நான்காம் நாள் நான் சென்றடைந்தேன். நான் சென்றபோது பிற்பகல் ஆகியிருந்தது.
சென்னையிலிருந்து வயநாடுக்கு சென்றபோது, தன்னார்வலர்கள் இயங்கும் பகுதிகளை கடந்து சென்றேன். பேருந்துகள் இல்லை. தெரியாதவர்களிடம் ‘லிஃப்ட்’ கேட்டு சென்றேன்.
அவசர ஊர்திகள் வந்து சென்று கொண்டிருந்த அந்த இடம் ஒரு போர்ச்சூழலை போல இருந்தது. கனரக கருவிகளின் உதவியில் மக்கள் மும்முரமாக சடலங்களை தேடிக் கொண்டிருந்தனர். சூரல்மலா, அட்டமலா மற்றும் முண்டக்கை டவுன்கள் முற்றிலும் அழிந்திருந்தன. வசிப்பிடம் என எதுவும் இல்லை. வசித்தவர்களின் வாழ்க்கைகள் சுக்குநூறாகி இருந்தது. உற்றாரின் சடலங்களை அவர்களால் அடையாளம் காணக் கூட முடியவில்லை.
ஆற்றங்கரைகளில் இடிபாடுகளும் சடலங்களும் குவிந்திருந்தது. உயிர் காக்கும் வீரர்களும் சடலங்களை தேடும் குடும்பங்களும் ஆற்றங்கரைகளினூடாக செல்கையில் புதையாமல் இருக்கும் பொருட்டு குச்சிகளை பயன்படுத்தி சென்றனர். என் கால் மண்ணுக்குள் சிக்கியது. சடலங்களை அடையாளம் காண முடியவில்லை. உடலின் அங்கங்கள்தான் சிதறிக் கிடந்தன. எனக்கு இயற்கையுடன் ஆழமான பிணைப்பு உண்டு. ஆனால் இந்த அனுபவம் பயங்கரமாக இருந்தது.
மொழி வித்தியாசத்தால், பேரழிவுக்கு வெறும் சாட்சியாக மட்டும்தான் நான் இருக்க முடிந்தது. அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க ஒதுங்கிக் கொண்டேன். முன்பே வர நினைத்த எனக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது.
கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர், ஓடும் நீரை பின்தொடர்ந்து நடந்தேன். வீடுகள் புதைந்து கிடந்தன. பல அடையாளமே தெரியவில்லை. பார்க்கும் இடமெங்கும் தன்னார்வலர்கள் சடலங்களை தேடிக் கொண்டிருந்தனர். ராணுவமும் தேடுதல் பணியில் இருந்தது. இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். அச்சமயத்தில் எந்த சடலுமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் தேடல் தொடர்ந்தது. அனைவரும் ஒன்றாக, தளராமல் பணி செய்து கொண்டிருந்தனர். தேநீர், உணவு போன்றவற்றை பகிர்ந்து கொண்டனர். ஒற்றுமை உணர்வு எனக்கு ஆச்சரியம் அளித்தது.

சூரல்மலா மற்றும் அட்டமலா கிராமங்கள் முற்றாக அடித்து செல்லப்பட்டு விட்டது. அகழ்வு கருவிகளை தன்னார்வலர்கள் பயன்படுத்தும் நிலை. சிலர் தங்களின் சொந்தக் கருவிகளை உதவிக்குக் கொண்டு வருகின்றனர்
அங்கு வசிப்பவர்கள் சிலரிடம் பேசுகையில், இதே போன்ற சம்பவம் ஆகஸ்ட் 8, 2019 அன்று புதுமலா அருகே நடந்ததாகவும் அதில் 40 பேர் இறந்ததாகவும் கூறினர். மேலும் 2021-ல் கிட்டத்தட்ட 17 பேர் இறந்தனர். இது மூன்றாவது முறை. கிட்டத்தட்ட 430 பேர் உயிரிழந்திரப்பதாகவும் 150 பேர் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
நான் கிளம்பிய நாள் அன்று, எட்டு சடலங்கள் புதுமலா அருகே புதைக்கப்படுவதாக சொன்னார்கள். எல்லா மதங்களையும் சேர்ந்த தன்னார்வலர்கள் அங்கு இருந்தனர். எல்லா சடங்குகளும் நடந்தது. எட்டு சடலங்களையும் எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அனைவரும் பிரார்த்தனை செய்து அடக்கம் செய்தனர்.
அழுகுரல் கேட்கவில்லை. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
ஏன் இத்தகைய துயர சம்பவங்கள் இங்கு தொடர்ந்து நடக்கின்றன? மொத்த பகுதியும் மண்ணும் பாறையும் கலந்த கலவை போல் காட்சியளித்தது. அத்தகைய திடமின்மையும் காரணமாக இருக்கலாம். புகைப்படங்கள் எடுக்கும்போது இந்த கலவையைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. ஒரு மலையோ பாறையோ முழுமையாக தென்படவில்லை.
தொடர் மழை என்பது இப்பகுதியில் எதிர்பாராத விஷயம். அதிகாலை ஒரு மணி முதல் ஐந்து மணி வரை பெய்த மழையால், நிலையற்ற தரை உள்வாங்கிவிட்டது. மூன்று நிலச்சரிவுகள் இரவில் நேர்ந்தன. நான் பார்த்த ஒவ்வொரு கட்டடமும் பள்ளியும் இதை எனக்கு நினைவூட்டியது. தன்னார்வலர்களுடன் பேசுகையில், அவர்கள் அங்கேயே சிக்கிக் கொண்டு விட்டதாக உணர்ந்தேன். தேடுதலில் இருப்பவர்களும் தொலைந்து போனதை போல் தெரிந்தார்கள். அங்கு வாழ்பவர்கள், மீள்வதற்கான வாய்ப்பில்லை.

எண்ணற்ற தேயிலைத் தோட்டங்கள் இருக்கும் இடத்தில் வயநாடு துயரம் நடந்திருக்கிறது. இவை தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள்

வேகமாக ஓடும் ஆற்றின் நிறம், முண்டக்கை மற்றும் சூரல்மலா பகுதிகளில் பெய்யும் கனமழையால் அடித்து வரப்படும் மண்ணால் பழுப்பு நிறமாக இருக்கிறது

நிலம், மண் மற்றும் பாறையின் கலவையாக இருக்கிறது. கனமழையால் அது நிலைகுலைந்ததுதான் பேரழிவுக்கான காரணம்

அதீத மழையும் நீர் ஓட்டமும் மண் அரிப்பை ஏற்படுத்தி, இந்த தேயிலை தோட்டம் முற்றாக நிலைகுலைந்திருக்கிறது. தன்னார்வலர்கள் சடலங்களை தேடும் பணியில் இருக்கின்றனர்

இந்த விபத்தில் பிழைத்த பல குழந்தைகள் பெரும் பாதிப்பில் இருக்கின்றன

பாறைகளும் மண்ணும் பல வீடுகளை புதைத்திருக்கிறது

வயநாட்டின் தேயிலைத் தொழிலாளர் குடியிருப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது

இந்த இரு தள கட்டடம், வெள்ளத்தில் உருண்டு வந்த பாறைகளாக முற்றிலுமாக அழிவுற்றிருக்கிறது

பல வாகனங்கள் கடும் பாதிப்பை அடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன

தன்னார்வலர்கள் சில கணங்கள் ஓய்வெடுக்கின்றனர்

வீடுகள் விழுந்ததில் குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டன. அவர்களின் உடைமைகள் ஈர மண்ணில் புதைந்திருக்கிறது

தன்னார்வலர்களுடன் ராணுவமும் இணைந்து தேடுதல் பணியை செய்கிறது

மசூதியின் அருகே தேடுதல் பணி


மண்ணை அகற்றி மக்களை கண்டுபிடிக்க கருவிகள் (இடது) உதவுகின்றன. தன்னார்வலர் (வலது) ஆற்றோரமாக சடலங்களை தேடுகின்றனர்

மீட்பு பணியில் முக்கிய பங்காற்றும் தன்னார்வலர்கள்

முழுவதுமாக அழிந்திருக்கும் பள்ளிக் கட்டடம்

ஈர மணலில் புதையாமல் இருக்க குச்சிகளை தன்னார்வலர்கள் பயன்படுத்துகின்றனர்

மண்ணை தோண்டி அகற்ற அகழ்வு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன

வயநாட்டில் மீட்புபணி செய்யும் உள்ளூர்வாசிகளும் பிறரும் உணவு இடைவேளை எடுத்துக் கொள்கின்றனர்

கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் புதுமலா கிராமம், இதே வகை பேரழிவுகளை 2019 மற்றும் 2021 ஆண்டுகளிலும் சந்தித்திருக்கிறது

இரவில் தன்னார்வலர்கள் சடலங்களுக்காக காத்திருக்கின்றனர்

அவசர ஊர்திகளில் வரும் சடலங்களை வாங்க அவசர உதவி பொருட்களுடன் தன்னார்வலர்கள் காத்திருக்கின்றனர்

இறந்து போனவர்களுக்கான பிரார்த்தனைகள் செய்யப்படும் கூடத்துக்கு சடலங்கள் கொண்டு செல்லப்படுகின்றன

இறந்தவர்களின் உடல்கள் வெள்ளை துணி போர்த்தி சுமந்து செல்லப்படுகிறது

பல சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை

பிரார்த்தனை முடிந்ததும் புதைக்கும் பணி நடக்கிறது

இரவு முழுக்க தன்னார்வலர்கள் பணிபுரிகின்றனர்
தமிழில் : ராஜசங்கீதன்