காலை 9 மணி, மும்பை ஆசாத் மைதானத்தில் இளம் கிரிக்கெட் வீரர்கள் ஒரு வேடிக்கையான வார இறுதி ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். விளையாட்டு செல்லச் செல்ல அடிக்கடி மகிழ்ச்சியும், வேதனையும் கலந்த குரல்கள் எழுகின்றன.
வெறும் 50 மீட்டர் தூரத்தில், மற்றொரு 'விளையாட்டு' 5,000 பங்கேற்பாளர்களுடன் அமைதியாக செல்கிறது. ஏராளமான பங்கேற்பாளர்களுடன் இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் மும்பையின் ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) - சுகாதாரப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஒரு முடிவில்லை. பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கிய போராட்டத்தின் முதல் வாரத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பரபரப்பான சாலையருகே, 30-களின் முற்பகுதியில் உள்ள ஒரு ஆஷா பணியாளர் தரையில் அமர்ந்திருக்கிறார். கடந்து செல்பவர்கள் உற்று நோக்குவதை காணாமல் தவிர்த்து பதற்றத்துடன் சுற்றும் முற்றும் பார்க்கிறார். துப்பட்டா மற்றும் ஒரு சதார் கொண்டு அவரை பெண்கள் குழு ஒன்று கூடி மூடிக்கொள்ள, அவர் விரைவாக தனது ஆடைகளை மாற்றுகிறார்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, மதிய உணவு நேரத்தில், சுட்டெரிக்கும் நண்பகல் வெயிலில், ஆஷா பணியாளர்கள் தங்கள் சக ஊழியரான ரீட்டா சாவ்ரேவைச் சுற்றி கூடினர். ஒவ்வொருவரும் காலி டிபன் பாக்ஸ்கள், தட்டுகள் மற்றும் மூடிகளை வைத்திருந்தனர். 47 வயதான அவர், வீட்டில் தயாரித்த உணவை பரிமாறும்போது அவர்கள் பொறுமையாக தங்கள் முறைக்காக காத்திருந்து பெறுகிறார்கள். "இங்கு போராடும் சுமார் 80 - 100 ஆஷா பணியாளர்களுக்கு என்னால் உணவளிக்க முடிகிறது", என்று, தானே மாவட்டத்தின் திஸ்காவ்னில் இருந்து ஆசாத் மைதானத்திற்கு தினமும் இரண்டு மணி நேரம் மற்ற 17 ஆஷா பணியாளர்களுடன் பயணம் செய்யும் ரீட்டா கூறுகிறார்.
"எந்தவொரு ஆஷா பணியாளரும் பசியின்றி இருப்பதை உறுதி செய்ய நாங்கள் மாறி மாறி முயல்கிறோம். ஆனால் நாங்கள் இப்போது நோய்வாய்ப்பட்டு வருகிறோம். சோர்வாகவும் இருக்கிறோம்," என்று 2024 பிப்ரவரி இறுதியில் பாரியிடம் பேசிய அவர் கூறுகிறார்.


ஆயிரக்கணக்கான சமூக சுகாதார (ஆஷா) பணியாளர்கள் கடந்த மாதம் மும்பையின் ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். கல்யாணை சேர்ந்த ரிதா சாவ்ரேவும் 17 சக ஆஷா பணியாளர்களும் 21 நாட்களாக தினசரி மும்பை ஆசாத் மைதானத்துக்கு பயணித்து பலருக்கும் உணவளிக்கும் பணியை செய்கின்றனர். ரிதா (வலது) ஆஷா பணியாளராக 2006-ல் ஆனார். மகாராஷ்டிராவிலுள்ள டிஸ்காவோனின் 1,500 பேரை கவனித்துக் கொள்கிறார்


மாநிலத்தின் 36 மாவட்டங்களின் ஆஷா பணியாளர்கள் ஒன்றிணைந்து 21 நாட்களையும் அங்கு போராட்டத்தில் கழித்திருக்கின்றனர். பலர் மருத்துவமனிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்
21 நாட்களுக்குப் பிறகு, இறுதியாக மார்ச் 1-ம் தேதி முதலமைச்சர் "ஆஷா சி நிராஷா சர்க்கார் கர்னா நஹி (ஆஷா ஊழியர்களை அரசாங்கம் ஏமாற்றாது),” என்று அறிவித்த பின்னர் ஆஷா பணியாளர்கள் வீட்டிற்குச் சென்றனர். அன்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலப் பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில்தான் இப்படி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசினார்.
ஆஷா அமைப்பு என்பது 70க்கும் மேற்பட்ட சுகாதார சேவைகளை வழங்கும் பெண்களை கொண்ட உழைக்கும் பிரிவு ஆகும். ஆனால், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டம் (ICDS) மற்றும் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (NRHM) ஆகியவற்றின் கீழ் 'தன்னார்வலர்கள்' என்று மட்டுமே அவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். எனவே, சுகாதார சேவைகளை வழங்குவதற்காக அவர்கள் பெறும் பணம் 'மதிப்பூதியம்' என்று குறிப்பிடப்படுகிறது. ஊதியமோ, சம்பளமோ கிடையாது.
மதிப்பூதியம் தவிர, அவர்கள் PBP (செயல்திறன் அடிப்படையிலான கட்டணம் அல்லது ஊக்கத்தொகை) பெற உரிமை உண்டு. உலகளாவிய நோய்த்தடுப்பு, இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான சேவைகள் (RCH) மற்றும் பிற திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ஆஷா பணியாளர்கள், தம் செயல்திறனின் அடிப்படையில் ஊக்கத்தொகைகளைப் பெறுகிறார்கள் என்று NHRM கூறுகிறது.
ஆஷா பணியாளர்களில் ஒருவரான ராம மனாத்கர், "பின் பகாரி, ஃபுல் அதிகாரி (பணம் கிடையாது, பொறுப்புகள் ஏராளம்)! நாங்கள் அதிகாரிகளைப் போல வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், ஆனால் எங்களுக்கு ஊதியம் வழங்க அவர்கள் தயாராக இல்லை," என்கிறார்.
முதல்வரின் சமீபத்திய உறுதிமொழி – கடந்த சில மாதங்களில் வெளியிடப்பட்ட பல அதிகாரப்பூர்வ உறுதிமொழிகளில் ஒன்று – அரசு தீர்மானமாக (GR) இந்த கட்டுரை வெளியிடப்பட்ட நேரம் வரை மாறவில்லை. எனினும், ஆஷா பணியாளர்களுக்கு வாக்குறுதிகளை மட்டுமே தொடர்ந்து அளித்து வருகின்றனர்.
சம்பள உயர்வை அமல்படுத்தும் வகையில் 2023 அக்டோபரில் அளித்த உறுதிமொழியை மகாராஷ்டிரா அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆஷா பணியாளர்கள் தீர்க்கமாக உள்ளனர்.


இடது: வனஸ்ரீ ஃபுல்பந்தே 14 ஆண்டுகளாக நாக்பூரில் ஆஷா பணியாளராக உள்ளார். வலது: யவத்மால் மாவட்டத்தை சேர்ந்த ஆஷா பணியாளர்களான ப்ரிதி கர்மான்கரும் (இடது ஓரம்) அந்தாகலா மொரேவும் (வலது ஓரம்) டிசம்பர் 2023-லிருந்து தங்களுக்கு ஊதியம் தரப்படவில்லை என்கின்றனர்
"மக்கள், தங்கள் குடும்பத்தை விட ஆஷா பணியாளர்களை அதிகம் நம்புகிறார்கள்! சுகாதாரத் துறை எங்களைச் சார்ந்துள்ளது," என்று கூறும் வனஸ்ரீ ஃபுல்பந்தே, விளிம்பு நிலை சமூகங்களுக்கு சுகாதார சேவைகளை கொண்டு சேர்ப்பதே தங்களின் அடிப்படை செயல்பாடு என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
"புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படும்போதெல்லாம், அவர்கள் கேட்கிறார்கள்: ஆஷா பணியாளர் எங்கே? அவரது தொடர்பு எண் கிடைக்குமா?"
வனஸ்ரீ 14 ஆண்டுகளாக ஆஷா பணியாளராக உள்ளார். "நான் 150 ரூபாயில் ஆரம்பித்தேன்... இது வனவாசம் மாதிரி இல்லையா ? 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீராமர் அயோத்திக்கு வந்தபோது, அவரை வரவேற்றார்கள் அல்லவா? எங்களை வரவேற்க வேண்டாம், ஆனால் குறைந்தபட்சம் எங்களை மரியாதையுடனும், நேர்மையுடனும் வாழ அனுமதிக்கும் ஒரு மாந்தன் [மதிப்பூதியம்] வழங்கலாமே?" என்று அவர் மேலும் கூறுகிறார்.
மற்றொரு கோரிக்கையும் உள்ளது: எல்லோரையும் போல ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் சம்பளம் பெற முடியுமா? ஒவ்வொரு முறையும் மூன்று மாத தாமதத்திற்குப் பிறகு அல்ல.
"தாமதமாக பணம் கிடைத்தால், நாங்கள் எப்படி சமாளிப்பது?" என்று கேட்கிறார் யவத்மால் தொகுதியின் மாவட்ட துணைத் தலைவரான (ஜில்லா உபாத்யக்ஷா) ஆஷா ப்ரீத்தி கர்மான்கார். "ஒரு ஆஷா பணியாளர் வயிற்றுக்காக வேலை செய்கிறார், ஆனால் பணம் இல்லாமல், அவரால் எப்படி வாழ முடியும்? ”
சுகாதாரத் துறையால் ஏற்பாடு செய்யப்படும் கட்டாய பயிற்சி பட்டறைகள் மற்றும் மாவட்டக் கூட்டங்களுக்கான பயணத் தொகையைக் கூட மூன்று முதல் ஐந்து மாதங்கள் தாமதப்படுத்துகின்றனர். "2022 முதல் சுகாதாரத் துறையால் ஒதுக்கப்பட்ட திட்டங்களுக்கான பணத்தை நாங்கள் இன்னும் பெறவில்லை," என்று யாவத்மாலில் உள்ள கலம்பைச் சேர்ந்த அந்தகலா மோரே கூறுகிறார். "இப்போது 2023 டிசம்பர்," என்று அவர் மேலும் கூறுகிறார், "நாங்கள் வேலைநிறுத்தத்தில் இருந்தோம். நாங்கள் தொழுநோய் கணக்கெடுப்பு நடத்துவதை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் இன்னும் எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை,” என்கிறார் ப்ரிதி. "கடந்த ஆண்டு போலியோ, ஹாதி ராக் (யானைக் கால்), ஜந்த் நாஷக் (குடற்புழு நோய்) திட்டங்களுக்கான ஊதியம் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை."
*****
2006 ஆம் ஆண்டில் 500 ரூபாய் சம்பளத்தில் ஆஷா பணியில் ரீட்டா சேர்ந்தார். "இன்று, நான் ஒரு மாதத்திற்கு 6,200 ரூபாய் பெறுகிறேன், அதில் 3,000 மத்திய அரசிடமிருந்தும், மீதம் நகராட்சி நிறுவனத்திடமிருந்தும் வருகிறது."
2023 நவம்பர் 2 அன்று, மாநில சுகாதார அமைச்சர் தனாஜிராவ் சாவந்த், மகாராஷ்டிராவில் உள்ள 80,000 ஆஷா பணியாளர்கள் மற்றும் 3,664 காத் ப்ரவர்தகர்கள் (குழு விளம்பரதாரர்கள்) முறையே ரூ.7,000 மற்றும் ரூ.6,200 சம்பள உயர்வுகளையும், தலா ரூ.2,000 தீபாவளி போனஸையும் பெறுவார்கள் என்று அறிவித்திருந்தார் .


தொற்றுக்காலத்தில் ஆஷா பணியாளர்கள்தான் அவசர சேவையின் முன்களப் பணியாளர்கள். ‘கொரோனா வீரர்கள்’ எனக் கொண்டாடப்பட்டாலும், பாதுகாப்பு உபகரணங்கள் குறைவாகவே கொடுக்கப்பட்டதாக பத்லபூரை சேர்ந்த ஆஷா பணியாளரான மம்தா (வலது பக்கம் அமர்ந்திருப்பவர்)


இடது: போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உஜ்வாலா படல்வார் (நீல நிறம்), போராட்டத்தின் முதல் வாரத்தில் ஐம்பது பெண்களுக்கும் மேலானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்கிறார். பலரும் போராட்டத்தை தொடர ஆசாத் மைதானத்துக்கு திரும்பினர். வலது: பல நாட்கள் போராட்டத்துக்கு பிறகு ஆஷா பணியாளர்கள் மார்ச் 1, 2024 அன்று அவர்களை ஏமாற்ற மாட்டோமென முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியால் வீடு திரும்பினர்
ஆத்திரத்துடன் மம்தா சொல்கிறார், " தீபாவளி ஹவுன் ஆத்தா ஹோலி ஆலி (தீபாவளி போய்விட்டது, இப்போது ஹோலிக்கான நேரம் வந்துவிட்டது). ஆனால் எங்கள் கைக்கு இன்னும் எதுவும் வரவில்லை," என. அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் 7,000 அல்லது 10,000 ரூபாய் ஊதிய உயர்வு கேட்கவில்லை. அக்டோபரில் நாங்கள் நடத்தி முதல் வேலைநிறுத்தம், கூடுதல் இணையவழி வேலைக்கு எதிராக இருந்தது. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டத்தில் தினமும் 100 கிராமவாசிகளை பதிவு செய்யுமாறு எங்களிடம் கூறப்பட்டது.”
இந்த திட்டம், அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் சொல்வது போல், "கர்ப்ப காலத்தில் ஊதிய இழப்பின் ஓரளவு நிவாரணமாக பண ஊக்கத்தொகையை வழங்குகிறது." கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் தடுப்பூசி பதிவுகளை சேமிப்பதை நோக்கமாகக் கொண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட U-Win செயலி பயன்பாட்டிற்கும் இதே போன்ற இலக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக 2024 பிப்ரவரியில், 10,000க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் ஷாப்பூரிலிருந்து, தானே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 52 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்றனர். " சாலுன் அலோய் , டாங்த்யா துட்லியா [நாங்கள் எல்லா வழிகளிலும் நடந்தோம், எங்கள் கால்கள் தளர்ந்தன]. முழு இரவையும் தானேவின் தெருக்களில் கழித்தோம்," என்று மம்தா நினைவுகூருகிறார்.
மாதக்கணக்கில் நடந்த போராட்டம் அவர்களை பாதித்து வருகிறது. "ஆரம்பத்தில் ஆசாத் மைதானத்தில் 5,000க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் பலர் கர்ப்பிணிகளாகவும், சிலர் புதிதாகப் பிறந்த குழந்தைகளுடனும் வந்திருந்தனர். இங்கு திறந்தவெளியில் இருப்பது கடினமாக இருந்தது. எனவே நாங்கள் அவர்களை வீட்டிற்கு திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டோம்," என்கிறார் உஜ்வாலா படல்வார். அவர் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் (சிஐடியு) மாநிலச் செயலாளராகவும், போராட்டங்களின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார். பல பெண்கள், நெஞ்சு மற்றும் வயிற்று வலி இருப்பதாக புகார் கூறினர். மற்றவர்கள் தலைவலி மற்றும் நீரிழப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது, என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஆஷா பணியாளர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன், அவர்கள் மீண்டும் மைதானத்திற்கு வந்து, " ஆதா ஆம்ச ஏகச் நாரா , [ஒரே ஒரு கோரிக்கை! அரசு தீர்மானத்தை வெளியிடுங்கள்]" என்றனர்.
*****

அக்டோபர் 2023-ல் மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ரூ.2000 தீபாவளி போனஸ் ஆஷா பணியாளர்களுக்கு அறிவித்தார். மம்தா சொல்கையில், 'தீபாவளி போய் ஹோலி வந்துவிட்டது. இன்னும் எங்களுக்கு ஒன்றும் வந்து சேரவில்லை' என்கிறார்
ஆஷா பணியாளரின் பங்கு அனைவருக்கும் பொது சுகாதார சேவைகளை கொண்டு வருவது என்கிறது அரசின் ஆணை. ஆனால் பல ஆண்டுகளாக சமூகத்தை கவனித்துக்கொண்ட பிறகு, அவர்கள் பெரும்பாலும் இன்னும் அதிக வேலைகளை செய்கிறார்கள். ஆஷாவின் மம்தாவை எடுத்துக் கொண்டால், செப்டம்பர் 2023-ல், பத்லாபூரில் உள்ள சோனிவாலி கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆதிவாசி கர்ப்பிணியை வீட்டுப் பிரசவத்திற்கு பதிலாக மருத்துவமனையை தேர்வுசெய்ய ஒத்துக் கொள்ள வைக்க முடிந்தது.
"அந்தப் பெண்ணின் கணவர் அவருடன் வர மறுத்துவிட்டார். 'என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால் நீங்கள்தான் பொறுப்பு' என்று தெளிவான வார்த்தைகளில் சொன்னார்," என்று அவர் நினைவுகூருகிறார். தாய் பிரசவ வலியில் இருந்தபோது, "பத்லாபூரில் இருந்து உல்காஸ் நகருக்கு நானே அவரை அழைத்துச் சென்றேன்," என்று மம்தா கூறுகிறார். பிரசவம் நடந்தது. தாய் உயிர் பிழைக்கவில்லை. குழந்தை ஏற்கனவே வயிற்றில் இறந்துவிட்டது.
மம்தா விளக்குகிறார், "நான் ஒரு விதவை. என் மகன் அப்போது 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். நான் காலை 6 மணிக்கு வீட்டை விட்டு வேலைக்கு சென்றேன், இரவு 8 மணியளவில் அந்த கர்ப்பிணி காலமானார். என்னை மருத்துவமனை வராண்டாவில் நள்ளிரவு 1.30 மணி வரை காத்திருக்கச் சொன்னார்கள். பஞ்சநாமா முடிந்ததும், 'ஆஷா பணியாளரே, இப்போது நீங்கள் செல்லலாம்' என்று அவர்கள் சொன்னார்கள். தீத் வாஜ்தா மீ ஏக்தி ஜாவு ? [நான் நள்ளிரவு 1.30 மணிக்கு தனியாக வீட்டுக்குப் போக வேண்டுமா]?"
மறுநாள் அவர் பதிவுகளை புதுப்பிக்க கிராமத்திற்குச் சென்றபோது, அந்தப் பெண்ணின் கணவர் உட்பட சிலர், கர்ப்பிணியின் இறப்பிற்காக அவர் மீது குற்றஞ்சாட்டினர். ஒரு மாதம் கழித்து, ஜில்லா சமிதி மம்தாவை விசாரணைக்கு அழைத்தது. "அவர்கள் என்னிடம், 'தாய் எப்படி இறந்தார், ஆஷா பணியாளரின் தவறு என்ன?' என்று கேட்டார்கள். முடிவில் எல்லா பழியையும் எங்கள் மீது சுமத்த வேண்டும் என்றால், எங்கள் மாந்தனை ஏன் அதிகரிக்கக்கூடாது?" என்று அவர் கேட்கிறார்.
தொற்றுநோய் காலம் முழுவதும், அரசு ஆஷா பணியாளர்களைப் பாராட்டியது. மருந்துகளை விநியோகிப்பதிலும், மாநிலம் முழுவதும் தொலைதூர கிராமங்களிலிருந்து பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கண்டுபிடிப்பதிலும் முக்கிய பங்கு வகித்ததற்காக அவர்களை "கொரோனா வீரர்கள்" என்றும் அரசு பாராட்டியது. இருப்பினும், வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான எந்த பாதுகாப்பு உபகரணங்களும் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.


ஆவணத்தில் குறிக்கப்பட்டிருக்கும் ஆஷா பணியாளரின் பணி என்னவோ அனைவருக்கும் சுகாதார சேவைகளை கொண்டு வருவதுதான். ஆனால் ஒரு சமூகக் குழுவை பல ஆண்டுகளாக பராமரித்த அனுபவத்தில் அவர்கள் இன்னும் அதிகமாகவே செய்கிறார்கள். மண்டா காதன் (இடது) மற்றும் ஷ்ரத்தா கோகலே (வலது) ஆகியோர் 2010ம் ஆண்டிலிருந்து ஆஷா பணியாளர்களாக இருக்கிறார்கள். இன்று அவர்கள், மகாராஷ்டிராவின் கல்யாணின் 1,500 பேரை பார்த்துக் கொள்கிறார்கள்
கல்யாணில் உள்ள நந்திவலி காவோனைச் சேர்ந்த ஆஷா பணியாளர்களான மண்டா கட்டன் மற்றும் ஷ்ரத்தா கோகலே ஆகியோர் தங்கள் தொற்றுநோய் அனுபவத்தை நினைவுகூர்ந்தனர், "ஒருமுறை, ஒரு பெண் பிரசவத்திற்குப் பிறகு கோவிட் தொற்றுக்கு ஆளானார். அவர் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததும், பீதியடைந்து [பிறந்த சிசுவுடன்] மருத்துவமனையில் இருந்து ஓடிவிட்டார்."
"தானும் (தனது குழந்தையும்) பிடிக்கப்பட்டு கொல்லப்படுவோம் என்று அவர் நினைத்தார்", என்று ஷ்ரத்தா கூறுகிறார். வைரஸை பற்றிய இந்தளவுக்கு பயமும் மற்றும் தவறான கருத்தும் இருந்தது.
"அவர் வீட்டில் ஒளிந்திருப்பதாக யாரோ எங்களிடம் சொன்னார்கள். நாங்கள் அவரது வீட்டிற்கு விரைந்தோம், ஆனால் அவர் கதவுகளை பூட்டிவிட்டார்," என்கிறார் மண்டா. ஏதும் தவறான முடிவு எடுத்துவிடக் கூடாதென பயந்து, அவர்கள் அதிகாலை 1:30 மணி வரை அவரது வீட்டிற்கு வெளியே நின்றார்கள். "நாங்கள் அவரிடம் 'உன் குழந்தையை நேசிக்கிறாயா?' எனக் கேட்டோம். ஆம் என்றால், உன்னுடன் இருக்கும் குழந்தைக்கும் வைரஸ் தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ளது என்று நாங்கள் அவருக்கு விளக்கினோம்.”
மூன்று மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, அப்பெண்மணி கதவுகளைத் திறந்தார். "ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. வேறு எந்த மருத்துவ அதிகாரியோ கிராம சேவகர்களோ இல்லை, எங்கள் இருவரைத் தவிர," என்று கண்ணீருடன் மண்டா விவரிக்கிறார், "புறப்படுவதற்கு முன்பு தாய் என் கையைப் பிடித்து, 'நான் உன்னை நம்புவதால் என் குழந்தையை விட்டுச் செல்கிறேன். தயவு செய்து என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள், எனக் கூறினார். அடுத்த எட்டு நாட்களுக்கு, குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்க தினமும் அவரது வீட்டிற்கு சென்றோம். வீடியோ காலில் குழந்தையை காண்பிப்போம். இன்று வரை அப்பெண்மணி போன் செய்து நன்றி சொல்கிறார்.
"எங்கள் சொந்தக் குழந்தைகளிடமிருந்து நாங்கள் ஒரு வருடம் விலகி இருந்தோம், ஆனால் நாங்கள் மற்றவர்களின் குழந்தைகளை காப்பாற்றினோம்," என்று மண்டா கூறுகிறார். அவரது குழந்தை 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தது, ஷ்ரத்தாவின் குழந்தைக்கு 5 வயதுதான் ஆகியிருந்தது.


இடது: ஆஷா பணியாளரான ஷ்ரத்தா கோவிட் நோயாளிகளுடன் ஊரடங்கு காலத்தில் பணியாற்ற வேண்டியிருந்தது. 5 வயது குழந்தையையும் குடும்பத்தையும் விடுத்து அவர் தனித்திருக்க வேண்டி வந்தது. வலது: பாதுகாப்பு உபகரணங்களும் முகக்கவசங்களும் இல்லாமல், ரீடா (இடது ஓரம்) துப்பட்டாவை முகத்தில் சுற்றிக் கொண்டு வேலை பார்த்தார்
தனது கிராமத்தில் உள்ள மக்கள் கதவுகளை மூடிய சம்பவத்தை ஷ்ரத்தா நினைவு கூர்ந்தார். "நாங்கள் அவர்களைப் பிடிக்க வந்திருக்கிறோம் என்று நினைத்து அவர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) கருவிகளில் எங்களைப் பார்த்து ஓடுவார்கள்." அது மட்டுமல்ல, "நாங்கள், நாள் முழுவதும் கிட்களை அணிந்திருப்போம். சில நேரங்களில் நாங்கள் ஒரே நாளில் நான்கு மாற்ற வேண்டியிருந்தது. எங்கள் முகம் கறுத்துப் போயிருந்தது. வெயிலில் அவர்களுடன் நடந்து செல்வோம். அரிப்பு மற்றும் தோல் எரியும் உணர்வும் இருக்கும்.”
மண்டா குறுக்கிட்டு, "ஆனால் PPEகள் மற்றும் முகக்கவசங்கள் மிகவும் தாமதமாக வந்தன. பெருந்தொற்று காலத்தின் பெரும்பகுதி, நாங்கள் எங்கள் முந்தானை மற்றும் துப்பட்டாக்களைத்தான் சுற்றித் திரிந்தோம்," என்கிறார்.
"எங்கள் உயிருக்கு அப்போது [தொற்றுநோய்களின் போது] மதிப்பு இல்லையா?" எனக் கேட்கிறார் மம்தா, "கொரோனாவை எதிர்த்துப் போராட எங்களுக்கு வேறு பாதுகாப்பு கொடுத்தீர்களா? தொற்றுநோய் தொடங்கியபோது நீங்கள் [அரசு] எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. ஆஷா நோயாளிகளுக்கு கோவிட் வரத் தொடங்கியபோது, மற்ற நோயாளிகளைப் போலவே அவர்களும் அதே விதியை எதிர்கொண்டனர். தடுப்பூசிகள் சோதனை கட்டத்தில் இருந்தபோதும், ஆஷா பணியாளர்கள்தான் முதலில் தன்னார்வத் தொண்டு செய்தனர்.
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், வனாஸ்ரீ, ஃபுல்பந்தே ஆஷா பணியை விட்டு வெளியேற முடிவு செய்தார். "இது என் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கத் தொடங்கியது," என்று அவர் கூறுகிறார். 42 வயதாகும் இவர், நாக்பூர் மாவட்டத்தின் வடோடா கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மக்களை கவனித்து வருகிறார். "ஒருமுறை சிறுநீரக கற்கள் காரணமாக நான் கடுமையான வலியில் இருந்தேன். இடுப்பில் துணியைக் கட்டிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தேன்."
முதல் முறை கர்ப்பம் தரித்த பெண் ஒருவர் தனது கணவருடன் வனஸ்ரீயின் வீட்டிற்கு வந்தார், "முதல் முறை என்பதால் அவர்கள் பதட்டமாக இருந்தார்கள். நான் எதையும் செய்யும் நிலையில் இல்லை என்று அவர்களுக்கு விளக்கினேன். ஆனால் பிரசவத்தின் போது நான் உடனிருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 'இல்லை' என்று சொல்வது கடினமாக இருந்ததால் நானும் அவர்களுடன் சென்றேன். அவர் பிரசவிக்கும்வரை நான் அவருடன் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். அவரது உறவினர்கள் என் இடுப்பில் கட்டப்பட்ட துணியைப் பார்த்து, ’இது கர்ப்பிணிக்கான பிரசவமா அல்லது உங்களுக்கா?’ என்று நகைச்சுவையாக கேட்டார்கள்.”


வனஸ்ரீ (கண்ணாடி அணிந்திருப்பவர்) மற்றும் பூர்ணிமா நாக்பூரிலுள்ள அவர்களது கிராமங்களை விட்டு பிப்ரவரி 7, 2024 அன்று மும்பை போராட்டத்தில் பங்கு பெற வந்தார்கள். போராட்டத்தின் ஒன்பதாவது நாள் வனஸ்ரீ தன் குடும்பத்துடன் ஃபோனில் பேசுகிறார்
ஊரடங்கு காலத்தில் தனது ஆஷா கடமைகளை முடித்து, தனிமையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்கியதை அவர் நினைவுகூர்ந்தார். "இது கடைசியில் என் ஆரோக்கியத்தை பாதித்துவிட்டது. எனக்கு பல நாட்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது. வேலையைவிட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால் வனஸ்ரீயின் அத்தை "அது புண்ணியத்துக்கான வேலை என்றார். இரண்டு உயிர்கள், [தாயும், சேயும்] என்னைச் சார்ந்திருப்பதாக கூறினார். நான் இந்த வேலையை விடவே கூடாது என அறிவுறுத்தினார்.”
வனஸ்ரீ தன் அனுபவங்களை பகிர்கையில் அவ்வப்போது தொலைபேசியை பார்த்துக் கொள்கிறார், அவர் சொல்கிறார். "நான் எப்போது வீடு திரும்புவேன் என்று குடும்பத்தினர் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். 5000 ரூபாயுடன் இங்கு வந்தேன். இப்போது என்னிடம் 200 ரூபாய் கூட இல்லை," என. 2023 டிசம்பரிலிருந்து அவருக்கு மாதாந்திர மதிப்பூதியம் கிடைக்கவில்லை.
பூர்ணிமா வாசே, நாக்பூரின் பந்துர்னா கிராமத்தைச் சேர்ந்த ஆஷா பணியாளர் ஆவார். "HIV பாதிப்பு கொண்ட நோயாளி ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்தேன். அவருக்கு தொற்று இருப்பது மருத்துவமனையில் கண்டறியப்பட்ட போது, அவர்கள் அதை ஒரு பெரிய விஷயமாக பார்த்தனர்," என்று 45 வயதான ஆஷா பணியாளர் கூறுகிறார். “நான் அவர்களிடம், 'ஒரு ஆஷா பணியாளராக கையுறைகள், கைத்துணி தவிர்த்து வேறு எந்த உபகரணங்களும் இல்லாமல் குழந்தையைப் பிரசவிக்க செய்தபோது, நீங்கள் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்?' என்று கேட்டேன்.”
2009 முதல் ஆஷா பணியில் ஈடுபட்டுள்ள பூர்ணிமா 4,500-க்கும் மேற்பட்ட மக்களை கவனித்து வருகிறார். "நான் ஒரு பட்டதாரி," என்கிறார் அவர். "எனக்கு நிறைய வேலை வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், ஆஷா பணியாளராக மாற வேண்டும் என்பது எனது முடிவு, நான் என் வாழ்நாள் முழுவதும் ஆஷா பணியாராகவே இருப்பேன். எனக்கு பணம் கிடைக்கிறதோ இல்லையோ, அகர் முஜே கர்னி ஹை சேவா தோ மார்தே டம் தக் ஆஷா கா காம் கருங்கி [நான் சேவை செய்ய விரும்புவதால், இறக்கும் வரை ஆஷா பணியாளராகவே இருப்பேன்].”
ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்கிறது. இதற்கிடையில், ஆஷா பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை மைதானத்தில் இருந்து மாற்றியுள்ளனர்.
தமிழில்: சவிதா