“உன்னை தூக்கி எறிந்து மண்ணுக்குள் புதைத்து விடுவோம்.”
இதுதான் சுரங்க ஓப்பந்ததாரர் மதுரியா தேவியிடம் கூறியது. பண்டல்கண்டின் முக்கியமான ஆறுகளில் ஒன்றான கென் சீரழிக்கப்படுவதற்கு எதிராக ஜூன் ஒன்றாம் தேதி போராட்டத்தில் கலந்துகொண்ட தன் மீதும் மற்ற 20 விவசாயிகள் மீதும் ஒப்பந்ததாரர் கோபத்தில் உள்ளதாக கூறுகிறார் மதுரியா.
அன்றைய நாள், இரண்டு மணி நேரமாக நண்பகல் வரை கென் ஆற்றுக்குள் நீர் சத்தியாகிரகம் செய்தனர் கிராமத்தினர். இந்த ஆறு, மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் ஆரம்பித்து மத்தியபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் வழியாக 450கிமீ பயணம் செய்து பாண்டா மாவட்டத்தில் உள்ள சில்லா கிராமத்தில் ஓடும் யமுனை ஆற்றில் ஒன்று சேர்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள திண்ட்வாரி வட்டத்தில்தான் மதுரியாவின் கிராமம் உள்ளது.
ஆனால், உள்ளூர் மக்கள் ஆற்றின் இரு கரையிலும் மணலை தோண்டி எடுப்பதால், சிறு கிராமங்கள் வழியாக பாயும் கென் ஆற்றின் நிலப்பரப்பு சுருங்கியுள்ளது. இரண்டு மணல் குவாரி நிறுனவங்களின் ஆதரவுடன் இந்த மாஃபியாக்கள் செயல்படுகின்றன. இந்த குவாரி முறைகேடானது மட்டுமல்லாமல் தங்கள் நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறது என கூறுகிறார் 63 வயதான மதுரியா தேவி. இவருக்கு கென் ஆற்றுக்கு அருகில் அரை ஏக்கர் நிலம் உள்ளது.
“புல்டோசர்களை பயன்படுத்தி எங்கள் நிலங்களை அதிகளவில் – 100 அடி ஆழத்திற்கு கூட - தோண்டுகின்றனர். ஏற்கனவே எங்கள் மரங்களை சாகடித்து விட்டனர். தற்போது, நாங்கள் இதுவரை தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த ஆற்றை கொல்கிறார்கள். போலீசிடம் கூட சென்றோம். ஆனால் எங்கள் பேச்சை யாரும் கேட்கவில்லை. எங்களை அச்சுறுத்துகிறார்கள்….”
இந்த மணல் குவாரி எதிர்ப்பில் சாத்தியப்படாத கூட்டணி அமைந்துள்ளது. ஆம், தலித்தான மதுரியாவும் தாக்கூர் விவசாயியும் இரு குழந்தைக்கு தாயுமான 38 வயது கணவனை இழந்த சுமன் சிங் கவுதமும் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். அவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்திலிருந்தும் மணல் எடுத்துள்ளார்கள். “எங்களை பயமுறுத்த வானில் சுடுகின்றனர்” என்கிறார்.
கப்திஹா கலன் கிராம விவசாயிகள் பெரும்பாலும் கோதுமை, கொள்ளு, கடுகு மற்றும் பயறு வகைகளை விளைவிக்கின்றனர். “எனக்குச் சொந்தமான நிலத்தில் கடுகு பயிரிட்டிருந்தேன். மார்ச் மாதம் அதையெல்லாம் தோண்டி எடுத்துவிட்டார்கள்” என்கிறார் சுமன்.

கிராமத்தினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வரும் மணல் குவாரிக்கு எதிராக பாண்டா மாவட்டத்தில் உள்ள கென் ஆற்றில் ஜூன் ஒன்றாம் தேதி நீர் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. எப்படி ஆறு சுருங்கியுள்ளது என்றும் குவாரியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சேறு பருவமழை காலத்தில் அடித்துச் செல்லப்படுவதால், சேறு நிறைந்த தண்ணீரில் சிக்கி தங்கள் கால்நடைகள் மூழ்கிவிடுவதாகவும் பெண்கள் கூறுகின்றனர்.
வருடங்கள் செல்லச் செல்ல, எங்கள் பயிர்களை காவல் காக்க நாங்கள் கற்றுக் கொண்டோம் என கிராமத்தினர் கூறுகிறார்கள். “சில சமயங்களில் அறுவடை வரை பயிர்களை காக்க முடியும். அதிர்ஷ்டம் இல்லாத வருடங்களில் குவாரிகளிடம் எங்கள் பயிர்களை இழப்போம்” என்கிறார் மதுரியா தேவி. இதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயியான ஆர்தி சிங் கூறுகையில், “சுரங்க நிலத்தில் உள்ள விவசாயத்தை மட்டும் நாங்கள் சார்ந்து இருக்க முடியாது. பல்வேறு இடங்களில் எங்களுக்கு சொந்தமாக உள்ள சிறு நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறோம்.”
சத்தியாகிரகத்தில் பங்கேற்ற வயதான பெண்மனி சீல தேவி, 76. ஒரு காலத்தில் அவரது நிலத்தில் சீமை கருவேல மரங்கள் நிரம்பியிருந்தன. “நானும் என் குடும்பமும் சேர்ந்து நட்டினோம். தற்போது எதுவும் இல்லை. எல்லாவற்றையும் தோண்டி எடுத்துவிட்டார்கள். இப்போது அவர்களுக்கு எதிராக பேசினாலோ, எங்கள் சொந்த நிலத்திற்கு இழப்பீடு கேட்டாலோ, மண்ணுக்குள் புதைத்து விடுவோம் என பயமுறுத்துகிறார்கள்.”
1992-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு கென் ஆற்றோரங்களில் மனல் தோண்டி எடுப்பது வேகம் பிடித்தது. இதன் விளைவாக அப்பகுதியில் உள்ள சிவப்பு மண், கரைகளில் சேகரம் ஆகின என்கிறார் மண்டாவைச் சேர்ந்த செயல்பாட்டாளர் ஆசிஷ் தீக்ஷித். கடந்த பாத்தாண்டுகளாகதான் குவாரி நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளதாக கூறும் அவர், “பல வருடங்களாக கனரக இயந்திரங்கள் பயன்படுத்துகிறார்கள் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் நான் கேட்டதன் விளைவாக அதை தற்போது தடை செய்துள்ளார்கள். இதற்கு முன்பே இப்பிரச்சனை குறித்து இங்குள்ள மக்கள் குரல் எழுப்பியிருந்தனர்” என்கிறார்.
“மாவட்ட சுரங்க திட்டத்தின் அடிப்படையிலேயே பெரும்பாலான மணல் குவாரி திட்டங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் முரண் என்னவென்றால், இந்த திட்டங்கள் பரந்த நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமையவில்லை” என நீரியல் நிபுணரும் லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான வெங்கடேஷ் தத்தா என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “வழக்கமாக மணல் தோண்டுபவர்கள் கால்வாய் சுரங்கத்தையே நாடுவார்கள். இது ஆற்றங்கரைகளின் இயற்கை வடிவமைப்பை பாழாக்கிவிடும். நீண்ட காலத்திற்கு பெரிய அளவில் மணல் அள்ளும்போது ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பை சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு தெரிந்தே பல சுரங்க திட்டங்களால் யமுனை ஆற்றின் பாதையே மாறிவிட்டது.”
நீர் சத்தியாகிரகம் முடிந்த பிறகு, கூடுதல் மாஜிஸ்திரேட் சந்தோஷ் குமார் மற்றும் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ராம்குமாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் என்னிடம் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் தொலைபேசியில் பேசுகையில், “யாருடைய நிலத்திலாவது அனுமதி இல்லாமல் தோண்டப்பட்டிருந்தால் அவர்கள் அரசாங்கத்திடம் இழப்பீடு பெறலாம். ஆனால் ஒருவேளை அவர்கள் தங்கள் நிலத்தை பணத்திற்காக கொடுத்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இதுசம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார். சுரங்கம் மற்றும் கனிம சட்டம், 1957 (2009 திருத்தம் செய்யப்பட்டது) கீழ் இழப்பீடு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
“இந்த வருட தொடக்கத்தில், கிராம சபா நிலத்தை குத்தகை எடுத்த நிறுவனம் ஒன்று அந்த இடத்தில் முறைகேடாக மணல் குவாரி நடத்துவதாக எங்களுக்கு புகார் வந்தது. அவர்கள் குற்றவாளிகள் என தெரிந்தது. அதனைத் தொடர்ந்து இதுபற்றிய அறிக்கை மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. பாண்டாவில் பல காலமாக முறைகேடாக மணல் குவாரி நடைபெறுகிறது, அதை நான் மறுக்கவில்லை” என கூறுகிறார் ராம்குமார்.

சீலா தேவி, 76, நீர் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற வயதான பெண்மணி. ஒரு காலத்தில் எங்கள் நிலம் முழுவதும் சீமை கருவேல மரம் இருக்கும் என்கிறார். “ஏகப்பட்ட மரங்கள் இருக்கும். நானும் என் குடும்பமும் சேர்ந்து நட்டு வைத்தோம்.இப்போது ஒன்றும் இல்லை.”

ஒன்பது வயதில் திருமணமான கையோடு இந்த கிராமத்திற்கு வந்தார் மதுரியா தேவி. “இங்கே நான் வாழ்ந்து வருவதால் எப்படிப்பட்ட கிராமம் இது, எத்தகைய நிலம் இது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் இப்போதோ, எங்கள் நிலமும் கிராமமும் வெள்ளத்தில் மூழ்கிவிடும் (புல்டோசரால் பல மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதால், பருவமழையின் போது) என கூறுகிறார்கள். ஏற்கனவே எங்கள் மரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன.”

“இங்குதான் இரண்டு மணி நேரமாக நின்று கொண்டிருந்தோம்” என்கிறார் சந்தா தேவி. ஆற்றோரங்களில் முறைகேடாக மனல் குவாரி நடைபெறுவதை எதிர்த்து ஜூன் 1, 2020 அன்று கப்திஹா கலன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கென் ஆற்றுக்குள் இறங்கி நின்று நீர் சத்தியாகிரகம் செய்தனர்.

ரமேஷ் பிராஜபதியும் அவரது குடும்பமும் தங்கள் நிலத்தை சோதனை செய்கிறார்கள். இவர்களது நிலத்தில் மணல் அள்ளுவதற்காக 80 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது.

கப்திஹா கலன் கிராம மக்கள் ஊரடங்கினால் தங்கள் நிலத்தை பார்க்க முடியாமல் உள்ளனர். அவர்களது நிலங்கள் 100 அடிக்கு மேல் தோண்டப்படுவதாக புல்டோசரை இயக்கும் உள்ளூர் இளைஞர் கூறுகிறார். நீர் சத்தியாகிரகம் நடந்து முடிந்த அடுத்த நாள், சில பெண்கள் ஆற்றின் குறுக்கே நடந்து சென்று தங்கள் நிலங்களை பார்த்து வந்தனர்.

மணலை எடுத்துச் செல்ல லாரிகள் வரிசையாக நிற்கின்றன

விவசாயியான ராஜூ பிரசாத், மணல் ஓப்பந்ததாரரை ( புகைப்படத்தில் இல்லை ) சுட்டிக்காட்டி பேசுகையில், “என் நிலத்தை அவர் தோண்டிக் கொண்டிருக்கிறார். நான் ஆட்சேபனை தெரிவித்த பிறகும் அவர் நிறுத்தவில்லை. என்னுடைய குழந்தைகள் அங்கே அமர்ந்துள்னர். அவர்களையும் வெளியே போகுமாறு கூறுகிறார். அங்கிருந்த ஒரே மரமான மூங்கிலையும் வெட்டுகின்றனர். என்கூட வந்து நீங்களே பாருங்கள்.”

நீர் சத்தியாகிரகத்திற்குப் பதிலளிக்கும் விதமாக ஜூன் ஒன்றாம் தேதி குவாரி இயந்திரங்கள் சிறுதி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன. ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்ட மணலும் டன் கணக்கில் சேர்ந்து மலை போல் குவிந்திருக்கின்றன.

குழுவிலுள்ள இரண்டு பெண்கள், தங்கள் நிலத்திலிருந்து மணல் எடுக்க உங்களுக்கு அனுமதி இருக்கிறதா என லாரி ஓட்டுனர்களிடமும் புல்டோசர் இயக்குபவர்களிடமும் கேட்கின்றனர்.

மதுரியா தேவி, ஆர்த்தி மற்றும் மகேந்திர சிங் (இடமிருந்து வலம்) ஆகியோர் மணல் குவாரி நிறுவன பெயரை தாங்கிய பலகை முன் நிற்கின்றனர்.

அதிகாரிகளிடம் நான் பேச முயற்சிக்கும் போது குவாரி அலுவலக கதவு பூட்டப்பட்டது.

நீர் சத்தியாகிரகம் முடிந்து சுமன் சிங் கவுதம் வீடு திரும்பிய பிறகு, தன்னை அச்சுறுத்த துப்பாக்கியால் சுட்டனர் என குற்றம் சாட்டுகிறார். “நான் போலீசிடம் கூறினேன். ஆனால் இதுவரை யாரும் விசாரிக்க வரவில்லை” என்கிறார் சுமன்.

உஷா நிஷாத் மற்றும் சுமன் சிங் கவுதமின் வீடு. இருவரும்தான் சத்யாகிரகத்தை முன்னின்று நடத்தினர். தற்போது லக்னோவிற்கு நடந்தே சென்று உத்தரபிரதேச முதலமைச்சரை சந்திக்க முடிவெடுத்துள்ளனர்.

கென் ஆற்றுக்கு தடுப்பாக இருக்கும் மணல் பாலத்தை கடக்கிறது மாட்டு வண்டி. மணல் அள்ளுவதற்கே இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளதாக கப்திஹா கலன் கிராமத்தினர் கூறுகிறார்கள்.

ஆற்றின் நீர் வரத்தை தடுக்கவும் அதிகமாக மணல் அள்ள உதவியாக இருப்பதற்கும் தற்காலிக மணல் பாலங்களை குவாரி நிறுவனங்கள் அமைத்துள்ளன. இதன் காரணமாக தாவரங்கள், பயிர்கள், நிலம், தண்ணீர், வாழ்வாதாரங்கள் மற்றும் பல அழிந்து போகின்றன.
தமிழில்: வி கோபி மாவடிராஜா