மறைந்திருந்து மர ஆந்தை எழுப்பும் மெல்லிய சத்தத்தையும் நான்கு வகை சிலம்பன்கள் எழுப்பும் சத்தத்தையும் அவரால் அறிந்து கொள்ள முடியும்.
பி.சித்தன் படிப்பை நிறுத்திவிட்டார். ஆனால் நீலகிரியிலுள்ள அவரது வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் இருக்கும் பறவை இனங்களை பற்றிய அவரது அறிவு, பறவையியல் நிபுணரின் அறிவுக்கு ஒப்பானது.
“பொக்கபுரத்தில் மூன்று சிறுவர்களுக்கு சித்தன் எனப் பெயரிடப்பட்டது. எந்த சித்தன் என யாரேனும் கேட்டால், ‘பறவைகளை தேடி ஓடும் அந்த குருவி சித்தன்’ என கிராமவாசிகள் குறிப்பிடுவார்கள்,” என்கிறார் அவர் பெருமையுடன் சிரித்தபடி.
அவரின் அதிகாரப்பூர்வ பெயர் பி.சித்தன். ஆனால் முதுமலையின் கிராமங்களிலும் காடுகளிலும் அவரை குருவி சித்தன் எனதான் கூறுவார்கள். குருவிகள் Passeriformes என்கிற இனவகையை சேர்ந்தவை. பறவை இனங்களில் பாதி இந்த வகையை சார்ந்தவைதான்.
மேற்கு தொடர்ச்சி மலையில் எங்கு இருந்தாலும் நான்கைந்து பறவைகள் பாடுவதை நீங்கள் கேட்க முடியும். நீங்கள் கவனித்து கற்றுக் கொள்ள வேண்டும்,” என்கிறார் நீலகிரி அடிவாரத்தில் இருக்கும் அனக்கட்டி கிராமத்தின் ஆரம்பப்பள்ளி ஆசிரியரான 28 வயது விஜயா சுரேஷ். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அருகே வாழும் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் சித்தனிடமிருந்து விலைமதிப்பற்ற தகவலை பெற்றதாக அவர் சொல்கிறார். அப்பகுதியிலும் சுற்றுவட்டாரத்திலும் விஜயாவால் 150 பறவைகளை இனங்காண முடியும்.


இடது: நீலகிரி மாவட்டத்தின் ஷோலூர் டவுனின் பொக்கபுர
மூங்கில் காட்டில் பி.சித்தன் பறவைகள் தேடுகிறார். வலது: விஜயா சுரேஷால் 150 பறவைகளை
இனங்காண முடியும்


வெண்கழுத்து நாரை (இடது) குளிர்காலத்துக்கு மேற்கு
தொடர்ச்சி மலைக்கு வரும் பறவை. நீலகிரியின் பொக்கபுரத்தில் தென்பட்ட சிங்காரா சிலம்பன்
பறவை (வலது)
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் வசிப்பிடப் பகுதியிலுள்ள பொக்கபுரம் கிராமத்தில் வசிக்கிறார் சித்தன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளை வன வழிகாட்டியாகவும் பறவை ஆர்வலராகவும் விவசாயியாகவும் அவர் கழித்திருக்கிறார். 46 வயது பறவையியலாளரான அவரால், இந்தியாவிலுள்ள 800 பறவைகள் வரை இனங்காட்ட முடியும். அவற்றில் பலவற்றை பற்றி அவர் விளக்கமாக பேசவும் முடியும். பட்டியல் சாதியாக தமிழ்நாட்டில் பட்டியலிடப்பட்டிருக்கும் இருளர் சமூகத்தை சேர்ந்த சித்தன், தன் அறிவை இளையோருக்கு முதுமலைப் பள்ளிகளில் காணொளி தொகுப்புகளின் வழியாகவும் உரையாடலின் வழியாகவும் வனத்தினூடாக நடை செல்வதன் வழியாகவும் பகிர்கிறார்.
பறவைகள் மீது அவர் கொண்ட ஆர்வத்தை தொடக்கத்தில், குழந்தைகள் சாதாரணமாகத்தான் பார்த்தனர். “ஆனால் அவர்கள் ஒரு பறவையை பார்க்கும்போது என்னிடம் வந்து அதன் நிறம், அளவு, சத்தம் ஆகியவற்றை விவரிப்பார்கள்,” என நினைவுகூருகிறார்.
38 வயது ராஜேஷ், மொயாறு கிராமத்தின் முன்னாள் மாணவர். பறவை மனிதருடன் கழித்த காலத்தை நினைவுகூருகையில், “பக்கி போன்ற பறவைகள் உதிர்ந்த மூங்கில் இலைகளில்தான் முட்டைகளிடும் என்பதால், அவற்றின் மீது நடக்க வேண்டாம் என சொல்வார். முதலில் இத்தகைய தகவல்கள் எனக்கு ஆர்வமூட்டின. காலப்போக்கில் நானும் பறவைகளின் உலகத்தால் ஈர்க்கப்பட்டேன்,” என்கிறார்.
நீலகிரியில் தோடர்கள், கோத்தர்கள், இருளர்கள், கட்டுநாயக்கர்கள், பனியாக்கள் போன்ற பல பழங்குடியினர் வசிக்கின்றனர். சித்தன் சொல்கையில், “என் பகுதியை சேர்ந்த பழங்குடி குழந்தைகள் ஆர்வம் காட்டியதும், அவர்களுக்கு ஒரு பழைய கூட்டை கொடுப்பேன். அல்லது குஞ்சுகளை காக்கும் பொறுப்பை அவர்களுக்குக் கொடுப்பேன்,” என்கிறார்.
2014ம் ஆண்டில் பொக்கபுரம் அரசுப் பள்ளி மாணவர்களிடம் பேச மசினகுடி இகோ நேச்சுரலிஸ்ட்ஸ் க்ளப் (MENC) அமைப்பு அழைத்தபோது, பள்ளிகளிலான அவரது பணி தொடங்கியது. ”அதற்குப் பிறகு, அருகாமை கிராமங்களின் பல பள்ளிகள் எங்களை அழைக்கத் தொடங்கின,” என்கிறார் அவர்.
‘பொக்கபுரத்தில் மூன்று சிறுவர்களுக்கு சித்தன் எனப் பெயரிடப்பட்டது. எந்த சித்தன் என யாரேனும் கேட்டால், ‘பறவைகளை தேடி ஓடும் அந்த குருவி சித்தன்’ என கிராமவாசிகள் குறிப்பிடுவார்கள்’
*****
எட்டாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்தி, பெற்றோரின் விவசாய வேலைக்கு சித்தன் உதவ வேண்டியிருந்தது. 21 வயதாகும்போது, வனத்துறையால் பங்களா காவலராக பணியமர்த்தப்பட்டார். கிராமங்களில் யானை நடமாட்டம் இருந்தால் மக்களை எச்சரிக்க வேண்டும். சமையலறையில் வேலை பார்க்க வேண்டும். முகாம் கட்டுமானங்களில் உதவ வேண்டும்.
வேலையில் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குள்ளேயே அவர் ராஜிநாமா செய்துவிட்டார். “என்னுடைய ஊதியமான 600 ரூபாய் ஐந்து மாதங்கள் வரை வராதபோது நான் வேலையை விட்டு செல்ல வேண்டியிருந்தது,” என்கிறார் அவர். “கடும் அழுத்தத்தில் நான் இல்லாதிருந்திருந்தால், பணியிலேயே இருந்திருப்பேன். மிகவும் பிடித்த வேலை. காட்டை விட்டு நீங்க விரும்பாததால் வன வழிகாட்டியானேன்.”
90களின் பிற்பகுதியில் அவருக்கு 23 வயதாக இருக்கும்போது, பறவைகள் கணக்கெடுப்பு எடுக்க வந்த இயற்கை ஆர்வலர்களுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் பணி, யானைக் கூட்டங்கள் பற்றி அவர்களை எச்சரிப்பதுதான். “பறவை தேடுபவர்களின் கவனம், சுற்றி இருக்கும் ஆபத்துகளின் மீது இருக்காது,” என்கிறார் அவர்.


இடது: மூங்கில்
அடர்ந்த பகுதியில் பறவைகளை தேடுகிறார் சித்தன். வலது: நீலகிரியின் முதுமலை புலிகள்
காப்பகத்துக்கு அருகே இருக்கும் அவரது வீட்டருகே செல்லும் சாலையை கடக்கும் யானைகள்
அப்பயணத்தின்போது எதிர்பாராத சந்திப்பு அவருக்கு நேர்ந்தது. “பெரிய மனிதர்கள் அந்த சிறு பறவையை பார்த்ததும் பெரும் சந்தோஷம் கொண்டார்கள். அவர்கள் பார்த்த பறவையை நான் கவனித்தேன். அது வெண்வயிற்று மின்சிட்டு,” என்கிறார் அவர். அவற்றின் பெயர்களை தமிழிலும் கன்னடத்திலும் கற்கத் தொடங்கிய பிறகு சித்தன் பின்வாங்கவே இல்லை. சில வருடங்கள் கழித்து, மூத்த பறவையியலாளர்களும் உள்ளுர்வாசிகளுமான குட்டப்பன் சுதேசன் மற்றும் டேனியல் அவருக்கு பயிற்சி கொடுத்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை, வடக்கு மும்பையில் தொடங்கி நேராக கீழே கன்யாகுமரி வரை நீளுகிறது. அங்கு 508 பறவை இனங்கள் இருப்பதாக இந்திய அறிவியல் நிறுவனம் பதிப்பித்த மேற்கு தொடர்ச்சி மலையின் வனக் காவலர்கள் என்ற 2017ம் ஆண்டின் ஆய்வு குறிப்பிடுகிறது. அவற்றில் 16 இனங்கள் அப்பகுதிக்கு பிரத்யேகமானவை. செந்நிற மார்பு கொண்ட சிரிப்பான், நீலகிரி மரப்புறா, வெண்வயிற்று குட்டை இறக்கையன், பட்டைவால் புல்குருவி, செந்நிற மார்பு கொண்ட சிலம்பன், சாம்பல் தலை புல்புல் போன்ற அரிய பறவைகளும் அதில் அடக்கம்.
காடுகளில் பல மணி நேரங்கள் கழிக்கும் சித்தன், பல பொது இனங்கள் அருகி விட்டதாக சொல்கிறார். “சாம்பல் தலை புல்புல் பறவை ஒன்றை கூட நான் பார்க்கவில்லை. அவை அதிகமாக இருந்தன. ஆனால் இப்போது அருகி விட்டன.”
*****
சிவப்பு மூக்கு ஆள்காட்டி பறவையின் எச்சரிக்கை சத்தம் காடெங்கும் எதிரொலிக்கிறது.
“வீரப்பன் இப்படித்தான் ரொம்ப காலமாக தப்பித்திருந்தார்,” என ரகசியமாக சொல்கிறார் என்.சிவன். சித்தனின் நண்பனான அவரும் பறவை வல்லுநர் ஆவார். வேட்டை, சந்தனக் கடத்தல் போன்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் வீரப்பன். சத்தியமங்கலம் காடுகளில் வாழ்ந்து வந்த அவர் பல்லாண்டு காலமாக காவலர்களிடம் சிக்காமல் தப்பிக்க முடிந்ததற்கு காரணம், “ஆள்காட்டி பறவையின் இந்த சத்தத்தை கேட்டுத்தான்,” என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.


இடது: வேட்டை
விலங்குகளின் நடமாட்டம் குறித்து பிற விலங்குகளையும் பறவைகளையும் எச்சரிக்க ஆள்காட்டிப்
பறவையின் சத்தம் பயன்படும். வலது: மக்களின் நடமாட்டத்தை வேட்டைக்காரர்களுக்கு அறிவிக்கவும்
அந்த சத்தம் பயன்படுவதாக என்.சிவன் கூறுகிறார்


சித்தன்
(வலது) பொக்கப்புர மூங்கில் காட்டில் எச்சங்களை கொண்டு ஒரு ஆந்தையை (வலது) தேடுகிறார்
“காட்டுக்குள் வேட்டை விலங்கு வந்தாலோ மனிதர் நடமாட்டம் இருந்தாலோ ஆட்காட்டி குருவிகள் கத்தும். காட்டு சிலம்பன்கள் புதர்கள் மேலமர்ந்தபடி வேட்டை விலங்கின் நடமாட்டத்தை பின்பற்றி சத்தம் எழுப்பும்,” என்கிறார் என்.சிவன். ஒரு பறவையை காணும் ஒவ்வொரு முறையும் அவர் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறார். “ஒரு வருடம் முழுக்க இப்படி நாங்கள் பயிற்சி பெற்றோம்,” என்கிறார் 50 வயது நிறைந்த அவர். பறவை இனங்களின் பெயர்கள் மனதில் நிற்க சிரமமிருந்தாலும் அவர் விடுவதாக இல்லை. “பறவைகள் நமக்கு மிகவும் முக்கியம். கற்றுக் கொள்ள முடியுமென எனக்கு தெரியும்,” என்கிறார் அவர்.
90களின் நடுப்பகுதியில், சித்தனும் சிவனும் மலையேறும் வழிகாட்டிகளாக பொக்கபுரத்துக்கு அருகே இருக்கும் தனியார் ரிசார்ட்டால் பணிக்கமர்த்தப்பட்டனர். அங்குதான் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த பறவை ஆர்வலர்களை இருவரும் சந்தித்து பழகிக் கொண்டனர்.
*****
மசினக்குடி சந்தையினூடாக சித்தன் நடந்து செல்கையில், பல இளையோர், “வணக்கம் மாஸ்டர்!” என வரவேற்கின்றனர். முதுமலையை சுற்றி வசிக்கும் அவரின் மாணவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி மற்றும் தலித் பின்னணியை சேர்ந்தவர்கள்.


இடது: பி.சித்தன் பொக்கபுரத்திலுள்ள தன் வீட்டுக்கு வெளியே குடும்பத்துடன்
அமர்ந்திருக்கிறார். அவரின் இளைய மகள் அனுஸ்ரீயும் (வலப்பக்கத்திலிருந்து மூன்றாமவர்)
பறவைகளில் ஆர்வம் கொண்டிருக்கிறார். ‘புல்புல் கூட்டை பார்க்கும்போது உற்சாகமாகிறேன்.’
வலது: 33 வயது எஸ்.ராஜ்குமார் பி.சித்தன் வீட்டில்
“நான்கு பேர் கொண்ட எங்களின் குடும்பத்தில் தாய்தான் சம்பாதிப்பவர். கோத்தகிரி பள்ளிக்கு என்னை அனுப்ப அவரால் முடியவில்லை,” என்கிறார் 33 வயது முன்னாள் மாணவரும் இருளர் சமூகத்தை சேர்ந்தவருமான ஆர் ராஜ்குமார். எனவே அவர் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, மக்கள் வசிக்கும் பகுதியில் நடந்து பொழுது போக்குவார். ஒருநாள் சித்தன் அவரை தன்னுடன் வர அழைத்தார். “அவரின் செயல்பாட்டை பார்த்ததும் நான் உடனே ஈர்க்கப்பட்டேன். இறுதியில் மலையேற்றம் செய்யவும் காட்டு உலா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு வழிகாட்டவும் தொடங்கினேன்,” என்கிறார் ராஜ்குமார்.
*****
மதுபோதை இப்பகுதியின் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. (வாசிக்க: நீலகிரியில் ஊட்டச்சத்து குறைபாடு என்பது பிறப்புரிமை ) காடு சார்ந்த இத்தகைய தொழில்கள், இளம் பழங்குடி தலைமுறையை குப்பிகளிடமிருந்து விலக்கி வைக்குமென்கிறார் சித்தன். “மது போதைக்கான முக்கியக் காரணம், பள்ளிப்படிப்பை நிறுத்திய பிறகு சிறுவர்களுக்கு செய்ய ஏதுமில்லாமலிருப்பதுதான். வேலைவாய்ப்பு இல்லாததால் அவர்கள் குடிக்கின்றனர்.”


இடது: பறவைகள் மற்றும் வன உயிர்கள் பற்றிய புத்தகங்களை பி.சித்தன் காட்டுகிறார். வலது: கூடலூர் சிங்காரா கிராமத்தில் வேலி மேல் அமர்ந்திருக்கும் கரிச்சான் பறவை
போதைப் பழக்கத்திலிருந்து விலக்கி உள்ளூர் இளைஞர்களை காட்டில் ஆர்வம் கொள்ள வைப்பதை தன் கடமையாக சித்தன் பார்க்கிறார். “நான் கரிச்சான் பறவை போன்றவன்,” என சற்று தொலைவில் இருக்கும் சிறு கருப்பு பறவையைக் காட்டுகிறார் அவர். “சிறியவையாக அவை இருந்தாலும் கரிச்சான் பறவைகள்தான் வேட்டை பறவைகளுடன் சண்டையிடக் கூடியவை.”
தமிழில் : ராஜசங்கீதன்