அருணாச்சலப் பிரதேசத்தின் ஜிரோ பள்ளத்தாக்கின் அபதானிகள் - இப்பிராந்தியத்தில் உள்ள 26 முக்கிய பழங்குடிகளில் ஒன்று – குறிப்பிடத்தக்க தனித்துவமான குழு. கட்டடக்கலை, விவசாயம், உடல் அலங்காரம், உணவு மற்றும் வாய்மொழி வரலாறு ஆகியவற்றின் மூலம் அவர்களின் தனித்துவமான பாரம்பரிய நடைமுறைகளை அறியலாம்.
1,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில், இட்டாநகரில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிரோ நகரம், கீழ் சுபன்சிரி மாவட்டத்தின் தலைமையகமாகும். சுமார் 26,000 அபதானிகள் இப்பகுதியில் வசிப்பதாக உள்ளூர் அரசு சாரா அமைப்பான நகுனு ஜிரோவின் அதிகாரி ஒருவர் மதிப்பிடுகிறார்.
நான் ஜிரோவில் உள்ள ஹாங் பஸ்தியில் (கிராமம்) ஒரு அபதானி குடும்பத்துடன் ஜனவரியில், சில நாட்கள் தங்கினேன்.

மூங்கில் மரக்கட்டைகளால் கட்டப்பட்ட ஒரு ஹாங் வீடு

ஹாங் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 90 வயதான ஹிபியு எரா , தனது மூக்கு மற்றும் நெற்றி மற்றும் கன்னத்தில் அபதானி பழங்குடியினரின் பாரம்பரிய டாட்டூ அடையாளங்களைக் கொண்டுள்ளார். அபதானி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் யாப்பிங் ஹர்லோ எனப்படும் தனித்துவமான மூக்கு செருகுகளை அணிகிறார்கள் - இவை முதுமையின் வருகையைக் குறிக்கும் ஒரு சடங்காகும். இந்த நடைமுறை , அவர்களின் இருண்ட முக பச்சை குத்தலுடன் சேர்ந்து செய்யப்படுவதாக அபதானி சமூக ஊழியரான நரங் யமாங் கூறுகிறார். எதிரி பழங்குடியினரின் தாக்குதல்களின் போது , பெண்கள் கடத்தப்பட்டனர் , அவர்களை மீட்க முடியவில்லை . மூக்கு வளையங்கள் மற்றும் பச்சை குத்துதல்கள் ' எங்கள் மீது [ எதிரிகளுக்கு] ஈர்ப்பு குறைய வேண்டும் என்பதற்காகவே செய்யப்படுகிறது ' என்று நரங் கூறுகிறார். மருகி வரும் உடலில் மாற்றங்கள் செய்யும் இந்த சடங்குமுறை 1970ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இல்லை

90 வயதுக்கு மேல் இருக்கும் ஹிப்யு டேக் , இச் சமூகத்தின் மிக வயதான பெண் (அபதானியில் அனே) ஹாங்கில் உள்ள இந்த சிறிய மூங்கில் குடிசையில் வசிக்கிறார். இங்குள்ள பெரும்பாலான வீடுகள் செங்குத்து தூண்களின் மேல் கட்டப்பட்ட ஒரே மாதிரியான , பாரம்பரிய கட்டமைப்புகள்

ஹிப்யு டேக் புகைப்படங்களுக்கு அன்போடு போஸ் கொடுக்கிறார். அவருக்கு இந்தியோ, ஆங்கிலமோ தெரியாத போதும், என்னுடன் தொடர்பு கொள்ள முயலுகிறார். ' மார்ச் மாதம் எங்கள் மியோகோ திருவிழாவிற்கு வாருங்கள் ', ' எங்கள் பாரம்பரிய உணவுடன் உங்களை வரவேற்போம் ' என்று அவர் கூறுகிறார்

அபதானி சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு ஆணும் எடுத்துச் செல்லும் ஒரு பாரம்பரிய வாளை, டாலோ தானி காட்சிப்படுத்துகிறார். ஒவ்வொரு குடும்பத்திலும் இதுபோன்ற 8-10 வாட்கள் உள்ளன . அவை மருமகன்களுக்கு வரதட்சணையாக வழங்கப்படுகின்றன

டாலோ என்ற அபதானி வேட்டைக்காரர் துப்பாக்கி வைத்துள்ளார். வேட்டையாடுதல் என்பது அவர்களின் கலாச்சார நடைமுறைகளில் ஒன்று. குரைக்கும் மான்கள் , காட்டு பன்றிகள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகளை அபதானி வேட்டையாடுகிறார்கள் - வாழ்வாதாரத்திற்காகவும் , வணிக நோக்கங்களுக்காகவும், மருத்துவ தேவைகளுக்காகவும் அவர்கள் இதை செய்வதாக 2013ஆம் ஆண்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது இந்த நடைமுறை பல இனங்களுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது

ஹாங் கிராமத்தில் உடைந்த ஆட்டோவிற்குள் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது அபதானி சிறுமி (நீல நிற சட்டையில்) தகேலிமு

ஜூன் முதல் செப்டம்பர் வரை பாரம்பரிய முறைப்படி ஹிப்யு அயூம் நெல் பயிரிடுகிறார். அபதானியின் தனித்துவமான மீன் வளர்ப்பு, நிலையான விவசாய நுட்பங்கள் காரணமாக , ஜிரோ பகுதி 2014 ஏப்ரல் மாதம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பரிந்துரைக்கப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் பாரம்பரிய சாகுபடி தொடங்குகிறது

நாரங் தாம் மற்றும் யமாங்கின் வீட்டில் - நான் இரண்டு இரவுகள் இங்கே தங்கியிருந்தேன் , அவர்கள் பாரம்பரிய அபதானி உணவை வழங்கினர் - உணவில் அரிசி முக்கிய இடம்பெற்றிருந்தது , பொதுவாக இறைச்சி (பன்றி இறைச்சி , கோழி , எலி) பிற உணவுகளுடன் சேர்க்கப்படுகிறது

உள்நாட்டு தாவரங்களின் சாம்பலுடன் வீட்டிலேயே தயாரிக்கப்படும் டாப்யோ எனப்படும் சிறப்பு உப்புடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி பீருடன் விருந்தினர்களை அபதானி வரவேற்கின்றனர்

அபதானிகளின் பொது உணவாக எலிகள் உள்ளன. , மேலும் அவை உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.250க்கு விற்கப்படுகின்றன

நாரங் யமாங் என்ற சமூக சேவகர் (அபதானி மொழியில் கம்பூரி) , தனது கழுத்தில் பாரம்பரிய மணிகளின் கயிறுகளை அணிந்துள்ளார்

ஹாங் நெல் வயல்களைச் சுற்றியுள்ள காடுகள்
தமிழில்: சவிதா