2023ம் ஆண்டு நிறைய வேலைகள் நிறைந்த ஆண்டு ஆகும்.
ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் இந்தியா ஏதோவொரு தீவிர வானிலை நிகழ்வை சந்தித்திருக்கிறது. பெண்கள் பலர் மக்களவையிலும் சட்டசபைகளிலும் இடம்பெறும் பொருட்டு, செப்டம்பர் மாதத்தில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 2029ம் ஆண்டில்தான் அது அமல்படுத்தப்படும். இவற்றுக்கிடையே தேசிய குற்ற ஆவண மையம் 2022ம் ஆண்டில் மட்டும் 4,45,256 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதத்தில், பாலின பாரபட்சத்தை களைவதற்கென, பாரபட்சமற்ற வார்த்தைகள் கொண்ட கையேடை உச்சநீதிமன்றம் வெளியிட்டது. எனினும் ஐந்து நீதிபதி கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தற்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்க மறுத்து உத்தரவிடவும் செய்தது. ஒன்பது மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. மதம் மற்றும் சாதியரீதியிலான செய்திகள் பெருமளவில் ஊடகப் பரப்பை நிரப்பின. மார்ச் 2022 மற்றும் ஜூலை 2023-க்கு இடையில், இந்தியாவின் பெரும் பணக்காரர் எண்ணிக்கை 166லிருந்து 174 ஆக உயர்ந்தது. 15-29 வயதுக்குள் இருப்பவர்களில் வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை, வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்கு 17.3 சதவிகித அளவில் இருந்தது.
*****
பல விஷயங்கள் வருடம் முழுக்க நேர்ந்து கொண்டிருந்ததில், தேவையான அறிக்கைகளை ஆய்வு செய்து சேகரிக்கும் பணியை நூலகம் மேற்கொண்டது.
சட்டங்கள், சட்டப்பிரிவுகள், புத்தகங்கள், விதிமுறைகள், கட்டுரைகள், உதாரணங்கள், சொற்களஞ்சியங்கள், அரசாங்க அறிக்கைகள், கையேடுகள், கணக்கெடுப்புகள் என பலவற்றை இப்பணி உள்ளடக்கியிருந்தது. ஒரு காமிக்ஸ் புத்தகம் கூட எங்களின் கட்டுரை ஒன்றை தழுவியிருந்தது.
நூலக செய்தியறிக்கை, இந்த வருடத்தின் புதிய பணியாக இருந்தது. குறிப்பிட்ட ஒரு விஷயம் சார்ந்த, பாரி கதைகள் மற்றும் தரவுகள் கொண்ட ஒரு அலசலாக அது அமைந்தது. இத்தகையக் கட்டுரைகள் நான்கை இந்த வருடத்தில் பிரசுரித்தோம். பெண்களின் ஆரோக்கியம் , தொற்று பாதித்த தொழிலாளர்கள் , பால்புதுமையர் சந்தித்த நெருக்கடிகள், கிராமப்புற இந்தியாவில் கல்வியின் நிலை ஆகியவை.

நாம் பிரசுரித்த அறிக்கைகளில், காலநிலை பொறுப்புகளில் நிலவும் சமமின்மை வெளிப்பட்டது. புவிவெப்பத்தை கட்டுக்குள் கொண்டு வர தேவைப்படும் கார்பன் வெளியீடு அதிகமாக உலகின் 10 சதவிகித பணக்காரர்களே காரணமென்பதையும் அது வெளிப்படுத்தியிருக்கிறது. தீவிரக் காலநிலைகளை தவிர்க்க புவிவெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென்ற 2015ம் ஆண்டில் பாரிஸ் ஒப்பந்தம் போடப்பட்டும் இதுவே நிலை. நாம் அந்த வரையறையை தாண்டி விட்டோம்.
2000மாம் ஆண்டிலிருந்து பசுமைக் குடில் வாயு வெளியீடு 40 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. நாட்டின் 40 சதவிகித மக்கள் வாழும் கங்கை சமவெளி, தற்போது இந்தியாவின் அதிகம் மாசுபட்ட பகுதியாகி இருக்கிறது. மேலும் பெருநகர மாசுபாட்டில் தில்லி முன்னணியில் நிற்கிறது. இந்தியாவின் எல்லா பகுதிகளும் காலநிலை ஆபத்தை எதிர்கொண்டிருந்தாலும் ஜார்கண்ட், ஒடிசா போன்ற சில மாநிலங்கள் இன்னும் அதிக பாதிப்படையும் நிலையில் இருப்பதை எங்களுக்கு வரும் பல அறிக்கைகள் காட்டுகின்றன.

2020ம் ஆண்டில் நேர்ந்த காலநிலை மாற்ற சம்பவங்களால் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் இடம்பெயர வேண்டியிருந்தது. நாட்டின் 90 சதவிகித தொழிலாளர்கள் அமைப்பு சாராதவர்களாக இருக்கும் நிலையில், சமூக பாதுகாப்பு என்பது அத்தியாவசியம் என்கிறது சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தின் இந்த அறிக்கை .
அமைப்புசாரா வேலைகளும் இடப்பெயர்வும், குடும்பங்களுடன் இடம்பெயரும் குழந்தைகளின் கல்வியுடனும் தொடர்பு கொண்ட விஷயம். தில்லி NCR மற்றும் போபால் ஆகிய இடங்களின் புலம்பெயர் குடும்பங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த 40 சதவிகித குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.

தொழிலாளர் கணக்கெடுப்பு குறித்த காலாண்டு செய்தியறிக்கைகள், தொழிலாளர் பங்களிப்பையும் வேலையின்மை விகிதங்களையும் தொழிலாளர் பரப்பையும் கண்காணிக்க தொடர்ந்து உதவி வருகிறது. ஊடகத் துறையில் நேர்ந்திருக்கும் மாற்றம், இந்த வருடத்தில் முக்கியமான அம்சமாகும். ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய மக்களில் மூன்றில் ஒருவர் அன்றாடம் தொலைக்காட்சி பார்க்கிறார். ஆனால் நாளிதழை அன்றாடம் வெறும் 14 சதவிகித மக்கள்தான் படிக்கின்றனர். இன்னொரு அறிக்கையின்படி 729 மில்லியன் இந்தியர்கள் இணையத்தை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மேலும் உள்ளூர் செய்திகளை வாசிக்கும் 70 சதவிகிதம் பேர், அவற்றை உள்ளூர் மொழிகளில்தான் படிக்கின்றனர்.


A queer person’s guide to accessing rights போன்ற ஆவணங்கள் நீதியை இவ்வமைப்பில் வலுவாக்க துணைபுரிபவை. இந்த வருடத்தில் பிரசுரிக்கப்பட்ட சொற்களஞ்சியங்களும் கையேடுகளும் பாலின வகைமைகளை கடந்து அனைவருக்கும் பொதுவான சொற்களை பயன்படுத்த வலியுறுத்துவதாக இருந்தது. புரியாத அறிவியல் வார்த்தைகளும் பொது மக்களின் மொழிக்கும் இடையிலான தூரத்தை கடக்க காலநிலை அகராதி உதவி காலநிலை குறித்து சரளமாக பேச வைத்தது. நாம் பிரசுரித்த இந்த வரைபடம் , உலகில் அருகி வரும் மொழி பன்மைத்துவத்தை இந்தியாவில் அழிவை சந்திக்கும் 300 மொழிகளை பதிவு செய்து எடுத்துக் காட்டியிருக்கிறது.
பாரி நூலகத்தில் மொழிக்கென தனி அறை இருக்கிறது. பல அறிக்கைகளுக்கு மத்தியில் அந்த அறை, வங்க மொழியின் வட்டார வழக்குகளிலும் வரலாற்றிலும் நேர்ந்த மாற்றங்களை ஆராய்ந்து மொழிக்கும் அதிகாரத்துக்கும் இடையே இருக்கும் உறவை First History Lessons மூலமாக வெளிக்கொணர்ந்திருக்கிறது. இந்திய மொழியியல் கணக்கெடுப்பு அறிக்கைகளையும் நூலகம் கொண்டிருக்கிறது. வரும் வருடத்தில் இன்னும் அதிக அறிக்கைகள் இடம்பெறும். 2023ம் ஆண்டு பல வேலைகளை கொண்டிருந்தது. 2024 இன்னும் பல வேலைகளை கொண்டு வரவிருக்கிறது. இடம்பெறவிருக்கும் புது விஷயங்களை தொடர்ந்து பாருங்கள்.

பாரியில் தன்னார்வத்துடன் பங்களிக்க contact@ruralindiaonline.org மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
எங்களின் பணியில் உங்களுக்கு ஆர்வமிருந்தாலும் பாரிக்கு பங்களிக்க நீங்கள் விரும்பினாலும் contact@ruralindiaonline.org மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். எங்களுடன் பணியாற்ற சுயாதீன எழுத்தாளர்களையும் செய்தியாளர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் ஆவணப்பட இயக்குநர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் கட்டுரை ஆசிரியர்களையும் விளக்கப் பட ஓவியர்களையும் ஆய்வாளர்களையும் வரவேற்கிறோம்.
லாபம் கருதி நடத்தப்படும் நிறுவனம் அல்ல, பாரி. எங்களின் பன்மொழி இணைய பத்திரிகையையும் பெட்டகத்தையும் ஆதரிக்கும் மக்களின் நன்கொடைகளை சார்ந்து நாங்கள் இயங்குகிறோம். பாரிக்கு நீங்கள் பங்களிக்க விரும்பினால் DONATE என்ற வார்த்தையில் க்ளிக் செய்யவும்.
தமிழில்
:
ராஜசங்கீதன்