”குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு ஓவியம் பிடிக்கும். 1ம் வகுப்பு படிக்கும்போது ஆரஞ்சு அல்லது பூசணிக்காய் வரையும்படி ஆசிரியர் கூறுவார். நானும் வேகமாக வரைந்து விடுவேன்,” என்னும் ரமேஷ் தத்தாவின் முகத்தில் புன்னகை மின்னி மறைகிறது. “இப்படித்தான் எல்லாமும் தொடங்கியது.”
மஜூலியில் இருக்கும் கராமூர் சாரு சத்ரா என்கிற வைணவ மடத்தில் நடக்கும் நிகழ்த்துக் கலை நிகழ்ச்சிகளில் முகமூடி செய்பவராகவும் அரங்க வடிவமைப்பாளராகவும் இன்று அவர்தான் திகழ்கிறார். 52 வயதாகும் ரமேஷ், அதிகம் பேசாதவர். ஆனால் அவரின் அபரிமிதமான திறமைகள்தாம் உள்ளூர் நாடகம், கலை மற்றும் இசை ஆகியவை மஜூலியில் தொடர்ந்திருக்கக் காரணங்கள்.
“குழந்தைப்பருவத்தில் பொம்மலாட்டங்களை பார்க்க எனக்கு பிடிக்கும்,” என அவர் நினைவுகூருகிறார். “பொம்மைகள் செய்வதை பார்த்து, கலையைக் கற்றுக் கொண்டேன். அநேகமாக அச்சமயத்தில் 2ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பொம்மைகள் செய்து பள்ளிகளில் சென்று காட்டுவேன்.”
இப்போது அவர் உருவாக்கும் கலை, மஜூலியின் மேடைகளுக்கு செல்லாத நேரங்களில் வீட்டுக்கு பின் இருக்கும் ஒரு திறந்த கொட்டகையில் வைக்கப்படுகின்றன. அவரை நாம் பார்க்கச் சென்றபோது ஒரு படகு உள்ளே செய்யப்பட்டிருந்தது. ப்ரஷ்களும் பெயிண்ட் கேன்களும் ரமேஷின் முகமூடிகளுக்கு அருகே வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ராஸ் மகோற்சவத்துக்காக (உடன் வாசிக்க: மஜூலியின் பல முகமூடிகள் ) செய்யப்பட்டிருந்த ஒரு கொக்கு முகமூடியும் இருந்தது.


ரமேஷ் தத்தா (இடது) ராஸ் மகோற்வத்துக்காக கையால் வடிவமைக்கப்பட்ட ஒரு அரங்க வடிவத்தை காட்டுகிறார். கராமூர் சாரு சத்ரா அரங்கில், 2022ம் ஆண்டின் ராஸ் மகோற்சவ நிகழ்ச்சிக்காக அரங்கை தயார் செய்கிறார்


இடது: இரு குச்சிகளை கொண்டு ஒரு சிற்பத்தை எப்படி இயக்குவது என செய்து காட்டுகிறார். வலது: ராஸில் பயன்படுத்தப்படவிருக்கும் கொக்கு உடையின் இறுதி பணிகள் அவர் செய்வதை ஆர்வத்துடன் குழந்தைகள் பார்க்கின்றனர்
இன்று அவர் முகமூடிகளை உருவாக்கவில்லை என்றாலும், அக்கலையை அவர் மதிக்கிறார். அக்கலையைச் செய்யும் பத்மஸ்ரீ விருதாளர் ஹேம் சந்திர கோஸ்வாமி போன்றவர்களையும் அவர் மதிக்கிறார். “அவரின் முகமூடிகள் கண்ணிமைத்து வாயசைக்கவும் கூட செய்யும்,” என்கிறார் அவர். “முகமூடி செய்யும் கலைக்கு உலகப்புகழை அவர் பெற்றுக் கொடுத்து பிரபலமாக்கினார். அவருக்கு நிறைய மாணவர்கள் இருக்கின்றனர்.”
ராஸ் விழாவின்போது, கராமூர் சாரு சத்ராவில் அரங்க வடிவமைப்பு மற்றும் நிகழ்ச்சிக்கான பொருட்கள் போன்றவற்றை கவனிப்பதோடு நின்றுவிடாமல், முகமூடிகளையும் பழுது பார்க்கிறார். “நாளை ராஸ் நடந்தால், இன்று என்னால் அரங்கங்களை நிர்மாணிக்க முடியும்,” (உடன் வாசிக்க: ராஸ் மகா உற்சவமும் மஜூலியின் சத்திரங்களும் ) என உறுதியாக சொல்கிறார்.
அந்த அரங்கில் நடத்தப்படும் கயான் - பயான் மற்றும் பாவோனாஸ் போன்ற பல வைணவ சத்திரிய நிகழ்ச்சிகளிலும் தத்தா கலந்து கொள்கிறார். கயான் - பயான் என்பது பாடகர்களும் (கயான்) இசைக்கருவி வாசிப்பவர்களும் (பயான்) கலந்து கொள்ளும் நாட்டுப்புற நிகழ்ச்சி. பாவோனாஸ் என்பது ஒரு நாடக வடிவம். சத்ரிய பண்பாட்டின் முக்கிய அம்சங்களாக, இந்த நிகழ்ச்சிகளை சீர்திருத்தவாதியும் துறவியுமான ஸ்ரீமண்டா மகாதேவா 15ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார். கயான்களும் பயான்களும் சத்திரத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இசைத்து வருகின்றனர்.
”1984ம் ஆண்டில் பீதாம்பர தேவ் சன்ஸ்கிருதிக் வித்யாலயாவில் நான் கயான்-பயான் கற்றுக் கொண்டேன். எனக்கு அப்போது 13 வயது,” என்கிறார் அவர். “தொடக்கத்தில் கயானும் பயானும் நான் கற்றுக் கொண்டேன். ஆனால் குரு கயானாக இருக்கும்படி என்னிடம் சொன்னார். எனவே அதை கற்றுக் கொண்டேன்.”


13 வயதில் தத்தா கயான் - பயான் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். இங்கு அவர் ஒரு கயானாக (பாடகர்) குழுவுடன் இயங்குகிறார்


இடது: கராமுர் சாரு சத்ரா மேடையின் பிற்பகுதியில் தத்தா, பாம்பு கடவுளான அகாசுரா பாத்திரத்துக்கு தயாராகிறார். வலது: பொராஹோ (இடது) பாத்திரத்தில் அவர் இரணியாக்ஷா அசுரனை ந்ரி சிம்ம யாத்ரா என்ற நாடகத்தில் எதிர்த்து சண்டையிடுகிறார்
*****
நாங்கள் அமர்ந்திருக்கும் அறையில் மங்கலான ஒளி இருக்கிறது. சுவர்கள் மண் மற்றும் சிமெண்ட்டால் பூசப்பட்டு, பச்சை நிறம் பூசப்பட்டிருக்கிறது. ரமேஷுக்கு பின்னால் ஒரு நிலப்பரப்பு தொங்குகிறது. ஆறு வயது மகள் அனுஷ்கா, சுவரில் தொங்கும் ஓவியங்களை தந்தை எப்படி உருவாக்கினார் என விளக்குகிறார்.
வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் இருக்கும் ஒரு பகுதிதான் அவர் பணி புரியும் அறை. பணம் பெற்று அவர் மொத்த பிற்பகலையும் செலவு செய்து உருவாக்கும் இரண்டு சிற்பங்களை நாங்கள் பார்க்கிறோம். ஜாய்-பிஜாய் சிற்பங்களான அவை பிரார்த்தனைக் கூடத்தின் கதவுகளுக்காக செய்யப்படுகின்றன. இது போன்ற சிற்பங்களை 20 வருடங்களாக ரமேஷ் செய்து வருகிறார். ஒரு சிற்பம் செய்ய 20 நாட்கள் ஆகும் என்கிறார்.
“முதலில் மரச்சட்டகத்தை உருவாக்குவேன். பிறகு மண் மற்றும் சிமெண்ட் கலவையை சட்டகத்தில் ஊற்றி காய வைப்பேன்,” என ஜாய்-பிஜாய் சிற்பங்களை செதுக்கியபடி விளக்குகிறார். “சில நாட்களுக்குப் பிறகு, செதுக்கத் தொடங்குவேன். நுட்பமான வேலைப்பாடுகள் இறுதியில்தான் செய்ய முடியும்.”
கை கால்கள் போன்ற சிலைப் பகுதிகளை, வாழை மரத் தண்டுகளில் வார்ப்புகள் உருவாக்கி வடிவம் கொடுக்கப்படும். “சிற்பம் செய்ய தேவைப்படும் பொருட்களை உள்ளூர் கடைகளிலிருந்து வாங்குவேன்,” எனத் தொடர்கிறார் ரமேஷ். “பெரும்பாலும் நாங்கள் இப்போது பிளாஸ்டிக் பெயிண்ட்களையே பயன்படுத்துகிறோம். முன்பு, டிஸ்டம்பர் பெயிண்ட்கள் பயன்படுத்தினோம். ஆனால் அவை மங்கி விடும்.”
சிற்பங்களை விட்டு ஒரு அடி தள்ளி, தோற்றத்தை பார்க்கிறார். பிறகு, இன்னொரு கான்க்ரீட் கலவை செய்ய தொடங்குகிறார். “அவர் வேலை பார்க்கும்போது பேச மாட்டார். இடையூறையும் விரும்ப மாட்டார்,” என்கிறார் அவருக்கு உதவும் மனைவி நீடா புன்னகையுடன். “வேலைக்குள் மூழ்கிவிட்டால், அவர் மனதில் வேறு எதுவும் நிற்காது.”


இடது: தத்தாவும் மனைவி நீடாவும் மகள் அனுஷ்காவும் மஜுலியின் கராமூர் வீட்டில். வலது: கொக்கு முகமூடியில் அசையும் வாயை எப்படி வடிவமைத்தாரென அவர் செய்து காட்டுகிறார்


வீட்டுக்கு வெளியே இரு சிற்பங்களை செய்கிறார். ஜாய்-பிஜாய் சிற்பங்கள் பிரார்த்தனைக் கூடத்தின் காவலர்கள் என நம்பப்படுகிறது. மரச்சட்டகங்கள் மற்றும் கான்க்ரீட் பயன்படுத்தி சிற்பங்களை செய்யும் அவர், பிறகு மங்காத பிளாஸ்டிக் பெயிண்ட்களை அவற்றில் பூசுகிறார்
கராமூரின் அருகே இருக்கும் கர்ஜான்பார் பகுதியிலுள்ள பிரார்த்தனைக் கூடத்துக்கென தான் கட்டிய குருபீடம் குறித்து தத்தா பெருமை கொள்கிறார். அந்த குருபீடம், பிரார்த்தனைக் கூடத்தின் கருவறையில் வைக்கப்படும் நான்கு பக்க வடிவம் ஆகும். “குருபீடத்தை கான்க்ரீட்டில் செய்து மரத்தை போன்ற தோற்றம் பெறும் வகையில் பெயிண்ட் அடித்தேன். சத்திர அதிகாரி அதை புனிதப்படுத்தி பயனுக்கு அளித்தார். அவர் கூட அதை மரத்தாலானது என நினைத்துக் கொண்டார்,” என்கிறார் சந்தோஷமாக.
குடும்பத்துக்காக ஒரு வீட்டையும் அவர் கட்டிக் கொண்டிருக்கிறார். “மழைக்காலம் என்பதால் முடிப்பதற்கு அதிக காலம் பிடிக்கிறது,” என்கிறார் நீடா.
நான்கு சகோதரர்களில் தத்தாதான் மூத்தவர். அவர் மட்டும்தான் குடும்பத்தில் கலையை, வேலையாக 8ம் வகுப்பிலிருந்து செய்து வருகிறார். “இது என் தொழில். விவசாய நிலமென எனக்கு எதுவும் கிடையாது,” என்கிறார் அவர். “வேலை இல்லாத போது, சேமிப்பைதான் சார்ந்திர்க்க வேண்டியிருக்கிறது. வாழ்க்கை ஓடுகிறது. சில நேரங்களில் பாரம்பரிய நாடகம் போட மக்கள் என்னை அழைப்பதுண்டு. அவர்களுக்கு உதவி தேவைப்படும். நானும் செல்வேன்.
“சிலர் 1,000 ரூபாய் கொடுப்பார்கள். சிலர் 1,500 ரூபாய் தருவார்கள். சிலர் 300 ரூபாய் கூட தருவார்கள். என்ன சொல்ல முடியும்? இது ஒரு உதவிதான். என்னுடைய விலையை சொல்வேன். அவர்களின் வசதிக்கேற்ப பணம் கொடுப்பார்கள்.


மஜுலியின் கர்ஜான்பாரிலுள்ள பிரார்த்தனைக் கூடத்துக்காக தத்தா உருவாக்கிய குருபீடம். வழக்கமாக இவை மரத்தால் செய்யப்படும். ஆனால் அவர் கான்க்ரீட்டில் உருவாக்கி மரப் பெயிண்ட் அடித்திருக்கிறார்


ராஸ் மகோற்சவத்துக்காக தந்தையால் உருவாக்கப்பட்ட பெரிய அகாசுரா உடையருகே நிற்கும் அனுஷ்கா தத்தா. ஆறு வயதாகும் அவர், வீட்டுக்கு வெளியே வேலை செய்யும் தந்தையை பார்த்துக் கொண்டிருக்கிறார்
இத்தகைய சிக்கல்களை புரிந்து கொள்ளும் அவர், “பணமில்லாமல் எதுவும் செய்ய முடியாது. எதேயேனும் செய்யத் தொடங்கக் கூட பணம் தேவை. பல நேரங்களில் அந்த பணத்தை பெறுவது மிகக் கடினம்,” என்கிறார்.
இத்தகைய பிரச்சினைகளை அவர், 2014ம் ஆண்டில் உருவாக்கிய விஷ்ணுவின் மச்ச அவதார முகமூடியை வாடகைக்கு விட்டு கடக்கிறார். “அச்சமயத்தில் பொருட்கள் வாங்க 400 ரூபாய் செலவானது. அந்த 400 ரூபாயும் சமயங்களில் கிடைப்பது கடினம்.” அப்போதிலிருந்து ஆறு வருடங்களாக, அதை வாடகைக்கு விட்டு 50,000 வரை அவர் சம்பாதித்திருக்கிறார்.
செய்யும் வேலைக்கென குறிப்பிட்ட கட்டணத்தை தத்தா நிர்ணயிக்கவில்லை. சிற்பம் சிறிதாக இருந்தாலும் உடலுழைப்பு அதிகம் தேவைப்படும். சில நேரங்களில் வருமானம் போதுவதில்லை,” என்கிறார் அவர்.
“இது சூதாட்டம் போல. நம்பிக்கையற்றதன்மையில் நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.”

கராமூர் சாரு சத்ரா அரங்கின் மேடைக்கு பின், கயான்
- பயான் நிகழ்ச்சி தொடங்க தத்தா காத்திருக்கிறார்

ந்ரி சிம்ம ஜாத்ரா நாடகக் காட்சி ஒன்றில், தத்தா (இடது) அரை சிங்க ஆடையை நடிகர் அணிய தத்தா (இடது) உதவுகிறார்

ராஸ் மகோற்சவத்தில் யமுனை ஆற்றில் வசிக்கும் கலி நாகத்தை
கிருஷ்ணன் வீழ்த்தும் காட்சிக்காக அரங்கை அவர் தயார் செய்கிறார்

பொராஹோ நாடகத்துக்கு பிறகு தத்தா பிரார்த்தனைக்காக
விளக்கு பற்ற வைக்கிறார்
மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையின் மானியப் பணி (MMF) ஆதரவில் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது
தமிழில் : ராஜசங்கீதன்