இலுப்பை (Madhuca longifolia) பூக்கும் பருவம் இரண்டு மூன்று மாதங்களுக்கே இருக்கும். மத்திய இந்தியா முழுவதிலும் காணப்படும் இந்த உயரமான மரங்கள் கோடை காலத் தொடக்கத்தில் தனது அற்புதமான மலர்களை உதிர்க்கும்.
பளிச்சென்ற பச்சை நிற மலர்களை பொறுக்குவது சத்தீஸ்கரில் ஒரு திருவிழா நிகழ்வு. சிறு குழந்தைகள் முதல் பலரும் காட்டில் தரையில் இருந்து இந்தப் பூக்களை பொறுக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். “இது கடினமான வேலை. நாங்கள் இலுப்பைப் பூவை அதிகாலையில் பொறுக்குகிறோம். மீண்டும் மலையிலும் பொறுக்குகிறோம்,” என்கிறார் பூபிந்தர். தம்தாரி மாவட்டம் சாங்காவ்ன் என்ற இடத்தைச் சேர்ந்தவரான இவர், இந்தப் பூ பொறுக்கும் வேலையில் உதவி செய்வதற்காக தனது பெற்றோருடன் வந்திருக்கிறார். ஏராளமானவர்கள் சூழ்ந்திருக்க இங்கே ஒரு திருவிழா போன்ற சூழ்நிலை நிலவுகிறது.
பூ பூக்கும் காலத்தில் இலுப்பையின் நறுமணம் இந்தப் பகுதி முழுவதும் கமழும். ராய்கர் மாவட்டத்தின் தரம்ஜெய்கர் என்ற இடத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூர் நோக்கி நூற்றுக்கணக்கான இலுப்பை மரங்களுக்கு அடியிலேயே பயணித்தபோது ஊர் மக்கள் அந்தப் பூக்களை திரட்டுவதில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார்கள். இந்தப் பூக்களை அவர்கள் உலர்த்தி மாவு தயாரிக்கவும், மது தயாரிக்கவும் வேறு பலவற்றுக்காகவும் பயன்படுத்துவார்கள்.
“காட்டில் இருந்து நாங்கள் திரட்டும் மிக முக்கியமான பொருள் இலுப்பைப் பூ. பட்டினிக் காலத்தில் இது உணவாகப் பயன்படுத்தப்பட்டது. ஒருவருக்குப் பணம் வேண்டுமானால் அவர் கொஞ்சம் இலுப்பையை விற்பார்,” என்கிறார் கங்காராம் பைங்க்ரா. இவர் அம்பிகாபூரைச் சேர்ந்த பழங்குடித் தலைவரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். கூலி வேலை கிடைக்காத காலத்தில் மக்கள் இந்தப் பூக்களை நம்பி வாழ்ந்ததைப் பற்றி இவர் கூறுகிறார்.
‘நாங்கள் காட்டில் இருந்து திரட்டும் மிக முக்கியமான பொருள் இலுப்பைப் பூ. பட்டினிக் காலத்தில் இது உணவாகப் பயன்பட்டது. ஒருவருக்குப் பணம் வேண்டுமானால், இதில் கொஞ்சத்தை விற்பார்’
“இந்தப் பூக்களில் இருந்து செய்த மதுவை பழங்குடி மக்கள் ரசித்துக் குடிப்பார்கள். இது எங்கள் வழிபாட்டுச் சடங்குகளில் முக்கியமானது,” என்கிறார் கங்காராம்.
நிலத்தில் இருந்து நீண்ட நேரம் இந்தப் பூக்களைப் பொறுக்குவதில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. “எங்கள் முதுகு, கால்கள், கைகள், முட்டிகள், இடுப்பு வலிக்கும்,” என்கிறார் பூபிந்தர்.
ஒரு கிலோ உலர்ந்த இலுப்பைப் பூவுக்கு ரூ.30 அல்லது ஒரு குவின்டால் ரூ.3000 என குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்திருக்கிறது சத்தீஸ்கர் மாநில அரசாங்கம்.
மத்திய இந்திய மாநிலமான சத்தீஸ்கர் தவிர, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிஷா, மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இந்திய மாநிலங்கள், மியான்மர், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளிலும் இலுப்பை இருக்கிறது.

உஷா (வலது மூலையில் இருப்பவர்), அவரது சகோதரிகள் உமா, சரிதா (மஞ்சள்) ஆகியோர் ஆம் காவ்ன் அருகே உள்ள காட்டில் இலுப்பைப் பூ பொறுக்குவதில் மும்முரமாக உள்ளனர்

தான் திரட்டும் இலுப்பைப் பூக்களைக் கொண்டு தொட்டியை நிரப்புகிறார் உஷா

குடும்பத்தின் மூத்த குழந்தையான சரிதா (மஞ்சள்) பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே இந்தப் பருவத்தில் இலுப்பைப் பூ பொறுக்குகிறார். கடந்த ஆண்டு இலுப்பைப் பூ பொறுக்கி தாங்கள் ரூ.40 ஆயிரம் சம்பாதித்ததாக கூறுகிறார் இவர். இவரது தாத்தா, பெற்றோர் உட்பட மொத்த குடும்பமுமே இந்த வேலையில் ஈடுபடுகிறது. இவரது சகோதரி உமா (சிவப்பு) பின்னணியில் நிற்கிறார்

சரிதா (மஞ்சள்), உமா (சிவப்பு) இருவரும் இலுப்பைப் பூ பொறுக்குகிறார்கள்

ஆங்கிலத்தில் Madhuca longifoliaஎன்று அழைக்கப்படும் இலுப்பைப் பூக்கள் மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றன

தரையில் உதிர்ந்துகிடக்கும் இலுப்பைப் பூக்கள்

தன் தாய், தாத்தா-பாட்டி ஆகியோருடன் மும்முரமாக இலுப்பைப் பூ பொறுக்கும் சிறு குழந்தை

தரையில் பூவைத் தேடுகிறது அதே குழந்தை

75 வயது செர்க்கன் ரதியாவும் மும்முரமாக இலுப்பைப் பூ பொறுக்குகிறார். தான் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்து இதைச் செய்வதாகக் கூறுகிறார் இவர்

ஜல்சாய் ராய்தி-யும் அவரது மனைவியும் தங்கள் நிலத்தில் உள்ள சொந்த மரத்தின் பூத்த பூக்களைப் பொறுக்குகிறார்கள்

காலை நேர வெயிலில் ஜல்சாய் ராய்தியும் அவரது குடும்பத்தினரும்
மனம் லயித்து பூக்களைப் பொறுக்குகிறார்கள்
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்