"இது அனைத்தும் ஒற்றை நூலில் தொடங்கி ஒற்றை நூலிலேயே முடிவடைகிறது," என்று மெல்லிய புன்னகையுடன் ரேகா பென் வாகேலா கூறுகிறார். அவர் குஜராத்தின் மோட்டா டிம்ப்லா கிராமத்தில் உள்ள தனது வீட்டுக் கைத்தறியில் அமர்ந்து ஒற்றை இகட் பட்டோலுவை நெய்கிறார். "ஆரம்பத்தில் பாபினில் ஒற்றை நூலை சுற்றி விட்டு, இறுதியில், சாயமிடப்பட்ட நூலை பாபின் மீது மாற்றுவோம்," என்று ரேகா பென், நெசவு நூலுக்கான பாபின்கள் தயாராவதற்கு முந்தைய படோலா தயாரிப்பின் பல செயல்முறைகளை விளக்குகிறார். பின்னர் தறியில் திரிக்கப்பட்ட நூல் பொருத்தப்படுகிறது.
ரேகா பென் வசிக்கும் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள வான்கர்வாஸ் கிராமத்தில் பலர் புகழ்பெற்ற பட்டுப் புடவைகளான பட்டோலு தயாரிப்புடன் தொடர்பான ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இன்று, 40 வயதாகும் ரேகா பென், லிம்ப்டி தாலுகாவில், ஒற்றை மற்றும் இரட்டை இகட் படோலாவை நெசவு செய்யும் ஒரே தலித் பெண் படோலா தயாரிப்பாளர் ஆவார். (படிக்க: ரேகா பென் வாழ்க்கையின் குறுக்கு செங்குத்து இழைகள் ).
சுரேந்திரநகரில் இருந்து தயாரிக்கப்படும் படோலாக்கள் 'ஸலவாடி' படோலா என்று அழைக்கப்படுகின்றன. இது படானில் தயாரிக்கப்படும் படோலாக்களை விட மலிவானது. ஆரம்பத்தில், இவை, அதன் ஒற்றை இகட் படோலாவுக்கு பெயர் பெற்றன. தற்போது ஜலவாட்டில் உள்ள வான்கர்கள் (நெசவாளர்கள்) இரட்டை இகட் படோலாவையும் நெசவு செய்கிறார்கள். "ஒற்றை இகட்டில், வடிவமைப்பு குறுக்கு இழையில் மட்டுமே இருக்கும். இரட்டை இகட்டில், செங்குத்து இழை மற்றும் குறுக்கு இழை இரண்டிலும் உள்ளன,” என்று ரேகா பென், இரண்டு வகையான படோலாவிற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறார்.
வடிவமைப்பை பொறுத்துதான், செயல்முறை நுட்பமாகிறது. ரேகா பென் அதை இன்னொரு முறை விளக்க முயற்சிக்கிறார். “ஒரு இகட் படோலுவில் 3500 செங்குத்து இழை நூல்களும் 13750 குறுக்கு இழை நூல்களும் உள்ளன. இரட்டை இகட் படோலுவில் 2220 செங்குத்து இழை நூல்களும் மற்றும் 9870 குறுக்கு இழை நூல்களும் உள்ளன,” என்று அவர் பாபினை குறுக்கு இழை நூலால் ஷட்டிலுக்குள் செலுத்துகிறார்.

"இது அனைத்தும் ஒற்றை நூலில் தொடங்கி ஒற்றை நூலில் முடிவடைகிறது” என்கிறார் குஜராத்தின் லிம்ப்டி தாலுகாவில் உள்ள ஒரே தலித் பெண் படோலா நெசவாளரான ரேகா பென் வாகேலா. பட்டு நூல்கண்டில் தொடங்கி 252 அங்குல நீளமுள்ள பட்டோலா சேலைக்குள் செல்லும் கடைசி நூலுடன் முடிக்கும் செயல்முறையை அவர் விளக்குகிறார். இது ஆறு மாத உழைப்பை உள்ளடக்கிய வேலை ஆகும்
பாபினை பார்க்கும் போது, 55 வயதான கங்கா பென் பார்மரின் உருவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. "நாங்கள் முதலில் ஒரு பெரிய மர ஸ்பூலில் நூலை சுற்றிக்கொள்வோம். பின்னர் அதிலிருந்து ஒரு சுழலும் சக்கரத்தின் உதவியுடன், பாபினுக்கு செலுத்துவோம். சுழலும் சக்கரம் இல்லாமல் பாபினுக்கு நூலை செலுத்த முடியாது,” என்று லிம்ப்டியின் காக்ரேதியா கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஒரு பாபினில் வேலை செய்து கொண்டே அவர் கூறுகிறார்.
"என்ன, ஏதும் புரியலையா?" என்று கேட்ட ரேகா பென்னின் குரல், படோலா இழைகள் பற்றிய எங்கள் உரையாடலுக்கு என் கவனத்தை மீண்டும் திருப்பியது. இந்த சிக்கலான செயல்முறையை அவர் எனக்கு அன்று எத்தனை முறை விளக்கியிருப்பார் என்ற கணக்கே இல்லை. "எழுது," அவர் என் நோட்புக்கில் சுட்டிக்காட்டி உரிமையாக அதட்டுகிறார். நான் செயல்முறையை முழுமையாக புரிந்துகொள்கிறேன் என்பதை உறுதிப்படுத்த, அவர் சிறிது நேரம் நெசவு செய்வதை நிறுத்தி விட்டு என் மீது கவனம் செலுத்துகிறார்.
பத்துக்கும் மேற்பட்ட படிகளுடன், மிகவும் சிக்கலான இந்த செயல்முறையை நான் எழுதுகிறேன். இதை செய்வதற்கு பல வாரங்கள் ஆகலாம். நெசவாளர்களைத் தாண்டி இன்னும் பல தொழிலாளர்களின் உழைப்பும் இதில் அடங்கும். பட்டு நூலில் தொடங்கி 252 அங்குல நீளமுள்ள பட்டோலா சேலைக்குள் செல்லும் கடைசி நூலுடன் முடிவடையும் செயல்முறையானது, ஆறு மாதம் வரையிலான உழைப்பைக் கோரலாம்.
"இந்த செயல்முறை படிகளில் ஏதேனும் ஒரு தவறு வந்தாலும், நீங்கள் மொத்த படோலுவையும் கெடுத்துவிட்டதாகிவிடும்," என்று அவர் உணர்ச்சி வசப்படுகிறார்.

காகரோத்தியா கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான கங்காபென் பர்மார், பட்டு நூலை ஒரு பெரிய மர ஸ்பூலில் எடுத்துச் செல்கிறார். மேலும் அதிலிருந்து ஒரு சுழலும் சக்கரத்தின் உதவியுடன் அவர் ஒரு பாபினுக்கு நூலை செலுத்துகிறார். 'முப்பது வருடங்களாக வேலை செய்கிறேன். இப்போது எனக்கு பார்வையில் சில சிரமங்கள் உள்ளது. ஆனால் நான் நாள் முழுவதும் இங்கு அமர்ந்திருந்தால் நாளொன்றிற்கு 20 அல்லது 25 பாபின்களைச் சுற்ற முடியும்’

மோட்டா டிம்ப்லாவைச் சேர்ந்த கௌதம் பாய் வாகேலா, அடுத்த படிக்கு, பாட்டியைத் தயார் செய்வதற்காக, பாபின்களில் இருந்து நூல் இழைகளை பிரித்து, ஆடா எனப்படும் பெரிய மரச்சட்டகத்தில் நீட்டி வைக்கிறார்

வடிவமைப்பைக் குறிப்பதற்கு முன், அதற்கு பொருத்தமான நூற்கொத்துக்களை உருவாக்க பட்டு நூல்கள் ஆடா முழுவதும் நீண்டுள்ளன

நானா டிம்ப்லா கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான அசோக் பர்மார், பிரிக்கப்பட்ட நூல் கொத்துக்களை வேறொரு மரச்சட்டகத்திற்கு மாற்றுகிறார். அங்கு அவை முதலில் நிலக்கரியால் குறிக்கப்பட்டு, அதன் பின்னர், ஒரு காகிதத்தில் முதலில் தயாரிக்கப்பட்ட வடிவமைப்பின்படி கட்டப்படும்

கட்டாரியா கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் மஞ்சி பாய் கோஹில், 36, சட்டகத்தில் நீண்டு வைக்கப்பட்டுள்ள நூலில் காத் (முடிச்சுகள்) செய்கிறார். இது பட்டோலா தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு சாயம்-தவிர்க்கும் நுட்பமான, பருத்திச் சரம் மூலம் கொத்தாக பட்டு நூல்களை பிணைப்பதை உள்ளடக்கியது. இந்த முடிச்சுகள், சாயமிடும் செயல்பாட்டின் போது, நூலின் கட்டப்பட்ட பகுதிகளை வண்ணம் அடையாமல், நூலில் மட்டும் வடிவமைப்பை உருவாக்குகிறது

மகேந்திர வாகேலா, 25, இரண்டாவது சுற்று சாயமிடுவதற்காக, முன்பு கட்டப்பட்டிருக்கும் வண்ண நூலின் கொத்துக்களை எடுத்துச் செல்கிறார். படோலுவில் பயன்படுத்தப்படும் வடிவமைப்பு மற்றும் வண்ணங்களைப் பொறுத்து, நூல்களை வண்ணம் தீட்டுதல், கட்டுதல் மற்றும் சாயமிடுதல் போன்ற செயல்முறைகள், படோலா உருவாக்கும் செயல்பாட்டில் பல முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன

மகேந்திர வாகேலா, ஏற்கனவே கட்டப்பட்டு, சாயம் பூசப்பட்ட நூலை, ஹைட்ரோ கலந்த கொதிக்கும் நீரில் ஊறவைக்கிறார். 'ஏற்கனவே நிறமுடைய நூலில் புதிய நிறத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது, ஹைட்ரோ [சோடியம் ஹைட்ரோ சல்பைட்] கலந்த கொதிக்கும் நீரில், நூல் கொத்துக்களை ஊறவைப்பதன் மூலம், முந்தைய நிறத்தை அகற்றவோ அல்லது மங்க வைக்கவோ முடியும்,’ என்கிறார் ரேகா பென்

’சாயமிடும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், வண்ணம் முடிச்சுக்குள் நுழையாமல் இருக்க வேண்டும்,’ என்று இரண்டாவது கோட் வண்ணத்திற்காக நூலை, ஆவி பறக்கும் வாளியில் மூழ்கடித்தவாறே மகேந்திர வாகேலா விளக்குகிறார். ’முடிச்சுகளுக்குள் நிறம் எப்போது வரும், கரைசலை எப்போது கிளற வேண்டும், அதற்கேற்ப நூலை எவ்வளவு நேரம் தண்ணீரில் மூழ்க வைக்க வேண்டும் என்பதை ஒரு தொழிலாளி தன் அனுபவத்தின் மூலம் அறிவார்.’ என்கிறார்

மகேந்திரா இப்போது வண்ண நூலை குளிர்ந்த நீரில் மூழ்கடித்து அலசுகிறார். 'பட்டோலுவில் ஒரு பட்டு நூலில் பல வண்ணங்கள் உள்ளன. இந்த வண்ணங்களால் தான் வடிவமைப்பு அழகாக இருக்கிறது. வண்ணங்களின் கலவை முக்கியமானது. கண்ணைக் கவரும் வகையில் இருக்க வேண்டும்,' என்கிறார் நெசவாளர் விக்ரம் பாய் பர்மார்

சாயமிட்ட பிறகு வண்ண நூல் வடிகட்டப்பட்டு உலர்த்தப்படுகிறது. கட்டாரியா கிராமத்தைச் சேர்ந்த ஜகதீஷ் ரகு பாய் கோஹில், பருத்தி சரங்களை, அல்லது முடிச்சுகளை அகற்றுவதற்காக சாயமிடப்பட்ட நூலை ஒரு சிறிய மரச்சட்டத்தில் எடுத்துச் செல்கிறார்

மோட்டா டிம்ப்லாவைச் சேர்ந்த 75 வயதான வாலி பென் வாகேலா, ஒரு சிறிய ஊசியைப் பயன்படுத்தி முடிச்சுகளை அவிழ்க்கிறார். செயல்முறையின் நுணுக்கத்தைப் பொறுத்து கட்டுதல், வண்ணம் தீட்டுதல், சாயமிடுதல் மற்றும் அவிழ்த்தல் ஆகிய செயல்முறைகள், ஒரு பட்டோலுவை உருவாக்கவதற்கே, பலமுறை மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும்

ஜசு பென் வாகேலா, ஒரு பெரிய மர ஸ்பூலில், முழு வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்ட நெசவு நூலை சுற்றுகிறார்

கட்டாரியாவைச் சேர்ந்த 58 வயதான சாந்து பென் ரகு பாய் கோஹில், இப்போது தயாராக உள்ள நெசவுக்கான நூல்களை ஒரு பெரிய மர ஸ்பூலில் சுற்றுகிறார்

கட்டாரியாவைச் சேர்ந்த ஹீரா பென் கோஹில், 56, பாபினில் செலுத்துவதற்காக வீசுவதற்காக ஸ்பூலில் இருந்து வண்ண நூலை எடுக்கிறார். படோலாவை நெசவு செய்யும் போது, தயாரான பாபின்கள் ஒரு ஷட்டிலில் வைக்கப்படும்

மோட்டா டிம்ப்லாவின் நெசவாளர்கள், வண்ணம் தீட்டிய பிறகு நூலை இழுத்து நீட்டித்து கட்டுகிறார்கள். இரட்டை இகட் படோலாவில் செங்குத்து மற்றும் குறுக்கு இழை நூல் இரண்டும் வண்ணம் மற்றும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எனவே, நூல் வடிவத்துடன் தயாரான பிறகு, அது தெருவில் வைக்கப்பட்டுள்ள இரண்டு முனைகளுக்கு இடையில் இழுத்து நீட்டித்துக் கட்டப்படுகிறது

மோட்டா டிம்ப்லாவின் நெசவாளர்கள், நீட்டிக்கப்பட்ட செங்குத்து நூலை வலுப்படுத்த ஸ்டார்ச் செய்கிறார்கள்

மோட்டா டிம்ப்லாவின் வாசரம் பாய் சோலங்கி, தறி ஊடிழைப் பொறியிலிருந்து வெளிவரும் பழைய நூலின் முனைகளுடன் புதிய ஸ்டார்ச் நூலை இணைக்கிறார். 'பட்டு நூல்களை இணைக்க சாம்பல் பயன்படுத்தப்படுகிறது,' என்கிறார்

பூஞ்சா பாய் வாகேலா, தறியின் மீது வண்ண நூல் கொண்ட பெரிய கற்றையை வைத்து வார்ப் நூல்களால் தறியை இயக்குகிறார்

பிரவீன் பாய் கோஹில், 50, மற்றும் பிரமீலா பென் கோஹில், 45, ஆகியோர், கட்டாரியா கிராமத்தில் ஒற்றை இகட் படோலா நெசவு செய்கிறார்கள். தேக்கு மரத் தறியின் விலை மட்டும் ரூ. 35-40,000 எனவே அனைத்து நெசவாளராலும் ஒன்றை வாங்க முடியாது

தனா பாய் துலேரா, கட்டாரியாவில் உள்ள தலித் சமூகத்திற்கு படோலா கைவினைக் கலையை அறிமுகப்படுத்திய ஆரம்பகால கைவினைஞர்களில் ஒருவர்

அசோக் வாகேலா ஒற்றை இகட் படோலுவை நெசவு செய்கிறார்

மோட்டா டிம்ப்லாவைச் சேர்ந்த பவேஷ் குமார் சோலங்கி இரட்டை இகட் படோலுவை நெசவு செய்கிறார்

நெசவு நூலில் மட்டும் வடிவமைப்பைக் கொண்டுள்ள ஒற்றை இகட் படோலாவைப் போலல்லாமல், இரட்டை இகட்டில் செங்குத்து இழை மற்றும் குறுக்கு இழை இரண்டும் ஒரு வடிவமைப்பைக் கொண்டுள்ளன

கையால் நெய்யப்பட்ட பட்டுத் துணிகள், பெரும்பாலும் புடவைகளான படோலா, அவற்றின்
நுட்பமான இரட்டை இகட் நெசவிற்காக, உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன
தமிழில் : அஹமத் ஷ்யாம்