ஸ்ரீரங்கன் வீடு திரும்பியதும், தன் கைகளில் ஒட்டி காய்ந்து போன கெட்டியான ரப்பர் பாலை முதலில் அகற்றுகிறார். 55 வயதாகும் அவர் சிறுவயதில் இருந்தே ரப்பர் மரங்களை வெட்டி பால் எடுத்து வருகிறார். மரப்பால் உலர்ந்தவுடன் கடினமாகவும், பழுப்பு நிறமாகவும் மாறும் என்பதால் வீட்டுக்கு வந்தவுடன் கைகளில் இருந்து அதை அகற்றுவது அவரது முக்கியமான வேலை.
சுருளக்கோடு கிராமத்தில் உள்ள தனது ரப்பர் தோட்டத்திற்கு கொக்கி வடிவிலான ஆறு-ஏழு அங்குல நீளமுள்ள பால் வீதுரா கத்தியோடு (ரப்பர் அறுக்கும் கத்தி) நடந்து செல்லும் போது அவரது அன்றைய நாள் தொடங்குகிறது. அரசின் சார்பில் அவரது தந்தைக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் விவசாய நிலம், வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் உள்ளது. அதில் அவர் ரப்பர், மிளகு, கிராம்பு பயிரிடுகிறார்.
லீலாவும், ஸ்ரீரங்கனும், 27 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கனிகரன் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஸ்ரீரங்கன் (தனது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) முதல்நாள் மரத்தில் கட்டியிருந்த ஒரு கருப்பு கோப்பையில் வடிந்து உலர்ந்து போன மரப்பாலை சேகரிக்க தொடங்குகிறார். "இது ஒட்டுகரா" என்று அவர் குறிப்பிடுகிறார். "அந்தந்த நாளில் நாங்கள் புதிய மரப்பால் சேகரித்த பிறகு, மீதமுள்ளவை கோப்பைக்குள் வடிகிறது. அது இரவோடு இரவாக காய்ந்து விடும்."
உலர்ந்த மரப்பால் விற்பதால் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு சேகரித்த பின், ஓட்டுக்கராவை சந்தையில் அவர்கள் விற்கின்றனர்.
கோப்பைகளை காலி செய்தவுடன், புதிய மரப்பால் கோப்பைக்குள் வடிய, மரத்தில் ஒரு அங்குல நீளமுள்ள பட்டையை வெட்டுகிறார். தனது நிலத்தில் மீதமுள்ள 299 மரங்களுக்கும் இதே செயல்முறையை அவர் மீண்டும் செய்கிறார்.


சுருளக்கோடு கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் ரப்பர் மரங்களை வெட்டும் ஸ்ரீரங்கன். அவர் மரப் பட்டையிலிருந்து ஒரு துண்டு வெட்டுகிறார்; மரப்பால் கருப்பு கோப்பையில் வடிகிறது


காலை உணவுக்குப் பிறகு, ஸ்ரீரங்கனும், லீலாவும் வாளிகளுடன் (இடது) திரும்பிச் செல்கிறார்கள். அதில் அவர்கள் மரப்பால் (வலது) சேகரிக்கிறார்கள்
ஸ்ரீரங்கன் ரப்பர் மரத்தில் வேலை செய்யும் போது, லீலா வீட்டு வேலைகளை முடித்துவிட்டு காலை உணவு தயாரிக்கிறார். மூன்று மணி நேர ரப்பர் அறுத்தலுக்குப் பிறகு, ஸ்ரீரங்கன் சாப்பிட வீட்டிற்கு வருகிறார். தோட்டமலை மலைப்பகுதி அருகே, இவர்கள் வசிக்கின்றனர். அருகில் கோதையாறு ஓடுகிறது. அவர்கள் தனியாக வசிக்கின்றனர் – அவர்களின் இரண்டு மகள்களும் திருமணமாகி தங்கள் கணவர்களுடன் உள்ளனர்.
காலை 10 மணியளவில் லீலாவும், ஸ்ரீரங்கனும் தலா ஒரு வாளியை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குத் திரும்பி, கோப்பைகளில் வடிந்த வெள்ளை மரப்பாலை சேகரிக்கின்றனர். இதை செய்து முடிக்க, அவர்களுக்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். மதியம் வீடு திரும்புகிறார்கள். ரப்பர் தாள்கள் தயாரிக்கும் செயல்முறையை உடனடியாகத் தொடங்காவிட்டால் மரப்பால் உலரத் தொடங்கிவிடும் என்பதால் அவர்கள் ஓய்வெடுக்க முடியாது.
மரப்பாலை தண்ணீரில் லீலா கலக்கத் தொடங்குகிறார். "மரப்பால் அடர்த்தியாக இருந்தால், நாம் அதிக தண்ணீரை ஊற்றலாம். ஆனால் அதை தாள்களாக மாற்ற நிறைய நேரம் எடுக்கும்" என்கிறார் அந்த 50 வயது பெண்மணி.
ஸ்ரீரங்கன் கலவையை ஊற்றும்போது லீலா செவ்வக பாத்திரங்களை அடுக்குகிறார். "இரண்டு லிட்டர் மரப்பால், சிறிதளவு அமிலத்தால் நாங்கள் இந்த பாத்திரத்தை நிரப்புகிறோம். நீரின் அளவைப் பொறுத்து, அமிலத்தின் பயன்பாட்டு அளவு மாறுபடும். நாங்கள் அதை அளவிடுவதில்லை", என்று லீலா கூறுகிறார். அப்போது அவரது கணவர் மரப்பாலை அச்சுகளில் ஊற்றி முடிக்கிறார்.
பாரி சார்பில், மே மாதத்தில் அவர்களைப் சந்தித்தபோது, ரப்பர் சீசன் தொடங்கி இருந்தது, அவர்களுக்கு ஒரு நாளுக்கு ஆறு தாள்கள் கிடைத்தன. அடுத்த மார்ச் மாதம் வரை சீசன் தொடர்வதால், ஆண்டுக்கு, 1,300 தாள்கள் வரை அவர்களால் தயாரிக்க முடியும்.
"ஒரு தாளில் 800-900 கிராம் மரப்பால் உள்ளது" என்று ஸ்ரீரங்கன் விளக்குகிறார். லீலா கவனமாக அமிலத்தை கலக்கத் தொடங்குகிறார்.


அவர்கள் (இடது) செவ்வக பாத்திரங்களை சுத்தம் செய்து ஒழுங்குப் படுத்துகின்றனர், பின்னர் (வலது) அதில் ஊற்றுவதற்கு முன்பு மரப்பாலை தண்ணீரில் கலக்கின்றனர்


ஸ்ரீரங்கன் ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி (இடது) மரப்பாலை பாத்திரத்தில் ஊற்றுகிறார்; லீலா அதில் (வலது) சிறிது அமிலத்தை கலக்கிறார். இதனால் அது உறைகிறது
15 நிமிடங்களுக்குப் பிறகு, மரப்பால் உறைகிறது. அதை ரப்பர் தாள்களாக மாற்றும் செயல்முறை தொடங்குகிறது. மரப்பால் இரண்டு வகையான ரோலர் இயந்திரங்களில் நுழைக்கப்படுகிறது. ஒரு தாளை சமமாக மெல்லியதாக மாற்ற முதல் இயந்திரம் நான்கு முறை பயன்படுத்தப்படுகிறது, இரண்டாவது இயந்திரம் அதற்கு வடிவம் கொடுக்க ஒரு முறை பயன்படுத்தப்படுகிறது. பின்னர் தாள்கள் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன. "சிலர் வழக்கமாக ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்தி ஒரு தாளுக்கு இரண்டு ரூபாய் [அவர்கள் தயாரிப்பதற்கு] கொடுக்கிறார்கள். ஆனால் இந்த ரப்பர் தாள்களை நாங்களே தயாரிக்கிறோம்" என்கிறார் லீலா.
அச்சிடப்பட்ட ரப்பர் தாள்கள் முதலில் வெயிலில் உலர்த்தப்படுகின்றன. ஸ்ரீரங்கனும், லீலாவும் ரப்பர் தாள்களை ஒரு கம்பியில் தொங்கவிடுகிறார்கள். அவர்கள் சில நேரங்களில் தங்கள் ஆடைகளையும் அதில் தொங்கவிடப் பயன்படுத்துகின்றனர். அடுத்த நாள், சமையலறைக்கு அத்தாள்களை எடுத்துச் செல்கின்றனர்.
லீலா ஒரு சிறிய திரைச்சீலையை அகற்றிவிட்டு விறகுக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த ரப்பர் ஷீட் மூட்டையைக் காட்டுகிறார். "நெருப்பின் வெப்பம் தாள்களை உலர்த்துகிறது. தாள் பழுப்பு நிறமாக மாறும்போது, அது முற்றிலும் உலர்ந்திருப்பதை நாம் அறியலாம், "என்று அவர் மூட்டையிலிருந்து ஒரு ரப்பர் ஷீட்டை வெளியே எடுத்துக் காட்டுகிறார்.
பணம் தேவைப்படும்போது தாள்களை சேகரித்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரப்பர் ஷீட் கடையில் விற்கின்றனர். " இதற்கென நிலையான விலை எதுவும் இல்லை," என்கிறார் ஸ்ரீரங்கன். அவர்கள் பெறும் வருமானம் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தினமும் மாறுகிறது. "இப்போது ஒரு கிலோ 130 ரூபாயாக உள்ளது," என்று அவர் கூறுகிறார்.
"கடந்த ஆண்டில் எங்களுக்கு சுமார் 60,000 [ரப்பர் ஷீட்டுகளிலிருந்து கிடைத்த பணம்] ரூபாய் கிடைத்தது," என்று அவர் கூறுகிறார். "மழை பெய்தாலோ, வெப்பம் அதிகமாக இருந்தாலோ ரப்பர் அறுப்பதற்கு நாங்கள் செல்ல முடியாது", என்று லீலா கூறுகிறார். அந்த நாட்களில் அவர்கள் காத்திருக்க வேண்டும்.


இடது: உறைந்த மரப்பால் மெலிந்து வடிவம் பெறும் இயந்திரங்கள். வலது: வெயிலில் உலரும் தாள்கள்


மேலும் உலர வைக்க, தாள்கள் சமையலறையில் தொங்கவிடப்படுகின்றன. ’நெருப்பின் வெப்பம் தாள்களை உலர்த்துகிறது’ என்கிறார் லீலா. அவை உலர்ந்தவுடன் பழுப்பு நிறமாக மாறும்
ரப்பர் மரங்கள் பொதுவாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெட்டப்படுகின்றன. ஏனெனில் அவை உற்பத்தி செய்யும் மரப்பால் அளவு காலப்போக்கில் குறைகிறது. அதன் இடத்தில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு, அதிலிருந்து மரப்பால் உற்பத்தி செய்ய ஏழு ஆண்டுகள் ஆகும். "சில நேரங்களில் மக்கள் 30 அல்லது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மரங்களை வெட்டுகிறார்கள். இது மரம் உற்பத்தி செய்யக்கூடிய மரப்பாலின் அளவைப் பொறுத்தது" என்கிறார் ஸ்ரீரங்கன்.
இந்திய அரசின் ரப்பர் வாரியத் தரவுகளின்படி , கடந்த பதினைந்து ஆண்டுகளில் ரப்பர் சாகுபடி பரப்பளவு சுமார் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மகசூல் 18 சதவீதம் குறைந்துள்ளது.
"எங்கள் வேலைக்கான லாபமும் சீசனுக்கு ஏற்ப மாறுகிறது", என்கிறார் ஸ்ரீரங்கன். எனவே அவர்களுக்கு வேறு வருமான ஆதாரங்களும் உள்ளன - அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மிளகு மற்றும் கிராம்பு அறுவடை செய்கிறார்கள்.
"மிளகு சீசனுக்கு, சந்தையில் விற்கப்படும் மிளகு அளவைப் பொறுத்து லாபம் இருக்கும். இது பருத்தி பயிர்களை போன்றது. இந்த நேரத்தில் [மே மாதம்] ஒரு கிலோ பச்சை மிளகுக்கு 120 [ரூபாய்] கிடைக்கிறது. ஒரு கிராம்புக்கு, 1.50 ரூபாய் கிடைக்கிறது," என்கிறார் அவர். நல்ல பருவத்தில், 2,000 முதல், 2,500 கிராம்பு வரை சேகரிக்க முடியும்.
ஸ்ரீரங்கன் கடந்த 15 ஆண்டுகளாக கிராமத் தலைவராகவும் (குக்கிராமத் தலைவர்) இருந்து வருகிறார். எனது சிறப்பான பேச்சாற்றலால் மக்கள் தேர்வு செய்தனர். ஆனால் வயது முதிர்வு காரணமாக என்னால் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை" என்கிறார் அவர்.
"கிராமத்திற்கு ஒரு தொடக்கப் பள்ளியை [GPS-தோட்டாமலை] கொண்டு வந்து, சாலை அமைப்பதை ஊக்குவித்தேன்", என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தமிழில்: சவிதா