ஸ்ரீ பத்ரியா மாதா கோயில் நுழைவாயிலில் கேட்கும் இசைவாணர்களின் பாடல், 200 ஆண்டு பழமையான கட்டடத்திற்கு உள்ளே செல்ல செல்ல ஒலி மெல்ல குறைகிறது. இப்போது நாம் 20 அடிக்கு கீழே நிலத்தை அடைந்தவுடன் திடீர் நிசப்தம் நிலவுகிறது.
15,000 சதுர அடிக்கு மேல் விரிந்துள்ளது இந்த சுழல்பாதை நூலகம். குறுகிய பாதைகளுடன் 562 அலமாரிகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அடுக்கப்பட்டுள்ளன. தோலால் பிணைக்கப்பட்ட நூல்கள், பழங்கால மரப்பட்டய கையெழுத்துப் பிரதிகள், பழைய பதிப்பு நூல்கள், இந்து, இஸ்லாமியம், கிறிஸ்தவம் மற்றும் பிற சமயங்கள் தொடர்புடைய கட்டுரைகள், சட்டம், மருத்துவம், தத்துவம், பூகோளவியல், வரலாறு என இன்னும் பல புதிய தலைப்புகளும் இடம்பெற்றுள்ளன. புனைகதை பகுதி செவ்வியல் மற்றும் நவீன கால நாவல்களால் நிரம்பியுள்ளன. பெரும்பாலான நூல்கள் இந்தியிலும், சில ஆங்கிலத்திலும் இருக்கின்றன. சமஸ்கிருத நூல்களும் இடம்பெற்றுள்ளன.
பஞ்சாபைச் சேர்ந்த சமய பண்டிதர் ஹர்வன்ஷ் சிங் நிர்மலின் சிந்தனையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டது. அவர் கோயில் வளாகத்திற்குள் குகை அமைத்து 25 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து நிலவறையில் நூலகம் அமைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 2010-ம் ஆண்டு மறைவதற்கு முன்பு வரை கல்விக்கும் விலங்குகள் நலத்திற்கும் நிர்மல் நிதி திரட்டியுள்ளார்.
“அவர் ஒரு மனிதாபிமானி. மனிதனின் தோலும், முடியும் வேறுபட்டாலும் மனத்தால் அனைவரும் ஒன்றே எனும் கருத்தை அனைத்து சமயங்களும் சொல்கின்றன,” என்கிறார் ஸ்ரீ ஜகதாம்பா சேவா சமிதி எனும் அறக்கட்டளையின் செயலாளர் ஜூகல் கிஷோர். இந்த அறக்கட்டளை, கோயில் மற்றும் நூலகத்துடன் 40,000க்கும் அதிகமான பசுக்களுக்கு கோசாலை அமைத்து நிர்வகித்து வருகிறது.

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டம் தோலியா அருகே உள்ள ஸ்ரீ பத்ரியா மாதா ஜி கோயிலில் உள்ள நிலவறை நூலகம்


இடது: நூலகத்தை நிறுவிய, காலஞ்சென்ற சமயப் பண்டிதர் ஸ்ரீ ஹர்வன்ஷ் சிங் நிர்மல். வலது: கோயில், நூலகம், கோசாலையை நடத்தி வரும் ஸ்ரீ ஜகதாம்பா சேவா சமிதியின் செயலாளர் ஜூகல் கிஷோர்
1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நூலகப் பணி 1998 ஆம் ஆண்டு நிறைவுற்றது. அதன் பிறகு நூல்களுக்கான தேடல் தொடங்கியது. “அவர் [நிர்மல்] அறிவுக்கு மையமாக, ஒரு பல்கலைக்கழகமாக இது திகழ வேண்டும்,” என விரும்பினார். “இவ்விடத்தை மக்கள் தேடி வர வேண்டும் என மகாராஜா விரும்பினார். அறிவைத் தேடி வருவோர் இங்கு அதை பெறும் வழிகளை உறுதி செய்தார்.,” என்கிறார் அவர்.
இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச்சூடு பயிற்சி தளமான போக்ரான் இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் சேதங்கள் மற்றும் தூசுகளிடமிருந்து பாதுகாக்க தரை தளத்தை தேர்வு செய்ததாக நூலக நிர்வாகத்தினர் கூறினர். ராஜஸ்தானின் புல்வெளிகளில் காற்று அடிக்க தொடங்கினால் எங்கும் தூசு பறக்கும்.
அஷோக் குமார் தேவ்பால் நூலக பராமரிப்புக் குழுவில் வேலை செய்கிறார். இங்கு ஆறு பிரம்மாண்ட காற்று போக்கி விசிறிகள் உள்ளன. காற்றில் ஈரப்பதத்தை குறைக்க கற்பூரமும் ஏற்றுகிறோம். நூல்கள் சிதிலமடையாமல் தடுக்க,“நாங்கள் நூல்களை திறந்து காற்றோட்டமாக வைக்கிறோம். இந்த வேலையை ஏழு முதல் எட்டு பேர் சேர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக செய்கிறோம்.”


இடது: நூல்களின் தொகுப்பு. வலது: நூலக பராமரிப்புக் குழுவில் வேலை செய்யும் அஷோக் குமார் தேவ்பால்
கோயில் டிரஸ்டுக்கு சொந்தமாக 1.25 லட்சம் பிகா நிலங்கள் (கிட்டத்தட்ட 20,000 ஏக்கர்) உள்ளன. அங்குள்ள தோப்புகளில் “ஒரு மரக்கிளையைக் கூட வெட்டக் கூடாது,” எனும் மரபை கடைப்பிடித்து வருவதாக சொல்கிறார் அறக்கட்டளையின் சார்பில் 40,000-க்கும் அதிகமான பசுக்களுக்கான கோசாலையை நிர்வகித்து வரும் கிஷோர். எழுபது வயதுகளில் அவர் இருக்கிறார். ஆண்டுக்கு 2-3 லட்சம் பேர் இங்கு வருகின்றனர். கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நான்கு திருவிழாக்களுக்கு ராஜபுத்திரர்கள், பிஷ்னோய்கள், சமண சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வருகை தருகின்றனர். நூலகம் திறக்கப்படும் வரை பார்வையாளர்களாக அவர்கள் வந்துச் செல்கின்றனர்.
நூலகத்துடன் 150 பணியாளர்கள் வேலை செய்யும் பரந்து விரிந்த கோசாலையும் உள்ளது. இங்கு கிர், தார்பார்கள், ரத்தி, நகோரி உள்ளிட்ட பல்வேறு இன பசுக்கள், காளைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. “இந்த இடம் பறவைகள் மற்றும் பிராணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,” என்கிறார் அறக்கட்டளையின் நிர்வாகி அஷோக் சொடானி. இனப்பெருக்கம் செய்யும் திறனை இழந்த பிராணிகள் இங்கு கொண்டுவந்து விடப்படுகின்றன. அவற்றில் 90 சதவிகிதம் காளைகள். “கோசாலைக்காக எங்களிடம் 14 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. தீவனங்களுக்காக 25 கோடி[ரூபாய்] செலவிடப்படுகிறது, ” என்கிறார் சோடானி. “ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசத்திலிருந்து தினமும் 3-4 லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.” நன்கொடையில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு இப்பராமரிப்புகளை மேற்கொள்வதாக அவர் சொல்கிறார்.
நாங்கள் நிலவறையிலிருந்து மீண்டும் மேலே வந்தபோது, தோலி சமூகத்தைச் சேர்ந்த பிரேம் சவுகான் மற்றும் லஷ்மன் சவுகான் ஆகியோர் இப்போதும் ஹார்மோனியத்தை இசைத்தபடி இக்கோயிலின் முதன்மை தெய்வமான ஸ்ரீ பத்ரியா மாதா ஜியைப் போற்றிப் பாடிக் கொண்டிருந்தனர்.

ஆண்டுதோறும் இக்கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். சிலர் நூலகத்திற்கும் செல்கின்றனர்

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ பத்ரியா மாதா ஜி கோயிலின் நுழைவாயில்

இப்போது சுற்றுலா தளமாக மாறியுள்ள நூலகத்திற்கு கோயில் பக்தர்களும் வருகின்றனர்

15,000 சதுர அடிக்கு இந்த நூலகம் பரந்து விரிந்துள்ளது. குறுகிய பாதைகளுடன் கூடிய 562 அலமாரிகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன

பூட்டி வைக்கப்பட்டுள்ள பழைய பதிப்பு நூல்கள்

நூலகப் பணியாளர்கள் மட்டுமே அணுகக் கூடிய வகையில் வைக்கப்பட்டுள்ள 1000 ஆண்டு பழமையான கையெழுத்துப் பிரதிகள் சில

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற சமயம் சார்ந்த நூல்கள்

இந்தி, உருது, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குரான் போன்ற நூல்களின் பிரதிகள்

பிரேம்சந்த் நூல்களின் தொகுப்பு

அமெரிக்கா, இங்கிலாந்து வரலாறுகள் குறித்த நூல்கள்

ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறை சார்ந்த நூல்கள்

நூலகத்தை நிறுவிய ஹர்வன்ஷ் சிங் நிர்மலின் நினைவிடம்

நூலக நிறுவனர் ஹர்வன்ஷ் சிங் நிர்மல் கையெழுத்திட்ட கடிதம் முதன்மையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

கோசாலையில் கிர், தார்பர்கார், ரத்தி, நகோரி போன்ற வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 44,000 பசுக்களும் காளைகளும் வசிக்கின்றன

கோயிலுக்கு வெளியே உள்ள சிறு சந்தையில் விற்கப்படும்
பூஜைப் பொருட்கள், பொம்மைகள், நொறுக்குத்தீனிகள்
தமிழில் : சவிதா