”முதலில் ஒரு ஹங்குலை பார்த்தபோது, பரவசத்தில் அசையாமல் நான் நின்று விட்டேன்,” என நினைவுகூருகிறார் ஷபிர் ஹுசேன் பட். மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கு சென்று அந்த மான் வகையை பார்த்து விட முயன்றிருக்கிறார். காஷ்மீரை சேர்ந்த அந்த மான்வகை, அருகி வருகிற இனமாகும்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகும் கூட, 141 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பூங்காவிலுள்ள விலங்குகள், பறவைகள், மரங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றின் மீதான பரவசம குறையவில்லை என்கிறார் ஷபிர். “நிச்சயமாக ஹங்குல்தான் எனக்குள் ஆர்வம் கிளம்பக் காரணம். இமயத்தின் கருங்கரடி கூட ஆர்வத்தைத் தூண்டியது.”
பூங்காவில் அவர் செல்லமாக ‘தச்சிகமின் அகராதி’ என குறிக்கப்படுகிறார். “இதுவரை 400 வகை செடிகளையும் 200 பறவை வகைகளையும் கிட்டத்தட்ட எல்லா விலங்கு வகைகளையும் நான் அடையாளம் கண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர். இப்பூங்காவில் கஸ்தூரி மான், இமய பழுப்புக் கரடி, பனிச் சிறுத்தை, தங்கக் கழுகு ஆகிய வன விலங்குகளும் இருக்கின்றன.


இடது: தச்சிகம் தேசியப் பூங்காவின் அடர் காடுகளில் விலங்களை பார்க்க மக்களை குழு குழுவாக ஷபிர் அழைத்து செல்கிறார். வலது: பூங்காவுக்கு வந்திருப்பவர்கள்


இடது: தச்சிகம் பூங்காவின் ஒரு பகுதியில் பெண் ஹங்குல் குழு. வலது: மர்சார் நதியிலிருந்து பூங்காவினூடாக வரும் தக்வான் ஆறுகள்தாம் நீராதாரம்
ஷபிரின் தொடக்கம் இயற்கையியலாளராக இருக்கவில்லை. தச்சிகம் தேசியப் பூங்காவின் சுற்றுலாவாசிகளுக்கு பேட்டரி வாகனம் ஓட்டுபவராகதான் அவர் தொடங்கினார். அவரின் அறிவு வளர்ந்ததும், சுற்றுலா வழிகாட்டியானார். தற்போது அனைவரும் விரும்புபவராக மாறியிருக்கிறார். 2006ம் ஆண்டில் அவர் மாநில வன உயிர் துறையில் பணியாளரானார்.
ஒரு காலத்தில் சன்ஸ்கார் மலைகளில் ஹங்குல்கள் காணப்பட்டன. ஆனால் இந்தியாவின் வன உயிர் நிறுவனத்தின் 2009ம் ஆண்டின் அறிக்கை யின்படி வேட்டையாடுதலும், வசிப்பிடத்தை குறைத்ததாலும் 1947ம் ஆண்டு 2000-மாக இருந்த அவற்றின் எண்ணிக்கை தற்போது 170-200 ஆக குறைந்திருக்கிறது. அவை பெரும்பாலும் தச்சிகம் பூங்காவிலும் கொஞ்சம் காஷ்மீர் பள்ளத்தாக்கு சரணாலயங்களிலும் இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.
பூங்காவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்ரீநகரின் நிஷாத் பகுதியை சேர்ந்தவர் ஷபிர். பெற்றோர், மனைவி, இரு மகன்கள் என ஆறு பேர் கொண்ட குடும்பத்துடன் வாழ்கிறார். சுற்றுலாவாசிகள் மற்றும் வன உயிர் நேசிபப்வர்களுடன் செல்லும் அவர் பூங்காவுக்குள் காலை முதல் மாலை வரை இருக்கிறார். “தச்சிகம் பூங்காவை சுற்றிப் பார்க்க விரும்பினால், நீங்கள் பகலில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் விலங்குகளை பார்க்க விரும்பினால், அதிகாலை அல்லது சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு நீங்கள் வர வேண்டியிருக்கும்,” என்கிறார் அவர்.

வளர்ந்த பெண் ஹங்குல்

ஆற்றுக்கு வரும் காஷ்மிரி ஹங்குல்

பூங்காவில் தென்படும் இமய கருங்கரடி


இடது: இமய சாம்பல் நிற லங்கூர். வலது: மஞ்சள் தொண்டை கரும் வெருகு ஒரு மரத்தின் மீது

பூங்காவின் பறவைகளை சுற்றுலாவாசிகளுக்குக் காட்டுகிறார் ஷபிர்


இடது: அரசவால் ஈ பிடிப்பான் வலது: சாம்பல் நிற வாலாட்டிக் குருவி


இடது: நீள வால் கீச்சான். வலது: வண்ணச் சிரிப்பான்
தமிழில்: ராஜசங்கீதன்