தெஜ்லிபாய் தேதியா மெல்ல இயற்ஐ விதைகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன், மத்தியப்பிரதேசத்தின் அலிராஜ்பூர் மற்றும் தெவாஸ் மாவட்டங்களில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த தெஜ்லிபாய் போன்ற பில் பழங்குடிகள், இயற்கை விதைகளையும் இயற்கை விவசாயத்தையும் கைவிட்டு, செயற்கை விதைகளுக்கும் ரசாயன உரங்களுக்கும் மாறினர். இதனால் இயற்கை விதைகள் பற்றாக்குறை ஏற்பட்டது என்கிறார் தெஜ்லிபாய். “எங்களின் இயற்கை விவசாயத்துக்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. உழைப்புக்கு சரியான விலை சந்தையில் கிடைக்கவில்லை. மேலும் அந்த 71 வயதுக்காரர், “சேமித்த உழைப்பு நேரத்தால், குஜராத்துக்கு புலம்பெயர்ந்து சென்று அதிக ஊதியத்துக்கு தொழிலாளர் வேலை செய்ய முடிந்தது.”
ஆனால் இப்போது இந்த மாவட்டங்களிலுள்ள 20 கிராமங்களில் கிட்டத்தட்ட 500 பெண்கள், இயற்கை விதைகளை பாதுகாத்து, கன்சாரி நு வடவ்னோ (KnV) என்கிற அமைப்பின் வழிகாட்டலில் இயற்கை விவசாயத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். பில் மொழியில் ‘தெய்வம் கன்சாரிக்கான பாராட்டு’ என அர்த்தம். பில் பழங்குடி பெண்களை கொண்ட வெகுஜன அமைப்பான KnV, பெண்களின் உரிமைக்கு போராடவும் ஆரோக்கியப் பிரச்சினைகளுக்காக செயல்படவுமென 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆரோக்கியப் பிரச்சினைகள் சார்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியதில், KnV உருவாக்க காரணமாக இருந்த பழங்குடி பெண்கள், பாரம்பரிய விவசாய முறைக்கு திரும்புவது, உணவு வழக்கத்தை சரி செய்து, ஆரோக்கியத்தை கொடுக்குமென புரிந்து கொண்டார்கள்.
KnV-ல், தேர்வு செய்யப்பட்ட விதைகள் விற்பனைக்கு தனியாகவும் நாடு முழுக்க பன்மைய இயற்கை விவசாயத்தை பரப்பவென விவசாயிகளுக்கு விநியோகிக்க தனியாகவும் சேமித்து வைக்கப்படும் என்கிறார் கவாடா கிராமத்தை சார்ந்த ரிங்கு அலவா. “அறுவடைக்கு பிறகு, சிறந்த விதைகளை நாங்கள் தேர்வு செய்ய வேண்டும்,” என்கிறார் 39 வயது ரிங்கு.
விவசாயியும் கக்ரானா கிராமத்தின் KnV உறுப்பினருமான ராய்திபாய் சொலாங்கி ஒப்புக் கொள்கிறார்: “விதை தேர்வுதான், விதைகளின் தரத்தை மேம்படுத்தவும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க சிறந்த வழி.
40 வயது ராய்திபாய், “தானியமும் சோளம் போன்ற பயிர்களும் பில் பழங்குடியினரான எங்களின் வழக்கமான உணவு. தானியங்களுக்கு நீர் அதிகம் தேவைப்படாது. சுவையாகவும் இருக்கும்.” தானிய வகைகளின் பெயர்களை பட்டியலிடுகிறார் - பட்டி (குதிரைவாலி), பாடி, ரலா (தினை), ராகி, பஜ்ரா (கம்பு), கோடோ, குட்கி, சங்க்ரி (சாமை).


தெஜ்லிபாய், ஒற்றைபயிர் நெல் வயலில். ராய்திபாய் தன் குதிரைவாலி வயலில்


குதிரைவாலி உள்ளூரில் பட்டி என அழைக்கப்படுகிறது
இயற்கை விதைகளோடு நின்று விடாமல், பழங்குடி பெண்களின் கூட்டுறவான KnV-யும் இயற்கை விவசாயத்தை மீட்க இயங்கிக் கொண்டிருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தின் கோட் அம்பா கிராமத்தில் வசிக்கும் தெஜ்லிபாய் சொல்கையில், உரத் தயாரிப்பு அதிகம் நேரம் பிடிக்கும் என்கிறார். “இயற்கை விதைகளை, சொந்த பயன்பாட்டுக்காக என் நிலத்தில் சிறிதளவு மட்டும் போடுகிறேன். முற்றாக இயற்கை விவசாயத்துக்கு என்னால் மாற முடியவில்லை.” சோளம், பருப்பு, காய்கறி போன்ற தானியங்களை மானாவாரி விவசயமாக மூன்று ஏக்கர் நிலத்தில் அவர் செய்திருக்கிறார்.
மேலும் பயோகல்சர் கொண்ட இயற்கை விவசாய முறையும் திரும்பியிருக்கிறது என்கிறார் தெவாஸ் மாவட்டத்தின் ஜமாசிந்தை சேர்ந்த விக்ரம் பார்கவா. வெல்லம், கடலை மாவு, சாணம் மற்றும் மாட்டு மூத்திரம் ஆகியவற்றை கொண்டு பயோகல்சர் தயாரிக்கப்பட்டு, ஊற வைக்கப்படுகிறது.
25 வயது பரேலா ஆதிவாசி சொல்கையில், “விவசாயத்துக்கான உயிர்மண், மாட்டுச்சாணத்துடன் கலக்கப்பட்டு, வரிசைகளாக ஒரு குழிக்குள் இடப்பட்டு தொடர்ந்து நீரூற்றப்பட வேண்டும். பிறகு அது பரப்பப்பட்டு, மண்ணுடன் கலக்கப்படுகையில் பயிர்களுக்கு பயன் விளையும்.


உயிர்மண்ணுடன் மாட்டுச்சாணம் கலத்தல், பயோகல்சர் தயாரிப்பு


தயாரிப்புக்கு தொடர்ந்து நீர் சேர்க்கப்பட வேண்டும், தயாரான பிறகு, அதை பரப்பி, வயல் மண்ணுடன் கலக்க வேண்டும்
*****
சந்தைப் பயிர்களின் வரவால் இயற்கை விதைகள் காணாமல் போனபோது, பாரம்பரிய உணவுகளும் பாரம்பரிய பாணி உமி நீக்கமும் இல்லாமல் போனது என்கிறார் வேஸ்டி படியார். பதப்படுத்தப்பட்ட பிறகு, தானியங்கள் குறைந்த காலத்துக்குதான் நீடிக்கும் என்பதால், சமைக்க தயாராகும்போதுதான் பெண்கள் தானியங்களை குத்துவார்கள்.
ரலா, பாடி மற்றும் பட்டி தானியங்களை கொண்டு ருசியான உணவுகளை எங்களின் இளம் வயதில் நாங்கள் செய்திருக்கிறோம்,” என்கிறார் வேஸ்டி, தானியங்களின் பெயர்களை பட்டியலிட்டு. “கடவுள் மனிதர்களை உருவாக்கி, உயிர் பெற தெய்வம் கன்சாரியின் மார்பில் பால் குடிக்க சொன்னார். சோளம் (கன்சாரி தெய்வமாக உருவகிக்கப்படுகிறது) பில்களுக்கு உயிர் கொடுக்கும் பயிராக கருதப்படுகிறது,” என்கிறார் அவர் அந்த தானியத்தை குறித்து. 62 வயது விவசாயியான அவர், பிலாலா சமூகத்தை (பட்டியல் பழங்குடி) சாதியை சேர்ந்தவர். நான்கு ஏக்கர் நிலத்தில் அவர் விவசாயம் செய்கிறார். ஒவ்வொரு ஏக்கரின் பாதியும் சொந்த பயன்பாட்டுக்காக இயற்கை விவசாயத்துக்கு ஒதுக்கப்படுகிறது.
பிச்சிபாயும் சில தானிய உணவுகளை நினைவுகூருகிறார். தேவாஸ் மாவட்டத்தின் பண்டுதலாப் கிராமத்தை சேர்ந்த அவர், தனக்கு பிடித்த உணவாக மா குத்ரி யை சொல்கிறார். தானிய அரிசியுடன் கோழிக்கறி கலந்த உணவு அது. அறுபது வயதுகளில் இருக்கும் அவர், சோளப்பாலை நினைவுகூறுகிறார். பாலும் வெல்லமும் கலந்து செய்யப்படும் பானம் அது.
தானியத்தை கை குத்தல் ஒரு பொது நிகழ்வு போல், மொத்த பெண்களும் சேர்ந்து செய்கின்றனர். “வேலை எளிதாக இருக்க நாட்டுப்புற பாடல்கள் பாடி நாங்கள் வேலை செய்வோம். ஆனால் இப்போது, புலப்பெயர்வாலும் குடும்பங்கள் சிறிதாகி விட்டதாலும், பெண்கள் வெளியே வந்து வேலையைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பின்றி போய்விட்டது,” என்கிறார் அவர்.


பண்டுதலாப் கிராமத்தில், கன்சாரி நு வடவ்னோ உறுப்பினர்கள், இயற்கை விதைகளை பாதுகாக்கும் உத்திகளை விவாதிக்கின்றனர். இந்த பயிர்கள் பறவைகளுக்கு பிடித்தமானவை. எனவே பிச்சிபாய் படேல் போன்ற விவசாயிகள் அவற்றை விரட்ட வேண்டியிருக்கிறது
கர்லிபாய் பாவ்சிங் இளம்பெண்ணாக இருந்தபோது, கையால் தானியத்தை அவர் குத்தியிருக்கிறார். கடுமையான வேலை அது என்கிறார் அவர். “இந்த காலத்து இளம்பெண்கள் சோளம், கோதுமை போன்ற தானியங்களை அரவை மில்களில் கொடுத்து மாவாக்குகின்றனர். அதனால்தான் தானிய நுகர்வு குறைந்து விட்டது,” என்கிறார் கத்குத் கிராமத்தை சேர்ந்த 60 வயது பரேலே பழங்குடியான அவர்.
விதைகளை சேமிப்பதும் சவாலான காரியம்தான். “புடைக்கப்பட்ட பயிர்கள், ஒரு வாரத்துக்கு வெயிலில் காய வைத்து, மூங்கில் கூடைகளில் சேகரிக்கப்பட்டு, இறுக்கமாக இருக்கும்பொருட்டு, கால்நடை சாணம் கலந்த மண்ணுக்குள் வரிசையாக வைக்கப்படும். அப்போதும் கூட, நான்கு மாதங்களுக்கு மேல் அப்படியே இருந்தால், பயிர்களை பூச்சிகள் தாக்கி விடும். மீண்டும் அவற்றை வெயிலில் காய வைக்க வேண்டும்,” என ராய்திபாய் விளக்குகிறார்.
பிறகு தானியங்களை விரும்பும் பறவைகளும் இருக்கின்றன. விதைக்கப்பட்டு வெவ்வேறு காலங்களில் விளையும் பல்வேறு தானியங்கள் இருக்கின்றன. பெண்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பிச்சிபாய், “அறுவடையை பறவைகள் காலி செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!” என்கிறார்.

பில் பழங்குடி விவசாயிகள் (இடதிலிருந்து வலது: கில்தாரியா சொலாங்கி, ராய்திபாய், ரமா சாஸ்தியா மற்றும் ரிங்கி அலவா) சோளமும் கம்பும் விதைக்கிறார்கள்


காய்கறியாகவும் பூவாகவும் எண்ணெய் விதையாகவும் பயன்படக் கூடிய நார்ச்சத்து கொண்ட கோங்குரா அறுவடை செய்யப்பட்டு, அறுவடைக்கு முன் கோங்குராவும் அதன் விதைகளும்

சோளம், தினை மற்றும் பிற தானிய வகைகளுடன் சேர்த்து விளைவிக்கப்படுகிறது


கக்ரானா கிராமத்தில் ஓர் இயற்கை வகை சோளம், தினை தானியம்

விவசாயியும் KnV-ன் மூத்த உறுப்பினருமான வேஸ்டிபாய் படியார், பத்தாண்டுகளுக்கு பிறகு விளைவித்த தினை தானியத்தை காட்டுகிறார்


வெண்டை வகை, கடுகு

ராய்திபாய் (கேமராவுக்கு முதுகை காண்பிப்பவர்), ரிங்கு (நடுவே) மற்றும் உமா சொலாங்கி ஆகியோர் சோளத்தை அறுவடை செய்கின்றனர்


செம்/பல்லார் (அவரைக்காய்) விதைகள் அறுவடைக்கு பின் சேகரிக்கப்படுகிறது. தானிய ரொட்டியும் துவரை பருப்பும் சுரைக்காயும்


ஆமணக்கு, காய்ந்த இலுப்பைப்பூ


பரேலா பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஹிராபாய் பார்கவா, கையால் சேகரிக்கப்பட்ட சோள விதைகளை அடுத்த பருவத்துக்காக சேமிக்கிறார், அரவைக் கல் கொண்டு பருப்பு அரைக்கப்பட்டு, மூங்கில் சொளகு மற்றும் சலிப்பான் கொண்டு பதப்படுத்தப்படுகிறது


தற்போதைய அறுவடையில் சேகரிக்கப்பட்ட விதைகள், அடுத்த வருடத்துக்கு பயன்படவென மரத்தில் சாக்குகளில் கட்டி தொங்கவிடப்படுகின்றன, இந்திய இயற்ஐ விவசாய சங்கத்தின் மத்தியப்பிரதேச அமைப்பின் துணைத் தலைவரான சுபத்ரா கபேர்டே, பாதுகாக்கப்பட்டு அனுப்பப்படுவதற்கான விதைகளை தேர்ந்தெடுக்கிறார்


வேஸ்டிபாயும் மருமகள் ஜாசியும் செயற்கை உரம் பயன்படுத்தும் சோள வயலில். இயற்கை விவசாயத்துக்கு நேரமும் உழைப்பும் அதிகம் தேவைப்படுவதால், மொத்தமாக இயற்கை விவசாயத்துக்கு மாற விவசாயிகளால் முடியவில்லை, அலிராஜ்பூர் மாவட்டத்தில் கோடாம்பா கிராமம்
தமிழில் : ராஜசங்கீதன்