பிரகாஷ் புந்திவால் வெற்றிலைகளுக்கு நடுவே நிற்கிறார். இதய வடிவிலான வெற்றிலைகள் மெல்லிய கொடிகளில் அடர்ந்து வளர்கின்றன. வெப்பம் மற்றும் காற்றிலிருந்து காக்க அவற்றின் மீது சிந்தடிக் வலை போர்த்தப்பட்டிருக்கிறது.
வெற்றிலை, பரவலாக இந்தியா முழுவதும் உணவுக்கு பின் சாப்பிடும் விஷயமாக இருக்கிறது. பலவகை விதைகள் மற்றும் பெருஞ்சீரகம், வெற்றிலை பாக்கு, ரோஜாப்பூ குல்கந்த் போன்றவை ஒரு இலையில் சுண்ணாம்புடன் கட்டி பீடாவாக போட வெற்றிலைகள் முக்கியம்.
11,956 பேர் வசிக்கும் அந்த கிராமம் நல்ல தரமான வெற்றிலைகளுக்கு பெயர் பெற்றது. குக்தேஷ்வரின் பிரகாஷ் குடும்பத்தை போல பலவும் பல காலமாக வெற்றிலை விவசாயம் செய்து வருகின்றன. தம்போலி சமூகத்தை சேர்ந்த அவர்கள், மத்தியப்பிரதேசத்தில் பிற பிற்படுத்தப்பட்ட சாதியாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். தற்போது அறுபது வயதுகளில் இருக்கும் பிரகாஷ் ஒன்பது வயதிலிருந்து வெற்றிலை விற்று வருகிறார்.
ஆனால் புந்திவாலின் 0.2 ஏக்கர் நிலத்தில் பிரச்சினை. மே 2023-ல் பிபர்ஜாய் புயல், இந்த சிறு விவசாயியின் நிலத்தில் அழிவை ஏற்படுத்தியது. “எங்களுக்கு எந்தக் காப்பீடும் வழங்கப்படவில்லை. புயலில் எல்லாமே அழிந்திருந்தாலும் அரசாங்கம் எந்த உதவியும் செய்யவில்லை,” என்கிறார் அவர்.
பல விவசாயப் பொருட்களுக்கு வானிலை சார்ந்த காப்பீடை ஒன்றிய அரசு, தேசிய விவசாய காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கி வந்தாலும், அவற்றில் வெற்றிலை விவசாயம் இடம்பெறவில்லை.


வெற்றிலை நிலங்கள் பச்சை வலையால் (இடது) நீமுச் மாவட்டத்தின் குக்தேஷ்வர் கிராமத்தில் போர்த்தப்பட்டிருக்கிறது. பிரகாஷ் புந்திவாலின் நிலமும் (வலது) அதே போல் போர்த்தப்பட்டிருக்கிறது


இடது: பிரகாஷின் நிலத்துக்கு செல்லும் வழி, அவர்களின் வீட்டிலிருந்து 6-7 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. வலது: வெற்றிலைகள் மெல்லிய கொடிகளில் அடர்த்தியாக வளர்கின்றன
வெற்றிலை விளைவிப்பது மிகவும் கஷ்டம்: “வெற்றிலை விவசாயத்தில் நிறைய வேலை இருக்கிறது. எங்களின் எல்லா நேரத்தையும் அது எடுத்துக் கொள்ளும்,” என்கிறார் பிரகாஷின் மனைவியான ஆஷாபாய் புந்திவால். ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒருமுறை அந்த தம்பதி நிலத்துக்கு நீர் பாய்ச்சுகின்றனர். “சில விவசாயிகள் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை கொண்டு நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கின்றனர். ஆனால் எங்களைப் போன்ற பெரும்பாலானோர் இன்னும் பாரம்பரிய முறையைதான் பின்பற்றுகிறோம்,” என்கிறார் பிரகாஷ்.
வெற்றிலை ஒவ்வொரு வருட மார்ச் மாதமும் விதைக்கப்படுகிறது. “வீட்டில் கிடைக்கும் மோர், உளுந்து, சோயாபீன் மாவு போன்றவை மண்ணில் கலக்கப்படும். நெய் கூட நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால் இப்போது அதன் விலை அதிகம் என்பதால், நாங்கள் அதை கலப்பதில்லை,” என்கிறார் பிரகாஷ்.
பெண்கள்தான் வெற்றிலைக் கொடிகளை திருத்துகின்றனர். அன்றாடம் 5,000 இலைகள் வரை பறிக்கின்றனர். வலையையும் பழுது பார்த்து, கொடிகளுக்கு ஆதரவாக மூங்கில் கம்பையும் சரி செய்து வைக்கின்றனர்.
“ஆணை விட பெண்ணுக்கு இரண்டு மடங்கு வேலை,” என்கிறார் அவர்களின் மருமகளான ரானு புந்திவால். 30 வயதாகும் அவர், வெற்றிலை நிலங்களில் பதினொரு வயதிலிருந்து வேலை பார்த்து வருகிறார். “அதிகாலை நான்கு மணிக்கு நாங்கள் கண் விழிக்க வேண்டும். வீட்டு வேலைகள் செய்ய வேண்டும். வீடு சுத்தப்படுத்தி, சமைக்க வேண்டும்.” மதிய உணவையும் அவர்கள்தான் சுமந்து வருவார்கள்.
வெற்றிலை நிலத்தை 2000மாம் வருடங்களில் அக்குடும்பம் மாற்றியது. “நீர் பற்றாக்குறையாலும் மண் தரத்தாலும் எங்கள் வீட்டிலிருந்து 6-7 கிலோமீட்டர் தொலைவுக்கு மாற்றினோம்,” என்கிறார் பிரகாஷ்.


இடது: ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் பானை கொண்டு பிரகாஷ் நிலத்துக்கு நீர் பாய்ச்சுகிறார். வலது: ஓய்வெடுக்கவும் தேநீர் போடவும் நிலத்திலுள்ள குடிசை
விதைகளுக்கும் நீர்ப்பாசனத்துக்கும் அவ்வப்போது தொழிலாளருக்குமென அவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவழிக்கின்றனர். “சில நேரங்களில் (வருடத்துக்கு) 50,000 ரூபாய் கிடைப்பது கூட கஷ்டம்,” என்கிறார் பிரகாஷ். கூடுதலாக அவர்களுக்கு இருக்கும் 0.1 ஏக்கர் நிலத்தில் கோதுமை மற்றும் சில காய்கனிகளை விளைவித்து பிழைப்பு ஓட்டுகின்றனர்.
குடும்பம், நல்ல இலைகளை சேகரித்து, மண்டியில் விற்கவென அடுக்கி வைக்குமென கூறுகிறார் ரானு. “வெற்றிலைகளை அடுக்கி வைக்க வழக்கமாக நள்ளிரவாகி விடும். அதிகாலை 2 மணி வரை கூட வேலை பார்ப்போம்,” என்கிறார் ஆஷாபாய்.
100 வெற்றிலைகள் கொண்ட பொட்டலங்களாக மண்டியில் அவை விற்கப்படும். தினமும் காலை 6.30-லிருந்து 7.30 மணி வரை விற்பனை நடக்கும். “கிட்டத்தட்ட 100 பேர் விற்பனையில் பங்கேற்பார்கள். ஆனால் 8-10 பேர்தான் வாங்க இருப்பார்கள்,” என்கிறார் மண்டிக்கு வெற்றிலை விற்க வந்திருக்கும் சுனில் மோடி. 2-3 நாட்களில் இலைகள் மோசமாகி விடும். “எனவே அவற்றை வேகமாக நாங்கள் விற்க வேண்டும்,” என்கிறார் 32 வயதாகும் அவர்.
“இன்று மோசமில்லை. ஒரு பொட்டலம் 50 ரூபாய்க்கு விற்கிறது. வழக்கத்தை விட அதிகம் விற்கிறது,” என்கிறார் சுனில். “திருமண காலங்களில் இந்த தொழில் லாபத்தை கொடுக்கும். அப்போதுதான் பூஜைகள் நிறைய நடக்கும். திருமண நிகழ்வுகளில் வெற்றிலைக் கடைகளை மக்கள் போடுவார்கள் என்பதால் வெற்றிலை அதிகம் விற்கும். அதுவும் குறைந்த காலம்தான். அதற்கு பிறகு பெரிதாக விற்காது,” என்கிறார் சுனில். காலத்தை பொறுத்து விற்பனை மாறுகிறது.


வெற்றிலைகள் சுத்தப்படுத்தப்பட்டு 100 கொண்ட பொட்டலங்களாக (இடது) கட்டப்பட்டு மண்டியில் (வலது) அன்றாடம் விற்கப்படுகிறது
சுலபமாக கிடைக்கக் கூடிய புகையிலை பொட்டலங்கள் இன்னொரு பிரச்சினை. “வெற்றிலை வாங்க இப்போதெல்லாம் எவரும் விரும்புவதில்லை,” என்கிறார் பிரகாஷ். ஒரு பான் பீடாவுக்கு விலை 25-30 ரூபாய். அந்த விலையில் ஐந்து புகையிலை பொட்டலங்கள் கிடைக்கும். “வெற்றிலை உடலுக்கு நல்லதென்றாலும் மலிவாக கிடைப்பதால் புகையிலையையே மக்கள் விரும்புகின்றனர்,” என்கிறார் அவர்.
சவுரப் டோடாவால் வெற்றிலை விவசாயியாக இருந்தவர். நிலையற்ற வருமானத்தால் வெதும்பி அத்தொழிலை 2011ம் ஆண்டில் அவர் விட்டுவிட்டு தற்போது ஒரு சிறு மளிகைக் கடை நடத்தி வருகிறார். வருடத்துக்கு 1.5 லட்சம் ரூபாய் அதிலிருந்து அவர் ஈட்டுகிறார். வெற்றிலை விவசாயியாக அவர் ஈட்டிய வருமானத்தை காட்டிலும் இரு மடங்கு.
வெற்றிலை விவசாயத்திலிருந்து விஷ்ணு பிரசாத் மோடி, கணிணி இயக்கும் பணிக்கு மாறி 10 வருடங்களாகி விட்டது. வெற்றிலை விவசாயத்தில் லாபமில்லை என்கிறார் அவர்: “வெற்றிலை விவசாயத்துக்கென சரியான நேரம் கிடையாது. கோடை காலத்தில் இலைகள், சூடான காற்றால் பாதிக்கப்படும். குளிர்காலத்தில் குறைவான வளர்ச்சிதான் இருக்கும். மழைக்காலத்தில், கனமழை மற்றும் புயலால் ஆபத்து இருக்கும்.”
பனாரஸின் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு ஏப்ரல் 2023-ல் கிடைத்ததை அடுத்து, வெற்றிலைகள் வளர்க்கும் பிரகாஷின் மகன் பிரதீப், “எங்களுக்கும் அரசாங்கம் புவிசார் குறியீடு கொடுத்தால், எங்களின் வியாபாரமும் நன்றாக நடக்கும்,” என்கிறார்.
தமிழில்: ராஜசங்கீதன்.