ஆட்டம் தொடங்கிவிட்டது என்பதற்கும் இம்முறை நாம் 400-ஐ தாண்டுவோம் என்பதற்கும் இடையில், எங்களின் மாநிலம் சிறு இந்தியாவாக இருக்கிறது. அரசாங்க திட்டங்கள், சிண்டிகேட் மாஃபியாக்கள், அரசாங்க முழக்கங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றின் கலவையாக இருக்கிறது.
இங்கு வேலைகளில் மாட்டிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களும் நம்பிக்கையற்ற மாநிலத்தில் சிக்கிக் கொண்ட வேலையற்ற இளைஞர்களும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மோதலில் சிக்குண்ட சாமானியர்களும் காலநிலை மாற்றத்தில் மாட்டியிருக்கும் விவசாயிகளும் அடிப்படைவாத அரசியலை எதிர்க்கும் சிறுபான்மையினரும் இருக்கின்றனர். நரம்புகள் தளர்கின்றன. உடல்கள் உடைக்கப்படுகின்றன. சாதி, வர்க்கம், பாலினம், மொழி, இனம், மதம் எல்லாமும் குறுக்கு வெட்டாக ஓடி எல்லா குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்த குழப்பத்தினூடாக பயணிக்கையில் நமக்கு குழப்பமான குரல்கள் கேட்கிறது. கையறுநிலையில் உடல் நடுங்குபவர்களின் குரல்களும் அதிகாரத்தில் எவர் வந்தாலும் நிலை மாறாது என்கிற தெளிவின் குரல்களும். சந்தேஷ்காலி தொடங்கி இமயமலையின் தேயிலைத் தோட்டங்கள் வரை, கொல்கத்தாவிலிருந்து மறக்கப்பட்ட ராரின் பகுதிகள் வரை, நாங்கள் சுற்றுகிறோம். கேட்கிறோம். கூடுகிறோம். புகைப்படம் எடுக்கிறோம். பேசுகிறோம்.
சந்தேஷ்காலியில் தொடங்குவோம். மேற்கு வங்கத்டின் சுந்தரவன டெல்டா பகுதியிலுள்ள ஒரு தீவுப் பகுதி அது. நிலவுரிமை மற்றும் பெண்களின் உடல்கள் சார்ந்த அரசியல் மோதல்கள் அவ்வப்போது நடக்கும் இடம் அது.
ஷத்ரஞ்ச்
அமலாக்கத்துறை வருகிறது
சந்தேஷ்காலி கிராமத்தில்
இரவின் கொட்டாவியில்
பெண்கள் பகடைகளாக்கப்படுகையில்
தொகுப்பாளர்களோ முனகுகிறார்கள், ‘ராம், ராம், அலி, அலி!” என.

‘கெலோ ஹோபே (ஆட்டம் தொடங்கிவிட்டது) என முர்ஷிதாபாத்தில் எழுதப்பட்டிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் விளம்பர எழுத்துகள்

முர்ஷிதாபாதி சுவரில் எழுதப்பட்டிருக்கும் அரசியல் எழுத்துகள்: ‘நிலக்கரியை நீ விழுங்கி விட்டாய், எல்லா பசுக்களையும் திருடி விட்டாய், அதை புரிந்து கொள்கிறோம். ஆனால், ஆற்றங்கரை மணலை கூட நீ விட்டு வைக்கவில்லை. எங்களின் மனைவி, மகள்கஐயும் துன்புறுத்துகிறாய் - என்கிறது சந்தேஷ்காலி


இடது: பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக வடக்கு கொல்கத்தாவில் குரலெழுப்பும் பூஜை பந்தல்: ஃபண்டி கோரே பண்டி கரோ, என்கிறது அது (என்னை ஏமாற்றி உறவுக்கு கொண்டு வந்தாய்). வலது: சுந்த்ரவனத்தின் பாலி தீவின் ஆரம்பப் பள்ளி மாணவர் ஒருவரது கண்காட்சி பதாகை, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசுகீறது. அம்ர நாரி, அம்ர நாரி- நிர்ஜதான் பந்தோ கோர்தே பாரி (நாங்கள் பெண்கள். பெண்களுக்கு எதிரான வன்முறையை நாங்கள் ஒழிப்போம்)
*****
ஜங்கில் மஹால் என அறியப்பட்ட பகுதிகளின் பங்குரா, புருலியா, மேற்கு மித்னாபோர் மற்றும் ஜார்க்ராம் மாவட்டங்களினூடாக செல்கையில், பெண் விவசாயிகளையும் புலம்பெயர் விவசாயத் தொழிலாளர்களையும் சந்தித்தோம்.
ஜுமுர்
புலம்பெயர் தொழிலாளர்கள்
மணலில் புதைக்கப்படுவதுதான்
எங்களின் செம்மண் நிலத்தின் கதை.
’தண்ணீர்’ என சொல்வது நிந்தனை,
‘ஜலம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்தளவுக்கு தாகம் கொண்டது ஜங்கில் மஹால்.


புருலியாவின் பெண் விவசாயிகள், கடும் குடிநீர் பஞ்சம், விவசாய சரிவு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மத்தியில் வாழ்கின்றனர்
*****
உலகுக்கு வேண்டுமானால், டார்ஜிலிங் ‘மலைகளின் அரசி’யாக இருக்கலாம். ஆனால் ரம்மிய தோட்டங்களில் உழைக்கும் பழங்குடி பெண்களுக்கு அப்படி இல்லை. அவர்கள் செல்லவென கழிவறைகள் கூட கிடையாது. அப்பகுதி பெண்களின் வாழ்க்கையையும் அப்பகுதியில் நிலவும் ஏற்றத்தாழ்வையும் கொண்டு எதிர்காலத்தை யோசித்தால், சுவரில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளே உண்மையாகப் படும்.
ரத்த தாகம்
ஒரு
கோப்பை டீ வேண்டுமா?
வெள்ளை, ஊலாங் டீ வேண்டுமா?
உயர்வர்க்கம் விரும்பும் வறுத்த பாங்க் வேண்டுமா?
உங்களுக்கு ஒரு கோப்பை ரத்தம் வேண்டுமா
அல்லது பழங்குடி பெண் வேண்டுமா?
உழைக்கிறோம், வேகிறோம், “நாங்கள்! நாங்கள்!”

டார்ஜீலிங்கில் இருக்கும் கிராஃபிட்டி எழுத்து
*****
முர்ஷிதாபாத், மேற்கு வங்கத்தின் இதயப்பகுதியில் மட்டும் இடம்பெறவில்லை, லஞ்சம் பெற்று நியமனம் என்கிற பிரச்சினையின் மையமாகவும் இருக்கிறது. மாநில அரசின் பள்ளி சேவை தேர்வாணையம் (SSC) நியமித்த பெரும் எண்ணிக்கையிலான நியமனங்களை முறைகேடு என சொல்லி ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவு, பல இளையோரை சந்தேகிக்க வைத்திருக்கிறது. 18 வயது கூட நிரம்பாமல் பீடி உற்பத்தி ஆலைகளில் பணிபுரியும் இளையோருக்கு கல்வியில் பெரிய நம்பிக்கை இல்லை. அது நன்மை பயக்கும் எனவும் அவர்கள் நம்பவில்லை. உழைப்பு சந்தையில் அவர்கள் இளைய வயதிலேயே இணைந்து, நல்ல வேலைகள் தேடி புலம்பெயர்வார்கள்.
தகுதி வாய்ந்த வேட்பாளர்கள்
தர்ணா உட்கார்ந்தார்கள்,
‘இனி கொடுங்கோன்மை இல்லை!’
காவலர்கள் ராணுவ பூட்ஸ்களோடு வந்தார்கள் -
அரசாங்க வேலை,
அவர்களுக்கு சுதந்திரம் ஒன்றும் இல்லை!
லத்திகளும் கேரட்களும் கூட்டாளிகள் இல்லை.

படிப்பை நிறுத்தியவர்களில் பலரும் பதின்வயதினர். முர்ஷிதாபாத்தின் பீடி ஆலையில் அவர்கள் பணிபுரிகின்றனர். ‘பெரிய பெரிய படிப்பு படித்தவர்களே சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள். தேர்வானவர்களும் வேலைகள் கிடைக்காமல் தெருக்களில் அமர்ந்து, SSC கொடுத்திருக்க வேண்டிய வேலைகள் கேட்டு போராடுகிறார்கள். நாங்கள் கல்வியை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?
*****
வருடத்தின் எந்த நாளாக இருந்தாலும், கொல்கத்தாவின் தெருக்களில் கூட்டம் நிறைந்திருக்கும். போராடும் பெண்கள் அதிகமாக அங்கிருப்பார்கள். அநீதியான சட்டங்களை எதிர்த்து போராடவென மாநிலத்தின் பல்வேறு மூலைகளிலிருந்து மக்கள் வருகிறார்கள்.
குடியுரிமை
பேப்பர்காரர் வருகிறார்,
ஓடு, ஓடி, முடிந்தவரை ஓடு,
பங்களாதேஷி! பங்களாதேஷி! தலையை வெட்டுவோம்!
குடியுரிமை திருத்தச் சட்டம் ஒழிக;
நாங்கள் ஓட மாட்டோம்,
பங்களாதேஷி! பங்களாதேஷி! கேக் வேண்டுமா உணவு வேண்டுமா?

பல்வேறு பெண்கள் அமைப்புகள் 2019 ஆண்டில் நடத்திய பெண்கள் பேரணியின் கட் அவுட்கள்

2019ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த பெண்கள் பேரணி: வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வந்த பெண்கள், மதம், சாதி மற்றும் பாலின அடிப்படையில் வெறுப்பையும் பாகுபாட்டையும் பரப்புவதை எதிர்த்து தெருக்களில் இறங்கினர்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தேசிய அளவில் நடந்த போடாட்டத்தின்போது கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் மைதானத்தில் தர்ணா செய்த இஸ்லாமியப் பெண்கள்
*****
பிர்புமில் விவசாயத்தை சார்ந்திருக்கு கிராமங்களில், நிலமற்ற பழங்குடி பெண்களை சந்தித்தோம். குடும்ப நிலம் கொண்டிருந்த சில பெண்களுக்கு கூட பேச அனுமதி இல்லை.
ஷூத்ராணி
ஏ அய்யா, பாருங்க என்னோட பழைய நிலப்பட்டா இங்க
அழுக்கடைஞ்சு கிழிஞ்சி கெடக்கு ஒரு துப்பட்டா போல.
ஒரு கவளம் கொடுங்க, என் வாழ்க்கைய கொடுங்க,
நான் ஒரு விவசாயி, விவசாயி மனைவி கிடையாது.
நிலம் போச்சு, பஞ்சத்துல போச்சு
நான் இன்னும் விவசாயிதானா
இல்லை அரசாங்கத்தோட சந்தேகமா இருக்கேனா?


‘சொந்தமாக நிலம் இல்லை. நிலங்களில் வேலை பார்த்தாலும் கைப்பிடி நெல்லுக்கு கெஞ்ச வேண்டியிருக்கிறது,’ என்கிறார் மேற்கு வங்க பிர்புமில் நெல் அறுக்கும் சந்தாலி விவசாயத் தொழிலாளர்
*****
இங்குள்ள சாமானிய மக்கள், அதிகாரத்திலுள்ளவர்களை கேள்வி கேட்க தேர்தல் வரை காத்திருப்பதில்லை. முர்ஷிதாபாத், ஹூக்லி, நாடியா பகுதிகளின் பெண்களும் விவசாயிகளும் தேசிய போராட்ட இயக்கங்கள் எல்லாவற்றுக்கும் எப்போதும் ஆதரவு தந்திருக்கிறார்கள்.
சுத்தியல்கள்
கணத்தில் முடுக்கி விடப்படும்
அன்பு கண்ணீர் புகைக்குண்டே,
ஆலைகள் மூடப்படும், நில முதலைகள் நீந்தும்.
கறுப்பு தடுப்புகளே
குறைந்த ஊதியம்
NREGA சிறை வைத்திருக்கிறது காவி.


இடது: அனைத்து இந்திய விவசாய சங்கார்ஷ் ஒருங்கிணைப்பு குழு (AIKSCC) மகளிர் விவசாயப் பேரணி, ஜனவரி 18, 2021. வலது: ‘அவர்கள் எங்களிடம் வருவதில்லை. எனவே எங்களுக்கு என்ன வேண்டுமென சொல்ல நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்’ என்கின்றனர் செப்டம்பர் 19, 2023 அன்று நடந்த அனைத்து இந்திய விவசாய சங்கப் பேரணி விவசாயிகள்
தமிழில்: ராஜசங்கீதன்