ஏப்ரல் 30, 2023 அன்று இமயமலையின் தவுலாதார் மலைத்தொடர்ச்சியிலுள்ள தரம்சாலாவில் ப்ரைட் அணிவகுப்பு முதன்முறையாக நடந்தது.
’இந்த வீடு உனக்கும், அவனுக்கும், அவளுக்கும், அவர்களுக்கும் உரிமையானது’ என்பது போன்ற கோஷங்கள் கொண்ட பதாகைகளுடன் பிரதான சந்தையிலிருந்து, தரம்சாலாவின் திபெத்திய வசிப்பிடமான மெக்லியோத்கஞ்ச்சில் இருக்கும் தலாய் லாமா கோவிலை நோக்கி மக்கள் சென்றனர். பிறகு ஊர்வலம் சந்தடி நிறைந்த சந்தைப் பகுதியான கோத்வாலி பஜாருக்கும் தொடர்ந்தது. LGBTQIA+ சமூகத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் நடக்கும் முதல் நிகழ்வு இது. மாநிலத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்தும் சிறு டவுன்களிலிருந்தும் மக்கள் வந்து கலந்து கொண்டனர்.
“அஜீப் (விசித்திரம்) என்கிற வார்த்தையை நாங்கள் பெருமையுடன் பயன்படுத்துகிறோம்,” என்கிறார் இமாச்சல் பால்புதுமையர் அறக்கட்டளையின் துணை நிறுவனரும் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான டான் ஹசார். 30 வயது நிறைந்த அவர் விளக்குகையில், “பால் புதுமை பண்பை விளக்க நாம் ஆங்கில வார்த்தைகளைதான் பயன்படுத்துகிறோம். இந்தி மற்றும் வட்டார வழக்குகளை ஏன் பயன்படுத்துவதில்லை? பால்புதுமை பண்பு பற்றிய பாடல்களையும் கதைகளையும் வட்டார வழக்குகளில் நாங்கள் பயன்படுத்துகிறோம்,” என்கிறார்.
தில்லி, சண்டிகர், கொல்கத்தா, மும்பை போன்ற நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாநிலத்தின் சிறுபகுதிகளிலிருந்தும், குறைந்த கால அளவில் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் வந்திருக்கின்றனர். ப்ரைட் அணிவகுப்பில் கலந்துகொண்ட, ஷிம்லாவின் 20 வயது பல்கலைக்கழக மாணவர் ஆயுஷ் சொல்கையில், “இமாச்சலப் பிரதேசத்தில் இப்படி (பால்புதுமையராக) இருப்பதை பற்றி யாரும் பேசுவதில்லை,” என்கிறார். பள்ளி வேளைகளில் கழிப்பிடத்துக்கு செல்ல ஆயுஷுக்கு சிக்கலாக இருந்திருக்கிறது. “வகுப்பிலிருந்த ஆண் மாணவர்கள் என்னை சீண்டினர். கேலி செய்தனர். இச்சமூகத்தை இணையத்தில் கண்டறிந்தபோது மிகவும் பாதுகாப்பாக நான் உணர்ந்தேன். என்னை புரிந்தவர்களுடன் இருப்பதற்கான வாய்ப்பை இது வழங்கியது,” என்கிறார்.
ஒரு பேராசிரியரை ஆலோசகராகக் கொண்டு வெளிப்படை உரையாடல் வெளிகளை கல்லூரிகளில் உருவாக்கி, இத்தகைய உரையாடல்களை உருவாக்க ஆயுஷ் முயன்று கொண்டிருக்கிறார். பாலினம் மற்றும் பால்தன்மை ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ள மக்கள் வருகின்றனர். கேள்விகள் கேட்கவும் பகிர்ந்து கொள்ளவும் கூட்டத்தில் பங்குபெறுகின்றனர்.

தரம்சாலாவில் ஏப்ரல் 30, 2023 அன்று முதன்முதலாக நடந்த ப்ரைட் அணிவகுப்பில் LGBTQIA+ சமூகத்தினருக்கு ஆதரவாக ஒருவர் பதாகை ஏந்தியிருக்கிறார்
![Ayush is a 20-year-old student from Shimla. They say, ' No one talks about this [being queer] here [in Himachal Pradesh]'](/media/images/03-DSC_0171-SD.max-1400x1120.jpg)
ஆயுஷ், ஷிம்லாவை சேர்ந்த 20 வயது மாணவர். ‘இங்கு (இமாச்சலப் பிரதேசத்தில்) இப்படி (பால்புதுமையராக) இருப்பதை குறித்து எவரும் பேசுவதில்லை,’ என்கின்றனர் அவர்கள்
இமாச்சல் பால்புதுமையர் அறக்கட்டளையின் துணை நிறுவனரான ஷஷாங், கங்க்ரா மாவட்டத்தின் பலாம்பூர் தாலுகாவின் கிராமம் ஒன்றை சேர்ந்தவர். “எப்போதுமே நான் பொருந்தாதவன் போலவே உணர்ந்திருக்கிறேன். இறுதியில் சமூக தளத்தினூடாக இதே வகை சவால்களை சந்திக்கும் பிறரை நான் சந்தித்தேன். பலரும் அவமானமும் குற்றவுணர்வும் கொண்டிருந்தனர். தெரிந்தவர்களுடன் வெளியே செல்லும்போது கூட, எத்தனை தனிமையாக நாங்கள் உணர்கிறோம் என்பதை சுற்றியே உரையாடல்கள் இருந்தன,” என்கிறார் ஷஷாங். அத்தகைய அனுபவங்கள்தாம் ஷஷாங்கை ஓர் உதவி தொலைபேசி சேவையை தொடங்க வைத்தது. 2020ம் ஆண்டில் தனியான ஓர் எண்ணையும் பெற்றார்.
ஒரு முக்கியமான விஷயத்தை முன் வைத்து விட்டு சொல்கையில் ஷஷாங், “கிராமத்திலிருக்கும் பால் புதுமையரின் குரல்கள் எங்கே?” எனக் கேட்கிறார். மாற்றுப்பாலினத்தவர் பாதுகாப்பு சட்டம், 2019 -ன் சில பிரிவுகள் இமாச்சலப்பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஒரு மனுவை ஷிம்லா உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்யவிருக்கின்றனர்.
டான் ஹசார், இமாச்சல் பால்புதுமையர் அறக்கட்டளையின் (HQF) ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் துணை நிறுவனரும் ஆவார். இமாச்சலப் பிரதேசத்தின் வெவ்வேறு இடங்களை சேர்ந்த 13 பேர் இணைந்து ஒருங்கிணைப்பு கமிட்டியை உருவாக்கியதாக சொல்கின்றனர். “இரண்டு வாரங்களில் நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்தோம்,” என்கிறார் கொல்கத்தாவை சேர்ந்த டான். ஊர்வலத்தை திபெத்திய வசிப்பிடமான மெக்லியோத்கஞ்சில் நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட நீதிமன்றத்தில் பெறுவதிலிருந்து ஒருங்கிணைப்பு பணி தொடங்கப்பட்டது.
பிறகு HQF அமைப்பு, சமூகதள பதிவுகளை இடத் தொடங்கியது. பதிவுகளுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. “ப்ரைட் அணிவகுப்பில் கலந்து கொள்ள தைரியம் தேவை. நாங்கள் உரையாடல்களை இங்கு (சிறு டவுன்களில்) தொடங்க விரும்பினோம்,” என்கிறார் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மனிஷ் தபா.
அவர்கள், சாதி வர்க்க ஒழிப்புக்கு ஆதரவாகவும் நிலமற்றதன்மை, நாடற்றதன்மை ஆகியவற்றை எதிர்த்தும் நடந்ததாக டான் கூறுகிறார். ’பால்புதுமையர் விடுதலை சாதி ஒழிப்பின்றி நடக்காது. ஜெய்பீம்’ என்ற கோஷத்தை ஒரு பதாகை கொண்டிருந்தது.

சாதி வர்க்க ஒழிப்புக்கு ஆதரவாகவும் நிலமற்றதன்மை, நாடற்றதன்மை ஆகியவற்றை எதிர்த்தும் பால்புதுமையர் அணிவகுப்பு இருந்ததாக ஒருங்கிணைப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்

ப்ரைட் அணிவகுப்பு ஒருங்கிணைக்க உதவிய (இடதிலிருந்து வலது) ஆனந்த் தயாள், சன்யா ஜெயின், மனிஷ் தபா, டான் ஹசார் மற்றும் ஷஷாங்
ப்ரைட் அணிவகுப்பு நடந்த ஞாயிறன்று, ஊர்வலம் 90 நிமிடங்களில் டவுனின் வணிகப் பகுதியில் 1.2 கிலோமீட்டர் வரை பயணித்தது. அவ்வப்போது நடனமாடவும் பேசவும் ஊர்வலம் நின்றது. “கிட்டத்தட்ட 300 சிறு கடைகள் (சந்தையில்) இருந்தன. பிரதான சாலைகளில் நடந்தால்தான் மக்களின் பார்வையில் படுவோம் என்பதால் அது எங்களுக்கு முக்கியமாக இருந்தது,” என்கிறார் அந்த இடத்தை தேர்ந்தெடுத்த காரணத்தை மனிஷ் தபா விளக்கி.
மாற்றுப்பாலினத்தோருக்கான தேசிய இணையதளம் தொடங்கப்பட்ட 2019ம் ஆண்டிலிருந்து 17 மாற்றுப்பாலின அடையாள அட்டைகள்தான் இமாச்சலப் பிரதேசத்தில் வழங்கப்பட்டிருப்பதாக அத்தளம் தெரிவிக்கிறது.
“இமாச்சலில் உள்ள கங்க்ரா மாவட்டத்தில் மாற்றுப்பாலின அடையாள அட்டை பெற்ற முதல் நபர் நான்தான்,” என்கிறார் டான். “அது கிடைப்பதற்கு நான் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் உரிமைகள் பெறும் வழிகள் கூட தெரியாதவர்களின் நிலை என்ன? அரசு நலவாழ்வு வாரியம் கூட எதுவும் இல்லை. காப்பகங்களும் நலத்திட்டங்களும் எங்கே இருக்கின்றன? ஏன் அரசதிகாரிகளுக்கு இது பற்றிய உணர்வே இல்லை?”
ப்ரைட் அணிவகுப்பை பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர்வாசிகள் பலருக்கும் விழிப்புணர்வு இல்லாமலிருப்பதையும் பார்க்க முடிந்தது. கோத்வாலி பஜாரில் வாடகைக் கடையில் மின்சாதனங்களை விற்கும் ஆகாஷும் ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிருந்தார். “முதன்முறையாக இதை நான் பார்க்கிறேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என எனக்கு புரியவில்லை. ஆனால் அவர்கள் ஆடுவதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. எனக்கு எந்த பிரச்சினையும் அது குறித்து இல்லை,” என்கிறார் அவர்.


இடது: திபெத்தை சேர்ந்த திருநங்கையான தென்சின் மரிகோ இந்த ப்ரைட் அணிவகுப்பில் கலந்து கொண்டார். வலது: ஊர்வலத்தில் வருபவர்கள் பின்னணியில் கொண்டு வரும் பகத் சிங் சிலை
தரம்சாலாவில் 56 வருடங்களாக வசித்து வரும் நவ்நீத் கோதிவாலா, நடனத்தை பார்த்து ரசித்தார். “இப்படி பார்ப்பது இதுதான் முதல்முறை. பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது,” என்கிறார் அவர்.
ஊர்வலம் நடத்தப்படுவதற்கான காரணத்தை அறிந்ததும் அவர் மனம் மாறினார். “இது சரியாக தெரியவில்லை. இதற்காக அவர்கள் போராடக் கூடாது. ஏனெனில் அவர்கள் வேண்டுமென கோருவது இயற்கையான விஷயம் அல்ல. அவர்கள் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வார்கள்?” என்கிறார் அவர்.
“மரிகோ (திபெத்தின் முதல் திருநங்கை) அணிவகுப்பில் கலந்து கொண்டது எங்களுக்கு பெருமகிழ்ச்சி,” என்கிறார் டான்.
தலாய் லாமா கோவிலை ஊர்வலம் அடைவதை திபெத்திய துறவி செரிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். “உரிமைகளுக்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். பல நாடுகள் இந்த (திருமண) உரிமைகளை அவர்களுக்குக் கொடுத்துவிட்டது. இந்தியாவும் அதை பின்பற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது,” என்கிறார் அவர்.
2018ம் ஆண்டிலேயே 377ம் சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருந்தாலும், தற்பாலின சேர்க்கையாளர் திருமணம் இன்னும் சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. தற்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது குறித்த மனுக்களை இம்மாதத்தின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் விசாரித்துவிட்டது. இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை.
நிகழ்வின்போது போக்குவரத்து நெரிசலை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்த காவல்துறை பெண் அதிகாரி நீலம் கபூர், “உரிமைகளுக்காக போராடுவது நல்ல விஷயம். அனைவரும் அவரவரை பற்றி யோசிக்க வேண்டும்,” என்கிறார். “எங்கேயாவது இது தொடங்க வேண்டும் என்னும்போது இங்கு தொடங்கினால் என்ன?”

மாற்றுப்பாலின உரிமைகளை அடையாளப்படுத்தும் கொடியை பிடித்திருக்கும் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் தயாள்

‘ இரண்டு வாரத்தில் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தோம் ,’ என்கிறார் டான் ஹசார் ( வெள்ளைப் புடவை )

பிரதான சந்தையிலிருந்து திபெத்திய வசிப்பிடமான மெக்லியோத்கஞ்சிலுள்ள தலாய் லாமா கோவில் வரை மக்கள் ஊர்வலம் சென்றனர்

பிறகு ஊர்வலம் மும்முரமான சந்தைப் பகுதியான கோத்வாலி பஜாருக்கும் தொடர்ந்தது

ப்ரைட் அணிவகுப்பை பார்த்திருந்தவர்களுக்கு என்ன நடக்கிறதென புரியவில்லை . ‘ பிரதான சாலைகளில் நாங்கள் ஊர்வலம் சென்றால்தான் பொது மக்கள் எங்களை பார்க்க முடியும் ,’ என்கிறார் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மனிஷ் தபா

மனிஷ் தபா ( மைக்குடன் இருப்பவர் ) ப்ரைட் அணிவகுப்பில் உரையாற்றுகிறார்

நடனமாட ப்ரைட் அணிவகுப்பிலுள்ளவர்கள் நிற்கின்றனர்

90 நிமிடங்களில் 1.2 கிலோமீட்டருக்கு ப்ரைட் அணிவகுப்பு பயணித்திருக்கிறது
![Monk Tsering looking at the parade. 'They are fighting for their rights and many other countries have given these rights [to marriage] to their people, maybe it's time for India to follow,' he says](/media/images/15-DSC_0088-SD.max-1400x1120.jpg)
துறவி செரிங் அணிவகுப்பை பார்க்கிறார் . ‘ உரிமைகளுக்காக அவர்கள் போராடுகிறார்கள் . பல நாடுகள் இந்த ( திருமண ) உரிமைகளை அவர்களுக்கு கொடுத்து விட்டன . இந்தியாவும் கொடுக்கும் காலம் வந்துவிட்டது ,’ என்கிறார் அவர்

போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருக்கும் காவல்துறை பெண் அதிகாரி நீலமிடம் ஷஷாங் பேசுகிறார் . ‘ உரிமைகளுக்காக போராடுவது நல்ல விஷயம் . அனைவரும் அவரவரை பற்றி யோசிக்க வேண்டும் ,’ என்கிறார் நீலம்

டான் ஹசார் ( நிற்பவர் ) மற்றும் ஷஷாங் ( அமர்ந்திருப்பவர் ) ஆகியோர்தான் இமாச்சல் பால்புதுமையர் அறக்கட்டளையை நிறுவியவர்கள்

இமாச்சலப் பிரதேசத்தின் கங்க்ரா மாவட்டத்தில் மாற்றுப்பாலின அடையாள அட்டை பெற்ற முதல் நபர் டான் ஹாசர்தான் . ‘ அதை பெற பல சிரமங்களை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது . உரிமைகளை பெறும் வழி தெரியாதவர்களின் நிலை என்ன ?’ என அவர்கள் கேட்கின்றனர்

பாலத்திலிருந்து தொங்கும் ப்ரைட் கொடி

தில்லி , சண்டிகர் , கொல்கத்தா , மும்பை போன்ற நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாநிலத்தின் சிறுபகுதிகளிலிருந்தும் , குறைந்த கால அளவில் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் வந்திருக்கின்றனர்

பால்புதுமையருக்கு ஆதரவான சில பதாகைகள் அணிவகுப்பில்

அணிவகுப்பில்
கலந்து
கொண்டோருடன்
ஒரு
புகைப்படம்
தமிழில் : ராஜசங்கீதன்