"கொயி சர்கார் நஹி சாங்கி ஆம் லோகன் லாயி " [எந்த அரசாலும் மக்களுக்கு நல்லதல்ல], என்று 70 வயதான குர்மீத் கவுர் கூறுகிறார். லூதியானாவின் பாஸியன் கிராமத்திலிருந்து ஜக்ராவோனில் நடைபெறும் கிசான்-மஜ்தூர் மகாபஞ்சாயத்தில் (விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் மெகா கிராம கூட்டம்) கலந்து கொள்ள வந்த பெண்கள் குழுவுடன் அவர் ஒரு கொட்டகையில் அமர்ந்திருக்கிறார்.
"[பிரதமர்] மோடி, வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. [இப்போது ] எஹ்னா தா கொயி ஹக் நஹி சாடி எதி ஆ கி வோதான் மங்கன் தா [இங்கு வந்து வாக்கு கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை]," என்கிறார் அவர். பாரதிய கிசான் யூனியன் (BKU ஏக்தா) டகவுண்டாவுடன் தொடர்புடைய குர்மீத் கவுர், 2019 மக்களவைத் தேர்தலில் மோடிக்கு வாக்களித்ததாக பாரியிடம் கூறுகிறார்.
ஜக்ராவோனின் புதிய தானிய சந்தையில் மே 21 அன்று நடைபெற்ற மகாபஞ்சாயத்தில், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அங்கன்வாடி தொழிலாளர் சங்கங்கள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர் சங்கங்கள் என மாநிலம் முழுவதிலுமிருந்து 50,000 பேர் தங்கள் பலத்தைக் காட்டவும், பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) எதிரான போராட்டத்தைக் குறிக்கவும் இங்கு கூடினர். 'பாஜக ஹராவ், கார்ப்பரேட் பஜாவோ, தேஷ் பச்சாவ் (பாஜகவை தோற்கடிப்போம். கார்ப்பரேட்டுகளை விரட்டுவோம், நாட்டைக் காப்போம்)’ என்று மேடையில் பதாகை வைக்கப்பட்டு இருந்தது.
"நாங்கள் பஞ்சாபில் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்," என்று மகாபஞ்சாயத்தில் கலந்து கொண்ட BKU லகோவால் பிரிவுத் தலைவர் ஹரிந்தர் சிங் லகோவால் கூறுகிறார்.
2024 ஜூன் 1, அன்று பஞ்சாப் தேர்தலைச் சந்திக்கிறது. நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தை அம்மாநிலத்தில் தொடங்க உள்ளார். அங்கு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை என்று எதிர்த்து வருகின்றனர்: சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உத்தரவாதம், கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தல், லக்கிம்பூர் கெரி படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 2020-2021 போராட்டத்தில் மரணமடைந்த தியாகிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வாசிக்க: விவசாய போராட்டங்கள் குறித்த பாரியின் முழு செய்தி தொகுப்பு


இடது: கிசான்-மஸ்தூர் மகாபஞ்சாயத்தில் உள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா சுவரொட்டியில், 'பாஜக ஹராவ், கார்ப்பரேட் பஜாவோ, தேஷ் பச்சாவோ' என்று எழுதப்பட்டுள்ளது. வலது: லூதியானாவின் சுதார் தொகுதியிலிருந்து அங்கன்வாடி தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஜக்ராவோனில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர்


இடது: லூதியானாவின் பசியன் கிராமத்திலிருந்து வந்துள்ள பெண்களில் குர்மீத் கவுரும் ஒருவர். வேலைவாய்ப்பு வழங்கும் வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை, இங்கு வாக்கு கேட்க அவருக்கு உரிமை இல்லை என்று அவர் கூறுகிறார். வலது: மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020-21ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களின் போது உயிர் நீத்த 750 விவசாயிகளுக்கு விவசாய தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். 2024 பிப்ரவரியில் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்து உயிரிழந்த சுப்கரன் சிங்கிற்கும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்
விவசாயத் தலைவர்கள், கூட்டத்தில் உரையாற்றுவதற்கு முன்பு, 2020-21 போராட்டங்களின் போது உயிர் நீத்த 750 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். பாட்டியாலாவில் உள்ள தாபி குஜ்ரானில் விவசாயிகளுக்கும், காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது தலையில் பலத்த காயமடைந்த 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் கடந்த பிப்ரவரியில் இறந்தார். இதையும் வாசிக்கவும்: ' சொந்த மாநிலத்தில் பாதுகாப் பி ல்லையென்றால் , எங் கு செல்வது ? '
சில மாதங்களுக்கு முன்பு, 2024 பிப்ரவரியில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அங்கு அவர்கள் தங்கள் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை எழுப்பி போராடத் திட்டமிட்டிருந்தனர். அமைதி வழியில் போராடியவர்கள் தடுப்புகள், நீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை எதிர்கொண்டனர்.
இப்போது, பாஜக தங்கள் கிராமங்களில் பிரச்சாரம் செய்வதை அவர்கள் விரும்பவில்லை.
BKU ஷாதிபூரின் தலைவர் பூட்டா சிங்கும் இக்கருத்தையே வெளிப்படுத்தினார். "மோடி இப்போது ஏன் பஞ்சாப் வருகிறார்? அவரை நாங்கள் பிரச்சாரம் செய்ய விட மாட்டோம்," என்கிறார்.
சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் அழைப்பின் பேரில், பஞ்சாப் முழுவதும் உள்ள மக்கள், பாஜக தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களை தங்கள் கிராமங்களுக்குள் நுழையவும், பிரச்சாரம் செய்யவும் தடை விதித்துள்ளனர்.


இடது: கிராந்திகாரி கிசான் யூனியனின் தலைவர் டாக்டர் தர்ஷன் பால், அமைப்பின் உறுப்பினர்களுடன். வலது: 2024 மே 21, அன்று நடந்த மகாபஞ்சாயத்தில் சுமார் 50,000 பேர் கலந்து கொண்டனர்
ஃபரித்கோட் மற்றும் லூதியானாவைச் சேர்ந்த பாஜக வேட்பாளர்களான ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் ரவ்னீத் பிட்டு ஆகியோரது பெயர்கள் ஜக்ராவோனில் விவசாய தலைவர்களின் உரைகளில் இடம்பெற்றன.
”தலைவர்கள் கைக்கூப்பி வாக்கு கேட்கிறார்கள். பிறகு நம்மை அவர்கள் கை ஏந்த வைப்பார்கள். எங்களை அலட்சியம் செய்ய அவர்கள் யார்?" என்று லகோவால் தனது உரையின் போது கேட்கிறார். ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகு தன்னை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹன்ஸ் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. SKM அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஹன்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லூதியானாவில் உள்ள சங்கத்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் 74 வயது சேத்தான் சிங் சவுத்ரி. "முன்பெல்லாம் எங்கள் பெற்றோர், தாத்தா பாட்டி யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களுக்கு நாங்கள் வாக்களிப்போம்," என்று அவர் கூறுகிறார். "இப்போது நிலைமை மாறிவிட்டது. மோடியை வெளியேற்றுவதே இப்போதைய நோக்கம்.”
இவர் BKU ராஜேவால் அமைப்பில் உறுப்பினராக உள்ளார். அவரது தந்தை பாபு சிங் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்று பஞ்சாப் அரசு வழங்கிய அடையாள அட்டையைக் காட்டி அவர் பாரியிடம் கூறினார். பாபு சிங், இந்திய தேசிய ராணுவத்தில் (INA) ஒரு சிப்பாயாக இருந்தார். "அவர்கள் விவசாயிகளின் நன்மையைப் பற்றி சிந்திப்பதில்லை," என்று சேத்தன் பாஜகவைக் குறிப்பிட்டு கூறுகிறார்.


இடது: கீர்த்தி கிசான் யூனியனின் உறுப்பினர்கள் மகாபஞ்சாயத்து நடந்த தானிய சந்தைக்கு வந்தனர். வலது: நச்சத்தார் சிங் கிரிவால் (இடது) மற்றும் சேத்தான் சிங் சவுத்ரி (வலது) லூதியானாவைச் சேர்ந்த விவசாயிகள். ’முன்பெல்லாம் எங்கள் பெற்றோர், தாத்தா பாட்டி யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களுக்கு வாக்களிப்போம். இப்போது நிலைமை மாறிவிட்டது. மோடியை வெளியேற்றுவதே இப்போதைய நோக்கம்,’ என்று சவுத்ரி கூறுகிறார். அவரது தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இந்திய தேசிய இராணுவத்தில் (INA) பணியாற்றினார்


இடது: 2020-21 போராட்டங்களின் ஒரு பகுதியாக இருந்த மருத்துவ பயிற்சியாளர்கள் சங்கம், கூட்டம் நடந்த இடத்தில் மருத்துவ வசதிகளை வழங்கியது. வலது: கிட்டத்தட்ட ஒரு டஜன் புத்தகக் கடைகள் அந்த இடத்தில் அமைக்கப்பட்டன. 2024 பொதுத் தேர்தல் குறித்த துண்டுப் பிரசுரங்கள் கலந்து கொண்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன
தலைவர்கள் தங்கள் உரைகளைத் தொடரும்போது, தானிய சந்தையைச் சுற்றி முழக்கங்கள் ஒலிக்கின்றன. "கிசான் மஜ்தூர் ஏக்தா ஜிந்தாபாத் (விவசாயிகள் மற்றும் தொழிலாளர் ஒற்றுமை வாழ்க!), "நரேந்திர மோடி திரும்பிப் போ!" என்று அவர்கள் முழங்குகிறார்கள்.
கிசான்-மஸ்தூர் மகாபஞ்சாயத்து நடந்த இடத்தைச் சுற்றி, அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரிவுகளால் லங்கர்கள் (உணவுக் கடைகள்) அமைக்கப்பட்டுள்ளன. 2020-21 போராட்டங்களின் போது 13 மாதங்கள் டிக்ரி எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவளித்த மருத்துவ பயிற்சியாளர் சங்கத்தால் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பஞ்சாபின் இன்குலாபி கேந்தர் மற்றும் ஜம்ஹூரி அதிகார் சபாவின் உறுப்பினர்கள் தேர்தல்கள், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மதம், சாதி மற்றும் பாலினம் போன்ற பொது மக்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.
SKM பாஜகவை தோற்கடிக்க மக்களைக் கேட்டுக் கொண்டாலும், அது எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் வாக்களிக்க அழைப்பு விடுக்கவில்லை. கீர்த்தி கிசான் யூனியன் தலைவர் ராஜிந்தர் தீப்சிங்வாலா, "பாஜக வேட்பாளரை தோற்கடிக்கக்கூடிய நபருக்கு வாக்களியுங்கள்," என்று கூறுகிறார்.
மகாபஞ்சாயத்து முடிவடையும் போது, இச்செய்தி தெளிவாகிறது - பிரச்சாரங்களின் போது பாஜகவை எதிர்ப்பது, தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது. "யாரும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள், நாங்கள் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிப்போம்," என்று லகோவால் முடிவை அறிவிக்கிறார்.
தமிழில்: சவிதா