அவரால் ஓட முடியும். பயிற்சியும் கொடுக்க முடியும்.
எனவே ஜெயந்த் தந்தேகர் தன்னுடைய ஈரறை வாடகை வீட்டை திறந்து அவரை தன்னுடைய பராமரிப்பில் எடுத்துக் கொண்டார்.
எட்டு வயது ஊர்வசியின் வழியாக தன் கனவை வாழ முயலுகிறார் தந்தேகர்.
பெருங்கனவு கொண்ட ஒரு கிராமத்துக் குழந்தை, அவளின் பெற்றோர் மற்றும் இளம் தடகள பயிற்சியாளர் ஆகியோர் பற்றிய கதை இது. பணம் குறைவாக கொண்டிருந்தாலும் லட்சியத்தை உறுதியுடன் கொண்டிருக்கின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன், எட்டு வயது ஊர்வசி நிம்பர்தே தந்தேகரிடம் வந்தார். பந்தாரா நகரத்தின் வெளியே ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார் அவர். உடைமைகளுடன் அவர் வீட்டில் வசிக்கத் தொடங்கினார் ஊர்வசி. தந்தேகர்தான் அவருக்கு இப்போது தாயும் தந்தையும். ஊர்வசியின் பெற்றோரிடம் பணம் இல்லை. அவர்கள், பந்தாரா நகரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவ்வா கிராமத்தில் சிறு விவசாயிகளாக உள்ளனர். ஆனால், வாழ்க்கையில் ஊர்வசி மேம்பட வேண்டுமெனில் இந்த இளைஞனையும் அவரது கனவுகளையும் அவர் நம்ப வேண்டுமென ஊர்வசியின் தாய் மாதுரி நினைத்தார்.


இடது: ஜெயந்த் தந்தேகர் மற்றும் ஊர்வசி ஆகியோர் வீட்டில். வலது: ஊர்வசியின் தாயான மாதுரியும் தந்தையான அஜய் நிம்பர்தேயும் தவ்வா கிராமத்திலுள்ள தங்கள் வீட்டில்
ஒல்லியாகவும் உறுதியாகவும் இருக்கும் மாதுரியின் லட்சியமே, குழந்தைகள் தம் வாழ்வில் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதுதான். அவரின் கணவரும் ஊர்வசியின் தந்தையுமான அஜய் நிம்பர்தே விவசாயம் பார்க்கிறார். பக்கத்து ஆலையில் தினக்கூலி வேலையும் பார்த்து வருமானம் ஈட்டுகிறார்.
“அவள் எங்களுடன் இருந்தால், 10 வருடத்தில் என்னைப் போல் ஆகி விடுவாள். மணமாகி, குழந்தைகள் வளர்த்து, விவசாயம் பார்த்து ஒருநாள் இறந்து போவாள்,” என்கிறார் அந்த தாய், கணவர் மற்றும் மாமனார் அருகே ஈரறை வீட்டில் அமர்ந்து கொண்டு. “அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது,” என்கிறார் அவர்.
தந்தேகரை ஊர்வசி மாமா என அழைக்கிறார். 35 வயதில் அந்த பயிற்சியாளர், இளம் போட்டியாளருக்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கியபோது மணம் முடித்திருக்கவில்லை.
தலித்தான தந்தேகர், சம்ஹார் சாதியை சேர்ந்தவர். பந்தாரா, கோண்டியா மற்றும் கட்சிரோலி மாவட்டங்களிலிருந்து நல்ல தடகள வீரர்களை உருவாக்க வேண்டும் என்கிற பெருவிருப்பம் கொண்டவர். அவருக்கு கிடைக்காத வாய்ப்பை, இந்த இளம் குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினார்.
பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவராக ஊர்வசி இருந்தபோதும், அவரின் பெற்றோர் சாதியையும் ஆணாதிக்கத்தையும் மறுதலித்து கடக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டனர். 2024ம் ஆண்டின் கோடை கால காலை வேளையில் நம்முடன் பந்தாராவின் சிவாஜி விளையாட்டரங்கில் பேசுகையில், ஊர்வசி தனித்துவமான சிறுமி என்றார் தந்தேல்கர்.
பந்தாராவில் அவர் அனாத் பிந்தாக் என்ற பயிற்சி மையத்தை நடத்துகிறார். அநாதரவாக இருப்பவர்களின் ரட்சகர் என அப்பெயருக்கு அர்த்தம். 50 மாணவர்களை பராமரிக்க தேவைப்படும் பணத்தை சிறு நன்கொடைகளின் மூலம் பெற்று சமாளிக்கிறார். குட்டையாக உருளை முகத்துடன் கூர்மையான பார்வை கொண்டிருக்கும் அவர், ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தோல்வி பயத்துக்கு ஆட்படக் கூடாது என்கிறார்.


இடது: பந்தாராவின் சிவாஜி அரங்கத்தில் ஊர்வசி. வலது: தந்தேகரின் பயிற்சி மையமான அனாத் பிந்தக்கில் பிற எவரையும் காட்டிலும் கடுமையாக பயிற்சி மேற்கொள்கிறார் ஊர்வசி


இடது: எட்டு வயது ஊர்வசியை தன் ஈரறை வாடகை வீட்டில் தங்க அனுமதித்தார் தந்தேகர். வலது: இளம் தடகள வீரர்கள் பயிற்சிக்காக வெற்றுக்கால்களில் ஓடுகின்றனர்
தினசரி காலை ஊர்வசியை மைதானத்துக்கு அழைத்து வரும் அவர், பிற குழந்தைகள் வருவதற்கு முன்பே பயிற்சி கொடுக்கத் தொடங்கி விடுகிறார். ஊர்வசி வழக்கமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
ட்ராக் சூட்டில் இருக்கும் ஊர்வசி, ஓட்டப்பந்தயத்தில் வேறு ஆளாக மாறி விடுகிறார். பேரார்வத்துடன் கடும் பயிற்சியில் மாமா சொல்வதை பின்பற்றும் நபராக இருக்கிறார். ஊர்வசிக்கு இன்னும் காலம் இருக்கிறது. பள்ளி போட்டிகளில் பங்குபெற தொடங்கியிருக்கிறார். பிறகு அவரை மாவட்ட போட்டிகளில் தந்தேகர் பங்குபெற வைத்து, மாநில மற்றும் தேசியப் போட்டிகளுக்கு அனுப்புவார்.
கிராமத்து குழந்தைகள் என்ன ஆனாலும் பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டுமென தந்தேகர் எண்ணுகிறார். பி.டி.உஷா போன்ற இந்திய வீரர்களின் கதைகளை சொல்லி, எந்த சூழலிலும் ஜெயிக்க முடியுமென அவர்களை ஊக்குவிக்கிறார். கடும் பயிற்சியும் பெருங்கனவும் கொண்டால் தங்களாலும் ஜெயிக்க முடியுமென அவரது மாணவர்கள் எண்ணுகின்றனர்.
சொந்த வாழ்க்கைப் பயண அனுபவத்தை கொண்டு, ஊர்வசிக்கான சத்து மற்றும் உணவில் தந்தேகர் கவனம் செலுத்துகிறார். தனக்கு வாய்ப்பு கிட்டாத பால் மற்றும் முட்டைகளை அவர் தொடர்ந்து சாப்பிடுவதை உறுதி செய்கிறார். ஊர்வசியின் உணவில் புரதச்சத்தும் மாவுச்சத்தும் கொழுப்பும் இருப்பதை உறுதி செய்கிறார். பந்தாராவில் வசிக்கும் அவரின் சகோதரரி, மீன் கொண்டு வருவார். ஊர்வசியின் தாய், மகளை பார்க்க அடிக்கடி வருகிறார். பள்ளி மற்றும் வீட்டு வேலைகளில் அவருக்கு உதவுகிறார்.
பயிற்சி எடுக்கும் அவருக்கு நல்ல ஷூக்கள் இருப்பதை உறுதி செய்கிறார் பயிற்சியாளர். ஏனெனில் அவரின் காலத்தில் அவை கிடைக்கவில்லை. அவரது தந்தை நிலமற்ற தினக்கூலியாக இருந்தவர் என்கிறார் அவர். அதிகமாய் குடித்து, வருமானத்தை மதுவில் செலவழித்தவர் என்றும் கூறுகிறார். அவரும் உடன்பிறந்தவரும் பட்டினியாக கிடந்த நாட்கள் இருந்ததாக சொல்கிறார்.
“பந்தயத்தில் நானும் ஓட வேண்டுமென கனவு கண்டேன்,” என்கிறார் அவர் விரக்தி புன்னகையுடன். “எனக்கு வாய்ப்பு அமையவில்லை.”


ஊர்வசியின் பயிற்சியாளரான தந்தேகர், பால் மற்றும் முட்டைகளும் அவருக்குக் கிடைப்பதை உறுதி செய்கிறார்
ஆனால் ஊர்வசிக்கும் அவரைப் போன்றோருக்கும் அத்தகைய வாய்ப்பு கிட்ட வேண்டுமெனில் ஆரோக்கியமான உணவு, காலணி, அணியில் சேரும் வாய்ப்பு என எல்லாமும் கிடைக்க வேண்டுமென தந்தேகர் தெரிந்து வைத்திருக்கிறார்.
அதற்கு அவர்கள் நல்ல பள்ளிகளில் சேர்ந்து கடுமையாக போட்டி போட வேண்டும் என்கிறார் அவர்.
நல்ல ஆரோக்கியமும் அவர்களுக்கு முக்கியம்.
“அது கடினம். ஆனாலும் பெருங்கனவுகளை காண நான் என் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பேன்,” என்கிறார் அவர்.
தமிழில்: ராஜசங்கீதன்