“என் மாணவர்கள் மீதான அளவற்ற அன்பும், முழுமையான ஏற்பும் முக்கியம் என்பதை ஓர் ஆசிரியராக நான் கற்றுக் கொண்டேன்!”
மென்மையாக, ஆனால் உறுதியாக மேதா தெங்க்ஷா தன் கருத்தை முன் வைக்கிறார். சிறப்பு ஆசிரியரான அவர், சாதனா கிராமத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். பல்வேறு வயதுகளையும் அறிதிறன்களையும் கொண்ட 30 பேர் அங்கு படிக்கின்றனர். அடிப்படை வாழ்க்கைத் திறன்கள், கலை, இசை மற்றும் நடனம் ஆகியவற்றுடன் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
புனே மாவட்டத்தின் முல்ஷி ஒன்றியத்தில் சாதனா கிராமம் இருக்கிறது. அறிதிறன் குறைபாடு கொண்ட வளர்ந்தவர்களுக்கான விடுதியுடன் கூடிய கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் ‘தனித்துவ நண்பர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். ஒரு இதழியலாளராக பயிற்சி பெற்ற மேதா, தன்னுடைய பொறுப்பை 10 பேருக்கான கிரக மாதா (வீட்டுத் தாய்) என விளக்குகிறார். “தாயாக இருக்கும் ஆசிரியர்” எனக் குறிப்பிடுகிறார்.
காது கேளாதோருக்கான தயாரி பள்ளியின் சிறப்பு ஆசிரியர் சத்யபாமா அல்ஹத் சொல்கையில், “விடுதிப் பள்ளியில் இருக்கும் எங்களை போன்ற ஆசிரியர்கள், பெற்றொரின் பங்கையும் வகிக்கிறார்கள். வீட்டில் இல்லை என்கிற வருத்தம் பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது,” என்கிறார். ஷ்ராவன் மதத்தில் கொண்டாடப்படும் நாக் பஞ்சமி விழாவின் பாரம்பரிய விளையாட்டான புகாதி விளையாட்டை விளையாட சில சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார் அவர். தயாரியில் 40 விடுதி மாணவர்களும் 12 நாள்தோறும் பள்ளிக்கு வந்து படிக்கும் மாணவர்களும் படிக்கின்றனர். அப்பள்ளியின் மாணவர்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, தில்லி, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களிலிருந்து வந்திருக்கின்றனர்.


இடது: தனித்திறன் குழந்தைகளுக்கான பள்ளிகளில் ஒன்றுக்கேனும் சென்று அன்பான வார்த்தைகளால் என்ன சாதிக்க முடியும் என்பதை பார்க்கும்படி எல்லா ஆசிரியர்களையும் கோருகிறார் சாதனா கிராமத்தின் நிறுவன உறுப்பினரான மேதா தெங்ஷே.வலது: ‘இங்கிருக்கும் 30 பேரும் சண்டையிடுவார்கள், ஆனால் ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள்,’ என்கிறார் கஞ்சன் யெசாங்கர்


புனேவிலுள்ள காது கேளாதோருக்கான தயாரி பள்ளியில் சிறப்பு ஆசிரியராக சத்யபாமா அல்ஹத் இருக்கிறார். அவர் நாக பஞ்சமி விழாவின் விளையாட்டான புகாதி மற்றும் இதர பாரம்பரிய விளையாட்டுகளை சிறுமிகள் மற்றும் சிறுவர்களுடன் விளையாடுகிரார். ‘எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோரும் ஆவர், என்கிறார் அவர்
பள்ளியில் படிப்பு முடித்த மாணவர்கள், பள்ளியின் வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து நல்லவிதமாக சொல்வதைக் கேட்டு, பெற்றோர் தங்களின் குழந்தைகளை இப்பள்ளிக்கு அனுப்புகின்றனர் எனக் கூறுகிறார் சத்யபாமா. கட்டணம் இல்லாததும் விடுதி வசதியும் இப்பள்ளிக்கு ஈர்ப்பை தருகிறது. 4.5 வயது சிறுவர்கள் கூட வந்து சேருகின்றனர். சுவாரஸ்யம் என்னவென்றால், பள்ளியில் சேர்க்க வேண்டுமென்கிற விருப்பதில் வரும் விசாரணைகள் யாவும் காது கேளாதோர் சார்ந்து குடும்பங்களிடமிருந்து மட்டுமல்ல என்பதுதான். “காது கேட்கும் குழந்தைகளின் பெற்றோர் கூட வந்து விசாரிக்கின்றனர். அவர்களை நாங்கள் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கிறது,” என்கிறார் சத்யபாமா.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர்கள் ‘சிறப்பு ஆசிரியர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு குழந்தையின் குறைபாடு, கற்றல் திறன், தனித் தேவைகள் சார்ந்து அவர்கள் கற்பிக்கின்றனர். கற்றல் உத்திகளையும் முறைகளையும் தாண்டிய விஷயமாக தனித்துவக் கல்வியை இந்த ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கருதுகின்றனர். குழந்தைக்கும் ஆசிரியருக்கும் இடையேயான உறவு முக்கியம். 2018-19ம் ஆண்டில் 3,00,467 சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகள் (CWSN) 1-லிருந்து 12ம் வகுப்பு வரை சேர்ந்ததாக மகாராஷ்டிர அரசு குறிப்பிடுகிறது. 1,600 சிறப்பு பள்ளிகள் மகாராஷ்டிராவில் இருக்கின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான 2018ம் ஆண்டின் அரசு கொள்கை யின்படி, குறைந்தபட்சம் ஒரு ஆசிரியரேனும் கல்வி பெற உதவும் வகையில் ஒவ்வொரு பள்ளியில் இருக்க வேண்டும். ஆனால் மேதாவை பொறுத்தவரை, 96 கிராமங்களை கொண்ட முல்ஷி ஒன்றியத்தில் 2018ம் ஆண்டில் மட்டும் வெறும் ஒன்பது சிறப்பு கல்வியாளர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர்கள் அவர்களின் வித்தியாசங்களையும் குறைபாடுகளையும் தனித்திறன்களையும் ஏற்றுக் கொண்டு தேவையான கற்றலை அளிக்கின்றனர்
*****
சிறப்பு ஆசிரியருக்கு தனித்துவமான கற்பிக்கும் திறன்கள் இருக்க வேண்டும். ”குறிப்பாக மாணவர்கள் உங்களின் பெற்றோரின் வயதில் இருக்கும்போது அது சுலபம் இல்லை,” என்கிறார் ராகுல் வாங்கேடே. வர்தாவை சேர்ந்த 26 வயது சமூக ஊழியரான அவர், கடந்த வருடத்திலிருந்து இங்கிருக்கிறார். அவருடன் பணிபுரிபவரான 27 வயது கஞ்சன் யெசாங்கரும் வர்தாவை சேர்ந்தவர்தான். ஐந்து வருடங்களாக மாணவர்களுக்கு கற்பித்து வரும் அவர், சந்தோஷமாக நபராக இருக்க மாணவர்கள் அவருக்குக் கற்றுக் கொடுத்திருப்பதாக நம்புகிறார்.
இருபது வயது குனால் குஜாரின் அறிதிறன் விளிம்பு நிலையில் உள்ளது. இடதுகையில் குறைபாடும் கொண்டிருக்கிறார். சமூகப் பணியாளரான 34 வயது மயூரி கெயிக்வாடும் அவருடன் பணிபுரிபவர்களும் அவருக்கும் ஏழு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் வகுப்புகள் நடத்தியிருக்கின்றனர். “எனக்கு அவர் பாடல்களையும் வாய்ப்பாடுகளையும் உடற்பயிற்சியையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். கைகளை இப்படி நகர்த்து, பிறகு இப்படி,” என்கிறார் குனால், புனேவின் அருகே இருக்கும் ஹட்ஷியின் கலேகர் வாடியை சேர்ந்த தேவ்ராய் மைய ஆசிரியர்களைக் குறித்து.
அன்பும் இக்குழந்தைகளுடனான இணக்க சிந்தனையும் இந்தப் பணிக்கு அவசியம் என்கிறார் மயூரி. கட்காரி பழங்குடி குழந்தைகளுடன் பணிபுரியும் அவர் நூலகங்களை பார்த்துக் கொள்கிறார். விவசாயியும் சமூக ஊழியருமான அவர் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளிடம் காட்டும் பரிவும் அன்பும்தான், தேவ்ராய் மையத்தில் ஆசிரியராக வைத்தது.
சங்கிதா கலேலரின் மகன் சொகம், வலிப்பு நோய் கொண்டவர். அமருவது தொடங்கி பேசுவது வரை அவருக்கு, அவர்தான் ஆசிரியராக இருக்கிறார். “இப்போது அவன் ஆய், ஆய் என சொல்ல முடிகிறது,” என்கிறார் அவர். பத்து வயது சொகம், ஒரு சாவியை தூக்கிப் போட்டு அது போடும் சத்தத்தை கேட்டு விளையாடுகிறார்.


சாதனா கிராமத்தில், ராகுல் வங்கேடே (இடது) தனித்துவ நண்பர்களுடன் நடனமாடுகிறார். ‘அவர்களின் மனநிலைக்கேற்ப நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்,’ என்கிறார் அவர். சமூகப் பணியாளரும் ஆசிரியருமான கஞ்சன் யெசாங்கர் இங்கு (வலது) நடனத்தில் இருக்கிறார். ‘மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்க நான் நடனத்தை பயன்படுத்துகிறேன். பல நடன சிகிச்சைகளை பயன்படுத்துகிறேன்,’ என்கிறார் அவர்


இடது: சங்கிதா கலேகரின் 10 வயது மகன் சொகம் வலிப்பு நோய் கொண்டவர். அதிகம் பேச முடியாதவர். ஆனால் தற்போது ‘ஆய் ஆய்’ என சொல்வதாக அவரின் தாய் சொல்கிறார். வலது: ஹட்ஷியில் ஃபுலாபி லொயாரே (இடது ஓரம்) மகள் நந்தாவுடன் மற்றும் சங்கிதா கலேலர் (சிவப்பில்) குனால் குஜார் மற்றும் மயூரி கெயிக்வாடுடன் (வலது ஓரம்)
புனேவின் காது கேளாதோருக்கான தயாரி விடுதிப் பள்ளி மாணவர் ஒவ்வொருவரும் எழுப்பும் ஒவ்வொரு சத்தமும் பேசுவதை நோக்கிய படிக்கட்டு ஆகும். இந்த சத்தங்கள் மற்றும் சைகைகள் ஆகியவற்றை தாண்டி, “சாமானிய குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் இடையே வித்தியாசம் இல்லை,” என சுட்டிக் காட்டுகிறார் கடந்த 24 வருடங்களாக அங்கு பணிபுரிந்து வரும் சத்யபாமா அல்ஹத்.
கடந்த 50 வருடங்களாக சிறப்பு ஆசிரியர் பயிற்சி அளித்து வரும் புனேவின் சுஹ்ருத் மண்டல், காது கேளாதோருக்கென தொடங்கிய 38 பள்ளிகளில் அதுவும் ஒன்று. இந்த ஆசிரியர்கள்பி எட் படிப்போ அல்லது பட்டய படிப்புகளோ முடித்திருக்கின்றனர். பெரும் புரிதலுடன் சிறப்பு ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
4ம் வகுப்பின் கரும்பலகையில் கட்டடம், குதிரை, நாய் மற்றும் குளம் ஆகியவற்றின் அழகிய படங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அவை யாவும் மோகன் கனேகர் மாணவர்களுக்கு கற்பிக்க விரும்பும் வார்த்தைகள். 21 வருட அனுபவம் வாய்ந்த 54 வயது ஆசிரியரான அவர், பேச்சு, உதட்டசைவு, சைகை, கற்பிக்கும்போது எழுதுவது என எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான தொடர்பு பயிற்சியை வழங்குகிறார். ஒவ்வொரு சைகையையும் பார்த்து அவரின் மாணவர்கள், வெவ்வேறு அளவு மற்றும் குரல்களில் வார்த்தைகளை திரும்பச் சொல்ல முயலுகின்றனர். அவர்களின் சத்தம் கனேகருக்கு புன்னகையை வரவழைக்கிறது. ஒவ்வொரு குழந்தையின் உச்சரிப்பையும் அவர் சரி செய்கிறார்.


காது கேளாதோருக்கான தயாரி பள்ளியில் அதிதி சாதே (இடது) பட அட்டைகளை பயன்படுத்துகிறார். விடுதி கண்காணிப்பாளரான சுனிதா சைன் (வலது) நிறங்களையும் மராத்தி எழுத்துகளையும் இளம் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்


மோகன் கனேகர் (இடது) தயாரி பள்ளியின் அனுபவம் வாய்ந்த சிறப்பு ஆசிரியர் ஆவார். 4ம் வகுப்பு மாணவர்களுக்கு மராத்தி சொற்களை கற்றுக் கொடுக்கிறார். ‘இவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமெனில் உங்களுக்கு நன்றாக வரையத் தெரிந்திருக்க வேண்டும்,’ என்கிறார். அவரின் வகுப்பில் ஒரு சிறுமிகள்குழு (வலது) ஆசிரியரின் சைகை மற்றும் பேச்சை கவனிக்கிறது
அடுத்த வகுப்பில், அதிதி சாதேவுக்கு பேச்சுத் திறன் குறைபாடு, ஏழு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதிலிருந்து அவரை தடுக்கவில்லை. அப்பள்ளியில் அவர் 1999ம் ஆண்டிலிருந்து உதவியாளராக பணிபுரிகிறார்.
அவரையும் அவரின் மாணவர்களையும், பக்கத்தில் இருக்கும் வகுப்புகளின் சத்தம் தொந்தரவு செய்யவில்லை. பக்கத்து வகுப்பில் சுனிதா சைன் இளம் மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார். 47 வயதாகி, விடுதியின் கண்காணிப்பாளராக இருக்கும் அவர் நிறங்கள் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார். மாணவர்களும் அங்கிங்கென ஓடி, நிறங்களை தேடுகின்றனர். நீலப்பை, சிவப்பு புடவை, கறுப்பு முடி, மஞ்சள் பூக்கள் என மாணவர்கள் சந்தோஷத்தில் கத்துகின்றனர். சிலர் சத்தங்கள் எழுப்புகின்றனர். சிலர் சைகை செய்கின்றனர். பயிற்சி பெற்ற ஆசிரியராக அவரின் உணர்ச்சிமிகு முகம் மாணவர்களுடன் பேசுகிறது.
”வன்முறையும் ஆக்ரோஷமும் சமூகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், அறிதிறன், வெற்றி, ஒழுங்கு மற்றும் தண்டனை ஆகியவற்றை பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துகளை கேள்விக்குட்படுத்த வேண்டும்,” என்கிறார் மேதா. தனித்திறன் குழந்தைகளுக்கான பள்ளிகளில் ஒன்றுக்கேனும் சென்று பார்க்கும்படி அவர் ஆசிரியர்களை கோருகிறார். ”அன்பான வார்த்தைகளால் என்ன சாதிக்க முடியும் என்பதை பார்க்கலாம்,” என்கிறார்.
கட்டுரையாளர்கள், இக்கட்டுரைக்கென சுஹ்ருத் மண்டலின் டாக்டர் அனுராதா ஃபடார்ஃபோட் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்

சாதனா கிராமத்தில் பணிபுரியும் தனித்துவ நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களின் கை அச்சுகள்

தனித்துவ நண்பர்கள் ஆசிரியர்களுடன் சந்தோஷமாக

சாதனா கிராமத்தில் தனித்துவ நண்பர்களால் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு கடையில், அவர்கள் தயாரித்த ராக்கி மற்றும் கைப் பைகள் போன்றவற்றை விற்கின்றனர். ‘கையால் பொருட்கள் உருவாக்க அவர்கள் விருப்பம் கொண்டிருப்பார்கள்,’ என்கிறார் சமூகப் பணியாளரும் ஆசிரியருமான கஞ்சன் யெசாங்கர்

ஷ்ராவன் மாதத்தின் ஐந்தாம் நாள் கொண்டாடப்படும் நாக பஞ்சமிக்காக கைகளில் வைத்திருக்கும் மெஹந்தியை காட்டும் ஒரு தனித்துவ நண்பர்

சுனிதா சைன் ஒரு பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்

மராத்தி எழுத்துக்கான சைகைகள் செய்ய மாணவர்கள் கற்கின்றனர்

பேச்சு, உதட்டசைவு, சைகை மற்றும் எழுத்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான தொடர்பு முறையில் மோகன் கனேகர் கற்றுக் கொடுக்கிறார்

சிறுமிகள் ஆசிரியர் மோகன் கனேகரிடமிருந்து சைகைகளை பார்த்து, அவற்றுக்கான வார்த்தைகளை வெவ்வேறு குரல்களிலும் சத்தங்களிலும் சொல்கின்றனர்

தயாரி பள்ளியில் குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்கின்றனர். ‘சில நேரங்களில் குழந்தைகள், அவர்களே சொந்தமாக ஒரு சைகையை உருவாக்கவும் செய்வார்கள்,’ என்கிறார் பள்ளியின் சிறப்பு ஆசிரியரான சத்யபாமா அல்ஹத்

கேட்கும் திறனில் குறைபாடு கொண்ட, ஒஸ்மனாபாத்தின் ஒரு குழந்தை, தயாரி பள்ளியின் விடுதியில் சேர்ந்திருக்கிறார். ஐந்து வயது கூட பூர்த்தியாகாத அவர், ரப்பர் பொம்மைகளை கொண்டு விலங்குகளின் பெயர்களை கற்கிறார்

கரும்பலகையை ஆசிரியர்கள் ஓவியத்துக்கும் வார்த்தைகள் எழுதவும் பயன்படுத்துகின்றனர். இங்கு தயாரி பள்ளியில் அதிதி சாதே பறவைகளும் கருவிகளும் வரைந்திருக்கிறார்

ஆசிரியரின் சைகைகளை கவனித்து காவ்லா (காக்கை) என்கிற வார்த்தையை மாணவர்கள் கற்கின்றனர்

எண்கள் எழுத ஒரு குழந்தை கற்கிறது

தயாரி பள்ளியின் இளைய மாணவர்களுக்கு நிறங்களை கற்றுக் கொடுக்கிறார் சுனிதா சைன்

கலை ஆசிரியர் பைராகியுடன் மாணவர்கள்

பேப்பர் முயலை காட்டும் குழந்தை

தயாரி பள்ளியில் கலையும் கலைவினைப் பொருட்களும் பாடத்திட்டத்தில் இருக்கின்றன

1ம் வகுப்பு மாணவர்கள் பேப்பர் முயல்கள், பேப்பர் படகுகள் மற்றும்
பிற கைவினை பொருட்களை காட்டுகின்றனர்
தமிழில்: ராஜசங்கீதன்