அசோக் ஜாதவ், அவ்வாறு இறந்த மனிதர்களில் ஒருவர்.
45 வயதான அவர் மற்றவர்களைப் போலவே தினமும் காலையில் எழுகிறார். மற்ற கூலித்தொழிலாளர்களைப் போல அவர் வேலைக்குச் சென்று, மற்றவர்களின் பண்ணைகளில் கடினமாக உழைக்கிறார். மற்ற தொழிலாளர்களைப் போல ஒரு நாள் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்புவார். அவருக்கும் மற்றவர்களுக்குமான ஒரே ஒரு வித்தியாசம்: அதிகாரப்பூர்வமாக, அசோக் இறந்துவிட்டார்.
ஜூலை, 2023 இல், கோர்கரில் வசிக்கும் அசோக், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் தனக்கு கிடைக்கும் ரூ.6,000 தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தார். 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட, இந்த திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவாக, ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.
முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, பணம் தவறாமல் கிடைத்தது. பின்னர் திடீரென நின்று விட்டது. இது வெறும் கணிணிப்பிழை என்றும், சிஸ்டம் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் என்றும் நினைத்தார். அசோக் சொன்னது சரிதான். அது ஒரு கணிணிப்பிழை தான். ஆனால் அவர் நினைத்த மாதிரி இல்லை.
வழங்கப்பட்ட பணம் ஏன் நிறுத்தப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றபோது, கணிணியில் தரவுகளைப் பார்த்தவர், 2021-ல் கோவிட்-19-ன் போது அவர் இறந்துவிட்டதாக சாதாரணமாக தெரிவித்தார். சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அசோகா கூறுகிறார், “முஜே சமஜ் நஹி ஆயா இஸ்பே க்யா போலு [என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை].”

மத்தியப் பிரதேச மாநிலம் கோர்கரைச் சேர்ந்த அசோக் ஜாதவ் என்ற விவசாயத் தொழிலாளி இறந்துவிட்டதாக பொய்யாக அறிவிக்கப்பட்டு, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியைப் பெறுவது நிறுத்தப்பட்டது. பிழையை சரிசெய்ய பலமுறை முயற்சித்தும் எந்த பலனுமில்லை
ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அவர். மத்தியப் பிரதேசத்தில் பட்டியல் சாதியாக அச்சமூகம் பட்டியலிடப்பட்டடிருக்கிறது. மேலும் அவர் மற்றவர்களின் விவசாய நிலங்களில் ஒரு நாளைக்கு ரூ.350 வருமானத்தில், வேலை செய்கிறார். அசோக்கிற்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு அவர் சுய நுகர்வுக்காக உணவு பயிர்களை பயிரிடுகிறார். இவரது மனைவி லீலாவும் விவசாய கூலித் தொழிலாளி.
ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் சோயாபீன் வெட்டும் இடைவெளியில் "நாங்கள் பகலில் சம்பாதித்தால் தான், இரவில் சாப்பிட முடியும்," என்று அசோக் கூறுகிறார். “வருடத்திற்கு ரூ.6,000 என்பது பெரிய தொகை இல்லை என்றாலும், எங்களைப் பொறுத்தவரை, எந்தப் பணமும் உதவியானது தான். எனக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறான். பள்ளி செல்லும் அவன் மேலும் படிக்க விரும்புகிறான். அதோடு, மிக முக்கியமாக, நான் இறந்தவனாக இருக்க விரும்பவில்லை."
அவரது இறப்புச் சான்றிதழை ரத்து செய்யுமாறு அசோக், ஷிவ்புரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதினார். கிராமத்தில் நடந்த அடுத்த பொதுக் கருத்துக் கேட்பு கூட்டத்தில், அவர் கிராம பஞ்சாயத்திடமும் இந்த பிரச்சினையை எழுப்பினார். செயல்முறையை விரைவுபடுத்துவர் என்று நம்பினார். பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் முடிந்து அவரை சந்தித்த பஞ்சாயத்து அதிகாரிகள், அவர் உயிருடன் இருப்பதை நிரூபிக்க வேண்டினர். "நான் அவர்களுக்கு முன்னால் நின்றேன்," என்று அவர் கூறுகிறார், "இதை விட உங்களுக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?," என திகைக்கிறார்.
இந்த அசாதாரணமான மற்றும் துயரமான சூழ்நிலையில் சிக்கயிருப்பது அவர் மட்டுமில்லை.

அசோக் உயிருடன் இருப்பதை நிரூபிக்கும்படி அதிகாரிகள் கேட்டதற்கு, ’நான் அவர்களுக்கு முன்னால் நின்றேன்,’ என்று அவர் கூறுகிறார், ’இதை விட உங்களுக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?’ எனக் கேட்கிறார்
2019 மற்றும் 2022 க்கு இடையில், கிராம பஞ்சாயத்து மற்றும் ஜிலா பரிஷத் நிலைகளுக்கு இடைப்பட்ட ஒன்றிய பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கணிணி ஆபரேட்டர் ஆகியோர் ஒரு மோசடியின் மூலம், ஷிவ்புரி மாவட்டத்தின் 12-15 கிராமங்களைச் சேர்ந்த 26 பேரைக் எழுத்துபூர்வமாக இறந்தவர்களாக அறிவித்திருந்தனர்.
முதலமைச்சரின் சம்பல் யோஜனா திட்டத்தின்படி, விபத்தில் இறக்கும் நபரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சத்தை மாநில அரசு இழப்பீடாக வழங்குகிறது. மோசடியாளர்கள் அந்தத் தொகையை, ஒவ்வொரு 26 பேரிடமும் வசூலித்து ரூ. 1 கோடிக்கு மேல் வாங்கி மோசடி செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் - ஏமாற்றுதல் மற்றும் மோசடி செய்தல் தொடர்பான 420, 467, 468 மற்றும் 409 ஆகிய பிரிவுகளின் கீழ் - வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
ஷிவ்புரி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் வினய் யாதவ், “ககன் வாஜ்பாய், ராஜீவ் மிஸ்ரா, ஷைலேந்திர பர்மா, சாதனா சவுகான் மற்றும் லதா துபே ஆகியோரின் பெயரை நாங்கள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளோம்,” என்று கூறுகிறார். "சம்பந்தப்பட்ட மேலும் சில நபர்களையும் நாங்கள் தேடி வருகிறோம்," என்கிறார்.
அநாமதேயமாக இருக்க விரும்பும் உள்ளூர் ஊடகவியலாளர்கள், தொடர் விசாரணைகள் ஷிவ்புரியில் மேலும் இறந்தவர்களை வெளிப்படுத்தக்கூடும் என்று நம்புகின்றனர்; நியாயமாக விசாரணை செய்தால் பெரும் புள்ளிகளும் சிக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அதுவரையில், இறந்ததாக அறிவிக்கப்பட்டவர்கள், விளைவுகளைச் சமாளிக்க வேண்டும்.

ஊழலில் பாதிக்கப்பட்ட மற்றொருவரான தத்தாராம் ஜாதவ், ‘இறந்துவிட்டதாக அறிவிக்கப்படும் போது, நான் தகுதி பெறும் அனைத்து கடன் அமைப்புகளுக்கான வாய்ப்புகளை இழக்கிறேன்’ என்று கூறுகிறார். டிசம்பர் 2022-ல், கோர்கரைச் சேர்ந்த இந்த விவசாயி டிராக்டர் வாங்குவதற்கு வங்கியில் கடன் பெற முடியவில்லை
கோர்கரில் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் 45 வயது விவசாயியான தத்தாராம் ஜாதவுக்கு, இதே காரணம் சொல்லி டிராக்டர் கடன் நிராகரிக்கப்பட்டது. டிசம்பர் 2022-ல், டிராக்டரை வாங்க அவருக்கு பணம் தேவைப்பட்டது. அதற்காக அவர் வங்கிக்குச் சென்றார் . இது ஒரு நேரடியான சாதாரண செயல்முறை என்று அவர் நினைத்திருந்தார். "இறந்தால் கடன் பெறுவது கடினம் போல," என்று தத்தாராம் சிரிக்கிறார். "ஏனென தெரியவில்லை."
ஒரு விவசாயிக்கு, அரசாங்கத்தின் பலன்கள், திட்டங்கள் மற்றும் மானியக் கடன்கள், உயிர்நாடி போன்றது என்று தத்தாராம் விளக்குகிறார். தொகையை குறிப்பிடாமல் "என் பெயரில் எனக்கு கடுமையான கடன் உள்ளது," என்று கூறுகிறார். "இறந்துவிட்டதாக நான் அறிவிக்கப்படும்போது, எனக்குக் கிடைக்கும் அனைத்து கடன் சாத்தியங்களுக்கான வாய்ப்பையும் நான் இழக்கிறேன். எனது விவசாய நிலத்தை பயிரிடுவதற்கு நான் எவ்வாறு மூலதனத்தை திரட்டுவது? நான் எப்படி பயிர்க்கடன் பெறுவது? தனியார் கந்துவட்டிக்காரர்களின் கதவுகளைத் தட்டுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை, ” என்று அவர் மேலும் கூறுகிறார்.
தனியார் கந்துவட்டிக்காரர்கள் அல்லது கடன் வழங்குநர்களுக்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. உண்மையில், நீங்கள் இறந்துவிட்டீர்களா என்பதைப் பற்றி கூட அவர்கள் கவலைப்படுவதில்லை, ஆனால் ஒரு மாதத்திற்கு 4-8 சதவீதம் வரை இருக்கும், அவர்களின் உயர் வட்டி விகிதங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். விவசாயிகள் கடன் வழங்குநர்களை அணுகும்போது, அசல் தொகை அப்படியே இருக்க, பெரும்பாலும், அவர்கள் பல ஆண்டுகளாக வட்டியைத் மட்டுமே திருப்பிச் செலுத்துகிறார்கள். எனவே, ஒரு சிறிய கடன் கூட அவர்களின் கழுத்தை நெறித்துவிடுகிறது.
"நான் அதிக சிக்கலில் இருக்கிறேன்," என்று தத்தாராம் கூறுகிறார். “எனக்கு இரண்டு மகன்கள் பி.எட் மற்றும் பி.ஏ படிக்கிறார்கள். நான் அவர்களை படிக்க வைக்க விரும்புகிறேன். ஆனால் இந்த மோசடி காரணமாக, நான் ஒரு மோசமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது எனது முழு நிதிநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.”


இடது: கோர்கரில் உள்ள அவர்களது வீட்டில், தனது பேரக்குழந்தையுடன் ராம்குமாரி மற்றும் (வலது) அவரது வீட்டிற்கு வெளியே. அவரது மகன் ஹேமந்த் இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவர். அவர்கள் நிதி இழப்பை சந்திக்கவில்லை என்றாலும், கிராமத்தில், இழப்பீடு பெறுவதற்காக வேண்டுமென்றே ஹேமந்த் இறந்துவிட்டதாக அவர்களே அறிவித்ததாக வதந்தி பரவியது. 'இந்த வதந்திகளால் நான் வேதனையடைந்தேன் என்று ராம்குமாரி கூறுகிறார், 'என் சொந்த மகனை இறந்ததாக எப்படி என்னால் கூற முடியும்'
45 வயதான ராம்குமாரி ராவத்துக்கு, அதன் விளைவுகள் வேறு மாதிரியானவை. அவரது மகன் 25 வயது ஹேமந்த், மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். அதிர்ஷ்டவசமாக, அவர்களின் 10 ஏக்கர் விவசாய நிலம் அவரது தந்தையின் பெயரில் உள்ளது. அதனால் நிதி சிக்கல்கள் எதுவும் இல்லை.
கோர்கரில் உள்ள தனது வீட்டின் வராண்டாவில் தனது பேரனைத் தொட்டிலில் தூங்க வைத்துக்கொண்டே, ராம்குமாரி, "ஆனால் மக்கள் எங்கள் முதுகுக்குப் பின்னால் எங்களைப் பற்றி பேசத் தொடங்கினர்," என்கிறார். “கிராமத்தில், ரூ. 4 லட்சத்திற்காக, நாங்கள் எங்கள் மகனை வேண்டுமென்றே எழுத்துபூர்வமாக கொன்றதாக மக்கள் சந்தேகித்தனர். இந்த வதந்தியால் நான் வேதனையடைந்தேன். என் சொந்த மகனை இறந்ததாக எப்படி என்னால் கூற முடியும்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
பல வாரங்களாக, இதுபோன்ற அருவருப்பான வதந்திகளை சமாளிக்க போராடினேன் என்று ராம்குமாரி கூறுகிறார். அவரின் மன அமைதி குலைந்து போயிருந்தது. "நான் அமைதியில்லாமல், கோபமாக இருந்தேன்," என்று அவர் ஒப்புக்கொள்கிறார். "இதை எப்படி சரி செய்து, மக்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி எப்படி வைப்பது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்."
செப்டம்பர் முதல் வாரத்தில், ராம்குமாரியும், ஹேமந்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்த விஷயத்தை கவனிக்கக் கோரும் எழுத்துப்பூர்வ விண்ணப்பத்துடன் சென்றனர். "நான் உயிருடன் இருக்கிறேன் என்று நான் அவரிடம் சொன்னேன்," ஹேமந்த் ஒரு கசப்பான புன்னகையுடன் கூறுகிறார். “அப்படிப்பட்ட ஒரு விண்ணப்பத்துடன் முதலில் அந்த அலுவலகத்திற்கு செல்வது விசித்திரமாக இருந்தது. ஆனால் எங்களால் முடிந்ததை செய்தோம். எங்கள் கையில் வேறு என்ன இருக்கிறது? நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் மனசாட்சி தெளிவாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
அசோக்கும் தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டார். தினசரி கூலித் தொழிலாளியாக, வேலை தேடுவதும், தட்டில் உணவை கொண்டுவருவதும் தான் அவரது முன்னுரிமை. "இது அறுவடை காலம். எனவே வேலை தொடர்ந்து இருக்கும்," என்று அவர் கூறுகிறார். "மற்ற நேரங்களில், தொடர்ச்சியாக வேலை இருக்காது. எனவே, அப்போது வேலை தேடி நகருக்கு அருகில் செல்ல வேண்டும்.
அவ்வப்போது இந்த பிரச்சினையை தொடர்ந்து பார்க்கிறார். முதலமைச்சரின் உதவி எண்ணுக்கு பலமுறை அழைப்பு விடுத்தும் எந்த பலனுமில்லை. ஆனால் அவரால் அரசு அலுவலகங்களைச் சுற்றி அலைந்து தினக்கூலியை இழக்க முடியாது. “அப் ஜப் வோ தீக் ஹோகா தப் ஹோகா [பிரச்சனை எப்போது சரி செய்யப்படுமோ அப்போது சரியாகிவிடும்],” வருத்தத்துடனும், குழப்பத்துடனும் அவர் முன்பை விட கடினமாக உழைத்துக்கொண்டே இவ்வாறு கூறுகிறார். ஆனாலும், அவர் ஒரு இறந்த மனிதன்.
தமிழில்: அகமது ஷ்யாம்