நவம்பர் மாதத்தையொட்டிய மூன்று நாட்களில் மஜுலித் தீவின் கராமுர் சந்தை, அகல் விளக்குகளில் வண்ண தீபங்களால் ஜொலிக்கிறது. குளிர்கால மாலை வந்ததும் கோல் மேளங்களின் சத்தமும் சங்குகளின் ஒலியும் ஒலிபெருக்கிகளின் வழியாக வெளியேறி பரவிக் கொண்டிருக்கிறது.
ராஸ் மகா உற்சவம் தொடங்கிவிட்டது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வரும் அசாமிய மாதங்களான காடி-ஆகுன் மாதங்களின் பவுர்ணமியில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. யாத்ரீகர்களும் சுற்றுலாவாசிகளும் வருடந்தோறும் இவ்விழாவுக்கு செல்கின்றனர். இரண்டு நாட்களுக்கும் மேலாக இவ்விழா நடக்கிறது.
“அது நடக்கவில்லை என்றால், ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு எங்களுக்கு இருக்கும். இவ்விழாதான் (ராஸ் மகா உற்சவம்) எங்களின் பண்பாடு,” என்கிறார் போருன் சித்தாதர் சுக் கிராமத்தில் விழா ஒருங்கிணைப்புக் குழுவின் செயலரான ராஜா பேயேங். “இந்த நிகழ்வுக்காக வருடம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்,” என்கிறார் அவர்.
நூற்றுக்கணக்கானவர்கள் நல்ல ஆடைகள் அணிந்து கராமுர் சாரு சத்திரத்தில் கூடியிருக்கின்றனர். அசாமிலிருக்கும் பல வைணவ மடங்களில் அதுவும் ஒன்று.

2022ம் ஆண்டு அசாமின் மஜுலியில் உற்சவம் நடைபெற்ற 60 இடங்களில் கராமுர் சாரு சத்திரமும் ஒன்று

கலியோ நாகம் என்கிற புராண பாம்பு பாத்திரத்தின் ஐந்து தலைகள் கராமுர் சாரு சத்திரத்தின் சுவரில் சாய்க்கப்பட்டிருக்கிறது. கையால் செய்யப்பட்ட இத்தகைய பொருட்கள் விழா நிகழ்வுகளில் பெரும்பங்கை வகிக்கின்றன
ராஸ் மகா உற்சவம் (கிருஷ்ண நடனம்) கடவுள் கிருஷ்ணரின் வாழ்க்கையை நடனம், நாடகம் மற்றும் இசை நிகழ்வுகளால் கொண்டாடுகிறது. 100-க்கும் மேற்பட்ட பாத்திரங்கள் ஒரே நாளில் மேடையில் நிகழ்த்தப்படும்.
கிருஷ்ணரின் பல்வேறு வாழ்க்கைக் கட்டங்களை நிகழ்வு கொண்டிருக்கும். பிருந்தாவனில் குழந்தையாக வளர்ந்து ராசலீலை புரிய கோபிகையருடன் நடனமாடியவையும் அரங்கேறும். இந்த நாளில் நிகழ்த்தப்படும் நாடகங்களில் சங்கரதேவா எழுதிய ‘கேலி கோபால்’ மற்றும் அவரின் சீடர் மாதவதேவாவின் ‘ராஸ் ஜுமுரா’ ஆகிய ஓரங்க நாடகங்களும் அடக்கம்.
விஷ்ணுவாக கராமுர் உற்சவத்தில் நடித்த முக்தா தத்தா சொல்கையில், நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் சில விஷயங்களை அவர் பின்பற்ற வேண்டுமென்கிறார். “இந்த பாத்திரம் கொடுக்கப்பட்டதிலிருந்து கிருஷ்ணா, நாராயணா அல்லது விஷ்ணு பாத்திரங்களில் நடிக்கும் நாங்கள் சாத்வீக சைவ உணவுகளை மட்டும் உண்ணுவோம். உற்சவத்தின் முதல்நாளில் விரதம் இருப்போம். முதல் நாள் நாடகம் முடிந்த பிறகுதான் விரதத்தை முடிப்போம்.”
அசாமினூடாக 640 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் பிரம்மபுத்திரா நதியிலிருக்கும் பெரிய தீவுதான் மஜுலி. வைணவ மதத்துக்கும் கலை மற்றும் கலாசாரத்துக்கும் மையங்களாக தீவின் மடங்கள் திகழ்கின்றன. சமூக சீர்திருத்தவாதியும் துறவியுமான சங்கரதேவாவால் 15ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த சத்திரங்கள் நவ வைணவ பக்தி இயக்கத்தை அசாமில் வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றின.
மஜுலியில் நிறுவப்பட்ட 65க்கும் மேற்பட்ட சத்திரங்களில் 22 மட்டும்தான் தற்போது இயங்கி வருகிறது. மற்றவை யாவும் பிரம்மப்புத்திரா வெள்ளங்களில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. கோடை மாதங்களில் இமயமலையில் உருகும் பனி, ஆறுகளாகி ஆற்றுப்படுகையில் முடிகிறது. மஜுலியில் பெய்யும் மழையோடு இதுவும் சேர்ந்து மண் அரிப்புக்கான பிரதான காரணமாக இருக்கிறது.

விஷ்ணுவாக நடிக்கும் முக்தா தத்தாவுக்கு ஒப்பனை போடப்படுகிறது

உத்தர் கமலாபாரி சத்திரத்தின் துறவிகள் 2016ம் ஆண்டின் ராஸ் உற்சவத்துக்கு தயாராகின்றனர்
ராஸ் மகா உற்சவத்தை நடத்துமிடங்களாக சத்திரங்கள் பயன்படுகின்றன. தீவிலுள்ள பல்வேறு சமூகங்கள் கொண்டாட்டங்களை சமூகக் கூடங்களிலும் திறந்த வெளியின் தற்காலிக மேடைகளிலும் பள்ளி மைதானங்களிலும் நடத்துகின்றன.
கராமுர் சாரு சத்திரத்தை போல, உத்தர் கமலாபாரி சத்திரம் நிகழ்ச்சிகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இங்கு மத மற்றும் பண்பாட்டுக் கல்வி கொடுக்கப்படும் பிரம்மச்சரிய துறவிகள், அனைவரும் பார்க்கும் நாடகங்களை நிகழ்த்துகின்றனர்.
கராமுர் சாரு சத்திரத்தில் ராஸ் மகா உற்சவத்தை முதன்முதலாக நடத்தியவர்களில் 82 வயது இந்திராணில் தத்தாவும் ஒருவர். 1950ம் ஆண்டில் சத்திரத் தலைவராக, ஆண்கள் மட்டுமே பங்குபெறும் பாரம்பரியத்தை நிறுத்திவிட்டுபெண்களையும் பங்கு பெற வைத்த விதத்தை அவர் நினைவுகூருகிறார்.
“பிரார்த்தனைக் கூடத்துக்கு வெளியே பீதாம்பர யாதவ் மேடை அமைத்திருந்தார். கூடத்தில் பிரார்த்தனை நடக்குமென்பதால் நாங்கள் மேடையை வெளியே அமைத்தோம்,” என நினைவுகூருகிறார்.
பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. மகா உற்சவம் நடத்தப்படும் 60 இடங்களில் கராமுரும் ஒன்று. டிக்கெட் போடப்பட்டு, 1,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய அரங்கில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

![Right: Children rehearse for their roles as gopa balaks [young cowherds]. A mother fixes her child's dhoti which is part of the costume](/media/images/06b-_PRK8941-PB-Raas_Mahotsav_and_the_satr.max-1400x1120.jpg)
இடது: உற்சவத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே கராமுர் சத்திரத்தில் ஒத்திகைகள் தொடங்குகின்றன. வலது: குழந்தைகள் தங்களின் பாத்திரங்களை ஒத்திகை பார்க்கின்றனர். ஒரு குழந்தையின் வேட்டியை தாய் சரி செய்கிறார்
வைணவ பாரம்பரியத்தை சேர்ந்த சங்கரதேவாவும் மற்றோரும் எழுதிய நாடகங்களின் பல வகைகளை அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் புதிய வகையில் நிகழ்த்திக் காட்டுகின்றனர். “நான் நாடகம் எழுதும்போது, உள்ளூர் பண்பாட்டின் விஷயங்களை அதில் சேர்ப்பேன். சாதியையும் பண்பாட்டையும் நாம் உயிருடன் வைத்திருக்க வேண்டும்,” என்கிறார் இந்திரானில் தத்தா.
“தீபாவளிக்கு அடுத்த நாள்தான் பிரதான ஒத்திகை தொடங்கும்,” என்கிறார் முக்தா தத்தா. கலைஞர்கள் தயாராக இரண்டு வாரங்கள் அவகாசம் இருக்கும். “முன்பு நடித்தவர்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். அவர்களை மீண்டும் அழைத்து வருவது சிரமம்,” என்கிறார் தத்தா. நடிகராக இருப்பதோடு அவர் கராமுர் சமஸ்கிருதப் பள்ளியில் ஆசிரியராகவும் இருக்கிறார்.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் எப்போதும் உற்சவ நேரத்தில்தான் வரும். “ஆனாலும் மாணவர்கள் வருவர். ஒருநாளேனும் வந்து விடுவார்கள். அவர்களின் பாத்திரத்தை ராஸில் நடித்துவிட்டு, அடுத்த நாள் தேர்வுக்கு சென்றுவிடுவார்கள்,” என்கிறார் முக்தா.
விழாவை நடத்துவதற்கான செலவு வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. 2022ம் ஆண்டில் 4 லட்ச ரூபாய் செலவானது. “தொழில்வல்லுநர்களுக்கு பணம் கொடுப்போம். நடிகர்கள் சுயவிருப்பத்தில் கலந்து கொள்வார்கள். 100லிருந்து 150 பேர் வரை சுயவிருப்பத்தில் பணிபுரிகின்றனர்,” என்கிறார் முக்தா.
போருன் சித்தாதர் சுக்கில் ராஸ் மகா உற்சவம் பள்ளியில் நடத்தப்படுகிறது. அசாமின் பட்டியல் பழங்குடியான மைசிங் சமூகத்தினரால் ஒருங்கிணைக்கப்படுகிறது. கடந்த சில வருடங்களில் இளம் தலைமுறையினரிடம் ஏற்பட்டிருக்கும் ஆர்வமின்மையும் அதிக அளவிலான இடப்பெயர்வும் கலைஞர்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கிறது. இன்றும் ஒருசிலர் இருக்கின்றனர். “இதை நடத்தவில்லை எனில், அசம்பாவிதமாக ஏதும் கிராமத்தில் நடந்துவிடும்,” என்கிறார் ராஜா பேயேங். “கிராமத்தில் இருக்கும் நம்பிக்கை அது.”

யாத்ரீகர்களும் சுற்றுலாவாசிகளும் வருடந்தோறும் ராஸ் விழாவில் கலந்துகொள்ள மஜுலிக்கு வருகின்றனர். பிரம்மபுத்திரா ஆற்றில் இருக்கும் கமலாபாரி படகுத்துறை விழாக்காலத்தில் பிசியாக இருக்கும்

கடந்த 11 வருடங்களாக பஸ்தாவ் சைகியா, நாகவோன் மாவட்டத்திலிருந்து மஜுலிக்கு விழாவில் பங்கு பெற பயணித்து வருகிறார். கராமுர் நிகழ்வில் கம்ச அரியணையின் பின்னால் இருக்கும் ஓவியத்தை அவர் வரைகிறார்

உள்ளூர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அனில் சர்க்காரிடம் ( மையம்) தங்கள் குழந்தைகளுக்கு ஒப்பனை செய்து கொள்ளவென பெற்றோரும் உடன் வந்தவர்களும் கூடுகின்றனர்

மேடைக்கு பின்னால் தயாரான குழந்தைகள் தம் காட்சிகளுக்கு தயாராகின்றனர்

கராமுர் சாரு சத்திர விழாவில் கம்சன் பாத்திரத்தில் நடிக்கும் மிருதுபவான் புயனை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர்

தூக்கக்கலக்கத்துடன் இருக்கும் ஒரு குழந்தையுடன் முக்தா தத்தா

கலியோ நாக்கை சுற்றி பெண்கள் விளக்குகளையும் ஊதுபத்திகளையும் பற்ற வைக்கின்றனர். விழா தொடங்கும்போது நடக்கும் பிரார்த்தனையின் ஒரு பகுதி இச்சடங்கு

கராமுர் சாரு சத்திரத்தின் வாசலுக்கு அருகே மக்கள் புகைப்படங்கள் எடுக்கின்றனர்

நாடகத்தின் முதல் காட்சியில் பிரம்மன் ( வலது), மகேஸ்வரா ( மையம்), விஷ்ணு மற்றும் லஷ்மி ( இடது) ஆகியோர் பூமியின் நிலவரத்தை பற்றி ஆலோசிக்கின்றனர்

புதோனா ராட்சசி, இளம்பெண் ( மோகினி புதோனா) உருவில், குழந்தை கிருஷ்ணனை கொல்வதாக கம்சனுக்கு ( இடது) வாக்குறுதி கொடுக்கிறாள்

கோபிகைகளாக நடிக்கும் இளம்பெண்கள், பின் மேடையை கிருஷ்ணன் பிறந்ததும் வரும் கொண்டாட்டக் காட்சிக்காக தயார் செய்கின்றனர்

கடவுள் கிருஷ்ணனின் வாழ்க்கையை ராஸ் மகா உற்சவம் நடனம், நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகளால் கொண்டாடுகிறது. 100 க்கும் மேற்பட்ட பாத்திரங்கள், ஒருநாள் விழாவில் மேடையில் வெளிப்படுவர்

ராட்சசி புதோனா கிருஷ்ணனுக்கு பால் கொடுத்து விஷமூட்ட முற்படுகிறாள். ஆனால் அவள் இறந்து போகிறாள். யசோதா ( இடது) காட்சிக்குள் வருகிறாள்

பிருந்தாவனத்தில் கோபிகையருடன் நடனமாடும் இளம் கிருஷ்ணன்

கராமுர் சாரு சத்திரத்தில், கொக்கு உருவில் வரும் போகாசுர் அசுரனை வீழ்த்தி கொல்லும் இளம் கிருஷ்ணனை குழந்தைகள் நடித்துக் காட்டுகின்றன

கிருஷ்ணா மற்றும் பலராம் பாத்திரங்களை இளம் நடிகர்கள் தேனுகா ராட்சசியின் மரணக் காட்சியில் நடிக்கின்றனர்

அசாமிலிருக்கும் மஜுலியின் கராமுர் சாரு சத்திர ராஸ் மகா உற்சவத்தில் குழந்தைகள் அதிகமாக நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றனர்

கலியோ அசுரனின் காட்சியில் யமுனை ஆற்றோரம் வசிக்கும் கிருஷ்ணா கலியோ நாகனை வீழ்த்தி தலையிலாடும் நிகழ்வு நடத்தப்படுகிறது

நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் பார்வையாளர்களும் நடிகர்களும்

2016 ம் ஆண்டில் உத்தர் கமலாபாரி சத்திரத்தின் துறவிகள் கேலி கோபால் நாடக ஒத்திகைக்கு தயார் செய்கின்றனர். இந்த அரங்கு 1955 ம் ஆண்டில் கட்டப்படுவதற்கு முன் நிகழ்ச்சிகள் பிரார்த்தனை கூடத்தில் நடந்தன

உத்தர் கமலாபாரி சத்திர ராஸ் மகா உற்சவத்துக்கான கடைசி நாள் ஒத்திகை

நிரஞ்சன் சைகியா ( இடது) மற்றும் கிருஷ்ணா ஜோடுமோனி சைகா ( வலது) ஆகியோர் உத்தர் கமலாபாரி சத்திரத்தில். உடை உடுத்துவது நீண்ட செயல்முறை

நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் முகமூடிகளும் அவற்றை உருவாக்குவதும் ராஸ் மகா உற்சவத்தின் முக்கியமான பகுதியாகும். அசுரர்களுக்கும் பிற பாத்திரங்களுக்கும் செய்யப்பட்ட முகமூடிகளை அணிந்து நடிகர்கள் மேடையேறுகின்றனர்

போருன் சுக் கிராமத்தின் விழா நடக்குமிடத்தில் ஒரு கலியோ நாக் முகமூடி வரையப்படுகிறது

முனிம் கமன் ( மையம்), போருன் சிதாதர் சுக்கின் விழா தொடக்கத்தை குறிக்கும் வகையிலான பிரார்த்தனையின்போது தாமோதர் மிலியின் புகைப்படத்துக்கு விளக்கேற்றுகிறார். பத்து வருடங்களுக்கு முன் இறந்துபோன மிலி, கிராம மக்களுக்கு ராஸை ஒருங்கிணைக்கக் கற்றுக் கொடுத்தார்

மஜுலியிலுள்ள போருன் சிதாதர் சுக்கின் மேடை

நிகழ்ச்சிக்கு தயாராகும் அபுர்போ கமன் ( மையம்). போருன் சிதாதர் சுக் விழாவில் பல்லாண்டுகாலமாக அவர் கம்சன் பாத்திரத்தில் நடிக்கிறார்

நிகழ்ச்சியில் பயன்படும் முகமூடியை ஒரு சிறுவன் மாட்டி பார்க்கிறார்

வறுக்கப்பட்ட பன்றிக்கறியும் மைசிங் சமூகத்தினரால் உருவாக்கப்படும் பாரம்பரிய மதுவான அபோங்கும் போருன் சிதாதர் சுக் மகா உற்சவத்தில் அதிகமாக புழங்கப்படும்
மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளை (MMF) மானியப்பணியில் இக்கட்டுரை எழுதப்பட்டது.
தமிழில்: ராஜசங்கீதன்