பணத்தை பற்றி சொல்கிறார் அவர். ஏனெனில் அஜய்க்கு நிவாரணம் பெறும் தகுதி இல்லை).
அங்கிருப்பவற்றை சரன்ஜித் சுட்டிக் காட்டுகிறார். கறுப்பு ராணுவப் பெட்டியில் சாய்ந்திருக்கும் எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும், ‘அக்னிவீர் அஜய் குமார்’ என்ற பெயர். அந்த வார்த்தைகள், அஜயினுடையதாக மட்டுமின்றி பஞ்சாபை சேர்ந்த பல இளைஞர்களின் உடைந்து போன கனவுகள் பற்றிய கதையை சொல்வதாக இருந்தது.


இடது: அக்னிவீர் அஜய்குமாரின் படம். வலது: அஜய் போரிட்ட 25வது படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் கெளரவ் ரிஷி, குடும்பத்துக்கு அனுப்பிய இரங்கல் செய்தி


இடது: அக்னிவீர் அஜய் குமாரின் ட்ரங்க் பெட்டி. வலது: அக்னிவீரர் அஜய் குமாரின் பெற்றோர் சரண்ஜித் சிங் மற்றும் மஞ்சீத் கெளர் ஆகியோர், தாய்நாடு மற்றும் தியாகம் குறித்த பதாகையை ஏந்தியபடி பின்னணியில்
அஜயின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட அறை, கடந்த காலத்தை சீக்கிரமாகவே எட்டி விட்டது. அவர்களின் ஒரே மகனும் ஆறு சகோதாரிகளின் ஒரே சகோதரனுமான அஜயின் இஸ்திரி போடப்பட்ட சீருடை, தலைப்பாகை, பாலிஷ் ஷூக்கள் மற்றும் ஃப்ரேம் போட்ட புகைப்படங்கள் அறையில் நிறைந்திருந்தன.
உரையாடலுக்கு நடுவே நிரம்பும் நீண்ட அமைதிக்கிடையே, அஜயின் தந்தையிடம் கேட்டோம்: கிராமத்தின் பிற இளையோர் ராணுவத்தில் சேர்வதை இன்னும் அவர் ஆதரிப்பாரா? “நான் ஏன் ஆதரிக்க வேண்டும்? என் மகன் ஒன்றுமில்லாமல் போய்விட்டான். மற்றவர்களின் மகன்களுக்கும் ஏன் அந்த விதி நேர வேண்டும்?” எனக் கேட்கிறார்.
அவருக்கு பின்னால் இருக்கும் சுவரில் இருக்கும் அஜயின் புகைப்படம் சொல்கிறது:
லிக் தியோ லாஹு நால் அமர் கஹானி, வதான்
டி காதிர்
கார் தியோ குர்பான் ஏ ஜவானி வடான் டி காதிர்
(தாய்நிலத்தின்
மீதான அன்புக்காக, அழியாத கதைகளை உன் ரத்தம் எழுதட்டும்
தாய்நிலத்தின் மீதான பற்றுக்காக, உன் இளமை ஈகமாகட்டும்…)
நினைவுகளின் கடலில், சரண்ஜித் சிங் ஒரு கேள்வியை கேட்பதைப் போல் தோன்றியது: தாய்நிலம் பதிலுக்கு என்ன தரும்?
பின்குறிப்பு:
ஜனவரி 24, 2025 அன்று மூவண்ணக் கொடி போர்த்திய இன்னொரு சடலம், பஞ்சாபின் மன்சா மாவட்டத்தின் அக்லியா கிராமத்திலுள்ள சிறு விவசாயியின் வீட்டுக்கு சென்றது. 24 வயது லவ்ப்ரீத் சிங்கின் உடல் அது. கடந்த 15 மாதங்களில் எல்லையை காக்கும் பணியில் உயிரை ஈகை செய்த பஞ்சாபின் மூன்றாவது அக்னிவீரர் அவர்.
அவர்கள் அனைவரும் காஷ்மீரில் உயிழந்திருக்கின்றனர். முதல் நபராக அக்னிவீர் அம்ரித்பால் சிங், அக்டோபர் 2023- ல் உயிரிழந்தார். ஜனவரி 2024- ல், இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் அஜய் குமார் உயிரிழந்தார். அஜய் குமாரின் குடும்பத்தைப் போலவே லவ்ப்ரீத்தின் தந்தை பீந்த் சிங்கும் மகனின் நினைவுகளில் உழலுகிறார்.
“ லவ்ப்ரீத்துக்கென புதிய கைக்கடிகாரம் வீட்டுக்கு வந்திருக்கிறது. திரும்ப வந்ததும் அதை அணிய நினைத்திருந்தான். இனி அது நடக்காது,” என ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் உடைந்து அழுகிறார் பீந்த். இன்னொரு குடும்பத்திலும் நேரம் உறைந்து விட்டது. ஆனால் ஒவ்வொரு இளைஞனின் உயிரிழப்பும் அக்னிவீரர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையையும் நியாயத்தையும் நாள்தோறும் உரத்துக் கொண்டே இருக்கிறது.
தமிழில்: ராஜசங்கீதன்