அவரை நாங்கள் சந்தித்தபோது அவருக்கு 104 வயது. அறைக்குள்ளிருந்து வந்தவர், உதவுவதற்காக நான் நீட்டிய கைகளை உதறிவிட்டார். கைத்தடியைத் தாண்டி பபானி மஹதோ வேறு எந்த உதவியையும் நாடியதில்லை. அந்த வயதிலும் அவர் நின்றார், நடந்தார். உதவியின்றி அமர்ந்தார். மேற்கு வங்க புருலியா மாவட்டத்தின் செபுவா கிராமத்தின் பெரிய கூட்டுக் குடும்பத்தின் எல்லா தலைமுறையினரும் எந்த விஷயம் என்றாலும் விவசாயியாகவும் இல்லத்தரசியாகவும் இருந்த இவரைதான் சார்ந்திருந்தனர். அவர்களின் வாழ்க்கைகளுக்கும் எதிர்காலத்துக்கும் இவர்தான் மையமாக இருந்தார்.
ஆகஸ்ட் 29-30, 2024 நள்ளிரவில் சுதந்திரப் போராட்ட வீரர் பபானி மஹதோ உறக்கத்தில் உயிர் நீத்தார். அவருக்கு 106 வயது. நான் எழுதிய The Last Heroes: Foot Soldiers of Indian Freedom (பெங்குவின் நவம்பர் 2022) புத்தகத்திலுள்ள 16 சுதந்திரப் போராட்ட வீரர்களில் அவருடைய மறைவுக்கு பிறகு தற்போது வெறும் நான்கு பேர் மட்டும்தான் உயிரோடு இருக்கின்றனர். ஒருவகையில் பாரியின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகைப்படத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பல அசாதாரண சுதந்திரப் போராட்ட வீரர்களின் நேர்காணல்களில் அவருடையது தனித்துவமானது என சொல்லலாம். எங்களுடன் பல மணி நேரங்கள் உரையாடியதில், அவர் மட்டும்தான் பெருமைமிகு போராட்டத்தில் தன் பங்கை நிராகரித்து பேசியவர். “அந்த போராட்டத்தில் நான் என்ன செய்தேன்?” என நாங்கள் அவரை முதன்முறையாக சந்தித்த 2022-ல் கேட்டார். வாசிக்க: புரட்சிக்கு பபானி மஹதோ உணவளித்தபோது
வங்கப் பஞ்சம் வந்த 1940களில் அவரின் பங்கு அளப்பரியது. அந்த காலத்தில் அவர் எதிர்கொண்ட துயரங்கள் கற்பனை செய்ய முடியாதவை
ஆனால் உண்மையில் அவரின் பங்கு பெரிது. மன் பஜார் ஒன்றியத்திலுள்ள வீட்டுக்கு நாங்கள் செல்வதற்கு 20 வருடங்களுக்கு முன்பே இறந்து போன அவரின் கணவரும் பிரபல சுதந்திரப் போராட்ட வீரருமான பைத்யநாத் மஹதோவின் பங்கைக் காட்டிலும் அவரின் பங்கு பெரிது. தான் சுதந்திரப் போராட்ட வீரர் கிடையாது என அவர் சொன்னதும் நானும் என் உடன் பணியாற்றும் ஸ்மிதா காடோரும் ஏமாற்றம் அடைந்தோம். அதற்கான காரணம் புரிந்து கொள்ள சில மணி நேரங்கள் ஆனது.
1980ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட ஸ்வதந்திரா சைனிக் சம்மன் யோஜனா திட்டம் வரையறுக்கும் ‘சுதந்திரப் போராட்ட வீரர்’ என்கிற வார்த்தையின் விளக்கத்துக்கு அவர் நேர்மையாக இருக்க அப்படி சொன்னார். அந்த விளக்கம் காலனியாதிக்க எதிர்ப்பில் பெண்களையும் அவர்களது செயல்பாட்டையும் புறக்கணிக்கிறது. சிறைவாசத்தை அந்த விளக்கம் பிரதானப்படுத்துவதால், பல தலைமறைவு புரட்சியாளர்களையும் அது தவிர்க்கிறது. இன்னும் மோசம் என்னவெனில், தலைமறைவாக இருந்தவர்களிடம், ‘அத்தாட்சி ஆவணங்கள்’ வேண்டுமென அந்த விளக்கம் கேட்பதுதான். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிய இந்திய சுதந்திரப் போராட்ட வீர்களிடம் ‘சான்றிதழ்’ கேட்கிறது அந்த விளக்கம்.
நாங்கள் அதிலுள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்ட பிறகு பார்த்தபோது பபானியின் தியாகம் கொண்டிருந்த உன்னதம் புலப்பட்டது. புருலியாவின் காடுகளில் மறைந்திருந்த போராளிகளுக்கு உணவளித்து தன் வாழ்க்கையில் ஆபத்தை அவர் உருவாக்கிக் கொண்டார். குடும்பத்திலுள்ள 25 பேருக்கு சமைப்பதையும் தாண்டி ஒரு நேரத்தில் கூடுதலாக 20 பேருக்கும் மேலான போராளிகளுக்கு அவர் சமைக்கும் வேலையை செய்திருக்கிறார். மேலும் 1942-43ல் தோன்றிய வங்கப் பஞ்ச சமயத்தில் அந்த எண்ணிக்கையை கூட்டவும் செய்திருக்கிறார் அவர். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கான எத்தனை பெரிய பங்களிப்பு இது!
நீங்கள் இன்றி நாங்கள் வாடுவோம் பபானிமா!



2022ம் ஆண்டில் பி. சாய்நாத் சந்தித்தபோது பபானியின் வயது 101-லிருந்து 104-க்குள் இருக்கும். 70 வயதுகளில் இருந்த அவரது மகன் ஷ்யாம் சுந்தர் மஹதோ (இடது)

பபானி மஹதோ (மையம்) கணவர் பைத்யநாத் மற்றும் சகோதரி உர்மிளா ஆகியோருடன் 1980களில். அதற்கு முந்தைய காலத்து குடும்பப் புகைப்படங்கள் இல்லை

2024ம் ஆண்டில் வாக்களிக்கும் சுதந்திரப் போராட்ட வீரர் பபானி மஹதோ

குடும்பத்தின் 13 உறுப்பினர்களுடன் பபானி. உடன் அவரது பேரக் குழந்தை பார்த்தசாரதி மஹதோவும் (கீழே வலப்பக்கம்). புகைப்படம் எடுக்கும்போது சில குடும்ப உறுப்பினர்கள் இல்லை
தமிழில்: ராஜசங்கீதன்