மயிலாப்பூரின் அந்தச் சின்னச் சந்தில் நீலக் கலரில் பெயிண்ட் அடித்த ஒற்றை அறையில் எல்லாப் பொருள்களும் அடைத்துக்கொண்டு கிடந்தன. கர்நாடக சங்கீதம் பாடிக்கொண்டு ஒரு ரேடியோ அங்கிருந்தது. இந்துக் கடவுள்கள் எல்லாம் சுவர்களை அலங்கரித்துக்கொண்டிருந்தன. பலா மரத்தின் கட்டைகளும் தோல்களும் தரையில் பரவிக்கிடந்தன. ஜேசுதாஸ் அந்தோணியும் அவரது மகன் எட்வின் ஜேசுதாஸூம் அந்த அறையில் வேலை செய்துகொண்டிருந்தனர். சுத்தியல்கள், பளப்பளப்பாக்குவதற்கான எண்ணை, வேறு சில கருவிகள் என அவர்களைச் சுற்றிலும் கிடந்தன. மத்திய சென்னையில் உள்ள பழைய குடியிருப்பு பகுதியான இங்கே கோயில்களின் மணிகள் ஒலித்துக்கொண்டிருந்தன.
கைதேர்ந்த அந்த இரண்டு கைவினைஞர்களும் தென் இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த இசையின் ஒரு கருவியான மிருதங்கத்தை உருவாக்கிக்கொண்டிருந்தனர். “ எனது தாத்தாவின் அப்பா தஞ்சாவூரில் மிருதங்கம் தயாரிப்பதைத் தொடங்கினார்” என்கிறார் எட்வின். எட்வினின் அப்பா தலையைத் தூக்கி புன்னகைக்கிறார். பிறகு வட்ட வட்டமாக உள்ள தோல்களின் ஓரங்களில் மிருதங்கங்களுக்குத் தேவையான துளைகளைப் போடுவதில் கவனமாய் இருக்கிற தனது வேலையைத் தொடர்கிறார். அதன் பிறகு இரண்டு தோல்துண்டுகளைப் பிடித்து இழுக்கிறார். மெலிதான இரண்டு தோல் துண்டுகளை இழுத்து இரண்டு பக்கமும் மிருதங்கத்தின் முனைகளில் கட்டுகிறார். கனமான தோல் துண்டுகளையும் இணைத்துக் கட்டுகிறார். ஒரு முனைக்கும் மறு முனைக்கும் இரண்டையும் இணைத்து மிருதங்கத்தின் உடல் முழுதும் கட்டுகிறார். ஒரு மிருதங்கத்தை முழுமையாக செய்து முடிக்க ஒரு வாரம் ஆகிறது. அவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மிருதங்கங்களை உருவாக்குகிறார்கள்.


இடது: வட்டங்களாக வெட்டி எடுக்கப்பட்டிருக்கிற தோல் துண்டுகளில் ஜேசுதாஸ் துளைகளை இடுகிறார். அவற்றைப் பயன்படுத்தித்தான் அவர் மிருதங்கத்தின் மறுபக்கத்தை இறுக்கிக் கட்டுகிறார். வலது: ஒரு மரக்குச்சியும் கல்லும் இசைக்கருவியின் தன்மையை அளக்க உதவுகிறது
சென்னையிலிருந்து 520 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கமுதி நகரத்தில் உள்ள மரவேலை செய்பவரிடம் இந்தக் குடும்பம் அவர்களுக்குத் தேவையான மிருதங்கத்தின் மர வடிவங்களைப் பெறுகிறார்கள். பலா மரத்தின் துண்டுகளை நன்றாக காயவைத்து மிருதங்கத்தின் மர வடிவங்கள் செய்யப்படுகின்றன. அந்த மரத்தின் துண்டுதான் வானிலைப் பருவங்கள் எத்தனை மாறினாலும் மிருதங்கத்தின் தன்மையை மாற்றாமல் வைத்திருக்கிறது. மிருதங்கத்தில் உள்ள பசுவின் தோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் உள்ளது.
நாங்கள் பார்த்தபோது எட்வின் தஞ்சாவூரின் காவேரி ஆற்றுப் படுகையில் கண்டெடுத்த கல்லை அரைத்துக்கொண்டிருந்தார். அரைத்த கல், அரிசி மாவு , தண்ணீரைக் கலந்து கப்பி மிருதங்கத்தின் இரண்டு பக்கங்களிலும் உள்ள தோலின் மீது பூசுகிறார்கள். அதுதான் தபேலா போல சப்தம் வருவதற்குக் காரணம். கப்பி மிருதங்க தயாரிப்பில் சென்னையின் சுற்றுப்புறங்களில் உள்ள கர்நாடக இசை வட்டாரத்தில் இந்தக் குடும்பம் புகழ்பெற்றுள்ளது.குச்சி மிருதங்கம் என்றால் அதன் மரவடிவம் சற்று தடிமனாக இருக்கும். சின்ன மூங்கில் துண்டுகள் அதன் வலது பக்கத்தின் கடைசியில் வைக்கப்பட்டிருக்கும். அதுதான் ஒரு நீளமான சப்தத்தை உருவாக்கும்.



இடது: ஜேசுதாஸ் சின்னவயதாக இருக்கும்போதே அவரைப் பற்றி ஒரு செய்தி ஒரு நாளிதழில் வெளியாகியிருக்கிறது. அது அவரது பணிகளை பற்றியும் அவரது குடும்ப பாரம்பரியம் பற்றியும் பேசுகிறது. நடுவில்: இன்னொரு தமிழ் கட்டுரையும் அவர்களின் திறன்களைப் பற்றி வெளியிடப்பட்டிருக்கிறது. அது தற்போது சுவரில் ஒட்டப்பட்டிருக்கிறது. வலது: அவர்கள் பல விருதுகளையும் பெற்றுள்ளார்கள்
மிருதங்கத்தின் வலது பக்கம் காரணை எனப்படுகிறது. அது வேறுபட்ட தோல்களின் மூன்று லேயர்களாக அமைக்கப்படுகிறது. வெளிப்புற வட்டம், உள்புற வட்டம், நடுவில் கருப்பு வட்டமாக இருக்கிற ஒரு பகுதி என மூன்றாக உள்ளது. மிருதங்கத்தின் இடது பக்கம் தொப்பி எனப்படுகிறது. அது வலது பக்கத்தை விட அரை இன்ச் பெரியதாகவே இருக்கும்.
ஜேஜதாஸூக்கு வயது 64. எட்வினுக்கு 31. அவர்கள் சீசன் இருக்கிற மார்கழி மாதத்தில் ஒரு வாரத்தில் மூன்று முதல்நான்கு மிருதங்கங்கள் செய்வார்கள். இதெல்லாது பழைய மிருதங்கங்களை ரிப்பேர் செய்யவும் செய்வார்கள். ஒரு மிருதங்கத்துக்கு ஏழாயிரம் முதல் பத்தாயிரம் வரை சம்பாதிப்பார்கள். இரண்டு பேரும் வார நாட்கள் அனைத்திலும் வேலை செய்கிறார்கள். ஜேசுதாஸ் காலை ஒன்பது மணி முதல் இரவு எட்டு மணி வரைக்கும வேலைசெய்வார். அவரது மகன் எட்வின் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்வார். மிருதங்கம் தயாரிப்பதை விடுத்து அவர் தனியாக வேலைக்கும் போகிறார். அது என்ன வேலை என்பதையும் அவர் ஏன் வேலைக்குப்போகிறார் என்பதையும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். அவர்களின் வீட்டிலிருந்து 15 நிமிடங்களில் நடந்து போகக்கூடிய தொலைவில் அவர்களது பட்டறை இருக்கிறது.


இடது: எட்வின் தனியாக வேலைக்குப் போனாலும் மாலை நேரங்கள், சனி,ஞாயிறு கிழமைகளில் அவர் அப்பாவுக்குத் துணையாக வேலை செய்கிறார். வலது : எட்வின் மனைவி நான்ஸ. வயது 29. அவர் ஒரு வீட்டை உருவாக்குபவர். எப்படி மிருதங்கம் உருவாக்குகிறார்கள் என்பது தெரியும் என்றாலும் இந்த வேலை என்பது குடும்பத்தின் ஆண்களுக்குத்தான் என்று மனதில் பதிந்திருக்கிறது என்றார்
“நாங்க தலித் கிறிஸ்துவர்களாக இருந்தாலும் இதைத் தொடர்ந்து செய்கிறோம்” என்கிறார் எட்வின். அவரது தாத்தா ஆண்டனி செபஸ்தியான ஒரு மிருதங்க உற்பத்தியாளர் என்ற முறையில் கர்நாடக இசைக் கலைஞர்களால் போற்றப்பட்டிருந்தாலும் ஒரு மனிதன் என்ற அளவில் அவர் மதிக்கப்பட வில்லை என்கிறார். “ எனது தாத்தா மிருதங்கங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விற்பனை செய்வதற்காக வீடுகளுக்குப்போகும்போது அவரைத் தொடக்கூட மாட்டார்கள். பணத்தை கையிலும் தரமாட்டார்கள். தரையில் வைத்துவிடுவார்கள்.” சாதிக்கொடுமைகள் 50 வருடங்களுக்கு முன்னால் இருந்ததைப்போல அவ்வளவு மோசமாக தற்போது இல்லை என்கிறார் அவர். ஆனால், இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது” என்கிறார் அவர். அதை விளக்கி விவரிக்கவும் அவர் தயாராக இல்லை.
அவரது அப்பாவோடு சேர்ந்து மிருதங்கங்களை அவர் தயார் செய்யும் போது அவரது ஒலி பற்றிய கூர்மையான உணர்வுதான் உதவி செய்யும். ஆனால், இந்த இசைக்கருவியை வாசிப்பதற்கான பயிற்சி பெறுவதற்கு அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஏனென்றால் அவரது சாதியும் மதமும் தான். “ எனக்கு நல்ல இசை உணர்வு இருக்கிறது என்பார்கள் இசைமேதைகள். எனது கைகள் அதனைக் கற்றுக்கொள்வதற்கு ஏற்ப இருக்கின்றன என்பார்கள். ஆனால் எனக்குப் பயிற்சி தாருங்கள் என்றால் அவர்கள் மறுத்துவிடுவார்கள். சில சமூகத் தடைகள் இன்னமும் நீடிக்கின்றன.”


இடது: கர்நாடிக் இசை என்பது உயர் சாதி இந்துக்கள் பாதுகாத்து வைத்துள்ள இசை ஆகும். ஜேசுதாஸூம் எட்வினும் தலித் கிறிஸ்துவர்களாக இருந்தாலும் அவர்களது பட்டறையில் இந்துக் கடவுள்கள்தான் அதிகம் இருக்கின்றன. வலது: அவர்களின் வீட்டிலும் அவர்களின் குலத்தோடு தொடர்புடைய படங்களே உள்ளன
எட்வின் குடும்பம் இந்து உயர்சாதிகளைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்களைச் சுற்றியே பணி செய்து வந்திருப்பது அவர்களின் வீடுகளுடைய சுவர்களில் தெரிந்தது. மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள தேவாலயத்தில் இந்த தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். “ எனது அப்பாவும் தாத்தாவும் கிறிஸ்துவர்களாக இருந்தார்கள்தான். ஆனால் அவர்களுக்கு முன்னால் இருந்தவர்கள் இந்துக்களாகவே இருந்தனர்.” என்கிறார் எட்வின்.
பல இசைமேதைகள் எட்வினுக்கு கற்றுத்கொள்ள மறுத்தாலும் எதிர்காலம் நன்றாக ,இருக்கும் என்கிறார் எட்வின். “ நான் கற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம். ஆனால், எனது குழந்தைகள் கட்டாயம் கற்றுக்கொள்வார்கள் ” என்றார் அவர். அஸ்னா புடானி, ஆசியன் ஜர்னலிஸ்ட் ஆப் காலேஜில் சமீபத்தில் பட்டம் பெற்றவர்.கல்கத்தாவைச் சேர்ந்தவர். பாலினம், பண்பாடு, சாதி, சுற்றுச்சூழல் பற்றி எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தமிழில் : த. நீதிராஜன்