சந்தோஷி கோரி, உரிமையாளருக்கான புதிய உணர்வை அனுபவிக்கிறார். “விவசாயி கூட்டுறவு நிறுவனத்தை பெண்களாகிய நாங்கள்தான் உருவாக்கினோம். இப்போது எங்கள் ஊரின் ஆண்கள் இது நல்ல முன்னெடுப்பு என ஒப்புக் கொள்கிறார்கள்,” என்கிறார் சிரித்தபடி.
பைராஹா பஞ்சாயத்தின் குச்சாரா கிராமத்தை சேர்ந்த தலித் விவசாயியான அவர், ருஞ்ச் மகளிர் உற்பத்தியாளர் கூட்டுறவு (MFPO) உறுப்பினர் சந்தா 1,000 ரூபாய் கட்டியிருக்கிறார். ஜனவரி 2024ம் ஆண்டிலிருந்து பன்னா மாவட்டத்தின் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி பெண்கள் 300 பேர் அங்கு பதிவு செய்திருக்கின்றனர். ருஞ்சின் ஐந்து மேலாளர்களில் சந்தோஷி ஒருவர். கூட்டங்களில் பேச அவர் அழைக்கப்படுகிறார்.
“முன்பெல்லாம் பிச்சோலியா (வணிகர்) வந்து எங்களின் அரார் தால் (துவரை விதை) அரைக்கப்படாததால், குறைந்த விலைக்கு வாங்குவார். பிறகு அவர் நேரத்துக்கு வருவதில்லை. எங்களுக்கு பணம் நேரத்துக்கு வந்ததில்லை,” என்கிறார் அவர் பாரியிடம். மூன்று குழந்தைகளுக்கு தாயான அந்த 45 வயது பெண், இரண்டு ஏக்கர் மானாவாரி நிலத்தில் துவரை வளர்க்கிறார். குத்தகைக்கு ஒரு ஏக்கர் நிலமும் எடுத்திருக்கிறார். நாட்டிலேயே 11 சதவிகித பெண்களுக்குதான் சொந்தமாக நிலம் இருக்கிறது. மத்தியப்பிரதேசம் விதிவிலக்கல்ல.
யமுனையில் கலக்கும் பகைன் ஆற்றின் துணை ஆறான ருஞ்ச் ஆற்றின் பெயர் சூட்டப்பட்டிருக்கும் ருஞ்ச் MFPO, அஜய்கர் மற்றும் பன்னா ஒன்றியத்தின் 28 கிராமங்களை சேர்ந்த பெண் விவசாயிகளின் கூட்டுறவு நிறுவனம் ஆகும். ஆறு மாதமாக இயங்கி வரும் நிறுவனத்தில் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏற்கனவே லாபம் கிடைத்திருக்கிறது. அடுத்த வருடத்தில் அது இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.


இடது: பன்னா மாவட்ட பைராகா பஞ்சாயத்திலுள்ள வயலில் சந்தோஷி. வலது: ருஞ்ச் ஆற்றின் (கூட்டுறவு அமைப்பின் பெயருக்கான காரணம்) கரைகளில் விவசாயிகள் துவரை விளைவிக்கின்றனர்


இடது: அஜய்கரில் இருக்கும் பருப்பு பிரிக்கும் இயந்திரம். பூபென் கெளண்டர் (சிவப்பு சட்டை) மற்றும் கல்லு ஆதிவாசி (நீல நிறச் சட்டை) அவரை இயந்திரத்தினருகே. வலது: அமர் ஷங்கர் கெளண்டர் அவரையை பிரிக்கிறார்
“எங்கள் கிராமத்தின் பெரும்பாலான குடும்பங்கள் 2-4 ஏக்கர் நிலம் வைத்திருக்கின்றன. நாங்கள் இயற்கை பயிர்களை விளைவிப்பதென யோசித்தோம். எனவே துவரையில் கவனம் செலுத்தி, அதை அரைப்பதற்கான ஒரு இயந்திரத்தை வாங்க பங்களிப்பதென முடிவெடுத்தோம்,” என்கிறார் கூட்டுறவு அமைப்பை உருவாக்கிய காரணத்தை சந்தோஷி விளக்கி.
அஜய்கர் பகுதியின் துவரை பயிருக்கு பெரும் ஆதரவு இருக்கிறது. “ருஞ்ச் ஆறை ஒட்டி செல்லும் தராம்பூர் பகுதியில் விளையும் பருப்பு, ருசி மற்றும் மணத்துக்கு பெயர் பெற்றது,” என்கிறார் கர்ஜான் சிங். விந்திய மலையில் இருந்து வரும் ஆறு, விவசாயத்துக்கான வளமான நிலத்தை உருவாக்கி தருவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். விவசாயிகளுடன் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரதான், பெண்களுக்கு மட்டுமான கூட்டுறவு அமைப்பு உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியது.
சந்தோஷி போன்ற விவசாயிகள் நியாயமான விலை பெற உறுதி பூண்டனர். “எங்களின் FPO-வால்தான் இப்போது சரியான நேரத்தில் பணம் கிடைக்கிறது,” என்கிறார். துவரை ஒரு குவிண்டாலுக்கு 10,000 ரூபாய் என்கிற விலையில் விற்கிறது. மே 2024-ல் அந்த விலை ரூ.9,400 ஆக குறைந்தது. எனினும் பெரிய நிறுவனங்கள் கூட்டுறவு வழியாக வாங்குவதால், ருஞ்ச் உறுப்பினர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை
ராகேஷ் ராஜ்புட்தான் ருஞ்சின் (ஒரே அலுவலர்) தலைமை நிர்வாக இயக்குநர். இயற்கை விதைகளை பயன்படுத்துவதாக அவர் கூறுகிறார். செயற்கை விதைகள் இங்கு வருவதில்லை. எடை இயந்திரங்களும் பைகளும் ஒவ்வொரு பையையும் பரிசோதிக்கும் ஓர் அலுவலரும் இருக்கும் 12 சேகரிப்பு மையங்களை அவர் பராமரிக்கிறார்.


இடது: இயந்திரத்தால் பிரித்த பிறகான பருப்பு. வலது: MFPO-வின் தலைமை நிர்வாக இயக்குநர் ராகேஷ் ராஜ்புட், பேக்கேஜ் செய்யப்பட்ட பருப்பை காட்டுகிறார்


இடது: குச்சாரா வீட்டில் சந்தோஷி கோரி. வலது: சொந்த பயன்பாட்டுக்காக காய்கறிகளை அவர் வளர்க்கும் புழக்கடையில்
வரும் வருடத்தில் ருஞ்சின் உறுப்பினர் எண்ணிக்கை ஐந்து மடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துவரையிலிருந்து கொண்டைக்கடலை, கால்நடை வியாபாரம் (புண்டெல்காந்தி வகை ஆடுகள்), இயற்கை உரங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றுக்கும் கூட்டுறவு மையம் நகரும் திட்டத்தில் இருப்பதாக சொல்கிறார் பிரதானின் சுகந்தா ஷர்மா. “விவசாயிகளை வீடு வீடாக சென்று சந்திக்கும் சாத்தியத்தை நாங்கள் விரும்புகிறோம்,” என்கிறார் அவர்.
வீட்டுக்கு பின்னால் இருக்கும் நிலத்தில் சந்தோஷி வளர்க்கும் சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை நமக்கு காட்டுகிறார். குடும்பத்தின் இரண்டு எருமைகளை மேய்ச்சலுக்கு கணவர் அழைத்து சென்றிருக்கிறார். விரைவில் வீடு திரும்பி விடும்.
”வேறு பருப்பு எதையும் நான் சாப்பிட்டதில்லை. என் வயலின் பருப்பு, அரிசியை போல வேகமாக வெந்து விடும். ருசியாகவும் இருக்கும்,” என்கிறார் அவர் பெருமையுடன்.
தமிழில் : ராஜசங்கீதன்